Wonderful Shopping@Amazon

Thursday 28 February 2019

மியூசிக்கல் ஹிட் மற்றும் பின்னணியிசை

ங்கள் அலுவலகம் வங்கியை போல.. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை.  வீட்டு வேலைகள் போக அவ்வப்போது
பழைய படங்களை பார்ப்பதுண்டு.

சமீபத்தில் சங்கராபரணம், சலங்கை ஓலி, சிப்பிக்குள்முத்து என தொடர்ச்சியாக பழய கிளாசிக் மியூசிக்கல் ஹிட்டான படங்களை பார்க்க நேர்ந்தது.  மின்சாரத்துக்கு (சம்சாரம்) பிடித்த படங்கள் அவை. பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை. சென்னையில் 100-200 நாட்களுக்கு மேல் கடந்து மேல் ஓடிய படங்கள்.  ஆனால் மியூசிக்கல் ஹிட் படங்கள் வந்தே நீண்ட நாட்கள் ஆனது போல தோன்றுகிறது. மியூசிக்கல் ஹிட் படங்கள் அபூர்வமாகிவிட்டது.

1975 முதல் 2000 வரை இசை மழையில் மூழ்கி திளைத்த தலைமுறை நாங்கள். இசை விருந்து, இசைமழை,  மியூசிக்கல் ஹிட் என்ற சொற்றொடர், சொற்பதம் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிறது.

சென்ற வாரம் வீடு சுத்தம் செய்யும்போது பழுதான டேப் ரிகார்டர், 300 மேற்பட்ட பழைய சினிமா மற்றும் பக்தி பாடல் அத்தனையும் கேட்டு தேய்ந்து போன கேசட்டுகள். முந்தானை முடிச்சு முதல் கரகாட்டக்காரன் வரையிலான  ராஜா சார் இசையமைத்த படங்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை, தூக்கி போடவும் மனசு வரவில்லை, முழுவதும் சேதம் அடைந்ததால்  காயலான் கடையில் போட்டோம். காலமாற்றத்தால் காலாவதியான தொழில்நுட்பம். எங்கள் மாமா தீவிர ராஜா ரசிகர். அவர் சேர்த்து வாய்த்த கேசட்டுகள் அவை. எங்களை ராஜாவின் ரசனைக்கு மாற்றியதில் அவர் பங்கு உண்டு.

இப்போதைய திரைப்பட இயக்குனர்களும் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ தோன்றுகிறது. படங்களின் ஓட்டமும் குறுகிவிட்டது. 

மக்களின் ரசனை மாறிவிட்டது, புதிய இயக்குனர்களின் வரவால் மியூசிக்கல் ஹிட்  படங்கள் அரிதாகிவிட்டது.  சில படங்களின், சில பாடல்கள் தான் கேட்க நன்றாயிருக்கிறது.

பாடல் மூலம்  கதை சொன்ன இயக்குனர்கள் உண்டு, பாடலை வைத்து கதை நகர்த்திய இயக்குனர்கள் உண்டு.  பாடல்களுக்காக எடுத்த படமும் உண்டு.  பாடல்களுக்காக ஓடின படங்களும் உண்டு.

ஐம்பது பாடல்களுடைய  படங்களையும் நாம் பார்த்தோம். ஐம்பது, இருப்பது, பதினைந்து, பத்து, ஏழு, ஒன்பது ஆறு, ஐந்து, மூன்று, இரண்டு என பாடல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போய் இப்பொது மான்டேஜ்  பாடலில் வந்து நிற்கிறது.

பாடல்கள் இல்லாத இந்திய சினிமாவை நினைத்து பார்க்கவே முடியவில்லை

சில பாடல்கள்  கேட்க நன்றாக இருக்கும், ஆனால் காட்சிப்படுத்துதல் மோசமாக இருக்கும், சில பாடல்கள் கேட்க சுமாராக இருக்கும் அனால் காட்சிப்படுத்துதல் நன்றாக இருக்கும்

பாடல்களே இல்லாத படம் எடுக்க வேண்டுமென்றால் இயக்குனர் அதிக சிரத்தை எடுத்து ரசிகனுக்கு அயர்ச்சி ஏற்படாதவாறு காட்சிகளை அமைக்க வேண்டும்.

ஞாயிறு மதியவேளை தெருவே 'வெறிச்'. ஊரே தொலைக்காட்சிப்பெட்டி முன் உட்கார்ந்திருக்கும். நாங்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்போம். மாநில மொழி திரைப்பட வரிசையில் சில தமிழ் படங்கள் (ஒரே ஒரு கிராமத்திலே, பூந்தளிர், அன்னக்கிளி, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், சலங்கை ஓலி, கிழக்கே போகும் ரயில்) ஒளிபரப்பாகும்.

அப்போது படத்தினூடே ஒலிக்கும் தீம் இசை, பாடல்கள் / பின்னணியிசை எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சில காட்சிகளில் இடையே வரும் அமைதி மற்றும் பின்னணி இசை நம்முடைய பதைபதைப்பை தூண்டும். அவ்வப்போது விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போய்ப் பார்ப்பதுண்டு. ஒருகட்டத்தில் விளையாட்டை முழுதும் நிறுத்திவிட்டுத் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துவிடுவோம். படம் முடிந்ததும் மீண்டும் விளையாட செல்வோம்.

பின்னணியிசை ரசிகனுக்குச் சந்தோசத்தை ஏற்படுத்த வேண்டும், சுவாரஸ்யத்தைத் தூண்டவேண்டும், பதைபதைப்பை உண்டாக்கவேண்டும். இப்போதைய படங்களில் வரும் பின்னணி இசை பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு வீரியமான காட்சி கூடச் சாதாரணமாகக் கடந்து போகிறது காரணம் அந்த இடத்தில பலமான பின்னணியிசை இல்லாததே.  Background Score Music is a vehicle to take a film to next level.  இத யாரும் சொல்லல நா சொல்றேன்..

ராஜாவின் ரசிகர் திரு நவீன் மொசார்ட் அவர்கள் தொகுத்துள்ள விடியோவை கேட்டுப்பாருங்கள், கேட்டவுடன் படம் பார்க்க தூண்டும்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday 27 February 2019

எம்ஜிஆர் பாடல்கள்


எம்ஜிஆர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் நான் எம்ஜிஆர் பாடல்களை கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன்.

எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அலுவலகம் செல்லும்போது ஊர் முழுவதும் அவர் பாடல்களை ஒலிபெருக்கியில் தெறிக்க விடுகிறார்கள் கழக கண்மணிகள்.

அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கு எப்படி சுயமுன்னேற்ற நூல்கள் உதவியாக இருந்தனவோ அதுபோல் முந்தய தலைமுறை தமிழர்களுக்கு எம்ஜிஆர் பாடல்கள் சுயமுன்னேற்ற ஊக்கியாக அமைந்தன.  தான் சார்ந்த திராவிட கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் தமிழகம் முழுதும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க செய்தார்அதன் மூலம் நிறைய இளைஞர்கள் வந்தார்கள், வளர்ந்தார்கள், வென்றார்கள்.  அவருடைய சினிமா பாடல்களே சொந்தக்கட்சி பிரச்சார பாடல்களாக அமைந்தது தான் சிறப்பு.



"உன்னையறிந்தால்.."
"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற.."
"என்னை தெரியுமா.." 
"நான் ஆணையிட்டால்..."
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." 
"கண்ணை நம்பாதே.."
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.."
“கண்போன போக்கிலே கால் போகலாமா”
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி”
"திருடாதே பாப்பா திருடாதே..."
இது போல ஏராளமான பாடல்கள்.  பாடல்களை பாடியது என்னவோ டிஎம்எஸ் அல்லது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் முகம் தான் நமக்கு ஞாபகம் வரும். அது தான் 3D எபெக்ட்.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த நடிகரும் நிகழ்த்தாத சாதனை எதுவெனில் எம்ஜிஆர் தன் சினிமா பாடல்கள் மூலம் (திராவிட) கொள்கைகளை மக்கள் மனதில் பதிய செய்து அதன் மூலம் ஆட்சியை பிடித்தது.

ஆனால் இன்று அவருடைய சொந்த கட்சியே அவருடைய கொள்கைகளை பின்பற்றுகிறதா என்று தெரியவில்லை?

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Tuesday 26 February 2019

பெட்டி கேஷ்

நாம் பணிபுரியும் அலுவலகத்தில் திடீர் செலவுகளை எதிர்கொள்ள ஒரு சிறிய தொகையை கையிருப்பு பணமாக அலுவலர் வைத்திருப்பார். நகலெடுக்க, பூஜை பொருட்கள் வாங்க, மற்றும் சில அன்றாடத் தேவைகளுக்கு இச்சிறிய தொகை பயன்படும். "பெட்டி கேஷ்" என்று கூடச் சொல்லலாம்..

ஒவ்வொரு மாத முடிவிலும் அந்த மாதத்தில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு, அதற்குண்டான ரசீதுகளை இணைத்து, கணக்குப்பதிவுத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து நடப்பு மாதத்திற்கான தொகையை வாங்கி வைத்துக் கொள்வது ஒரு சிறந்த நடைமுறை.

நானும் கூட இந்த "பெட்டி கேஷ்" பணத்தைக் கையாண்டிருக்கிறேன். அதற்கென்று ஒரு நோட்டுப் புத்தகம் போட்டு, செலவுகளை விவரமாக எழுதி, ரசீதுகளைச் சேகரித்து கணக்குப் பதிவுத்துறை அலுவலகத்தில் சமர்பித்திருக்கிறேன். தொகை சிறியதோ பெரியதோ, பணத்தைக் கவனமாகக் கையாளவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். ரசீதுகளை இணைக்கத் தவறினாலோ அல்லது செலவுகளை எழுத மறந்தாலோ நம்முடைய சொந்த பணத்தைப் போட வேண்டி வரும்.

என் பையனும் அடிக்கடி தன்னுடைய கல்வி செலவுகளுக்கு (நகலெடுக்க, பேனா வாங்க, வகுப்பு தேர்வெழுத பேப்பர் வாங்க) பணம் வேண்டி வந்து நிற்பான்.

அவனுடைய செலவுகளுக்கு நான் மாதம் இருமுறை ஒரு சிறிய தொகையைக் கொடுத்து வருகிறேன். செலவுகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை செலவுகளைக் காண்பித்து என்னிடம் கையொப்பம் வாங்கிக் கொள்கிறான். அந்தக் கணக்கை முடித்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுக்கிறேன்

சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல ஒரு சிறந்த பழக்கமாக இருக்கும் என நம்புகிறேன். பணத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும், எப்படிக் கணக்கு வைக்க வேண்டும், செலவு தலைப்பை எப்படி எழுதவேண்டும், அனாவசிய செலவு எது ? அதைத் தவிர்ப்பது எப்படி? அத்தியாவசிய செலவு எது ? ஒவ்வொரு பைசாவும் எங்கே போகிறது எதற்காகச் செலவாகிறது எனப் பணத்தைப் பற்றிய புரிதல் மற்றும் ஒழுங்கு முறையைக் கொண்டு வர  சிறந்த பயிற்சியாக அமையும்.

இப்போது செலவு கணக்குகளை அதற்கென உள்ள நோட்டுப் புத்தகத்தில் எழுதி கையப்பம் வாங்க என்னிடம் காண்பிக்கிறான்.  சின்ன, சின்னத் திருத்தங்களை அவ்வப்போது சொல்கிறேன். நாளை கல்லூரிக்குச் செல்லும்போதோ அல்லது விடுதியில் தங்கி படிக்கும்போதோ, படித்து முடித்த பின் வேலைக்குப் போகும்போதோ இதைப் பின்பற்றும் போது பணத்தை லகுவாகக் கையாள கற்றுக்கொண்டிருப்பான்.

இப்பொது இன்னும் ஒருபடி மேலே சென்று வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ரசீது வாங்க சொல்லி வலியுறுத்துகிறேன். எந்தக் கடையிலும் கொடுக்க மாட்டார்கள், இருந்தாலும் கேட்கச்சொல்லி இருக்கிறேன், அதையெல்லாம் இணைத்து செலவுகளைக் காண்பிக்கச் சொல்லி இருக்கேன்.

நீங்களும் இத்தகைய நடைமுறையை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

பெரியவர்களாகி, நாளை சம்பாதித்து நம் கையில் கொடுக்கும்போது நம்மிடம்
கணக்கு கேட்காமல் இருந்தால் சரி தான்...

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி