Wonderful Shopping@Amazon

Wednesday 23 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-132

 'சீப் த்ரில்ஸ்'(2016)

ரு நாள் மோஜ் ஆப் -ஐ துழாவியபோது ஒரு ஆங்கில பாடல் என்னைக் கடந்து போனது. அந்த குரல் என்னை வசீகரித்தது. அந்த பாடலை யுடியூப் தளத்தில் தேடிக் கண்டுபிடித்துக் கேட்டேன், கேட்க, கேட்கக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த ரிதம் பேட்டன் அல்லது ஹார்மோனி தான் திரும்பக் திரும்ப கேட்கத் தூண்டுகிறதோ என்னவோ ? நம்மூரில் தனியிசை பாடல்கள் சமீபகாலமாகப் பிரபலமாகி வருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் தான். ஆனால் இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது, அதாவது, உலகளவில் பெரும் சாதனையை நிகழ்த்த.

சரி விஷயத்துக்கு வருவோம் ......

நான் கேட்ட அந்த பாடல் : "சீப் த்ரில்ஸ்" - This Is Acting (2016)  ஆல்பத்தில் இடம்பெற்ற "Come on, come on, turn the radio on" என்ற பாடல் ஆறு வருடங்கள் கழித்தும் இன்னும் உலக இசை அட்டவணை வரிசையில் இடம்பெறும் பாடல்.


"சீப் த்ரில்ஸ்" - ஆஸ்திரேலிய பாடகி மற்றும் பாடலாசிரியர் சியாவின் ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான 'திஸ் இஸ் ஆக்டிங் (2016) ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு பாடலாகும்.

இது சியா ஃபர்லர் மற்றும் கிரெக் குர்ஸ்டின் ஆகியோரால் எழுதப்பட்டு, குர்ஸ்டினால் தயாரிக்கப்பட்டு முதலில் 17 டிசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது, மேலும் ஜமைக்கா பாடகர் சீன் பால் சொந்த வரிகள் இடம்பெறும் "சீப் த்ரில்ஸ்" இன் அதிகாரப்பூர்வ ரீமிக்ஸ் பதிப்பு 11 பிப்ரவரி 2016 அன்று ஆல்பத்தின் இரண்டாவது தனிப்பாடலாக டிஜிட்டல் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு சிறந்த பாப் இரட்டையர்/குழு நிகழ்ச்சிக்கான கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பாடல் ஒரு "பவுன்சி", "ரெக்கே-டிங்" சின்த்பாப் மற்றும் டான்ஸ்ஹால் எலக்ட்ரோபாப்-பாணி சின்த் லேயர்களை உள்ளடக்கிய பாடலாகும்.

ஐக்கிய அமெரிக்காவில், சியாவின் "சீப் த்ரில்ஸ்" பாடல் US பில்போர்டு ஹாட் 100 இல் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் 2016 இல் தேசிய மெயின்ஸ்ட்ரீம் டாப் 40 இல் முதலிடத்தைப் பிடித்தது.  ஆஸ்திரியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, போர்ச்சுகல், ஸ்பெயின் உட்படப் பல நாடுகளில் முதலிடத்தை எட்டியது; அத்துடன் ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து, சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்தது.

UK -வில் ஒற்றையர் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2018 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளில், "சீப் த்ரில்ஸ்" பாடலாசிரியர்களான சியா மற்றும் குர்ஸ்டின் ஆகியோருக்காக வெளிநாடுகளில் அதிகம் விரும்பி கேட்கப்படும் பாடலுக்கான ஆஸ்திரேலிய படைப்பு விருதை வென்றது. இது 2019 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளிலும் மீண்டும் 2020 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளிலும் விருதை வென்றது.

"சீப் த்ரில்ஸ்" மூலம், மடோனா "மியூசிக்" மூலம் ஹாட் 100 இல் முதலிடம் பிடித்த 40 வயதுக்கு மேற்பட்ட முதல் பெண்மணி ஆனார் சியா. இப்பாடல் தொகுப்பு 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1.7 மில்லியன் பிரதிகள் விற்ற சாதனை படைத்தது மற்றும் அந்த ஆண்டு அதிகம் விற்பனையான பத்தாவது பாடலாக மாறியது.

ஜனவரி 2016 இல் ஜிம்மி ஃபாலன் நடித்த 'தி டுநைட் ஷோ' உட்பட, இசை வீடியோவில் உள்ள நடனத்திற்கு மேடி ஜீக்லர் அல்லது ஸ்டெபானி மின்கோன் தலைமையிலான நடனக் கலைஞர்களின் குழுவுடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் "சீப் த்ரில்ஸ்" நிகழ்ச்சியை சியா நிகழ்த்தியுள்ளார். மார்ச்சில் அமெரிக்கன் ஐடல், ஏப்ரலில் கோச்செல்லா, மற்றும் நியூயார்க் நகரில் யூடியூபின் பிரமாண்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்வு மற்றும் மே மாதத்தில் 'தி வாய்ஸின்' சீசன் இறுதிப் போட்டி எனப் பல நிகழ்ச்சிகளில் பாடப்பட்டது/இசைக்கப்பட்டது /இசைத்து-ஆடப்பட்டது இந்த பாடல்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலை, கீழே உள்ள காணொளியை அழுத்தி கேட்கலாம் ........



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday 22 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-131

'ஷோலே'(1975)

மேற்கத்திய கௌபாய் படத்தின் சாயலில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, சஞ்சீவ் குமார் மற்றும் அம்ஜத் கான் ஆகியோர் நடித்து, இயக்குநர் ரமேஷ் சிப்பி இயக்கத்தில்  1975-ஆண்டு வெளியான  'ஷோலே' இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான படம், இதற்கு முன்னும் பின்னும் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்ல மாட்டேன், ஆனால் கமர்சியல் படங்களில் ஒரு மைல்கல் 'ஷோலே'.

என் மாமாவுக்குப் பிடித்த படம். திரையரங்கில் இந்த படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கதை கதையாகச் சொல்வார். அன்றைய காலகட்டத்தில் அவர் வயதுடையவர்களுக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்திய படம்.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவ்வப்போது Performance அலவன்ஸ் கொடுப்பார்கள், அப்படிக் கிடைத்த சொற்ப பணத்தில் நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் இந்த படத்தின் ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பார்த்தேன்.

தொடக்கத்தில் வரும் அந்த ரயில் சண்டைக் காட்சி, அதுவரை இந்திய சினிமா பார்க்காதது, முதல் முறையாகப் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டு தான் போனார்கள். சரியாக ஐந்து வருடம் கழித்து 'முரட்டுக்காளை' படத்தில் கிளைமாக்ஸ் ரயில் சண்டைக் காட்சியை வைத்து இயக்குநர் எஸ் பி முத்துராமன் தமிழ் ரசிகர்களின் ஆசையைத் தீர்த்துவைத்தார்.

'ஷோலே' வெளியாகி 45 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை உங்களுக்காகத் தருகிறோம்...

'ஷோலே' படத்தில் கதாநாயகனாக 'ஜெய்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சத்ருகன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், வளர்ந்துவரும் நடிகரான அமிதாப்பச்சன் தான் அந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று யூகித்து அப்படத்தின் தயாரிப்பாளரான ஜி பி சிப்பி தேர்வு அவரை செய்தார்.

கதைப்படி 'வீரு' கதாபாத்திரத்தில் சஞ்சீவ் குமார் மற்றும்  தாக்கூர் பல்தேவ் சிங் வேடத்தில் தர்மேந்திரா நடிப்பதாக இருந்தது. இரண்டு பேரும் ஹேமாவுடன் காதல் வயப்பட்டதால். காதலை இழக்க விரும்பாத தர்மேந்திரா, ஹேமாவுடன் ஜோடியாக நடிக்கும் 'வீரு' கதாபாத்திரத்தை கேட்டுப்பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 இல், தர்மேந்திரா ஹேமா மாலினியை மணந்தார்.

'எந்திரன்' படத்தில் வில்லனாக நடித்த டேனி தான் 'ஷோலே' படத்தின் வில்லனாக நடிக்கவிருந்தார், ஆனால் ஆப்கானிஸ்தானில் ஃபெரோஸ் கானின் 'தர்மாத்மா' படப்பிடிப்பிலிருந்ததால் டேனியால் நடிக்க முடியாமல் போனது.
பிறகு அம்ஜத் கான் உள்ளே வந்தார், அவரது குரல் பலவீனமாக இருப்பதாகக் கதாசிரியர் ஜாவேத் அக்தர் உணர்ந்தார். பின்பு அதுவே வில்லன் கதாபாத்திரத்துக்கு பிளஸ்-ஆக அமைந்தது வேறு கதை.

'ஷோலே' படத்தின் அசல் க்ளைமாக்ஸில் வில்லன் கப்பர் சிங், தாக்கூரால் கொல்லப்பட வேண்டும். காட்சியும் இப்படித்தான் படமாக்கப்பட்டது, ஆனால் படத்தின் கிளைமாக்ஸை தணிக்கைக் குழு ஏற்கவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும்,தாக்கூரால் கொல்லப்படக்கூடாது என்றும் வாரியம் பரிந்துரைத்தது. அதனால் படத்தின் கிளைமாக்ஸ் பின்னர் மாற்றப்பட்டது.

கதாசிரியர்களில் ஒருவரான சலீம்கானுக்கும்  ஹனி இரானியின் தாயாருக்கும் இடையே நிஜ வாழ்வில் நடந்த உரையாடல்தான் 'ஷோலே' படத்தில் அமிதாப்பச்சன் தனது நண்பரான வீருவின் திருமணத்தைப் பற்றிப் பேச, பசந்தியின் தாயைச் சந்திக்கும் நகைச்சுவை காட்சியாக இடம்பெற்றது

எல்லா வெற்றிப் படங்களுக்கும் நடப்பது தான் 'ஷோலே' படத்திற்கும் நடந்தது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் அவ்வளவாகக் கூட்டம் வரவில்லை, திரையரங்குகளிலிருந்து தூக்கப்படவிருந்தது, ஆனால் ரசிகர்களின் வாய்மொழி விமர்சனம் கூட்டத்தை வரவழைத்தது. பிறகு படம் வெற்றிபெற்று, இந்தியா முழுவதும் சுமார் 100 திரையரங்குகளில் வெள்ளி விழாவைக் கொண்டாடிய முதல் திரைப்படமாகும்.
 
இந்த படம் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com and Times Of India

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Wednesday 16 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-130

'நெஞ்சம் மறப்பதில்லை' (1963)

மீபத்தில் நாணி நடித்த 'ஷியாம் சிங்க ராய்' படம் பார்த்தேன். நாயகனின் நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தை இணைத்துப் படத்தை ரசிக்கும்படி இயக்கியிருந்தார் இயக்குநர் ராகுல் சன்க்ரிட்யன். வங்காளத்தில் கதை நடைபெறும் கடந்த கால பிளஷ்பேக் பகுதியில் கலை இயக்குநரின் பங்களிப்பு படத்துக்குப் பெருந்துணை.

மறுபிறவி / மறுஜென்ம கதைகள் தமிழுக்குப் புதிதில்லை, இந்த ஜானரில் மெனக்கெடல் அவசியம் மற்றும் சுவாரசியமான திரைக்கதை தான் பலம். இந்த ஜானர் பக்கம் யாரும் போவது கிடையாது, கொஞ்சம் ரிஸ்க்கானது. வெகு சில இயக்குநர்களே வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள். (உதாரணம் : 'மகதீரா' இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி). சும்மா ஹிப்னோடிசம், மனோதத்துவம் என ஜால்ல்லியடிக்க முடியாது.  அசல் உலகத்தை ரசிகன் கண் முன்னே நிறுத்த வேண்டும். ரசிகனை சீட்-நுனிக்கு கொண்டுவரவேண்டும்.

உலகநாயகன் கூட இந்த ஜானரில் ஒரு படம் செய்திருக்கிறார். இயக்குநர்      எஸ் பி முத்துராமன் இயக்கி, கமல், ஷோபனா (அறிமுகம்), ஸ்ரீப்ரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்குள் ஒருவன்'. இது ஹிந்தியில் வெளியான 'கர்ஸ்' படத்தின் ரீமேக்.  இசைஞானியின் இனிய பாடல்கள், கமலின் டிஸ்கோ நடனம் எனப் படம் engaging-ஆக இருக்கும்.

நடிகர் நாசர் இயக்கி 1997-ஆம ஆண்டு 'தேவதை' படம் கூட ஒரு மறுபிறவி / மறுஜென்ம கதை தான். படம் வரவேற்பைப் பெறவில்லை.

மறுபிறவி / மறுஜென்ம கதைகள் கொண்ட படங்களுக்கெல்லாம் முன்னோடி அல்லது முதல் படம் இது என்று கூடச் சொல்லலாம். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை'  என்றதும் இனிய பாடல்களும், தேவிகாவின் நடிப்பும் மற்றும் நம்பியாரின் வில்லத்தனமும் தான் ஞாபகம்  வருகிறது.

1935-1939  காலகட்டங்களில் கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருப்பதாக்க கூறும் நபர்களைப் பற்றிய செய்திகளால் கவரப்பட்ட இயக்குநர் ஸ்ரீதர். மறுஜென்மம்/மறுபிறவியை மையமாக வைத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கான திரைக்கதையை உருவாக்கினார்.

1963-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை' கல்யாண் குமார் மற்றும் தேவிகா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், பத்மினி பிரியதர்ஷினி மற்றும் மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்து, ஸ்ரீதர் இயக்கினார். வணிக ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் ஃபார்முலா திரைக்கதையிலிருந்து மாறுபட்ட 'நெஞ்சம் மறப்பதில்லை' தமிழ் சினிமாவில் கல்ட் படங்களில் ஒன்று மற்றும் இயக்குநர் ஸ்ரீதரின் Masterpiece என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீதர் தனது பழைய பாணிக்குத் திரும்பினார்.

வில்லனான நம்பியாரின் ஜமீன்தார் கதாபாத்திரத்திற்கான ஒப்பனை செய்ய மூன்று மணிநேரம் பிடித்தது.

ஜமீன்தார் நாயகனையும், நாயகியையும் குதிரை வண்டியில் துரத்தும் காட்சியினை விறுவிறுப்பு குறையாமல் அற்புதமாகப் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவு மேதை ஏ. வின்சென்ட்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த அனத்த பாடல்களும் வரவேற்பைப் பெற்றன மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலத்தைக் கூட்டின.

இந்த படம் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 
 
 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

 
 

Saturday 12 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-129

கோரஸ் பாடல்கள்

சென்னை தொலைக்காட்சியில் வியாழன் தோறும் மெட்ராஸ் கோரஸ் குழுவினர் (என்று நினைக்கிறேன்!?) மெல்லிசை பாடல்களைப் பாடுவார்கள், கேட்கவே அருமையாக இருக்கும். அனைவரின் குரலும் சேர்ந்து தனி ரிதமாக ஒலிக்கும். அதை மிக அழகாக கொண்டுசெல்லும் ஒருங்கிணைப்பாளர் பணி சவாலானது. மகாகவி பாரதியார் பாடலான "பாருக்குள்ளே நல்ல நாடு ..." செம்ம ஹிட். அந்த டியூன் இப்போதும் எனக்கு மனப்பாடம். மெட்ராஸ் கோரஸ் குழுவினர் இப்போதும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
 x-x-x
சில வருடங்களுக்கு முன் திரு விட்டலதாஸ் மகாராஜ் அவர்களின் நாம-சங்கீர்த்தனம் நிகழ்ச்சி பிரபல பள்ளி மைதானத்தில் நடந்தது. முதல்முறையாக அப்போது தான் நாம-சங்கீர்தன நிகழ்ச்சியை பார்க்கிறேன். பார்வையாளர்கள் சிலர் உற்சாக நடனமாடினார். எளிய இசைக்கருவிகள், நாம-சங்கீர்த்தன விற்பன்னரின் குரலுடன் சேர்ந்த குழுவினர் ஒத்திசை என மறக்கவே முடியாத அனுபவமாக இருந்தது.
x-x-x
"குட் மார்னிங் மீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." - ஒவ்வொரு ஆசிரியர் /ஆசிரியை வகுப்புக்கு வரும் போது எழுந்து நின்று கோரஸாக சொன்னது நினைவுக்கு வருகிறது.
x-x-x
போராட்ட களத்தின் வெற்றி/ தோல்வி பாதிக்கப்பட்டவர்கள் கோரஸாக எழுப்பும் கோஷத்தில் தான் உள்ளது.
x-x-x
அய்யப்ப ஸ்வாமிகள் கோரஸாக எழுப்பும் சரண கோஷம், முதல்முறையாகப் புதிதாக மாலை அணிந்துகொண்டு வரும் கன்னிச் சாமிகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.
x-x-x
திருப்பதி திருமலை சுவாமி தரிசன வரிசையில் நிற்கும் போதும் / ஸ்வாமி சன்னிதியை நெருங்கும்போதும், பக்தர்கள், அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் கோரஸாக "கோவிந்த", "கோவிந்தா" என எழுப்பும் கோஷம் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
x-x-x
 
சரி விஷயத்துக்கு வருவோம்........
----------------------------------------------------------------------
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா

தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தா

அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
 
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
----------------------------------------------------------------------
கூட்டாகப் பாடுதல் அல்லது கோரஸ் அல்லது குழுவினர் ஒத்திசை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

பாடகர்/ பாடகி தனியாகப் பாடும் பாடலை விடக் குழுவினருடன் பாடும் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன.

இசைஞானியின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கோரஸ் பாடல்கள் அதிகம் வர ஆரம்பித்தன என்பது எனது கணிப்பு. கோரஸ்-ஐ அதிகம் இளையராஜா அவர்கள் தனது இசையில் பயன்படுத்தினார் என்று சொல்வேன். பிறகு மற்ற இசையமைப்பாளர்களும் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

கோரஸ்: பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது, கோரஸ்-உடன்  பல இசை கருவிகளின் சத்தம்  ஒருங்கிணைந்து பாடலுக்குப் பிரமாண்ட தோற்றத்தைத் தருகிறது.  (உதாரணம்: 'ஹே ராம்' - "இசையில் தொடங்குதம்மா...")

கோரஸ்-ஐ பாடல்களினூடே பயணிக்கும் அல்லது இடையே வரும் இன்டெர்லூட் போலவும் பயன்படுத்தியிருக்கிறார் ராஜா. இதுவும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சி தான். (உதாரணம்: 'அவதாரம்' - "தென்றல் வந்து தீண்டும்..")

எத்தனை பாடல்கள். ஒன்றா, இரண்டா, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் ஒவ்வொரு பாடல்களும் தனித்து நிற்கிறது. அப்படி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சில பாடல்களைப் பார்ப்போம்.

'அலைகள் ஓய்வதில்லை' - "காதல் ஓவியம்"
'சிகப்பு ரோஜாக்கள்"  - "நனைவோ சிறு பறவை"
'கரும்பு வில்' - "மீன்கொடி தேரில்...."
'சகலகலா வல்லவன்' - "அம்மன் கோயில் கிழக்காலே "
'மூடு பனி' - " என் இனிய பொன் நிலாவே "
'நாடோடி தென்றல்' - "யாரும் விளையாடும் தோட்டம்.."
'ராஜாதி ராஜா' - "மீனம்மா மீனம்மா.. "
'தாலாட்டு பாடவா' - "வெண்ணிலவுக்கு வானத்த.."
'அபூர்வ சகோதரர்கள்' - "ராஜ கைய்ய வெச்சா.."  மற்றும் "அண்ணாத்தே 
ஆடுறார்.."
 
இன்னும், இன்னும் பல பாடல்கள்..எழுத பக்கங்கள் போதாது.


 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

 

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-128

நீங்கள் கேட்டவை (1984)

80-90-களில் கச்சேரி மேடைகளில் நான்காவது-ஐந்தாவதாக இந்த பாடலை பாடுவார்கள், அவர்களும் மேடையில் ஆடிக்கொண்டே பாடுவார்கள், காரணம் பாடலின் ரிதம் அப்படி. பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.  கல்லூரி ஆண்டு விழாக்களில் கூட இந்த பாடல் /நடனம் இடம்பெற்றது.

சில இயக்குநர்களுக்கு தனக்குத் தெரிந்த ஜானரில் படம் இயக்கவே விரும்புவார்கள், தெரியாததை ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணமாகக்  கூட இருக்கலாம். சிலர் எல்லா ஜானரிலும் படம் பண்ண விரும்புவார்கள்.

இப்படி இருக்கையில், "இவருக்கு அழகியல்/ மனித உறவுகளின் சிக்கல்களைத் தாண்டி, இவரால் படம் எடுக்க தெரியாது.." - யாரோ பேசியதை இவரது நண்பர் ஒருவர் இவரிடம் சொல்ல... "அப்படியா.." என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், அடுத்து பக்கா வணிக படத்துக்கான வேலைகளில் இறங்கி /இயக்கி சிக்ஸர் அடித்தார். படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

யார் அந்த இயக்குநர்  என்ன படம் ?

1984 ஆம் ஆண்டு, தியாகராஜன், பானுச்சந்தர், அர்ச்சனா மற்றும் சில்க் ஸ்மிதா, ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து, இளையராஜா இசையமைத்து காலஞ்சென்ற இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய படம் 'நீங்கள் கேட்டவை'.  ஒரு தமிழ் பத்திரிக்கை, "பாலு மகேந்திரா, இதயா நாங்கள் கேட்டோம் .." என்று எழுதியது.  அதன் பிறகுத் தனது பாணிக்குத் திரும்பினார்.

என்னுடைய அண்ணன் பெருமாள் அவர்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடிக்கும், தினமும் ஒரு முறையாவது டேப் ரெகார்டரில் கேட்டுவிடுவார்.

"அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி.." என்ற பாடல் தான் மேடை கச்சேரியை ஆக்கிரமித்தது. இன்றைய தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் தவறாமல் இடம்பெறுகிறது. மழலைகள் குரலில் கேட்கும்போது கூட நன்றாகத் தான் இருக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேன்...முதல் சரணம் கிளாசிக்கல், இரண்டாம் சரணம் வெஸ்டர்ன் கலவையில் இடம்பெற்ற  "ஒ வசந்த ராஜா.. " பாடலை தான் எப்படி மறக்க முடியும்.




- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.