Wonderful Shopping@Amazon

Saturday 30 June 2018

அது ஒரு மாம்பழ காலம்

மா பலா வாழை என முக்கனிகளில் முதல் கனியான  மாம்பழ சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ளது.

மாங்கனி ஒரு சமத்துவ கனி. சிறியவர் முதல் பெரியவர் வரை, ஏழை, பணக்காரன் என எல்லா தரப்பினரும் விரும்பு உண்ணும் ஒரு கனி மாங்கனி.
நமது உணவுகளில் இடம்பெறும் ஒரே கனி மாங்கனி. கனிகளுக்கெல்லாம் அரசன் மாங்கனி; ஆம் இது ராஜகனி; தேவகனி.

ஆப்பிள், திராட்சை, கொய்யா, சாத்துக்குடி இத்தியாதி, இத்தியாதி  என எல்லா கனிகளுக்கு ஒரு நிரந்தர சுவை இருக்கும். ஆனால் மாங்கனிக்கு மட்டுமே ஒவ்வொன்றுக்கும் தனி தனி சுவை.

Image from Google
கோடை வந்துவிட்டால் மாங்காய் கார பச்சடி, மாங்காய்-வெள்ளம் இனிப்பு பச்சடி, கத்திரிக்கா-முருங்கை-மாங்காய் கலந்த சாம்பார், மாங்காய் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள மாம்பழம் என மாங்காய் /மாம்பழ நுகர்வு எங்கள் வீட்டில் மிகுதியாக இருக்கும்.

சமீப காலமாக எங்கள் குடும்பத்தின் மாம்பழ நுகர்வு குறைந்துகொண்டே வருகிறது . காரணங்கள் பல இருந்தாலும் செயற்கை முறையில் பழுக்கவைத்து மாம்பழங்கள் விற்கப்படுகிறது. அதை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவே வாங்க அச்சமாயிருக்கிறது.

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் இருக்கும்போது,  கொத்தவாள்ச்சாவடியிலுருந்து மாமா இரண்டு வெற்றிலை கூடை நிறைய செந்தூரா மற்றும் நீளம் வகை மாம்பழம் வாங்கி வருவார்.  சாப்பிட அவ்ளோ சுவையாக இருக்கும்.

கொட்டி போன சிறு சிறு மாங்காய் வகை ஒன்று உண்டு. பாட்டி மொத்தமாக வாங்கி வந்து அறிந்து, உப்பு போட்டு வெய்யிலில் காயவைத்து ஊறுகாய் தயாரித்து, ஹார்லிக்ஸ் பாட்டிலில் நிரப்பி அம்மாவுக்கு கொடுத்து அனுப்புவாள். சில மாதங்கள் வரும்.  அலாதியான சுவையாக இருக்கும்.  இப்பொது அது போல ஊறுகாய் போட்டு கொடுக்க பாட்டி இல்லை.

இப்பொது ஊறுகாய் போட யாரும் மெனக்கெடுவதில்லை, எல்லா வகையான ஊறுகாய்கள் சந்தையில் பாட்டிலில் அடைத்து சல்லிசான விலையில் சந்தையில் விற்கப்படுகிறது.

"வெறும் மாங்காய் அதோடு சேர்த்து பச்சைமிளகாய் ஒரு கடி கடித்து தயிர் சாதம் அல்லது பழைய சாதத்தோடு சாப்பிட ரணகள சுவையாக இருக்கும்" - இது ஒரு நண்பரின் அனுபவம்.

அதுமட்டுமா மாங்காய்த் துண்டுகள் தொட்டுக்கொள்ள உப்பு, மிளகாய்  - இது
அபார சுவையுடைய காம்போ.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள் இப்பொது சர்வ சாதாரணமாக சந்தையில் கிடைக்கிறது.  சௌகார்பேட் மின்ட் தெருவில் சுவையான உலகப்புகழ் பெற்ற ரத்னகிரி மாம்பழம் நல்ல விலையில் கிடைக்கிறது. வாங்கி சுவைக்கலாம்.

வருடம் முழுதும் மற்ற பழங்களை விற்று பெரும் இலாபத்தை விட மூன்று மாதங்களில் மாம்பழங்கள் ஈட்டி தரும் இலாபம் அதிகம் - இது ஒரு பழக்கடைக்காரரின் கூற்று.
Image from Google
நான் குடியிருக்கும் வீட்டில் ஒரு மாமரம் உண்டு. சீசனில் நல்ல கனி கொடுக்கும் மரம் அது. காலையில் கதவை திறந்தால் அணில் கடித்து /சாப்பிட்டு போட்ட  மாங்கனிகள் / துகள்கள்  கீழே  விழுந்து கிடக்கும்.  அந்த இரண்டு மாதம் மரத்தில் வாழும் அணில்களுக்கு கொண்டாட்டம் தான்.

கிருஷ்ணகிரியில் நடத்தப்படும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி சென்னையில் நடத்தினால், என்னை போன்ற  சென்னைவாசிகளுக்கு எத்தனை வகை மாங்கனிகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எங்கள் தெருவில் நீண்ட நாட்களை பூட்டி இருக்கும் ஒரு வீட்டின் வாசலில் உள்ள மாமரத்தில் பழங்கள் பழுத்து கிழே விழுந்து கிடக்கிறது. ஆனால் எடுக்க தான் ஆள் இல்லை.  தன வீட்டில் விளைந்த மாம்பழங்களை சாப்பிட கொடுப்பினை இல்லை போலும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday 29 June 2018

வாசிப்பே சுவாசம்

வாசிப்பு பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தமிழ் கற்று கொடுத்த ஆசிரியையை தான் காரணம். அவர் எப்போதும் ஏதாவது ஒரு தமிழ் புத்தகம் கையில் வைத்திருப்பார். புத்தக தலைப்பை எழுத்து கூட்டி படிப்பதுண்டு.

அப்பா எப்போதும் முடிதிருத்த எங்கள் தெருவிலுள்ள நடராஜன் அண்ணன்
முடிதிருத்த கடைக்கு கூட்டி செல்வார். அப்போது தினத்தந்தி வசிக்கும் பழக்கம் ஏற்பட, பள்ளி விட்டதும் நேராக நடராஜன் கடைக்கு சென்று அன்றைய தினத்தந்தி நாளேடை வாசித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். இது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்தது  தினத்தந்தி, ராணி மற்றும் குமுதம் வரை நீண்டது. சிலசமயங்களில் நடராஜன் கடை மூடியிருந்தால் செம கடுப்பாயிருக்கும்.  எப்போதுமே நடராஜன் அண்ணன் வாசிப்பு  பழக்கத்தை ஊக்குவிப்பவராக இருந்தார். தினத்தந்தியின் எழுத்து நடை, செய்தியை சொல்லும் பாங்கு இதெல்லாம் எனக்கு பிடிக்கும். அப்போது வேறு எந்த தினசரி நாளிதழும் என்னை கவரவில்லை. அதன் பிறகு தினத்தந்தி எத்தனையோ மாற்றங்களை கண்டது.  இப்பொது வாசிப்பது தி இந்து தமிழ்.   தி இந்து தமிழில் வரும் செய்தி கட்டுரை என்னுடைய முதல் தேர்வு.  அதற்காகவே தி இந்து தமிழுக்கு மாறினேன்.

கோடை விடுமுறையில் மாமா கடையில் அவருக்கு உதவியாக இருப்பேன். அப்போது குங்குமம், மஞ்சள் மற்றும் இன்ன பிற வஸ்துகள் பொட்டலம் மடிக்க பழைய ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு மற்றும் வண்ணத்திரை    பயன்படும். மதியவேளையில் பழைய வார இதழ்களை படிப்பது வழக்கமாயிற்று.  குமுதம் நடுப்பக்க படம், விகடன் மதன் நகைச்சுவை கார்ட்டூன், கல்கண்டு லேனாவின் ஒருபக்க கட்டுரை இதெல்லாம் எனக்கு பிடித்தவை.

வாசிப்பு பழக்கம் பள்ளியை தாண்டி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. 

பாட்டி வீட்டில் குடியிருந்த குடும்பத்தினர் மூலம் ஒரு இனிய நாளில் தி இந்து ஆங்கில நாளேடு அறிமுகமானது.  அர்த்தம் புரியுதோ இல்லையோ அப்படியே புரட்டி பார்ப்பது. அப்போது மூன்றாம் பக்கம் சென்னை நகர திரையரங்கில் ஓடும் சினிமாக்கள் பற்றிய பத்தி செய்தி இடம்பெறும்.  அங்கிருந்து தான் வாசிக்க தொடங்கினேன், பின்பு மெல்ல முக்கிய செய்திகள் மற்ற விஷயங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.

என்னை சுற்றி யார் யாரெல்லாம் தினசரி மற்றும் வார இதழ் வாங்குகிறார்களோ, அவர்களிடம் கூச்சப்படாமல் கேட்டு வாங்கி படிப்பதுண்டு.  கல்கி / தேவன் சிறுகதைகள் எனக்கு பிடித்தவை.

கிளை நூலகம் செல்ல ஆரம்பித்து, விடுமுறை நாள் முழுதும் நூலகத்திலேயே இருந்ததுண்டு. எங்கள் ஊருக்கு சென்றால் அங்குள்ள கிளை நூலகத்துக்கு செல்வதுண்டு. வாரம் ஒரு நாள் பள்ளியில் நூலகத்தில் உட்கார வைப்பார்கள். படிக்க புத்தகம் தந்து பிறகு வாங்கி வைத்துவிடுவார்கள்.
பள்ளியில் நடக்கும் வினா விடை போட்டியில் என்னுடைய பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இந்த வாசிப்பு பழக்கம் பள்ளி / பட்டய பாட புத்தகங்களையும் இயல்பாக வாசிக்க தூண்டியது. தேர்வில்  கேள்விகளை புரிந்துகொண்டு, விடைகளை சொந்தமாக எழுத உதவியது. ஒன்று முதல் பத்து வரை இரண்டாவது மொழி பாடம் இந்தி, பன்னிரெண்டாம் வகுப்பு  மற்றும் பட்டய படிப்பில் இரண்டாவது மொழி தமிழ் எடுத்து படிக்கும் அளவுக்கு வாசிப்பு பழக்கம் கைகொடுத்தது.

இப்பொது செய்திகளை / புத்தககங்களை வாசிக்க கிண்டில், அலைபேசி, இணையதளம் மற்றும் கணினி பல தளங்கள் இருந்தாலும்,  எப்போதும் புத்தகங்களே என்னுடைய பயணதுக்கு  துணை.

என்னுடைய வாசிப்பு அடுத்தகட்டதுக்கு நகரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. முக்கிய படைப்புக்களை தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தாலும், அதற்கான சூழல் அமையவில்லை என்பதுதான் உண்மை.

நெருக்கடியான மற்றும் வறட்சியான காலகட்டத்தை கடக்க வாசிப்பு பழக்கம் துணையாயிருந்தது.

இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், நேரமின்மையால்  முடியவில்லை.

இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு பையன்களை அழைத்து சென்று புத்தகங்கள்  வாங்கி கொடுத்தேன்.  எப்படியோ அவர்களும் மெல்ல வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போக போக தான் தெரியும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி