Wonderful Shopping@Amazon

Saturday, 1 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-72

அதிசய பிறவி (1990)

மலோகம் கதைக்களம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. வங்காள படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட 'நான் கண்ட சொர்கம்' படத்தில் கே ஏ தங்கவேலுவை தவறுதலாக எமலோகம் தூக்கிச்செல்லப் பட, எமலோகத்தில் அவர் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்கள் பிரசித்தம். எஸ் வி ரங்கா ராவ் அவர்கள் எமன் பாத்திரத்துக்குக் கம்பீரம் சேர்த்திருப்பார்.

'எமலோகா' என்ற தெலுங்கு தழுவி எடுக்கப்பட்ட, நடிகர் திலகம் நடித்து இயக்குநர் யோகானந்த் 'எமனுக்கு எமன்' படத்தில் சிவாஜி 'எமதர்மராஜாவாக' நடித்திருப்பார்.

'யமுடிகி மொகுடு' என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'அதிசய பிறவி'. இயக்குநர் எஸ் பி முத்துராமன் இயக்கி ரஜினிகாந்த்-கனகா நடித்து 1990-ஆம் ஆண்டு வெளிவந்த சுமாரான படம். வினுசக்கரவர்த்தி அவர்கள் எமதர்மராஜாவாகப் பிரமாதமாக நடித்திருப்பார். இதே கதை மறுபடியும் தெலுங்கிற்குச் சென்று எஸ் எஸ் ராஜமௌலி இயக்கி ஜூனியர் என் டி ஆர் நடித்து 'எம தொங்கா' என்ற பெயரில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. இங்கே 'எமதர்மராஜாவாக' மோகன்பாபு நடித்திருப்பார். இப்படி எமலோக கதைக்களத்தை மையமாகக் கொண்ட படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி வந்துகொண்டு தான் இருக்கிறது

'லக்கிமேன்' படத்தில் கவுண்டமணி மற்றும் 'இந்திரலோகத்தில்.... ' படத்தில் வடிவேலு, தெலுங்கு படத்தில் பிரபு எனப் பலர் எமதர்மராஜா வேஷம் கட்டினாலும் 'எமதர்மராஜாவாக' நடித்த எஸ் வி ரங்காராவ் என் முதல் தேர்வு.

காலை ஏழு மணி, திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடர் வண்டி நிலையம், சென்னை வரவேண்டி, ஒன்பது மணிக்கு வைகை விரைவு வண்டிக்குக் காத்திருந்தோம், அப்போது நிலைய தொலைக்காட்சி பெட்டியில் 'அதிசய பிறவி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ஒளிபரப்பானது. காலை வேளையில் கேட்க ரம்மியமாக இருந்தது. ராஜா சார் பாடல்களைப் பர்சனல் ஆடியோவில் கேட்பதை விட, பொதுவெளியில் அல்லது தனியார் நகரப் பேருந்தில் கேட்பது பயணத்தைச் சுகமாக்கும். அன்றைக்கு இந்தப் பாடலை கேட்கும் போதும் அப்படித் தான் இருந்தது.







நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     



No comments:

Post a Comment