Wonderful Shopping@Amazon

Tuesday, 5 December 2017

கிணறு - ஒரு கால பொக்கிஷம்

இன்றைய காலத்தில் அதிசயமாக பார்க்கப்படும் வஸ்து.  சமீபத்தில் பெய்த மழையில் கிணறு நிரம்பியிருப்பதை பார்க்கும் போது மனது அடையும் சந்தோஷத்துக்கு அளவில்லை.

எப்போதுமே கிணற்று தண்ணிறில் குளிப்பது தான் வழக்கம். கோடை காலத்தில் தண்ணீர் குளுர்ச்சியாகவும். மழை காலத்தில் தண்ணீர் வெது வெதுப்பாக  இருக்கும்.  மாடியில்  விழும் மழை நீர்  கிணற்றில் சேரும்படி வீட்டில் வசதி செய்ப்பட்டுள்ளது அதனால் மழை நீர் வீணாவதில்லை.

கிணற்று நீர் தான் குடிக்க, சமையல் மற்ற செய்ய எல்லாவற்றுக்கும்.   கேன் தண்ணீர் இப்போது வரை வீட்டில் அனுமதி இல்லை.

ஒரு கோடை காலத்தில் கிணறு வற்றும் நிலைக்கு சென்றது.  பிறகு 10  அடிக்கு ஆழ படுத்தி உள்ளே உரை இறக்கினோம்.  அடுத்து வந்த மழை கிணற்றை நிரப்பியது.

எங்கள் வீட்டு (40 அடி) கிணறு அமைக்க / எடுக்க 30 நாட்கள் ஆனது  15  நாட்கள் உரைகள் செய்ய மற்றும் 15  நாட்கள் பள்ளம் தோண்டி உரைகள் இறக்க. 

சுற்று வட்டாரத்தில் எங்கள் வீட்டு கிணற்று நீர் தான் குடிக்க ஏற்றது. 25  மேற்பட்ட குடும்பங்களின் தாகத்தை தீர்த்தது.

அடிக்கடி நீர் இறைக்கும் வாளி அறுந்து விழுந்துவிடும். அதை எடுக்க பாதாள கொலுசு என்ற கருவியை கயிற்றில் பொருத்தி சுற்றுவோம். சிறிது நேரம் கழித்து பாதாள கொலுசு வாளியை லாவகமாக மேலே கொண்டு வரும்.

எப்போதும் நான் கிணற்றடியில் குளிப்பது  தான் வழக்கம். திரும்ப வராத சுகமான நாட்கள் அவை.

துணி துவைப்பது, சாமான் துலக்குவது எல்லாம் கிணற்றடியில் தான். அந்த  நீர் அருகில் உள்ள வாழை மரங்களுக்கு செல்லும்.  அவைகள் செழிப்பாக வளர்த்து நிற்கும்.

பள்ளிக்கு செல்லும் முன் வீட்டு தேவைகளுக்கு நீர் இறைத்து அண்டாவை   நிரப்பிவிட்டு செல்லவேண்டும். இது அம்மாவின் கட்டளை.

கிணற்றுக்கு அம்மா குங்குமம் மஞ்சள் பூசி அங்கே மாலையில் விளக்கேற்றுவாள். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் அதற்கும் ஒரு பூஜை உண்டு.

எங்கள் ஊர் வயக்காட்டில் உள்ள கல் கிணறு மிகப்பெரியது. பார்க்கும்போதே பயமாயிருக்கும்.  எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும்.  என் வயதையுடையவர்கள் தொட்டி மேலே இருந்து குதிப்பார்கள்.  நடு ஆழதுக்கு  சென்று மேலே வருவார்கள். எனக்கு நீச்சல் தெரியாது  அதனால் நான் படிக்கட்டுலேயே உட்கார்ந்து குளித்துவிட்டு வருவேன்.
ஊரில் பெரிய முன்சீப் கிணறு இருந்தது. வற்றாத கிணறு.  மக்கள் எப்போதும் தண்ணீர் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவரவர் தங்கள் சொந்த ராட்டினம் கயிறு மற்றும் வாளியுடன் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.  "கிரீச், கிரீச்" என்ற ராட்டினம் சத்தம் எப்போதும்  கேட்டு கொண்டே இருக்கும்.  இப்பொது அந்த இடத்தில கிணறு இல்லை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.  

இன்றைக்கு கிணற்றை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.  கிணறெடுக்கும் ஆட்களும் கிடைப்பதில்லை. அந்த தொழிற்நுட்பம் கிட்டத்தட்ட மறைந்து விட்டது.  தண்ணீர் தேவைக்கு போர்வெல் தான் ஒரே தீர்வாகிவிட்டது,  சில மணி நேரத்தில் 300  முதல் 900 அடிகள் தோண்டி தண்ணீர் எடுத்துவிடும்.

எனக்கு தெரிந்த பெரும்பாலான கிணறு இருந்த வீடுகளில் இப்போது ஆழ் துளை கிணறு ஆக்கிரமித்துள்ளது.  கிணறுகள் மூடப்பட்டு விட்டன. 
ஆனால் கிணற்றின் இடத்தை எப்போதுமே போர்வெல் நிரப்பாது.

- காளிகபாலி




2 comments:

  1. Memories Like wise, there was write up made by NA Muthukumar.

    ReplyDelete
  2. கிணற்றில் குளிக்கும் சுகமே அலாதியானது..
    சிறு வயதில் செய்யாறு பாட்டி தொப்பு மாபெறும் கிணற்றில், மேலபேடு அத்தை விவசாய கிணற்றில் என நிச்சல் பயின்ற நாட்கள் இனிமையானவை. நாள் முழுவதும் கிணற்றுக்குள்ள கழிந்த நாட்கள் திரும்ப கிடைக்காத நினைவலைகள். இன்று அவை மூடப்பட்டு வீடுகளாக காணும் போது கண்கள் கசிகிறது..இன்றும் எந்த கிரமம் வழியாக சென்றாலும் கிணற்றை பார்த்த உடனே குதித்து மகிழ்வேன்..சென்ற ஜனவரி கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் இலங்கை சென்ற பொழுது கூட ஓரிடத்தில் கண்ட கிணற்றில் கதித்து அவர்கள் பொறாமை படும் அளவு நீந்தி மகிழ்ந்தது நீங்கா நினைவுகள்.
    பதிதாக கட்டிக்கொண்டுள்ள எங்கள் வீட்டில் முதல் வேலையாக 20அடி கிணறு அமைத்தது உள்ள நிறைவு.

    ReplyDelete