Wonderful Shopping@Amazon

Wednesday, 3 April 2019

மரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை


லார்ரி பேக்கர் - பிரிட்டனில் கட்டிடக் கலை பயின்று இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற அறிஞர். காந்தியுடனான சந்திப்பு, அவர் வாழ்க்கையை மாற்றியது. கடைசி வரை அதில் உறுதியாக நின்றார். அவருடைய கொள்கை வெகு எளிது "நாம் இருக்கும் இடத்தை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கிடைக்கும் கட்டுமான பொருட்களை வைத்தே உறுதியான வீட்டைக் கட்டலாம். இதனால் பெருமளவு செலவு குறையும், பணத்தை மிச்சப்படுத்தலாம். கட்டிடமும் காலத்துக்கும் வரும்"

சமீபத்தில் நண்பர் ஒருவர், கவுதம் பாட்டியா எழுதிய லார்ரி பேக்கர் (பென்குவின் பதிப்பு) - படிக்கக் கொடுத்த புத்தகத்தில் உள்ளது மேலே சொன்னது.

என்னுடைய கிராமத்தில் எனக்குச் சிறிய இடம் உள்ளது. வீடு கட்டலாம் என்ற எண்ணம். ஆடம்பரமாக இல்லாமல் என் கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து லார்ரி பேக்கர் பாணியில் வீடு கட்டலாம் என்றுமுயற்சித்த போது கிடைத்த தகவல்கள் கீழே:

லார்ரி பேக்கர் முறையைப் பின்பற்றி வீடு கட்டும் வல்லுநர்கள் அங்கங்கே இருக்கிறார்கள். மரபு கட்டுமானம் என்ற பெயரில் சிலர் இயங்கி வருகிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில் மரபு கட்டுமானம் முறையை மக்கள் இன்னும் சந்தேகத்துடன் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். 

நாங்கள் இருந்த பழைய வீடு முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட ஒட்டு வீடு. சிமெண்ட் தரை, வெளியில் இரண்டு பக்கமும் திண்ணை.  காலி இடத்தில் செடி கொடிகள் நட்டு அந்த இடத்தை அழகாக வைத்துக்கொண்டோம். அப்போது நிறையக் கோழிகள் வளர்த்தோம். வெய்யிலாக இருந்தாலும் சரி மழையாக இருந்தாலும் சரி எந்தவித பாதிப்பும் இல்லாமல், இருபது வருடங்கள் எந்தச் செலவும் வைக்கவில்லை.
மரபு கட்டுமான வீடு

புதிதாக வீடு கட்டிய போது பழைய வீட்டை இடிக்க முடிவில்லை, மண் வீடு அவ்வளவு உறுதி.

லார்ரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட எத்தனையோ வீடுகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

கேரளா மாநில மக்கள் இன்றும் பின்பற்றும் லார்ரி பேக்கர் முறையிலான வீடு அழகாக இருக்கிறது. லார்ரி பேக்கர் பாணியிலான கட்டுமான முறைகள் / நுணுக்கங்கள் கேரளா மாநில கலாச்சாரத்தில் இரண்டறக்கலந்தது. இயல்பாகவே பின்பற்றப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் முக்கிய அரசு கட்டிடங்கள் லார்ரி பேக்கர்  வடிவமைத்து, குறைந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அவரிடம் பயின்றவர்கள் / அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் /
திருவனந்தபுரத்தில் உள்ள லார்ரி பேக்கர் ஹாபிடேட் மையம் அல்லது பாண்டிச்சேரி ஆரோவில்லில் கட்டிட ஆராய்ச்சி பள்ளியில் நடத்தப்படும் லார்ரி பேக்கர் கட்டுமான முறைகள் - பயிற்சி முகாம் வகுப்பில் சேர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டவர்கள் என ஆங்காங்கே தங்கள் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பது தான் முக்கியம்.  அவர்களுடைய முந்தைய திட்டப்பணிகளை நேரில் சென்று விசாரித்துக் கண்டு வரவேண்டும். 

இன்னும் சொல்லப்போனால் மரபு கட்டுமான முறையில் கட்டப்படும் வீடு குறைந்த செலவு தான் பிடிக்கும் என்று தோன்றுகிறது.  காரணம் சிமெண்ட், மணல் மற்றும் செங்கல் பயன்பாடு குறைவது. அதற்குப் பதில் சுண்ணாம்பு கலவை, புளித்த மண் சுட்ட செங்கல் அல்லது அழுத்தப்பட்ட மண் கற்கள் (CSEB Blocks), மற்றும் பல பொருட்கள் தேவை. அதை கட்டுனரே ஏற்பாடு செய்து விடுவார்.

எங்களூரில் சுண்ணாம்பு கிளிஞ்சில்கள் விற்கும் கடை இருந்தது.  பொங்கல் பண்டிகை வரும் சில வாரங்களுக்கு முன்பு சுண்ணாம்பு கிளிஞ்சில்களை வாங்கி வந்து, தண்ணீரில் ஊறவைத்து, சுண்ணாம்பு அடிப்போம்.  அந்த பாத்திரம் அடியில் கை வைத்தால் சூடாக இருக்கும்.  வெய்யில் காலத்தில் வீடு குளுமை குளுமை கூல் கூல். இப்போது  சுண்ணாம்பு கிளிஞ்சில்கள்  விற்கும் கடையை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

மொசைக் தரை அல்லது சிவப்பு ஆக்சைடு தரை கால் பாதங்களுக்கு நல்லது மற்றும் வீட்டை குளுமையாக வைத்திருக்கும். ஆனால் மொசைக் தரை / சிவப்பு ஆக்சைடு தரை போட முன்பு ஆட்கள் இருந்தார்கள். இப்போது அவர்களும் இல்லை. வெளி மாவட்டங்களிருந்து தான் கூடி வர வேண்டும்.  அதற்காகும் செலவுகள் தனி. அதையும் கட்டுனரே ஏற்பாடு செய்து தருகிறார்.

மரபு கட்டுமான முறையில் கட்டப்பட்ட வீடுகளைப் பார்த்தால், மற்ற வீடுகள் மீது உங்கள் மனம் செல்லாது. காரணம் நேர்த்தியாகவும், அழகாகவும், எளிமையாகவும் அதே சமயத்தில் ஆடம்பரமாகவும் இருக்கும்.

நீங்கள் கோடி ரூபாய் கொட்டி வீடு கட்டியிருந்தாலும், சில லட்சங்கள் செலவழித்துக் கட்டிய மரபு மட்டுமான வீடு உங்களுக்குப் பிடிக்கும் காரணம் மேலே சொன்னது தான்.

லார்ரி பேக்கர் பாணி அல்லது மரபு கட்டுமான முறையில் கட்டப்படும் வீடு தான் உங்கள் கனவு இல்லமெனில்.  மரபு வீடு கட்டுநரைச் சுதந்திரமாக இயங்க விட வேண்டும்.  அவர் கேட்பதை வாங்கி கொடுக்க வேண்டும்.  இறுதி வடிவம் பெறும்வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும்.

இத்தகைய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் வசதி உண்டா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்

உங்களுக்கும் லார்ரி பேக்கர் பாணி அல்லது மரபு கட்டுமானம் பற்றிய புரிதல் இருக்கவேண்டும் (அடிப்படை விஷயங்கள்).  இணையத்தில் பார்த்து / கேட்டு / படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு http://agriwiki.in / http://www.vernarch.com போன்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் அல்லது கவுதம் பாட்டியா எழுதிய Laurie Baker: Life, Work, Writings என்ற புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

விரைவில் என்னுடைய லார்ரி பேக்கர் பாணியிலான மரபு கட்டுமான வீட்டு வேலை முடிந்ததும் புகைப்படங்களைப் பதிவிடுகிறேன்.

மரபு கட்டுமான வீடு கட்ட தேவையான தகவல்களை பெற கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் :


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி

8 comments:

  1. நன்றாக இருக்கிறது உண்மை தான்.

    ReplyDelete
  2. rajikarthik19@gmail.com27 June 2020 at 20:10

    Hi super article

    ReplyDelete
  3. Have you finished the house.Can I have photos in this forum or to my mail id:appliedco@gmail.com

    ReplyDelete
  4. Very informative post. Thanks.

    ReplyDelete
  5. Nice information

    ReplyDelete
  6. Very Nice sir

    ReplyDelete