டிஸ்கோ இசை / டிஸ்கோ ராஜா (2020)
சமீபத்தில் வந்த சிறந்த இசை தொகுப்பு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையில், 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் பொங்கலன்று வெளியான 'டிஸ்கோ ராஜா' படப் பாடல்கள். எஸ்பிபி பாடிய "நுவ்வு நாத்தொ எமன்னாவோ" என்ற இனிமையான பாடல் ராஜா சார் இசையை நினைவூட்டியது. இடைவேளைக்குப் பிறகு ரவி தேஜா டிஸ்கோ ராஜாவாகப் பட்டையைக் கிளம்புவார். குறிப்பாக எண்பதுகளின் இசையை ஞாபகப்படுத்தும் "Freak Out..." டிஸ்கோ பாடல் என்னை எண்பதுகளுக்குக் கொண்டு சென்றது.
இந்தியாவை அதிரவைத்த டிஸ்கோ இசையைப் பற்றி தேடுகையில் ஒரு சின்னப் பிளாஷ்பேக் கிடைத்தது, வாருங்கள் பயணிக்கலாம்....
ஹாலிவுட் நடிகர், பாடகர் மற்றும் நடனமாடுபவர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஜான் டிராவோல்டா அமெரிக்காவை டிஸ்கோ நடனத்திற்கு அழைத்துச் சென்றார். எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒரு புதிய வகையான, செழிப்பான டிஸ்கோ இசை புகழ் திடீரென அதிகரித்தது. பீ-கீஸ் இசைக்குழு தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. மெல்ல அதன் தாக்கம் எண்பதுகளில் பாலிவுட்டை வந்தடைந்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் இசை தயாரிப்பாளர் பித்து தயாரித்த "ஆப் ஜெய்சா கோய்..." பாடலை 15 வயதான பாகிஸ்தான் பாடகி நாசியா ஹுசைன் பாடினார். அவர் இந்தியாவில் முதல் டிஸ்கோ அலைக்குக் குரல் கொடுத்தார். கிளாசிக் "டிஸ்கோ திவானே" - விற்கும் ஹுசன் தனது குரலைக் கொடுத்தார். இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
கரண் ஜோஹரின் "ஸ்டுடென்ட் ஆப் தி இயர்" படத்தில் இடம்பெற்ற ரீமேக் பாடலான ‘தி டிஸ்கோ’ பல மாதங்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, பாலிவுட் டிஸ்கோ இசை மற்றும் அதன் பெருமைக்கு நாசியா ஹுசைனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். உண்மையில், அவரது பாடல்கள் 80களின் டிஸ்கோ சகாப்தத்திற்கு வித்திட்டது. இந்தி-பாப்புடனான பாலிவுட்டின் உறவை உறுதிப்படுத்தின. "ஆப் ஜெய்சா கோய்.." சூப்பர்-ஹிட் பாடலாகவும், 'குர்பானி' சூப்பர் ஹிட் திரைப்படமாகவும் மாறியது. இது பாலிவுட்டின் இசையில் புதிய போக்கை உருவாக்கியது.
பாலிவுட்டின் வழக்கமான இசையுடன் டிஸ்கோ கலந்தது: ஒளிரும் விளக்குகள், வண்ணமயமான நடன தளங்கள், பளபளப்பான ஆடை, எரியும் பெல் பாட்டம்ஸ், பளபளப்பான ஹெட் பேண்ட்ஸ் மற்றும் கனமான குரல்கள். டிஸ்கோ டான்சர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி இந்தியாவின் ஜான் டிராவோல்டாவாக மாறினார். நிறையப் பாலிவுட் டிஸ்கோ படத்தில் அவர் இடம்பெற்றார்.
"ஆப் ஜெய்சா கோயி.."- யில், அழகான ஜீனத் அமன், ‘டிஸ்கோ ஸ்டேஷன்’ பாடலில் ஒரு பளபளப்பான புடவையில் நடனம் ஆடிய அழகிய ரீனா ராய், "பியார் கர்னே வாலி.." பாடலில் பர்வீன் பாபி, "ஜூம் ஜூம் ஜூம் பாபா..." பாடலுக்கு நடனமாடிய சல்மா ஆகா, பாடிய ஆஷா போன்ஸாலே, இசையமைத்த பப்பி லகரி என டிஸ்கோ இசைக்கு வலு சேர்த்தார்கள்.
'நமக் ஹலால்' மற்றும் 'ஹிம்மத்வாலா' போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்குத் தனது இசையை வழங்கிய பாப்பி லகரி, ‘80 கள் மற்றும் ‘90 களின் இசை ஆளுமை. பப்பி லகரியைக் குறிப்பிடாமல் டிஸ்கோ இசையைப் பற்றி எழுத முடியாது. பாலிவுட்டில் டிஸ்கோ ஒருபோதும் ‘80களில் கிடைத்த வெற்றியைக் கண்டதில்லை.
2000-களின் ரீமேக்குகள் மற்றும் ரீமிக்ஸ் ஆகியவை டிஸ்கோவை மீண்டும் கொண்டு வந்தன, ஆனால் ‘80 களின் இசையிலிருந்த ஜீவன் இல்லை. நாசியா ஹுசைனின் மயக்கும் குரல் அல்லது மிதுனின் உன்னதமான நடன அசைவுகளாக இருந்தாலும், ‘80 களின் டிஸ்கோ இசை எப்போதும் பாலிவுட்டில் மறக்க முடியாத சகாப்தமாக இருக்கும்.
கொசுறு:
தமிழ் சினிமாவில் 80களில் மெலடி இடியுடன் கூடிய இசை மழை பொழிந்ததால் டிஸ்கோ இசை பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தபோதிலும் ரஜினி நடித்த 'தாய்வீடு'(1983) படத்தில் இடம்பெற்ற "உன்னை அழைத்தது" என்ற பாடல், இந்தி 'டிஸ்கோ டான்ஸர்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட 'பாடும் வானம்பாடி'(1985) படத்தில் இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரி மற்றும்சங்கர் கணேஷ் இசையில் இடம்பெற்ற பாடல்கள், படமும் பிரபலமடைந்தது. 1984ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியான 'எனக்குள் ஒருவன்' கமலின் 125வது படத்தில் டிஸ்கோ டான்சராக நடித்திருப்பார். அதில் வரும் மழை டிஸ்கோ பாடல் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். புதிய புத்தாண்டு பிறக்கும் இரவு எல்லாத் தொலைக்காட்சிகளில் ஒ(ளி)லிக்கும் கமல் நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தில் வரும் "இளமை இதோ இதோ ..." பாடல் கூட டிஸ்கோ இசை பாடல் தான்.
பாடகி நாசியா ஹுசைன் பாடிய "ஆப் ஜெய்சா கோய்...." பாடல் நாற்பது வருடம் கடந்தும் இன்றும் கேட்பதற்கு புதிதுபோல் உள்ளது. வாருங்கள் பாடலை கேட்போம் :
நன்றி: Youtube and homegrown.co.in
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
தமிழில் : காளிகபாலி
No comments:
Post a Comment