அமைதிப்படை(1994)
குருவை மிஞ்சிய சிஷ்யன். குருவின் வெற்றிக்குத் துணையாயிருந்தவன். குருவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவன். குரு 'சப்பாணி' கதாபாத்திரத்தை உலவவிட்டவர். சிஷ்யன் 'அருக்காணி' கதாபாத்திரத்துக்குப் பெருமை சேர்த்தவர். குருவின் இயக்கத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார் சிஷ்யன். குருவின் பாதையைப் பின்பற்றாமல் தனக்கென்று தனிப் பாதையை வகுத்துக்கொண்டவர்.
மேலே சொன்ன குரு - இயக்குநர் இமயம் பாரதிராஜா, சிஷ்யன் - கதாசிரியர், நடிகர் எனப் பன்முகக்கலைஞர் இயக்குநர் மணிவண்ணன்.
இயக்குநர் மணிவண்ணன் எல்லா ஜானரிலும் படம் இயக்கியிருக்கிறார். இவரது கல்ட் கிளாசிக், கிரைம் திரில்லர் படமான 'நூறாவது நாள்' படத்தை ஒரு முறை கூட முழுதாகப் பார்க்கமுடியவில்லை. மிரட்டலாக இயக்கியிருப்பார். ராஜா சாரின் பின்னணி இசையும் கிலியை உண்டாக்கும்.
இவரது முதல் படமான 'கோபுரங்கள் சாய்வதில்லை' எனக்குப் பிடிக்கும். தெலுங்கு, கன்னட, இந்தி மற்றும் வங்காளம் எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இவர் இல்லாத தமிழ்ப் படமே இல்லை என ஒரு கட்டத்தில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் 'கோகுலத்தில் சீதை' படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த அப்பா கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். செம்ம Underplay.
இயக்குநர் மணிவண்ணன்- சத்யராஜ் கூட்டணி பல வெற்றிப் படங்களைத் தந்திருந்தாலும், 'அமைதிப்படை' படத்துக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. உள்ளூர் அரசியலை மனதுக்கு மிக நெருக்கமாகச் சொன்னது இப்படம். 'அல்லவா கொடுப்பது' என்ற சொற்றொடர் இந்தப் படத்துக்குப் பிறகு புழக்கத்துக்கு வந்தது.
என் நண்பன் குணா இப்படத்தைப் பலமுறை பார்த்து, படத்தின் வசனங்களை மனப்பாடம் செய்து எனக்குச் சொல்வான். "மச்சி ....படத்தை மிஸ் பண்ணாத பார் .." என்று வற்புறுத்தவே என்னோடு சேர்ந்து இன்னொரு முறைப்பார்தான். சில காட்சிகளை முன்கூட்டியே சொல்லி 'டெம்போ' ஏற்றியிருந்தான். குறிப்பாக 'அமாவாசை'- 'நாகராஜா சோழன் MA., MLA'-வாக மாறும் அந்த இடைத்தேர்தல் முடிவு காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இயக்குநர் மணிவண்ணன்-சத்யராஜ்-இளையராஜா மூவரும் நிகழ்த்திய மாயாஜாலம் இதோ:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
Enakum inda padam romba pidikum
ReplyDelete