Wonderful Shopping@Amazon

Saturday 21 December 2019

ஒரு கதை சொல்கிறேன் -1

இல்லை.....  இல்லை......

நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் ....நண்பர் ஒருவர் சொன்ன நிஜக் கதையை அப்படியே என்னுடைய பாணியில்.  

நண்பரின் உறவினர் பலசரக்கு கடை வியாபாரி. சின்ன கடைதான். அவரது கடையில் அநேகம் எல்லா பொருட்களும் கிடைக்கும். அதனால் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம் கூட்டம் அள்ளும். அந்த கடைக்குப் பழைய வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் உண்டு. 

எல்லோரிடமும் இருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இவருக்கும் (வியாபாரி) இருந்தது, வேறு ஒன்றுமில்லை.. சோம்பேறித்தனம், அதனால் விளைந்த "இல்லை" என்ற  வார்த்தை பிரயோகம். வழக்கமான வாடிக்கையாளர் எதாவது பொருள் வேண்டி கடையில் கேட்டால்....இவரிடமிருந்து வரும் வார்த்தை "இல்லை... அடுத்தாப்ல நாலு கட தள்ளி இருக்கிற கடைல கேளுங்க..."  (அல்லது) "டர்னிங்ல ஒரு கட இருக்கு...அங்க கேளுங்க.."

இதில் வேடிக்கை என்னவென்றால், வாடிக்கையாளர் கேட்கும் பொருள்.. கடையில் இருக்கும் அல்லது பாரீஸிலிருந்து அந்த பொருள் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும். அதை எடுத்த தர/ வாங்கி வரச் சோம்பேறித்தனம். வாடிக்கையாளர் கொடுக்கும் பட்டியலில் அந்த பொருள் இருந்தால் தான் தேடி எடுத்து கொடுப்பாராம். தனியாகக் கேட்டால் மேலே சொன்ன பதில் தான் வரும்.  

என்னுடைய நண்பர் விடுமுறை நாட்களில் அவருக்கு ஒத்தாசையாக இருக்கக் கடையில் வேலை செய்வதுண்டு. அவரை மீறி அந்த பொருளை எடுத்த தரப் பயம், சமயங்களில் கோபப்படுவார். நமக்கெதற்கு வம்பென்று சும்மா இருந்து விடுவார். அப்படியே, நண்பர், கடைக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார்.

வருடங்கள் ஓடியது, வேலை நிமித்தமாக நமது நண்பர், உறவினர் கடை வழியே செல்லுகையில், அந்த இடமே முற்றிலும் மாறியிருந்தது. அவரது உறவினர் கடை அந்த இடத்தில் இல்லை. சரி கடையை விரிவுபடுத்தியிருப்பார் போல என்று நினைத்தார்.

சில மாதங்கள் கழித்து, குடும்ப சுப நிகழ்வில் அந்த வியாபார உறவினர் குடும்பத்தைச் சேர்ந்தவரைச் சந்தித்துக் கேட்டறிந்தார். அதாவது விஷயம் இதுதான்: முன்பு கடை இருந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட இடமாகும்.  புதிதாகப்  பதவியேற்ற அதிகாரியின் உத்தரவின் பேரில் சாலை விரிவுபடுத்தவேண்டும் என்ற காரணத்துக்காகக் கடைகள் இடிக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் பொருட்கள் வீணானது, கொஞ்ச நாள் தள்ளுவண்டியில் கடை நடத்தவேண்டிய சூழல் வந்தது. வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்தது. இதற்கிடையே, கவலையால் உடல் நலம் குன்றியது.  பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதே பகுதியில் ஒரு சிறிய கடையை  வாடகை எடுத்து இப்போது வியாபாரம் செய்கிறார்.

கடையில் பொருட்கள் இருந்தும் "இல்லை" என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் ஒரு நாள் கடையே இல்லாமல் போனது.

"இல்லை", "இல்லை", "இல்லை" என்று சொன்னால் ஒரு நாள் இல்லாமலே போய்விடும்/போய்விடுவோம். "முடியாது", "முடியாது" "முடியாது" என்று சொன்னால் ஒரு நாள் முடியாமலே போய்விடுவோம்.

எதிர்மறை சொற்களையே பயன்படுத்தக்கூடாதா என்றால்...எதிர்மறைச் சொற்களை எங்கு, எதற்கு சொல்லவேண்டுமோ அங்குச் சொல்லவேண்டும், "இல்லை", "முடியாது" என்ற வார்த்தைகளை எங்குப் பயன்படுத்தவேண்டுமோ அங்குப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து நாளுக்கு 108 முறை அதையே சொல்லிக்கொண்டிருந்தால், அதனுடைய வேலையைக் காட்டத் தான் செய்யும். அதைத் தான் நமது பெரியவர்கள் வார்த்தை "அளந்து" பேசவேண்டும் என்று சொன்னார்கள்.

எதிர்மறைச் சொற்கள் நமது வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய உதாரணம்.


பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 

சிறந்த யுடியூப் சேனல் 2019

இந்த வருடத்தில் என்னை கவர்ந்த சில சேனல்களை பற்றி இப்போது  பேசுவோம்.

ஃபில்மி கிராஃப்ட்

சினிமாவை உள்ளேயிருந்து நேசிப்பவர்களை விட, வெளியே இருந்து நேசிப்பவர்கள் அதிகம். மேலே படியுங்கள்....

யுடியூப்-இல் எத்தனையோ சினிமா விமர்சன சேனல்கள் இருந்தாலும், திரு அருண் அளவுக்குச் சிறப்பாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அருண் ஒரு சிறந்த கதைசொல்லி. Filmi Craft-சினிமா ரசிகர்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கும் அவருடைய presentation. உங்களுக்கு எந்த ஜானரில், எந்த மொழி படம் வேண்டும்? கொரியா, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குறும்படம், புதிய படம், இதுவரை கேட்டிராத உலகப் புகழ்பெற்ற பழைய படங்கள் - இவை அத்தனையும் Filmi Craft-இல் காணலாம்.

சும்மா அடித்துவிட்டுப் போகிற ஆசாமி இல்லை இவர், கேமரா கோணங்கள், பின்னணி இசைத் துணுக்குகள் பற்றி, ஷாட் பை ஷாட், ஏன் அந்த ஷாட் அந்தக்காட்சியில் வைத்தார்கள், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், இயக்குநர் / நடிகரின் / நடிகையரின் முந்தைய சிறந்த படங்களின் சுவையான தகவல்கள், கதாபாத்திரங்கள் பேசும் ஆங்கில வசன வரிகள், அந்தக் கதாபாத்திரங்கள் தன்மை என்ன, என்பன போன்ற பல விசயங்களை ரசிகனுக்குப் புரியவைப்பார். எப்படித் தான் இவரால் இவ்வளவு விஷயங்களைத் திரட்ட முடிகிறதோ தெரியவில்லை. ஒவ்வொரு காணொளியிலும் அவருடைய Home Work & Hard Work தெரிகிறது. அதே சமயத்தில், படம் குடும்பத்துடன் காணக்கூடியதா, யாருக்கெல்லாம் இந்தப் படம் பிடிக்கும், அந்தப் படம் எந்தத் தளத்தில் உள்ளது என்ற விஷயங்களையும் சொல்லிவிடுவார்.

இவர் பரிந்துரை செய்யும் பெரும்பாலான சிறந்த உலகத் திரைப்படங்கள் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கவில்லை. அனைத்தும் Amazon Prime, Netflix, Hotstar மற்றும் பல OTT கட்டண தளங்களுக்கு மாறிவிட்டது.

சரி உங்களுக்கு இந்தச் சினிமா பிடிக்கவில்லையா, பரவாயில்லை போகட்டும், ஒரு கதையை / சம்பவங்களை மற்றும் கதாபாத்திரத்தை / சூழலைப் பற்றி எப்படிச் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்பதை இந்த Filmi Craft யுடியூப் சேனலை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிசினஸ் தமிழா:
இளைய தலைமுறையினர் அனைவரும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் விக்னேஷ் அவர்கள், தமிழகத்தில் உள்ள விவசாயம், நெசவு, புதிய தொழில்(நுட்ப) வாய்ப்புகள், சந்தை வியாபார வாய்ப்புகள், ஜவுளி கண்காட்சி என இப்படி எல்லாவற்றிலும் புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களைச் சந்தித்து, பேட்டி கண்டு தனது பயனர்களுக்குத் தெரிவிக்கிறார். சமீபத்திய சாதனை, குஜராத் மாநிலம் சூரத் சென்று அங்குள்ள ஜவுளி தொழில் உற்பத்தியாளர்கள் பேட்டி, சூரத் எப்படிச் செல்வது, நம்பகமான ஜவுளி நிறுவனத்தை எப்படி அணுகுவது எனப் பல விஷயங்கள் உள்ள காணொளி கண்டு வியந்தேன்.

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிப்பதும், அதைத் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல், திறம்பட நடத்துவதும் சாதாரண விஷயம் இல்லை. நல்ல கருத்துகளையும், நாராசமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.

இன்னும் வரும்...........

பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 


Friday 20 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-41

குங்குமச்சிமிஷ் (1985)

மோகன்-ராஜா சார் இணை "சங்கீத மேகம்", "பருவமே", "கடலோரம் வீசும் காற்று", "இளையநிலா" போன்ற எத்தனையோ அருமையான பாடல்கள் தந்திருக்கின்றனர். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி, மோகன், இளவரசி, மற்றும் ரேவதி நடித்த "குங்குமச்சிமிஷ்" படத்தில் இடம்பெற்ற "நிலவு தூங்கும்.." என்ற மனதை வருடும் பாடலும் அதுபோல ஒன்று தான். படம் வந்த புதிதில் இந்தப் பாடல் சென்னை தூர்தர்ஷன், இலங்கை வானொலி, சென்னை வானொலி, விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு நிகழ்ச்சி, கல்யாண, காதுகுத்து, திருவிழா கச்சேரி என எல்லா இடத்திலும் ஒலித்து "கிறுகிறுக்க" வைத்தது. எளிய இசைக்கோர்வை, பாடல் ஆரம்பத்தில் வரும் மவுத்தார்கன் இசைத் துணுக்குக் கொஞ்சம் கவனிக்க வைக்கும். தூக்கம் வரவில்லையா..? இந்தப் பாடலை கேளுங்கள் பாடல் முடிவதற்குள் தூங்கியிருப்பீர்கள்.

இதே படத்தில் மலேசிய வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மா பாடிய "கூட்ஸு வண்டியிலே.." என்ற இன்னொரு பாடலும் உண்டு. அப்போதிருந்த Special Effects வசதியை வைத்து இப்பாடலைச் சிறப்பாகப் படமாகியிருப்பார் இயக்குநர்.



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          
 

Monday 16 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-40

செண்பகமே செண்பகமே (1988)

ராமராஜன் - தமிழ் சினிமாவில் ஆறு படங்களை இயக்கி, கதாநாயகனாக நடித்துக் குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர். இவருடைய படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் முதலுக்கு மோசமில்லாமல் லாபம் தரக்கூடியவை. ராமராஜன், இயக்குநர் கங்கை அமரன் மற்றும் ராஜா சார் இணை "எங்க ஒரு பாட்டுக்காரன், "கரகாட்டக்காரன்", "வில்லுப்பாட்டுக்காரன்" ,"செண்பகமே செண்பகமே", "தெம்மாங்கு பாட்டுக்காரன்" எனப் பல வெற்றிப்படங்கள் தந்த மாயாஜால கூட்டணி.

குடும்ப செண்டிமெண்ட் கதை, செந்தில்-கவுண்டமணி-எஸ்எஸ் சந்திரன் நகைச்சுவை, இனிய பாடல்கள் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இவருடைய படத்துக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கை நோக்கிப் படையெடுத்தார்கள். திரையரங்க உரிமையாளர்களுக்கு அது ஒரு பொற்காலம். என்னுடைய உறவினர் நடத்தும் திரையரங்கில் "ரயிலுக்கு நேரமாச்சு" மற்றும் "கரகாட்டக்காரன்" ஆகிய படங்கள் நீண்ட நாட்கள் ஓடி பெரிய லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

அப்போதெல்லாம் ஒரு படத்தின் பாடல்கள் தொகுப்பில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும். இப்போது போல் ஒரே பாட்டை வைத்து ஒப்பேற்றுவதெல்லாம் இல்லை. அதுபோல ராமராஜன் படப் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக அமைந்து மக்களிடம் பிரபலம் அடைந்தது.

எனக்குத் தெரிந்த திருவாரூரைச் சேர்ந்த டெம்போ வேன் ஓட்டுநர் ஒருவர் ராமராஜன் பாடல்கள் அடங்கிய முழு இசைத்தட்டுத் தொகுப்பைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். நீண்ட தூரப் பயணத்தின் போது ராமராஜன் பாடல்கள் கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது அவருக்குப் பிடிக்குமாம்.

திரையுலக நெளிவு சுளிவுகளுக்கேற்றாற்போல் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருந்தால். ராமராஜன் இன்னும் முன்னணி நடிகராக மின்னியிருப்பார். ரசிகர்களுக்கும் நிறைய கிராமத்துக் குடும்ப செண்டிமெண்ட் படங்கள் கொடுத்திருக்கலாம்.

"செண்பகமே செண்பகமே" எனக்குப் பிடித்த ராமராஜன் படங்களில் ஒன்று. அதில் வரும் "வாசலிலே பூசணி பூ" என்ற பாட்டு எனக்குப் பிடிக்கும்.  நீங்களும் அந்த பாடலை முழுமையாகக் கேளுங்களேன்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Wednesday 11 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-39


சிந்து பைரவி(1985)

க்ஷன் பிளாக், வில்லன், வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை பகுதி போன்ற விஷயங்கள் இல்லாமல் படமெடுக்க முடியுமா? முடியும் எனப் பல படங்களில் நிரூபித்தவர் தான் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். 1985-ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, தீபாவளி திருநாள் அன்று வெளியான "சிந்து பைரவி" படத்தில் மேற்சொன்ன எந்த விஷயமும் இல்லை.
இசைக்கலைஞனின் வாழ்வு தாழ்வு. ஜேகேபி என்ற இசைக்கலைஞனாக சிவகுமார் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.
 
ஜேகேபி (சிவகுமார்), சிந்து (சுஹாசினி), பைரவி (சுலக்ஷனா) என மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. கேபி சார் படத்தில் துணை கதாபாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்வார்கள், இதிலும் டில்லிகணேஷ், ஜனகராஜ் மற்றும் பலர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருப்பார்கள். காட்சிக்குக் காட்சி சுவாரசியம் கலந்த Emotional Musical Drama. படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இசைஞானி இசை காவியமே படைத்திருப்பார். இசை படங்கள் இப்போது அரிதாகிவிட்டது. தூர்தர்ஷனில் கே எஸ் சித்ரா பாடிய "பாடறியேன்" பாடலை வெள்ளிக்கிழமை "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். ராஜாவுக்கு இப்படத்தின் சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தின் இடம்பெற்ற ராகங்கள் அடிப்படையிலான பாடல்கள், கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டப்பட்டது

"பூமாலை வாங்கி வந்தான்..." என்ற பாடலை இரவு தலையணியுடன் (Headphone) கேட்டுப்பாருங்கள். வயலின், வீணை, புல்லாங்குழல், என இசைக்கருவிகளின் சங்கமம், தாசேட்டனின் ஆலாபனை, உங்கள் காதுகளில் ரீங்காரமிடும். இப்போது அந்தப் பாடலை கேளுங்கள்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Tuesday 3 December 2019

தண்ணீர் தண்ணீர் - 1

ண்ணீர் என்றதும் நினைவுக்கு வருவது நம் வீட்டுக் கிணறும், கோயில் திருக்குளங்கள் தான். திருக்குளங்கள் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று.

ஊரில் உள்ள கிணறுகளெல்லாம் தூர்ந்து கிடக்க, நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதே தெய்வ அருளால் தான் என்று நினைக்கிறேன். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்குள்ள புஷ்கரணி தீர்த்தத்தைக் கொணர்ந்து கிணற்றில் விடுவது வழக்கம்.

பள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் மைதானமே கதியென்றிருப்போம், காயும் வெய்யில் எல்லாம் எங்கள் மீது தான். விளையாட்டு இடைவேளையில் அல்லது தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் தெரு ஓரத்தில் இருக்கும் இந்திய மார்க் கை பம்புத் தண்ணீர் தான் தாகம் தீர்க்கும். தண்ணீர் சில்லென்று இருக்கும். அடிக்க அடிக்கத் தண்ணீர் கொட்டி தீர்க்கும். அந்தத் தண்ணீர் உடம்புக்கு எந்தக் கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.

India Mark Hand Pump
இந்திய அரசு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு இணைந்து 1970களில் கிராமப்புறங்களில் நிறுவிய இந்திய மார்க் கை பம்பு பல கிராமங்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வந்த வரப்பிரசாதி. எந்த ஊர் போனாலும் சரி அங்கே உள்ள இந்தியா மார்க் கை பம்ப் நம் தாகம் தீர்க்கும்.

நாங்கள் வசித்த தெருவில் இந்தியா மார்க் கை பம்ப் இருந்தது. எப்போதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். நாளெல்லாம் "டம்","டம்" என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்றும் முற்றிலும் மறைந்துவிடவில்லை, சில இடங்களில் காணலாம்.

நாங்கள் ஒட்டு வீட்டில் குடியிருந்த போது மழை நீரை அண்டா குண்டா, பக்கெட், அன்னக்கூடை என எல்லாப் பாத்திரங்களையும் வைத்துவிடுவோம்.

இரவெல்லாம் இடி, மின்னல், மழை பெய்யும் சத்தம் கச்சேரி போல இருக்கும். பொழுது விடிந்ததும் பாத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். குளியல், பாத்திரங்கள் விளக்க,.....தண்ணீரைச் சேமித்துப் பல நாட்கள் உபயோகப்படுத்துவோம்.

வருடம் ஞாபகம் இல்லை ஒரு முறை பெரியபாளைய ஆற்றில் தண்ணீர் தரைப்பாலம் மேல் வழிந்தோடிப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று வரை அப்படி ஒரு காட்சியை நான் பார்க்கவில்லை.

அவ்வளவு ஏன் மார்க்கெட்டிலிருந்து பார்த்தால் கடல் போலக் காட்சியளித்த ஆவடி ஏரி. இப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக மாறி இருக்கிறது. ஏரியின் பரப்பளவு சுருங்கி கழிவுநீர் குட்டையாகிவிட்டது.

நண்பரிடம் பேசும் போது சொன்னார் :

"தக்கோலம் - காஞ்சிபுரம் போகும் வழியில் கல்லாறு என்ற ஆறு குறுக்கிடும். எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். எங்கள் பகுதி மக்களுக்குப் பல வருடங்கள் தாகம் தீர்த்தது கல்லாறு தண்ணீர். பள்ளி விடுமுறை நாட்களில் குளித்ததுண்டு. இப்போது அறிவிப்புப் பலகை மட்டுமே உள்ளது, வறண்டு போய்க் காட்சியளிக்கிறது கல்லாறு நதி."

சென்னையிலிருந்து இரயிலில் திருச்சி அல்லது திருப்பதி போகும் வழியில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும் போது தண்ணீர் இல்லாமல் பிரமாண்டமாக, தூர் வாரப்படாமல் காட்சியளிக்கும் ஆறுகளின் தடம் மட்டுமே (மிஞ்சியிருக்கிறது) பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

"காவேரி நதி கரை புரண்டோடுவதைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிறது" - என்று திருச்சியைச் சேர்ந்த நண்பர் சொன்னது. இன்றைக்கு எல்லா ஆறுகளின் நிலையும் இது தான். சமீபத்தில் பெய்த மழையில் ஆற்றில் தண்ணீர் நிரம்ப ஓடுவதைப் பார்க்கும்போது சற்றே நம்பிக்கையளிக்கிறது.

RO மற்றும் ரசாயன குடிநீர் குடிநீரின் (பித்தப்பையில் கல் போன்ற) பாதிப்புகளைச் சமீபகாலமாய்ச் சந்தித்து வருகிறோம்.

எங்கள் தெருவுக்கு நாங்கள் தனிக்குடித்தனம் வந்தது முதல் டிராக்டர் வண்டி தண்ணீர் சமையலுக்கு, குடிக்கக் காய்ச்சி உபயோகப்படுத்தி வருகிறோம். தொடக்கத்தில் ஒரு குடம் மூன்று ரூபாய், இப்போது ரூபாய் ஒன்பது.

கடந்த ஜனவரி மாதம் திருவையாறு சென்றிருந்த போது காவேரியில் குளித்தது மறக்க முடியாத அனுபவம்.

கூவம் கிராமத்தில் தோன்றிய கூவ ஆற்றில் குளித்தவர்கள் உண்டு. இன்றைய கூவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

நதிக்கரையோரம் தோன்றிய நாகரிகம் என்று பீற்றிக் கொள்கிறோம். ஆனால் நதிகளை நாம் பாதுகாத்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். அதன் கரைகளைக் கூட நம்மால் வலுப்படுத்த முடியவில்லை. நம்முடைய தாதாக்கள் குளித்த நதியில், இப்போது நாம் குளிக்க முடியாது. ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும், வற்றிப் போயிருக்கும் அல்லது அசுத்தமாயிருக்கும்.

கல்லணை

தண்ணீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் வகுத்த திட்டங்களால் தான் தமிழ்நாட்டில் கொஞ்சமேனும் ஆற்றில் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. நீங்கள் கரிகாலன் சோழனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கல்லணைக்கு விஜயம் செய்ததுண்டா, வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள். அது போல ஒரு அணையை இனி யாராலும் கட்ட முடியாது. கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நாளா பக்கமும் பாய்ந்து தஞ்சை டெல்டா விவசாய நிலங்களை நனைத்து, பின் பல மாவட்ட மக்கள் தாகம் தீர்த்துக் கடலில் கலக்கிறது.

நதி நீர் இணைப்பு, நதி நீர் இணைப்பு என்று சில ஆண்டுகளாகவே பேசி வருகிறோம். அறிவியல் அறிஞர்கள் கூற்றுப் படி நதியை அதன் போக்கில் விட்டு விடுவது தான் நலம் பயக்கும். அதிலிருந்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் தடுப்பணை கட்டி தேக்கி வைத்து எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அதன் திசையை மாற்றுவதால், ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் அபாயங்களை மனிதன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.



இன்னும் நிறைய பேசுவோம் அடுத்த பகுதியில்.....!




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38

பெரிய இடத்து பெண்(1963)

யக்குனர் ராமண்ணா இயக்கத்தில், தமிழின் சிறந்த திரைக்கதை வித்தகர் திரு சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் கைவண்ணத்தில் உருவான படம் "பெரிய இடத்துப் பெண்". கிராமத்தான் பணக்கார பெண்ணைக் காதலிக்க, அவள் மறுக்க, அவளுக்காக நகரத்தில் வந்து கெட்டப்பையும், அவள் மனதையும் மாற்றி, காதலை மீட்பான். இந்தப் படத்தின் கதை ஒரு Template போல. இன்று வரை இந்தக் கதையில் நடிக்காத கதாநாயகர்களே இல்லை எனலாம். இனி வரும் நடிகர்களும் நடிப்பார்கள். அடுத்த நாற்பது வருடங்களுக்கு இந்தக் கதை செல்லுபடியாகும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-உம் இந்தக் கதையில் நடித்தார். கிராமத்துக் கதை என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. வெகு சிறப்பாக நடித்திருப்பார். கிராமப்புற ரசிகர்கள் அவருக்கு அதிகம். அதனால் தான் படம் Blockbuster Hit.

எங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இறுதி நாளன்று தெருவை மறித்து மிகப்பெரிய வெள்ளை துணி கட்டி, அதில் படம் காட்டுவார்கள். மூன்று படம் போடுவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், பெரிய இடத்துப் பெண். இதுவே வருடா வருடா தொடரும். நாங்களும் சளைக்காமல் பார்ப்போம்.

இந்தப் படத்தில் மனதை வருடும் ஒரு lullaby. பாடல் உள்ளது. இரட்டையர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி மற்றும் டிஎம்எஸ் பாடிய "கட்டோடு குழலாட ஆட... ஆட.."என்ற பாடல். இரவில் தலையணியுடன் (Headphone) பாடல் முழுதும் கேட்டுப் பாருங்கள். கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகளில் இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது தமிழை மிஞ்சிய இனிய மொழி உண்டா என்று தோன்றும் வரிகள். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி