Wonderful Shopping@Amazon

Saturday 22 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-90

வட்டத்துக்குள் சதுரம்(1978)

பாட்டைக் கேட்டுக் கலங்குபவர்கள் உண்டா ?

எங்கள் வீட்டில் அப்படி ஒரு நபர் உண்டு. அவள் என் அக்கா.

என்னுடைய மூத்த சகோதரி ரொம்ப எமோஷனல் சுபாவம். அவருக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தார். எங்கள் பெரியப்பா வீட்டுக் காம்பௌண்டில், பக்கத்து வீட்டுக்குக் கோடை விடுமுறையில் அவர் வருவார். அவள் வரவு அக்காவுக்கு மிகுந்த உற்சாகம் தரும். சாப்பிடுவது, தூங்குவது தவிர, அக்காவும் அவரும் ஒன்றாக விளையாடுவது, குளத்தங்கரைக்குத் துணி துவைக்கப் போவது, கோவிலுக்குப் போவது என ஒரு மாதம் ஒன்றாக இருப்பார்கள். எப்போதும் தொண, தொணவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாது. அடிக்கடி சிரித்துக்கொள்வார்கள். அவள் விடுமுறை முடிந்து ஊருக்குச் சென்ற அடுத்த மூன்று நாளுக்கு அக்கா 'உம்மென்று' இருப்பாள். சகஜ நிலைக்குத் திரும்பச் சில நாட்கள் ஆகும்.

பிறகு ஒரு நாள், பக்கத்துக்கு வீட்டுக் குடும்பமும் காலி செய்துகொண்டு போய்விட, பிறகு தொடர்பு விட்டுப் போனது. எப்போதாவது அவளுடைய தோழியைப் பற்றிக் கேட்டால், சோகமாகிவிடுவார்.

நான் இரண்டு பாடலுக்கு எமோஷனல்-ஆவதுண்டு 

ஒன்று :

"அங்கஜூனி கண்ண ம  யன்ன  யது  ரா ரா 
பங்காரு  கிண்னெலோ  பாலு போசேரா  |

எம்எஸ் அம்மா பாடிய 'அன்னமாச்சார்யா' கீர்த்தனையான "ஜோ அச்சுயுதாந்தா..." பாடலில் வரும் மேற்சொன்ன வரிகள் கேட்கும்போது காரணம் தெரியாமல் நானும் கலங்குவதுண்டு. 

இரண்டு :

எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடிய  "கருணை உன்னால் கொண்டவளே கருமாரியம்மா .." என்ற பாடலை கேட்கும்போதும் அப்படி தான்.

தெய்வீக குரல் என்று சொல்வார்களே அது தானோ என்னவோ......

சரி விசயத்துக்கு வருவோம்.... சமீபத்தில் அக்காவிடமிருந்து எனக்குத் தொலைப்பேசி அழைப்பு, அக்காவின் அந்தத் தோழி தொலைப்பேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசியதாக உற்சாகமாகச் சொன்னாள். இந்தத் தொழினுட்ப யுகத்தில் யாரையும், உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கண்டுபிடிக்கலாம் என்பது அக்காவுக்குத் தெரியாது போல..

நீண்ட கால நட்பைப் பெண்கள் தொடருவது அரிதான ஒன்று. என்னுடன் ஒரே பள்ளியில் பத்து வருடம் எல் கே ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த என்னுடைய வகுப்பு நண்பர்-நண்பிகளையும் பல சிரமங்களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்து வாட்ஸாப்ப் குழுவில் இணைத்துள்ளேன். தோழிகள் ஒருவரை ஒருவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் எனக்கு நன்றி சொல்லும்போதே தெரிகிறது. வகுப்பில் ஒன்றாக இருப்பது போல ஒரு பீல் கிடைக்கிறது. சென்ற வருடம் செப்டம்பரில் சந்திப்பு விழா நடைபெற்றது மறக்கமுடியாத அனுபவமாயிற்று. கொரோனா காலத்தில் இந்த வருடம் சந்திப்பு விழா நடத்தமுடியும் என்று தெரியவில்லை. இன்னும் கூடப் பல நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அக்காவைக்  கலங்கவைத்த  அந்தப் பாடல், இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்கள் இயக்கிய 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தில் திரு பஞ்சு அருணாச்சலம் எழுதி, ராஜா சார் இசையமைத்த ஜானகி, சசிரேகா மற்றும் உமாதேவி ஆகியோர் பாடிய பாடலான "இதோ இதோ என் நெஞ்சிலே ".
 


நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

1 comment:

  1. very interesting experience nice message from kumar venkat

    ReplyDelete