Wonderful Shopping@Amazon

Monday 8 April 2019

வாசம் வீசும் நேரம்


"வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..."
 
"வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......"
 
வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில் தோன்றும் வாசம் எது?
 
நான் மாலை நேர டியூஷன் படிக்கச் சென்ற அந்த ஆசிரியை வீட்டின் பூஜையறையில் ஏற்றப்பட்ட ஊதுபத்தியின் நறுமணம்.

தஞ்சாவூர் உணவகங்களில் பூரிக்குப் பரிமாறப்படும் தண்ணீயான கிழங்கு மசாலா வாசம் உள்ளங்கையில்.

ஞாயிறன்று எங்கள் தெரு முழுக்க மீன் / கருவாடு வறுவல், பிரியாணி, மட்டன் குழம்பு தாளிப்பு எனக் கவிச்சு வாசம் வீசும். அதுவும் புரட்டாசி  மாசத்தில் அதையெல்லாம் மறந்து இருந்தால் இந்த வாசம் ஞாபகப்படுத்தும்.

குலதெய்வக் கோயில் கருவறையில் பத்தி, கற்பூரம், சந்தானம் கலந்த வாசம் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும்.

அம்மா குழம்பு தாளிக்கும்போது வரும் வடாம் வாசம் பசியைத் தூண்டும்.

மல்லிகை பூ நறுமணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திருமணமான புதிதில் மனைவி சூடிய ஜாதி மல்லிகைப்பூ வாசம் இன்றும் நினைவில்.

சனிக்கிழமை தோறும் வெட்டிவேர் மற்றும் மூளை கலந்த சீகைக்காய் வைத்து எண்ணெய் குளித்த பிறகு உடம்பிலிருந்து வெளிவரும் வெட்டிவேர் வாசம் மனசை நிரப்பும்.

சென்னை புரசைவாக்கம் மோட்சம் திரையரங்கில் (இப்போது இல்லை) சில படங்கள் பார்த்திருக்கிறேன், உள்ளே நுழையும்போது வரும் ஒரு மெல்லிய நறுமண வீசும், படம் பார்க்கும் சூழலை இனிதாக்கும்.

மாமாவுடன் கொத்தவால்சாவடி மாம்பழம் விற்கும் சந்திற்குள் செல்லும் போது பல ரக மாம்பழங்கள் சேர்ந்த ஒட்டுமொத்த வாசம் நினைவில் நிற்கிறது.

பள்ளியில் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர், எப்போதும் குட்டிகூர வாசனைப் பொடி பூசிக்கொண்டு வருவார். அவர் வகுப்பில் நுழைந்ததும், வகுப்பறை முழுதும் குட்டிகூர வாசனை காற்றில் பரவியிருக்கும். யாராவது குட்டிகூர வாசனைப் பொடி பூசிக்கொண்டு எதிரில் வந்தால் அந்த ஆசிரியர் முகம் என் மனதில் வந்து போகிறது.

சில வீடுகளில் உள்ள பூஜையறையில் நறுமணம் கமழும் ஊதுவத்தி வாசனை மனதுக்கு இதமாக இருக்கும். "நீங்கள் என்ன ஊதுவத்தி உபயோகப்பத்துறீங்க", என்று கேட்கவா முடியும்? நானும் நிறைய ஊதுவத்தியெல்லாம் வாங்கி உபயோகபடுத்தியாச்சு, ஆனால் அதுபோல ஒரு வாசனை இல்லை.

சமீபத்தில் சைக்கிள் ப்ராண்ட் தயாரிப்பான "WOODS" என்ற சந்தன ஊதுவத்தியை வாங்கி உபயோகப்படுத்தினேன். அடடா என்ன நறுமணம். இதே நறுமணத்தைச் சாதாரணச் சந்தனம் கலந்த சாம்பிராணி தூப் தருகிறது.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தென்கோபுர வாசலில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் அருகில் உள்ள கடையில் ஐந்து ரூபாய் கொடுத்துக் குங்கிலியம் பொட்டலம் வாங்கி இங்குள்ள குண்டத்தில் அர்ப்பணிப்பார்கள். இதனால் விஷ ஜந்து கடியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்

கோவில்களில் அபிஷேகம்,அலங்காரம் முடிந்து, காண்பிக்கபடும் குங்கிலியம் தூபம் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
 
பொதுவாகச் சாம்பிராணி புகை வாசம் நல்லது. விசேஷ நாட்களிலோ அல்லது வெள்ளிதோறும் சாம்பிராணி தூபம் காண்பித்தால் கண் திருஷ்டி விலகும் என்பார்கள். காதி வஸ்திராலயம் அல்லது பாரிமுனை கந்தசாமி தெருவில் உள்ள கடைகளில் ஏகப்பட்ட சாம்பிராணி வகைகள் கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தலாம்.

வீடு முழுதும் வாசம் கமழ ரூம்ஸ் ஸ்பிரே மிதமாக அடித்துவிட்டால் போதும். சந்தையில் ஏகப்பட்ட நறுமணங்களில் ரூம்ஸ் ஸ்பிரே கிடைக்கிறது. தானியங்கி கருவியும் விற்கிறது, குறிப்பிட்ட இடைவெளியில் 'விசுக்', 'விசுக்' என்று நறுமணத்தைத் தெளிக்கும்.

நாட்டு மருந்து-குங்குமம்-மஞ்சள் கடையில் வேலை செய்தபோது, போட்டிருக்கும் சட்டை எப்போதும் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். குளித்த பிறகும் அந்த வாசம் விடாது. இப்போது பாரிமுனை கந்தசாமி கோவில் தெரு நாட்டு மருந்து-குங்குமம்-மஞ்சள் கடைப் பக்கம் போனால் பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னூஜ் என்னும் ஊரில் கடந்த நானூறு வருடங்களுக்கு மேலாக இயற்கைப் பொருட்கள் கொண்டு வாசனைத் திரவியங்கள் தயாரித்து வருகிறார்கள். இங்கிருந்து உலக நாடுகளுக்கு வாசனை பொருட்கள் ஏற்றுமதியாகிறது. ஆக்ராவிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கன்னூஜ். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.
சமீபத்தில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் தஞ்சாவூர் கவிராயர் எழுதிய கட்டுரையில் தஞ்சாவூரில் இன்றும் செயல்படும் நூறு ஆண்டுகள் பழமையான அப்துல் ரஹீம் அத்தர் கடை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
 
எனது நண்பர் ஒருவருக்குத் தலையில் ஏற்பட்ட காயத்தால் வாசனையை உணர முடியவில்லை.  இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.  நறுமணம் இல்லா வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

மறந்துவிட்டேன், முதல் மழை பூமியை நனைக்கும் போது வரும் அந்தக் கதகதப்பான மண் வாசனையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

நறுமணம் நல்ல மனநிலையை (Mood) தூண்டும். நம் மூலையில் பதிவாயிருக்கும் ஒவ்வொரு வாசனைக்கும் ஒரு கதை உண்டு. பழைய ஞாபகங்களைக் கிளறி விடும் சக்தி வாசத்துக்கு உண்டு.

உங்களுக்குப் பிடித்த வாசனை எது? ஏன் என்பதைப் பின்னூட்டதில் குறிப்பிடவும்.

வாசம் முற்றிய நிலையே நாற்றமோ?.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி

2 comments: