Wonderful Shopping@Amazon

Thursday 31 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-26

இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

ப்போதெல்லாம் திருமணம் வீடுகளில் நடக்கும். நான்கு நாளைக்கு முன்பே, ஒலிபெருக்கி சகிதாம் வந்து இறங்குவார்கள் மைக்-செட்-சவுண்ட் சர்விஸ் ஆட்கள். அப்போது பிரபலமாக உள்ள அனைத்து திரைப்பட இசைத் தட்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு அலறவிடுவார்கள். இத்தனைக்கும் அப்போது மோனோ ஒளி அமைப்பு தான், அதுவே கேட்கப் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படிக் கேட்டது தான் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி, கமல்-ரஜினி நடித்து, ராஜா சார் இசையமைத்த வெற்றிப்படமான "இளமை ஊஞ்சலாடுகிறது" படப் பாடல்கள். மலேசிய வாசுதேவன் ரகளையாகப் பாடிய "தண்ணி கருதிருச்சி" பாடல் தொடங்கி "என்னடி மீனாட்சி " வரை திரும்பத் திரும்ப ஒலிக்க விட்டார்கள்.

சாதாரணமாக மென்மையான பாடல்களைப் பாடும் பாடகி திருமதி வாணி ஜெயராம் இதில் Fast Beat பாடலை பாடியிருப்பார்.  "நீ கேட்டால் நான்..." என்ற பாடல் தான் அது. இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு அந்தக் கல்யாண வீடு தான் ஞாபகம் வருகிறது.



 நன்றி: Youtube




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-25

தெய்வமகன் (1969)

டிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனையோ ஜானரில் (பேய் படத்தில் நடித்திருக்கிறாரா ?), வேடங்களில் நடித்திருந்தாலும் தொழிலதிபர் வேடத்தில் நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அந்த வேடத்தில் அவருடைய மிடுக்கு, கம்பீரம், உடல்மொழி. வசன உச்சரிப்பு, முகபாவங்கள் என அனாயாசமாக வெளிப்படுத்துவார். (உதாரணம்: உயர்ந்த மனிதன், பார் மகளே பார், மற்றும் பல படங்கள்)

சரி விஷயத்துக்கு வருகிறேன், நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த "தெய்வமகன் " எனக்குப் பிடித்த படம்.  படத்தில் மூன்று பேர் சந்திக்கும் காட்சி. அன்பால் குழையும் சிவாஜி, அன்புக்கு ஏங்கும் சிவாஜி, குற்ற உணர்வால் தவிக்கும் சிவாஜி என மூன்று கதாபாத்திரங்களும் வெவ்வேறு குரல் பண்பேற்றம், வெவ்வேறு உடல்மொழி எனப் பின்னியிருப்பார்.

"தேவையில்லன்னு நினைச்ச தந்தையும், அவனைத் தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் அற்புதமான காட்சி" என்ற வசனத்துடன் அந்தக் காட்சியைச் சிவாஜி ஆரம்பித்துவைப்பார். நம்ம விச்சு டார்லிங் (MSV) இந்தக் காட்சிக்கு அருமையாகப் பின்னணி இசை போட்டிருப்பார், படம் பார்க்கும் சாதாரண ரசிகனுக்கும் அந்தக் காட்சியின் வீரியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும்.

இந்தக் காட்சியை இயக்குநர் எப்படிக் கம்போஸ் செய்தார், அதை எப்படி நடிகர் திலகத்திடம் கொண்டுசென்றார், அதை உள்வாங்கி எப்படி நடிகர் திலகம் நடித்தார், காட்சியைக் கவனமாகக் கையாண்ட படத்தொகுப்பாளர், காட்சிக்குப் பின்னணி இசையால் உயிரூட்டிய MSV என இவர்கள் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம் காலம் கடந்து நிற்கிறது.

இதோ நீங்களும் அந்தக் காட்சியை முழுதாகக் கண்டுகளியுங்கள்:



Note: இப்படத்தில் தாயும்-மகனும் (சிவாஜி-பண்டரிபாய்) கோயிலில் சந்திக்கும் காட்சி, பின்னாட்களில் வந்த "தளபதி" படத்தில் இடம்பெற்ற ரஜினி-ஸ்ரீவித்யா கோயிலில் சந்திக்கும் காட்சியை ஞாபகப்படுத்தியது.


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Monday 28 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-24

கோபுர வாசலிலே (1991)

ந்தப் பாடலை பிடிக்காதவர்கள் உண்டோ? எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் அப்போது பிரபலமான ஃபிளிப் கைப்பேசி வாங்கியிருந்தான். அந்தக் கைப்பேசியின் ரிங்க்டோனாக இந்தப் பாடலை வைத்திருந்தான். அதுவுமில்லாமல் ஒரு நாளைக்குப் பல தடவை இந்தப் பாடலை கேட்பான். "அவனுடைய ஆளுக்கு இந்தப் பாடல் இஷ்டமாம்" காரணம் கேட்டபோது சொன்னான். திடீரென்று ஒரு நாள் போனையும், ரிங்க்டோனாயும் மாற்றிவிட்டுருந்தான். பிறகு தான் தெரிந்தது நண்பனுக்குக் காதல் முறிவு ஏற்பட்டது என்று.

இருந்தாலும் என்ன எனக்கு இந்தப் பாடல் பிடிக்குமே!! அந்தப் பாடல் "காதல் கவிதைகள்" - இடம்பெற்ற படம் "கோபுர வாசலிலே". இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய இரண்டாவது தமிழ் படம். காதல், நகைசுவை எனப் படம் கலகலப்பாக, கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், ராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.  அதில் ஒன்று இந்த பாடல்:

இது போல ஒரு பாடலை மீண்டும் Recreat செய்ய முடியாது. எத்தனையோ வருடங்கள் திரும்பத் திரும்பக் கேட்டாலும்.. இன்று தான் புதிதாகக் கேட்பதுபோல் மாறாத பரவசம்!   நீங்களும் கேளுங்களேன்:






நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-23

ந்திய சினிமாவில் இடம்பெற்ற சிறந்த ஆக்ஷன் பிளாக் எது தெரியுமா?

எத்தனையோ படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ஆரவாரம் செய்து கைதட்டி ரசித்திருப்போம். இன்று வரை இந்திய சினிமாவில் இது போன்றதொரு சண்டைக் காட்சி இடம்பெறவில்லை என்பதே உண்மை. இன்றைய நவீன சினிமாவில் சண்டைக் காட்சிகளில் நிறைய மெனக்கெடல்கள், பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், சட்டென்று மனதில் பதிய மறுக்கிறது. நான் சொல்வது சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான மற்றொரு வெற்றிப்படமான அமிதாப் நடித்த "தீவார்" (1975) என்ற மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்தி படத்தில் இடம்பெற்ற முக்கியச் சண்டைக் காட்சி.

"தீவார்" படத்தின் மறுஆக்கம் தமிழில் ரஜினிகாந்த் நடித்து "தீ" (1981.) என்ற பெயரில் வெளியானது. பள்ளி நாட்களில் விசிஆர் - வீடியோ கேஸட் - இல் பார்த்தப்படம். ரஜினி நடித்த படங்களில் என்னுடைய  All time favorite. இது ரீமேக் படம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இதிலும் அந்தச் சண்டைக் காட்சி அதே லெவலில் இருக்கும். யார் இதில் பெஸ்ட் என்றெல்லாம் கணிக்கமுடியாது. இரண்டுமே கிளாஸ் ரகம் தான். யூடியூப் சேனல் வந்த பிறகு அடிக்கடி பார்ப்பதுண்டு. இதோ அந்தக் காட்சியைக் கண்டு ரசிப்பீர்:






நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Friday 25 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-22

என் ராசாவின் மனசிலே (1991)

கோடை விடுமுறை, புதன்கிழமை, மாமா சினிமா பார்க்க காசு கொடுத்தார்.
நானும் எனது நண்பனும் மிதிவண்டி எடுத்துக்கொண்டு படம் பார்க்க மதிய காட்சிக்குச் சங்கம் திரையரங்கம் சென்றோம். அந்தப் படத்தின் கதாநாயகனுக்குப் பெரிய கட்அவுட் வைத்திருந்தார்கள். பெண்கள் கூட்டம் அலைமோதியது, முட்டி மோதி பார்த்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். அதற்குப்பதில் வேறு எதோ படம் பார்த்ததாக நினைவு. பெயர் ஞாபகம் இல்லை.

சில நாள் கழித்து, மீண்டும் முயற்சித்தோம், மேலே சொன்னதே நடந்தது. சில வாரங்கள் ஆன பிறகு வீடியோ கேசட் வெளியிட்டார்கள், தினத்தந்தியில்
விளம்பரம் வந்தவுடன், வீடியோ கேசட் வாங்கிப் படம் பார்த்தோம்.

இதில் விஷயம் என்னவென்றால், அன்றைய சில கதாநாயகர்களுக்கு (டிஆர் மற்றும் ராஜ்கிரண்) கணிசமான பெண் ரசிகைகள் கூட்டம் இருந்தது. குறிப்பாக நடிகர் ராஜ்கிரண் படம் வந்தால், பெண்கள் திரையரங்குக்குப் படையெடுப்பார்கள். அவருடைய படங்கள் வரிசையாக வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது மற்றும் ராஜாவின் இசை.

மேலே சொன்ன படம் இயக்குனர் கஸ்துரி ராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் நடித்து 91-ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த "என் ராசாவின் மனசிலே". வைகை புயல் வடிவேலு நடித்து வெளிவந்த முதல் படம். கோடை விடுமுறையில் படம் பார்க்க எத்தனித்த போது ஏற்பட்ட அனுபவம்.

"என் ராசாவின் மனசிலே" படத்தில் பாடகி சுவர்ணலதா பாடிய "குயில் பாட்டு"
எனக்குப் பிடிக்கும். நான் முன்பே சொன்னது போலச் சுவர்ணலதாவின் குரல்
தனித்தன்மை வாய்ந்தது. அதனால் தான் இன்றும் இந்தப் பாடலை கேட்கமுடிகிறது.  இதோ அந்தப் பாடல்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Thursday 24 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-21

யாதோன் கி பாரத் (1973)

இந்தியாவின் தலைசிறந்த கதை-திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான "யாதோன் கி பாரத்" இந்திய சினிமாவின் பல முன்னுதாரணங்களைக் கொண்ட படம். பல நட்சத்திர நடிகர்கள் ஒரே படத்தில், காதல், ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட், பழிவாங்கல் எனக் கலந்து கட்டி வந்த படம். அதற்குப்பிறகு வந்த படங்கள் அனைத்தும் இதே முறையைப் பின்பற்றி வந்தது.

"யாதோன் கி பாரத்" இந்தி படம் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து "நாளை நமதே" என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது பின்பு தெரிந்துகொண்டேன்.

பள்ளி நாட்களில் தூர்தர்ஷனில் சனிக்கிழமை தோறும் இந்தி படம் மற்றும் ஞாயிறு தோறும் தமிழ்ப் படம் போடுவார்கள். ஒரு மாலை வேளையில் "யாதோன் கி பாரத்" இந்தி படம் போட்டார்கள். மொழி தெரியவில்லையென்றாலும் ஒரு மாதிரி கமர்சியல் அம்சங்கள் நிறைந்திருந்ததால், ஆர்வமுடன் பார்த்தோம். ஆனால் "சுரா லியா ஹை தும்நெ ஜோ தில் கோ " என்ற பாடல் என் நினைவில் பதிந்துவிட்டது. 

ஆர் டி பர்மன் இசையில் ஆஷா போஸ்லே மயக்கும் குரலில் ரகளையாகப் பாடியிருப்பார். இந்தப் பாடல் எனக்கு எப்போதும் பிடிக்கும். பாடலின் பிற்பகுதியில் பாடகர் முகமது ரபி உள்ளே வருவார். இடையே இடையே வரும் சாக்ஸபோன் interlude அருமையாக இருக்கும்.  இதோ நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Tuesday 22 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20

ஆராதனா (1969)

காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம். பல மொழிகளில் இப்படம் மறு ஆக்கம் செய்திருந்தாலும், அசல் வெளியீடான "ஆராதனா" எப்போதுமே பெஸ்ட்.

அப்போது தூர்தர்சனில் புதன் கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் "சித்ராஹார்" நிகழ்ச்சியில் அடிக்கடி கிஷோர் குமார் பாடிய "மேரே சப்னோ கி ராணி...." என்ற பாடலை போடுவார்கள். ராஜேஷ்கண்ணா ஜீப்பில் பாடிய படி வர, ரயிலில் பயணம் செய்யும் சர்மிளா ஓரக்கண்ணால் இடையே, இடையே பார்க்க எனப் பாடல் அழகாக இருக்கும்.

இப்போது விஷயம் அதுவல்ல, ஆராதனா படத்தில் இன்னொரு பாடல் உண்டு "ரூப் தேரா மஸ்தானா பியார்" என்ற பாடல் காலஞ்சென்ற பாடகர் கிஷோர் குமார் கிறங்கடிக்கும் குரலில் அனாயாசமாகப் பாடியிருப்பார். மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை எனக் கலந்துகட்டி விருந்து படைத்திருப்பார் இசையமைப்பாளர் எஸ் டி பர்மன்.

இன்னொன்று காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கும்.



 

குறிப்பு: ஆராதனா ஹிந்தி படத்தில் மறுஆக்கத்தில் நடிகர் திலகம் நடித்து "சிவகாமியின் செல்வன்" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றது. அதைப் பற்றிய சுவையான தகவல்களை இந்தச் சுட்டியை அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
https://www.vikatan.com/anniversaries/kollywood/61774-sivakamiyin-selvan-movie-analytics


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19

உயிரே உனக்காக (1986)

 யக்குநர்க் கே ரங்கராஜ் இயக்கி, வெள்ளிவிழா நாயகன் நடித்த மற்றொரு படம் "உயிரே உனக்காக". ஒரு மாற்றத்துக்கு வேண்டி இந்தப் படத்துக்கு இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைத் தமிழுக்குக் கொண்டுவந்திருப்பார் தயாரிப்பாளர் திரு. கோவை தம்பி. இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசை எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய இசை ரகளையாக இருக்கும். "ஆரிராரோ.. ஆரிராரிரோ.....தேனுரும் ராகம் ", "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்", "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க" போன்ற பாடல்களை அனைத்தும் அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடல் ஜானகி அம்மா பாடிய "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க". சற்றே பெரிய பாடல். புல்லாங்குழல் ராகம் எடுத்துத் தர, குயில்கள் கிச்சு... கிச்சு..அப்படியே ஜானகி உள்ளே வருவார். பாடல் முழுதும் பல வித கருவிகளை ஒலிக்கவிட்டு ஜுகள் பந்தி போல, அட்டகாசமாக இசையமைத்திருப்பார்கள் இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால்.

"நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்....." வரிகளுக்குப் பிறகு வரும் அந்தக் கோரஸ்.......கொஞ்சம் அமைதி... பின்பு ஜானகி பாடலை முடித்துவைப்பார். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            


Monday 21 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-18



ஏக் துஜே கே லியே (1980)

ப்போது விவிதபாரதி வானொலி நிகழ்ச்சியில் லதாஜி பாடிய மனதை உருக்கும் இந்தப் பாட்டை அடிக்கடி ஒளிபரப்புவார்கள்.  கேட்கப் பிடிக்கும். ஆனால் மறுபடியும் கேட்க முடியாது, எப்போதாவது ஒளிபரப்பினால் தான் உண்டு. வீட்டில் டேப்ரெக்கார்டர் எல்லாம் இல்லை. வளர்ந்த பிறகு தான் தெரிந்தது அது கமலஹாசன் நடித்து, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, கவிஞர் ஆனந்த் பக்ஷி எழுதி, இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையமைத்த ஏக் துஜே கே லியே (1980) என்ற கோடிகளை வசூலித்த இந்தி வெற்றிப்படம் என்று!

மரோசரித்ரா (1978) கமலஹாசன் நடித்து, இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி தெலுங்கில் வெளிவந்து ஐந்நூறு நாட்களுக்கு மேல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஓடிய படம் தான் மேலே சொன்ன ஏக் துஜே கே லியே (1980.) என்ற இந்தி மறுஆக்கம் படம்.  சரி நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            

Thursday 17 October 2019

மிதிவண்டி நாட்கள்

ன்னால் என் பையனை மிதிவண்டி பின்புறம் உட்கார வைத்து மிதிக்க முடியவில்லை.. உடலில் சக்தி இல்லையா, வயதாகிவிட்டதா அல்லது சாலை சரியில்லையா என்று தெரியவில்லை. கை, கால், உடம்பு வலி எடுத்துக்கொண்டது.

அப்பா என்னையும் என் தம்பியையும் மிதிவண்டியில் முன் பின் உட்காரவைத்து 3-4 கிலோமீட்டர் ஓட்டிக்கொண்டு பள்ளியில் விட்டு அலுவலகம் செல்வார். சுகமான பயணம், லாவகமாக ஓட்டுவார். கொஞ்சம் வளர்த்தபிறகு பள்ளிக்கு நடந்தே வந்து, போவேன்.

சைக்கிள் என் கனவு. பள்ளியில் படிக்கும் போது வகுப்பு நண்பர்கள் எல்லோரிடமும் சைக்கிள் இருக்கும்.

என்னுடன் படித்த பவன் குமார் என்ற நண்பன் அவனுடைய புதிய மிதிவண்டியைப் பள்ளிக்குக் கொண்டுவந்தான். அவ்வப்போது எனக்கு ஓட்ட தருவான். ஒரு நாள் அவனுடைய மிதிவண்டி திருடு போய் விட்டது. கடைசி வரை அதை யார் எடுத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எப்போதாவது அப்பா அலுவலகம் விடுப்பு எடுத்தால் அப்போது பள்ளிக்குச் மிதிவண்டி கொண்டு வருவேன். எப்போது பள்ளி விடுவார்கள் என்று ஆவலாய் இருப்பேன். பள்ளி விட்டதும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓட்டிச்செல்வது பிடிக்கும்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அம்பத்தூர் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்த எனது மாமா புதுச் சைக்கிள் வாங்கிக்கொடுத்தார் (காசுக்குத்தான்...) ஆரம்பம் முதலே செலவு வைக்க ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நடராஜா சர்வீஸ்.

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டருகே ஒரு தாத்தா மிதிவண்டி வாடகை கடை இருக்கும், ஒரு மணிநேரத்துக்கு ரூ.1/-. பாட்டி அரைமணி நேரத்துக்குத் தான் காசு கொடுக்கும். என்னைப் போலப் பையன்கள் நேரம் முடிந்து மிதிவண்டி கொண்டுவரும் வரை காத்திருக்க வேண்டும். வந்ததும் எனக்கு வண்டி கிடைக்கும். வண்டி எடுத்துக்கொண்டு பூங்கா, அந்த நான்கு தெருவைச் சுற்றி வருவதற்குள் அரைமணி நேரம் முடிந்துவிடும். அப்போது தெருவில் வாகன புழக்கம் குறைவு. தைரியமாக வண்டி ஓட்டலாம்.

வாடகை மிதிவண்டி கடையைச் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். திராவிட இயக்க வரலாற்றைப் பார்த்தோமானால் முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடை தோழர்கள் தான் இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள். முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடைகளில் கிடைக்கும் திராவிட இயக்க பத்திரிக்கைகளைப் படித்து ஏனையோர் சாரை சாரையாக அவ்வியக்கத்தில் சேர்ந்தார்கள். இப்படி வந்தவர்கள் தான் பிற்பாடு தமிழக அரசியலில் கோலோச்சினார்கள் - நன்றி : "அறிஞர் அண்ணா - மாபெரும் தமிழ் கனவு" - தி ஹிந்து பதிப்பகம்.

என் பையனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மிதிவண்டி வாங்கிக் கொடுத்துவிட்டேன். ஆரம்பத்தில் மிதிவண்டி ஓட்டும்போது அவன் பின் பள்ளிவரை செல்வேன்.

இப்போது மிதிவண்டி அடிக்கடி பழுதேற்படுகிறது. மிதிவண்டி பழுதானால் அதைச் சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது காரணம் முன்பெல்லாம் தெருவுக்கு நான்கு மிதிவண்டி பழுது பார்க்கும் கடை இருக்கும், இப்போது ஊரின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. குறைந்த பட்ச பழுது நீக்குக் கட்டணம் ரூ.100/-. விடுமுறையில் அரை நாள் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் மிதிவண்டியை யாரும் சாலையில் ஓட்டுவதில்லை. மிதிவண்டி உடற்பயிற்சி சாதனமாகி நீண்ட நாட்களாகிவிட்டது . வீட்டிலே மிதிவண்டி போல உள்ள சாதனம் வாங்கி உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்கிறார்கள். ஊர் ஊருக்குப் பயிற்சிக்கூடங்களும் பெருகிவிட்டது.

ட்ரயத்லான் என்ற விளையாட்டு, மூன்று செயல்களான நீச்சல் (1500 மீட்டர் ) மிதிவண்டி ஓட்டுதல் (40 கிலோமீட்டர்) மற்றும் ஓட்டப்பந்தயம் (10 கிலோமீட்டர்) அடுத்தடுத்துச் செய்யவேண்டும். இப்போதைய நடப்பு ட்ரயத்லான் உலகச் சாம்பியன் (ஆண்கள்) பிரான்ஸைச் சேர்ந்த திரு வின்சென்ட் லூயிஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி கேட்டி சபிரேஸ் (பெண்கள்). ட்ரயத்லான் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியின் விலை ரூபாய் 1.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை.

சாலையில் மிதிவண்டி ஓட்டுவதே பெரும்பாடாய் இருக்கிறது, இதில் மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் எப்படிச் செய்யமுடிகிறதென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் மிதிவண்டி பல வித வசதிகளோடு கிடைக்கிறது. பல வெளிநாட்டு மிதிவண்டி ரகங்களும் சென்னையில் கிடைக்கிறது. கியர் வண்டியின் ஆரம்பி விலை ரூபாய் 4000/-. சில நகரங்களில் மிதிவண்டி பாதை என்று தனியாக அமைத்திருக்கிறார்கள்.  சென்னையிலும் சில இடங்களில் இருக்கிறது.

"பைசிக்கிள் தீஃவ்ஸ்" (1948.) என்ற இத்தாலியப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? காணாமல் போன மிதிவண்டியைச் சுற்றி நிகழும் கதைக்களம். அதை நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன இயக்குநர் விட்டோரியோ டி சிகா மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய நடிகர்கள், அதனால் தான் என்னவோ உலகின் இரண்டாவது சிறந்த படமாக இருக்கிறது இப்படம்.  வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் இப்படத்தைப் பாருங்கள்.

சரி, நீங்கள் எப்போது கடைசியாக மிதிவண்டி ஓட்டினீர்கள். உங்கள் பழைய மிதிவண்டி இன்னும் உங்களிடம் இருக்கிறதா?


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Tuesday 15 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-17

செம்பருத்தி (1992)

ம்பத்தூர் ராக்கி திரையரங்கில் நானும் எனது நண்பனும் பார்த்த படம்.  வழக்கமான காதல் கதை தான். புதிதாக ஒன்றும் இல்லை  ஆனால் ராஜாவின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் ஊரெங்கும் ஒலித்தது. இப்போது கூட கேட்கலாம்.

காலஞ்சென்ற அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய திமுக கட்சி பாடல்களை கேட்டிருக்கிறேன். அவரின் இஸ்லாமியப் பாடல்கள் மனதை வசீகரிக்கும். அவரை போலவே பாடுபவர்கள் இருந்தாலும்,  இனி அது போன்றொரு குரலைக் கேட்கமுடியாது. "பாவமன்னிப்பு" படத்தில் இடம்பெற்ற "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலில் தொடங்கியது அவர் குரலின் வீச்சு. அவர் குரல் ஒலிக்காத தமிழக ஊர்களே இல்லை எனலாம். 

அடுத்து, ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த  "செம்பருத்தி" படத்தில் அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய  அருமையான பாடல் "காதலே தனிமையிலே". தரமான தலையணியுடன் கேட்டுப்பாருங்கள். விஸ்தீரணமான குரல், பாடலை கேட்டு முடித்தவுடன் உங்களைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமிக்கும். இதோ அந்த பாடல்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி


மூளையை கசக்கு

ன்னுடன் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, சொந்த தொழில் செய்யும் நண்பரின் தாரக மந்திரம் "மூளையைக் கசக்கு". எப்போதும் தான் தொடங்கப்போகும் தொழிலைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்கும். என்னென்ன தோன்றுகிறதோ அத்தனையும் ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்துகொள்வார். தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதற்கான திட்டச் செலவினங்கள், திடீர் செலவுகளைச் சமாளிக்க வேண்டி கையிருப்பை எவ்வளவு வைத்திருப்பது, கட்டிடப் பொறியாளர் தயாரித்துக் கொடுத்த கட்டிட வரைபட அறிக்கை, அரசு அனுமதி வாங்கத் தேவையான துணை காகிதங்கள், வங்கிக் கடன் வாங்கத் தேவையான காகிதங்கள் என எல்லாம் தயாராக வைத்திருப்பார்.

தினமும் நாளிதழில் வரும் அனைத்து விளம்பரங்களையும் விடாமல் பார்ப்பதும், இணையத்தில் அந்தக் குறிப்பிட்ட நிறுவன இணையத்தளத்தில் பார்ப்பதும் அவர் வழக்கம். சொந்த தொழில் என்பது விபத்து அல்ல, அது தானாக ஏற்றுக்கொண்ட ஒரு தவ வாழ்க்கை என்பது அவருடைய குறிக்கோள். மேலே சொன்னதெல்லாம் அவர்
ஒவ்வொருவரிடமும் கேட்டு/ புத்தகங்கள் படித்துத் தெரிந்துகொண்டு உருவாக்கிக் கொண்ட வழிமுறை.

அந்த நாளும் வந்தது நாளிதழில் விளம்பரம் வந்தது, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கென்றே பிரத்தியேகமான ஆட்கள் உண்டு.
தில் bidding தொகையைக் குறிப்பிடுவது முக்கியம். இதில் அனுபவம் உள்ள நபரைத் தேர்ந்தெடுத்து, அவரை வைத்து விண்ணப்பித்தார். பிறகு எப்போதும் போலத் தான் பணிபுரியும் அலுவலக வேலையைப் பார்த்தார். சில மாதங்கள் கழித்து விண்ணப்பித்த நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரிகள் தன்னுடைய நிலத்தை பார்த்துப் போனார்கள். முக்கியச் சாலையில் நிலம் மற்றும் bidding தொகை காரணமாக இவருடைய விண்ணப்பம் தேர்வானது. மேலும் நிறுவனம் அந்த இடத்தில் அமையவிருக்கும் தனது கிளைக்கு அதிகத் தொகை ஒதுக்கியது.

அதன் பிறகு பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி, அதற்கென்று உள்ள நபரைப் பிடித்து அவரிடம் பணியை ஒப்படைத்தார். அவருடைய கட்டணம் ரூபாய் இரண்டு லட்சம். இதற்கிடையில் தனது மகனை ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதம் பயிற்சிக்கு அனுப்பினார்.

நிறுவன ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி பெற்ற காகிதங்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. வைப்புத்தொகையைக் காட்டினார். பிறகென்ன நிறுவனம் தனது வேலை ஆரம்பித்தது. இனி பிரச்சனை இல்லை, களத்தில்/தளத்தில் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும், வேலைக்கு வந்துகொண்டு
ம், போய்க்கொண்டும் இருந்தால் வேலைக்காகாது எனக் கருதி தனது வேலையை ராஜினாமா செய்தார். தான் பணிபுரிந்த நிறுவனம் வியப்பாகப் பார்த்தது. லட்சியம் உறுதியாக இருக்கும்போது யார் என்ன செய்யமுடியும்.

பிறகு இரண்டு மாதம் கழித்துத் தனது நிறுவனத்தை எளியமுறையில் தொடங்கி விட்டதாக எனக்கு மட்டும் தகவல் சொன்னார். பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை, காரணம் பல சொன்னார். அதில் முதல் காரணம் பொறாமை.

சரி அவரைப் பற்றிய சிறுகுறிப்பு:


தந்தையின் அகல மரணத்தால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது, தனது தந்தை பணிபுரிந்த நிறுவனத்தில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. திறம்பட வேலை செய்து நல்ல பெயர் வாங்கினார். தனது அம்மாவின் நகைகளை வைத்து, வீட்டு காலி நிலத்தில்

ஒரு கடை, இரண்டு வீடுகளைக் கட்டி வாடகை விட்டார். வாடகை பணம், சம்பளப் பணம் எனச் சேர்த்த பணத்தில் அந்தக் காலகட்டத்தில் சென்னை புறநகர்ப் பகுதியில் சொற்ப தொகையில் நிலங்களை வாங்கிப் போட்டார், அடுத்த இருபது வருடங்களில் அது ராக்கெட் வேகத்தில் விலையேற்றம் காணப் போகிறது என்று தெரியாமல். அதில் ஒன்றில் சில கடைகளைக் கட்டி வாடகை விட்டார். இதற்கிடையில் திருமணம், குழந்தைகள் எனக் குடும்பம் பெரிதானது. அம்மாவும் மனைவியும் தான் அவரது பலம். அப்படி வாங்கிப் போட்ட நிலத்தில் தான் முருகன் பெயரில் இன்று தனது வாகன எரிபொருள் நிலையம் அமைத்துள்ளார் அந்த நண்பர்.  வாழ்நாள் இலட்சியம், பத்து வருட காத்திருப்பு மற்றும் முயற்சி நன்றாகவே பலன் கொடுத்தது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் தூரதேசத்தில், வேறு மாநிலத்தில் அல்லது வெளிநாட்டினரை மேற்கோள் கட்ட வேண்டாம் நம்மைச் சுற்றியும் வெற்றி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பொறாமையுடன் பார்ப்பதை விட்டு அதற்குப் பின் உள்ள உழைப்பைப் பார்த்தால் போதும் நமக்குத் தேவையான பாடம் ஏதாவது ஒன்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். நான் கற்றுக்கொண்ட பாடம் "மூளையைக் கசக்கு".


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Monday 14 October 2019

வெங்காயம்

''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார் தந்தை பெரியார்!

- என் பெரியப்பா மளிகை நடத்தி வந்தார். வீட்டில் ஆங்காங்கே வெங்காயம் தரையில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டிருக்கும், வீடு முழுதும் வெங்காய வாசனை நெடியாக இருக்கும். அழுகின வெங்காய வாசமும் சேர்ந்தடிக்கும்.

- மகாளயபட்சம் நாட்களில் எனது நண்பர் வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ளமாட்டார். வெங்காயம் இல்லாத உணவை / சமையலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 
 
- பழைய சாதம், தொட்டுக்கொள்ளச் சின்ன வெங்காயம் அருமையான காம்போ தான், சின்ன வெங்காயம் கார சட்னி அதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கலந்து இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ருசி அபாரமாக இருக்கும்.

- இந்த வெள்ள வெங்காயமென்று ஒன்று இருக்கிறதே அது எதுக்குன்னே தெரியவில்லை, கடையில் ஒரு ஓரமா வைத்திருக்கிறான். எதுக்குன்னு யாராச்சும் சொல்லுங்களேன்.

- எனக்குத் தெரிந்து வெங்காயத்தில் 'அந்த' உணர்வைத் தூண்டும் எந்தச் சங்கதியும் இல்லை என்று தோன்றுகிறது. யாரோ விட்ட சரடு!!

- சந்தையில், வெங்காயத்தாள் கட்டுக் கிடைத்தால் வாங்கி வருவேன், கீரை- பருப்பு கடையல் போல வெங்காயத்தாள்-பருப்பு கடையல், சுவை மிகுந்ததாக இருக்கும். கொத்துமல்லிக்குப் பதிலாக வெங்காயத்தாளைப் பொரியலில் மேலே தூவி இறக்கினால், பதார்த்தம் நல்ல மணமாக இருக்கும்.

- பாரிமுனை பர்மா சாப்பாடு கடையில் அவித்த முட்டை 'பேஜோ' யுடன் மொறு மொறுவென்று பொன்னிறமாக வறுத்த வெங்காயத் துகள்கள் நடுவில் வைத்துத் தருவார்கள், முட்டையுடன் சேர்த்துக் கடித்துச் சாப்பிட, சுவை தாறுமாறாக இருக்கும். வெங்காயத்தைப் பொன்னிறமாக எப்படி வறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு சுவையாக இருக்கும்.

- எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு தள்ளு வண்டி கடையில், நிறைய வெங்காயம், கடலை மாவு, நீர் விடாமல் பிசைந்து, அந்த வெங்காய ஈரப்பற்றிலேயே பக்கோடா போடுவார் அண்ணாச்சி,எண்ணெய்யிலிருந்து பகோடாவை எடுக்கும்போது சுருள் சுருளாக மொறு மொறுவென்று வரும். சுவையோ அலாதி.

வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறதென்று யோசித்ததுண்டா?

வெங்காயத்தில் நறுக்கும் போது கண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் ஆலினேஸ் என்ற அமில நொதி திரவ வடிவில் இருக்கும். அது காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது.

சின்ன வெங்காயம் பற்றி ஏகப்பட்ட செய்திகள் இணையத்தில் கிடைத்தாலும். என்னுடைய தனிப்பட்ட அனுபவம். சின்ன வெங்காயம் சாம்பார், கார சட்னி எல்லாம் செய்தாலும், அசைவ சமையலுக்குச் சின்ன வெங்காயம் அபார சுவை கூட்டுகிறது என்பேன்.

அட்டகாசமான சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிட்டிருக்கிறீர்களா?

மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட்ட சின்ன வெங்காய ஊத்தப்பம். அவ்வப்போது வீட்டிலும் செய்வதுண்டு. நீங்களும் செய்து பாருங்கள்.

சின்ன வெங்காயம் வில்லை வில்லையாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்

தோசைக் கடாயில், ஒரு கப் மாவு ஊற்றி, இடைவெளி இல்லாமல் சின்ன வெங்காய வில்லையை அதன் மீது முழுவதுமாக அடுக்கி, கொஞ்சம் நெய் இட்டு, பொன்னிறமாக ஆனதுடன் எடுத்து அதனுடன் சின்ன வெங்காயக் கார சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள்.... அப்புறம் தெரியும் சின்ன வெங்காயத்தின் அபார ருசி.

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி தொக்குச் செய்வோம், அதில் சாதாரண வெங்காயம் உபயோகப்படுத்துவோம், அதற்குப்பதிலாகச் சின்ன வெங்காயம் சேர்த்துத் தக்காளி தொக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்!

சின்ன வெங்காயம் சேர்த்து இறா தொக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள், நாக்கில் உள்ள சுவை அரும்புகளுக்கு இன்னொரு சுவையை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள்.

வெங்காயமும் அதன் அரசியலும் பற்றி எழுதலாம் என்று தோன்றியது, ஆனால் கீழே உள்ள சுட்டி என் வேலையைச் சுலபமாக்கிவிட்டது. நீங்களும்
வியக்க வைக்கும் அந்தச் சுவாரஸ்யமான கதையைப் படித்துப் பாருங்கள்................

மக்கள்ஸ்! சின்ன வெங்காயம் வைத்து புதுசாக நீங்கள் செய்த பதார்த்தத்தைப் பற்றி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்....!


Link Thanks : Dinamani.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Wednesday 9 October 2019

குப்பையே என்றாலும் ...... பகுதி - ஒன்று


"குப்பையே என்றாலும் அது வெளிநாடு போல் வருமா ...." என்று பாடத் தோன்றுகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தோம். வெகு சீக்கிரமாகத் தொடங்கிய வேலை முடிய மதியம் ஆனது.

இந்த முறை நெகிழி பாத்திரங்களுக்குப் பதில் ஸ்டீல் பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் நிரப்பி வைப்பதில். மனைவி தீவிரமாக இருந்தாள். சில நாட்களுக்கு முன்பு பாரிமுனை ஈவினிங் பஜாரில் அளவு வாரியாக ஸ்டீல் கொள்கலன்களை வாங்கி வந்தோம். முடிவில் ஏராளமான நெகிழி பாத்திரங்களைக் காயலான் கடைக்கு எடைக்குப் போட வைத்திருந்தோம்.

உணவு பொருட்கள் அடைத்து வரும் நெகிழி பாத்திரங்களைத் தூக்கிப் போடா மனது வராமல், அதில் வேறு உணவுப் பொருட்களை நிரப்பி வைக்கப் போய் நிறையச் சேர்ந்துவிட்டது.

எங்கள் வீட்டிலேயே இப்படி என்றால் ... மற்ற வீட்டில் / இடத்தில் எவ்வளவு சேரும்....அது கடைசியில் எங்கே சென்று... என்ன ஆகுமோ.........நினைக்கவே பயமாக இருக்கிறது. இப்போது விஷயம் என்னவென்றால் .....

நாம் குப்பைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்தால் எனக்குப் பயமேற்படுகிறது. குப்பைகளை மலைபோல் குவித்துக் காற்று மாசடைவதைப் பற்றி / சுற்றுப்புறச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் எரிக்க விடுவது.

சமீபத்தில் டிஷ்கவரி சானலில் கழிவு மேலாண்மை பற்றிய குறும்படம் பார்த்தேன், அதைப் பார்த்தவுடன் தான் தெரிந்தது நாம் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து போகும் குப்பைகளுக்குப் பின் உள்ள வியாபார சாம்ராஜ்யம். அதைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு:
மேலை நாடுகள் திடக் கழிவு மேலாண்மை என்ற திட்டத்தைக் கவனமாகவும்/ திறம்படக் கையாளவும் அதற்குரிய சட்டங்களை வரைந்துள்ளது.
அமெரிக்கா பல துறைகளில் வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும், குப்பை உற்பத்தியிலும் அதற்கு முதலிடம். அமெரிக்கா வருடத்துக்கு 250 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. ஒரு நல்ல விஷயம் .... 30% குப்பை மறுசுறழ்ச்சி செய்யப்படுகிறது, மீதி உரமாகத் தயாரிக்கப்படுகிறது

சில நகரங்களில் வீட்டில் உற்பத்தியாகும் கழிவுகளுக்கேற்ப வரி அல்லது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எளிதில் மறுசுழற்சி ஆகும் கழிவுகளுக்குக் குறைந்த கட்டணமும், மறுசுழற்சியாக அதிக நேரம் பிடிக்கும் கழிவுகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நம் ஊரிலும் இது நடைமுறைக்கு வரலாம்.

பெரிய நிறுவனங்கள் வகைத் தொகை இல்லாமல் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறது, இதனால் கடல் உயிரினங்கள் அழிகிறது, மீன் உற்பத்தி பாதித்தப்படுகிறது. சில நாடுகள் கழிவுகளைக் கடலில் கொட்ட நிறுவனங்களை அனுமதிக்கிறது

உலகம் முழுதும் கழிவுகளைக் கையாளும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய கழிவு மேலாண்மை நிறுவனத்தில் உலகப் பணக்காரர் திருப் பில் கேட்ஸ் அவர்கள் பல மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்போதைய $285 பில்லியன் மதிப்புள்ள கழிவு மேலாண்மை சந்தை அப்படியே இரட்டிப்பாக மாறும். அமேசான் நிறுவனம் $10 மில்லியன் டாலர் முதலீட்டைக் கழிவு மேலாண்மை துறையில் செய்துள்ளது.

எந்தந்த நாடுகளில் கழிவு மேலாண்மை செம்மையாக இல்லையோ அங்கு நோய் உற்பத்தி பெருக்கம் அதிகம் காணப்படும்.

சில நாடுகள் கழிவுகளை இறக்குமதி செய்கிறது, அதில் ஸ்வீடனும் ஒன்று. தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்த பிறகு, கழிவு மேலாண்மை நிறுவனங்கள் எப்போதும் பிசியாக இருக்க அவர்கள் இதைச் செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் நாட்டை எந்தளவுக்குச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று யூகித்துக்கொள்ளலாம்.

மேலைநாடுகளில் கழிவுகளிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள், பிரிட்டன் கழிவுகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதற்குப் பதில் மின்சாரமாகப் பெறுகிறது. போலந்து நாடு, மக்களிடமிருந்து கழிவுகளைப் பெற்று, மின்சாரம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்குகிறது.

இயக்கிய அரபு அமீரகம் அதிகப்படியான கழிவுகளை உற்பத்தி செய்து அதைத் திறம்பட மறுசுழற்சி செய்கிறது

உலகின் தலைசிறந்த, கழிவு மேலாண்மைத் துறையில் நாற்பது வருடம் அனுபவம் கொண்ட நிறுவனம் "என்விரோ செர்வ்". கழிவு மேலாண்மைத் துறையில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளை வகுத்து இத்துறையில் புகும் புதிய நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

பல நாடுகள் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று. நாம் இப்போது தான் நெகிழியைத் தடை செய்திருக்கிறோம். இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

விண்வெளியில் குப்பை, இமயமலையில் குப்பை, மின்னணு குப்பை, குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் போன்றவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சரி, உங்கள் மின்னஞ்சலில் உள்ள குவிந்து கிடக்கும் குப்பைகளை எப்போது அகற்றப் போகிறீர்கள்?


நன்றி: Youtube /Alux.com



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Thursday 3 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 16


முந்தானை முடிச்சு (1983)

முந்தானை முடிச்சுப் படம் பற்றி ஏராளமான விஷயங்கள் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. இது வேறு தகவல்....

உங்களுக்குத் தெரியுமா ... அக்காலத்தில் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திர ஆடியோ காஸெட் அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது. ஊரில் எந்தத் தேநீர்க் கடைக்குப் போனாலும் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திரம் கேட்கும், மக்களும் சளைக்காமல் கேட்பார்கள். சினிமா - One Time Wonder. காஸெட் அப்படி இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

எங்கள் அண்ணன் பெருமாள் தினமும் ஒரு முறையேனும் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திரம் கேட்டு விடுவார். ஒரு கட்டத்தில் வசனங்கள் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. கேட்டு முடித்தவுடன் படப் பாடல்களை ஒலிக்கவிட்டு, அதையும் ஒரு ரவுண்டு கேட்டு முடிப்பார். "விளக்கு வெச்ச நேரத்துல....". பாடல் எனக்குப் பிடிக்கும்.

பிறகு கொஞ்ச நாள் கழித்து VCR -வீடியோ காஸெட் அந்தப் படம் பார்த்தேன், நான் முதலில் பார்த்த பாக்யராஜ் படம் முந்தானை முடிச்சு ......
நாயகன் பாக்யராஜ், கதாநாயகி ஊர்வசி மற்றும் ஊர் பெரியவர்கள் மத்தியில் நடக்கும் அந்த முக்கியமான காட்சி, பிறகு ஊர்வசி குழந்தையைத் தாண்டுவது போன்ற காட்சி வரும்....அந்த இடத்தில ராஜா போட்ட பின்னணியிசை அமர்க்களமாக இருக்கும். இதோ அந்தக் காட்சி:
 நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

 

திருப்பதி திருக்குடை ஊர்வலம்


திருப்பதி திருக்குடை ஊர்வலம்
திருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் மட்டுமே நடக்கும் பிரத்தியேக நிகழ்வு. மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா போல். வடசென்னை மக்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மற்ற மாவட்டங்களில் இது போல ஒரு விழா உண்டா என்று தெரியவில்லை. செப்டம்பர் மாதம் பதினைந்து தேதிக்கு மேல் "திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது..." என்ற சுவரொட்டி விளம்பரம் சென்னை முழுதும் காணலாம். அந்தந்த ஊரில் திருப்பதி திருக்குடை எப்போது வரும் என்ற தேதியையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஊர்வலம் திருவிழா பற்றிய சிறு குறிப்பு : தங்கசாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில் உள்ள ஒரு குடும்பம் அழகிய வேலைப்பாடுகளுடைய குடைகளைச் செய்து பரம்பரை பரம்பரையாக ஏழுமலையான் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்குகிறார்கள். திருப்பள்ளி தெருவில் தொடங்கி, யானை கவுனி , ஓட்டேரி, புரசைவாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர்,  திருமுல்லைவாயில், ஆவடி, திருவள்ளூர் வழியாகத் திருப்பதி சென்றடையும்.

எனக்குத் தெரிந்து ரொம்பக் காலமாக இது நடந்து வருகிறது. திருப்பதி குடை வருவதற்கு முந்திய மூன்று நாட்களுக்கு ஆவடியில் சாலையோரம் தாற்காலிக கடைகள் போடுவார்கள். விளையாட்டுப் பொம்மைகள் கடை, வளையல் கடை, ராட்டினம், நொறுக்குத்தீனி கடை என ஏராளமான கடைகள் இருக்கும். பல குடும்பங்களில் திருப்பதி திருக்குடை வைபவத்தன்று பொருட்கள் வாங்குவதற்காகவே காத்திருப்பார்கள். "கொட வருதுல்ல, அப்ப வாங்கித்தாரேன்" என்ற பேச்சு வழக்கு எங்கும் கேட்கலாம். பள்ளி முடிந்து விட்டி வீட்டுக்கு வரும்போது எல்லாக் கடைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவது எனக்குப் பிடிக்கும். நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். மாநகரப் பேருந்து நெரிசலில் ஊர்ந்து செல்லும்.

திருப்பதி குடை விழாவில் பேரப்பிள்ளைகளுக்குப் பொம்மைகள், வளையல், ரிப்பன், சாந்து, பொட்டு, ஹேர்கிளிப் போன்று பொருட்கள் வாங்கித் தருவது எல்லாத் தாத்தாக்களும் கௌரவமான விஷயமாகப் பார்ப்பார்கள். எங்கள் தாத்தாவும் எங்களைக் கூட்டிப்போய் விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தருவார். அடுத்தப் பத்து நாளைக்கு எங்களுக்கு அது தான் Sensation.

ஆவடி சின்னம்மன் கோயில் அருகே ஒரு வீட்டில் வருடா, வருடம், திருப்பதி திருக்குடை நிகழ்வின் போது திருப்பதி பெருமாளை அழகாக வரைந்து, கீழே திருப்பதி மலைப் பாதை போன்று களிமண் கொண்டு அமைத்து அதில் கார், பஸ் மற்றும் பக்தர்கள் நடைபாதை எனத் தத்ரூபமாக வடிவமைத்து, அழகிய வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரித்துக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும்.  நான் மணிக் கணக்காக நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆவடிக்குக் குடை வருவதற்கு முதல் மூன்று நாட்களுக்கு முன்பு, ஊரெங்கும் அன்னதானம் வழங்குவார்கள். நாங்களும் ஒரு வருடம் பொங்கல், ஒரு வருடம் வெண்பொங்கல் என வழங்கியிருக்கிறோம்.

ஆவடியில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் குடைகள் நிறுத்திவைக்கப்படும். அப்போது அப்பா அம்மா எங்களைத் தரிசனத்துக்கு அழைத்துப் போவார்கள்.

மேலே சொன்னது எல்லாம் பழைய கதை, இப்போது நிலைமை மாறிவிட்டது காலப்போக்கில், திருப்பதி திருக்குடை கைங்கரிய குழு இரண்டு குழுக்களாக ஆகிவிட்டது. எது அசல் எது நகல் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்தக் குழு முதலில் வருகிறது என்று தெரிவதில்லை. முன்பு போல இருந்த அந்த ஆரவாரமெல்லாம் போய் வருடங்கள் ஆகிறது. சாலையோர கடைகளைக் காணோம்.  மக்களின் ஆர்வமும் குறைந்துவிட்டது.


 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Tuesday 1 October 2019

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்!

பத்தாப்பு பள்ளி நண்பர்கள் சந்திப்பு

ண்பன் ஜோசப் திருமண விழாவுக்குப் பிறகு இதெல்லாம் நடந்தது.....

கிருஷ்ணா ஆரம்பித்த பத்தாப்பு பள்ளி நண்பர்கள் வாட்ஸப் குழுவில் என்னோடு சேர்த்து பதினைந்து பேர் இணைந்திருந்தோம். பண்டிகை கால வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். மற்றபடி எங்கள் குழு அப்படியே தான் இருந்தது.

ஜோசப் கல்யாணத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குழு நண்பர்கள் எல்லோரும் சந்தித்தோம். அப்போது கிருஷ்ணா வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தான்.

"என்னடா நம்ம கூடப் படிச்சா 160 பேருல வெறும் 15 பேர் தான் குரூப்ல இருக்கோம், இன்னும் நிறையப் பேர சேர்க்கணும்டா" என்று சொல்லிவிட்டு, அவனே தொடர்ந்தான் "நான் சென்னையிலிருந்து கிளம்பரத்துக்குள்ளாற நிறையப் பேர சேர்த்துட்டுப் போகப்போகிறேன்" என்றான்.

"ரெண்டு வரசதுக்கப்புறம் வந்திருக்க, குடும்பத்தோடு நேரம் செலவழி, மற்றத பிறவு பாத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு நாங்கள் கலைந்தோம். நானும் அதை மறந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மூன்று நாள் கழித்து, வாட்சப்பில் (புதிய) உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டி கைப்பேசி எண்களை, கொடுத்திருந்தான் கிருஷ்ணா. நான் சேர்க்க ஆரம்பித்தேன், உறுப்பினர்கள் சேர, சேர எங்கள் வாட்ஸப் குழுக் களைக் கட்ட ஆரம்பித்தது. சுமார் இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம், உலகின் வெவ்வேறு மூளையிலிருந்து வாட்ஸப் மூலம். தங்கம் விலையேற்றம் போல உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற ஆரம்பித்தது. மொத்தத்தில், குழு ஆரம்பித்த கிருஷ்ணா தொடக்கப் புள்ளி.

நீண்ட வருடங்கள் பேசாமல் இருப்பவர்கள் பேசினால் என்ன ஆகும்? வாட்ஸப் அரட்டை விடிய விடிய நீடித்தது. எனக்கும் அது புது அனுபவம் தான். அதற்கு முன்பு வாட்ஸப் அரட்டையில் இப்படி மணிக் கணக்கில் உட்கார்ந்தது இல்லை.

அப்போது தான் அந்த யோசனை உதித்தது. எல்லோரும் சேர்ந்து சந்தித்தால் என்ன ? என்று தோன்றியது. பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு முடிவானது. சந்திக்கும் இடம் முடிவாவதில் சிக்கல் நீடித்தது. ஒருவர் அண்ணா நகர் கோபுரம் என்று சொல்ல, இன்னொருவர் ரிசார்ட், இன்னும் ஒருவர் மெரினா கடற்கரை என்று பரிந்துரைக்க. இன்னொரு நண்பன் ஓமர் தன் வீட்டில் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, நண்பன் கோவிந்த் அவனுடைய அலுவலகத்தில் உள்ள அரங்கை ஏற்பாடு செய்வதாய்ச் சொல்ல. என்ன செய்யலாம் என்று யோசித்த போது...காலை அரங்கத்தில் கூடி மதிய உணவு முடிந்தவுடன், மாலை நண்பன் ஓமர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள முடிவானது. தேதி மற்றும் நுழைவு கட்டணம் முடிவானது.

இன்னும் பல நண்பர்கள் குழுவில் சேர்ந்தனர். குறுகிய காலத்தில் எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்தது.

சந்திப்பு விழாவுக்கு முந்திய நாள் ஒரு பயலுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை, வாட்ஸப் அரட்டை விடிய விடிய நீடித்தது.

அந்த நாளும் வந்தது................

எனது வீட்டிலிருந்து சற்று அருகில் தான் அந்த அரங்கம். காலை 10.30. மணிக்குள்ளாகவே சென்றுவிட்டேன். விழா ஏற்பாடு செய்த நண்பர்கள் கோவிந்த,அறிவு, ராஜேஷ், ராஜேந்திரன் மட்டும் இருந்தனர். யாரும் வர காணோம். மனதில் ஒரு வித பயம், கேள்வி, யாரும் வராமல் போனால் செய்து வைத்த உணவு என்னாவது ? சில நிமிடங்களில் எங்கள் பயம் அகன்றது.

பதினோரு மணிவாக்கில், ஒருத்தர் பின் ஒருவராக வர ஆரம்பித்தனர். பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் நண்பர்களைப் பார்த்ததால் மனது மகிழ்ச்சியில் பொங்கியது. முத்தமிடல், கட்டித்தழுவல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் நண்பர்கள்.

அன்றும், இன்றும் எத்தனையோ, எவ்வளவோ மாறிவிட்டன, சொன்னால் நம்பமாட்டீர்கள் சில நண்பர்களை / தோழிகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை, பெயர் கேட்டுத் தான் தெரிந்துகொள்ள முடிந்தது.

வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் தவிரக் குழுவில் உள்ள 60.சதவீதம் பேர் வந்திருந்தனர். இதுவே எங்களுக்கு வெற்றி. சிலர் ஊரில் இருந்தும் வரவில்லை.

சந்திப்புக்கு வரமுடியாத வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டில் உள்ள நண்பர்களுக்கு Live Updates கொடுத்தனர் விழாவுக்கு வந்த நண்பர்கள்.

சரியாக மதியம் ஒரு மணிக்கு கேக் வெட்டப்பட்டது, கூடவே சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அரங்கத்தில் அவரவர் கூடிப் பேசி களித்தனர். இடையில் சூப் பரிமாறப்பட்டது.நேரம் போவதே தெரியாமல் பேச்சும், அரட்டையும் நீடித்தது.
மாலை மூன்று மணிக்கு எல்லோரையும், உணவறைக்கு (அன்பாகத் தான்!) விரட்டினோம். புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தி, பாயசம், சாதம், ரசம், அப்பளம், ஊறுகாய் மற்றும் ஐஸ்-கிரீம் - இது தான் உணவுப் பட்டியல். குழுவில் உள்ள சமையல் கலை படித்த நண்பன் அறிவு மேற்பார்வையில் இத்தனையும் செய்து பரிமாறப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு அரங்கத்தில் அனைவரும் ஆஜரானோம், எல்லோரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நண்பன் ரஜினிகாந்த் "முகிலே, முகிலே, ஓ முகிலே" என்ற கன்னட பாடலை பாடினான். அதே பாவத்துடன் பாடினது தான் ஆச்சரியம். எங்களை மீண்டும் பழைய காலத்துக்குக் கொண்டு சென்றான். கிண்டல், கேலி, பாட்டு என நேரம் போனதே தெரியவில்லை. பின்னணியில் இளையராஜாவின் 80களில் வெளிவந்த பிரபல பாடல்களை ஒலிக்கவிட்டோம். சூழ்நிலையை மேலும் ரம்மியமாகியது.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில், அனைவரும் சேர்ந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினோம்.

மாலை ஐந்து மணிக்கு.......... வெகு தொலைவிலிருந்து வருகை தந்த நண்பர்களை வழியனுப்பிவிட்டு, நண்பன் ஒமர் வீட்டுக்குச் சென்றோம்.
அங்குத் தேநீர், சிற்றுண்டி, கொஞ்சம் பேச்சு, முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் கலைந்து சென்றோம்.

அன்று இரவு எனக்குப் பசி எடுக்கவில்லை, படுக்கையில் விழுந்தேன். மறுநாள் காலை அலுவலகத்தில் வேலை ஓடவில்லை, மனது முழுதும் முந்தைய நாள் நிகழ்ச்சி ஆக்கிரமித்ததது. சில நண்பர்கள் கைப்பேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

அடுத்துச் சந்திப்பு 2020ல் இதே போலச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன் அவரவர் பெண்டு-பிள்ளைகள் விசேஷத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி