Wonderful Shopping@Amazon

Thursday, 7 December 2017

வருட செயல் திட்டம் (Yearly Action Plan)

அலுவலகத்தில் துறை தலைவருக்கு தனி உதவியாளராக சேர்ந்த புதிது.
புதிய நடைமுறை கற்றுத்தரப்பட்டது அதாவது ஒவ்வொரு மாதமும் செயல் திட்ட அறிக்கை தயாரித்து நிர்வாக இயக்குனருக்கு அனுப்பவேண்டும். அதில் அந்த மாத இலக்குகள், சென்ற மாத இலக்குகளின் நிலை ஆகியவற்றை குறிப்பிடவேண்டும். சில நாட்கள் கழித்து நிர்வாக இயக்குனர் அதில் சில குறிப்புகளுடன் திருப்பி அனுப்புவார்.

விளையாட்டாக வருட செயல் திட்டம் எழுத ஆரம்பித்தேன், அது சரியாக வரவே, ஒவ்வொரு வருடம் டிசம்பர் 25  இரவு அன்று புதிய வருடத்திற்கான செயல் திட்டம் எழுதுவது வழக்கமாயிற்று. கடந்த 2012 முதல் பின்பற்றி வருகிறேன். நல்ல விஷயமாயிற்றே உங்களுக்கும் உபயோகமாக இருக்கட்டுமே....

திட்டம் போட்டு வாழவேண்டும், செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும், வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை கொண்டு வரவேண்டும் என நினைப்பவர்கள் மேலும்  தொடரலாம்.

உங்கள் வருட செயல் திட்டம் எப்படி இருக்க வேண்டும் ?

உங்கள் வருட செயல் திட்டம் 4 - 5  பதிகளாக  பிரித்து கொள்ளவேண்டும் அதாவது
1.  உங்களை பற்றி: கெட்ட பழக்க வழக்கங்களை விடுதல். புகைபிடித்தல், குடி, குட்கா, முன்கோபம் இத்தியாதி, இத்தியாதி நல்ல பழக்கங்களை கடைபிடிப்பது உ.ம் நடை பயிற்சி, அமைதியாக இருத்தல், யோகா, மாரத்தானில் பங்கேற்பது, உணவு கட்டுப்பாடு, சனி தோறும் நல்லெண்ணெய் குளியல்  போன்ற சில விஷயங்கள்.

2. குடும்பம்: பெற்றோர், மனைவி மக்களிடம் அன்பாக இருத்தல். அவர்களுடன் அதிக நேர செலவிடுதல்.

3. தொழில்/வேலை: தொழில் மேம்பாடு, அடைய வேண்டிய புதிய இலக்குகள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க தயாராயிருப்பது போன்றவை, புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிவது.

4. ஆன்மிகம்: தரிசிக்க வேண்டிய புதிய திருக்கோயில்கள், குலதெய்வ வழிபாடு (மிக முக்கியம்).

5. பொதுவானவை: புதிய பொருட்கள் வாங்க வேண்டியவை, புதிய வீடு / மனை வாங்க முயற்சி செய்வது, பள்ளி கட்டண செலவுகளை சமாளிப்பது, கோடை சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்.

ஒரு நோட்டு புத்தகத்திலோ அல்லது பழைய டைரியிலையோ எழுதி வைக்க வேண்டும். டிசம்பர் 25  முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை படித்து மனதில் ஏற்றி கொள்ளுங்கள்.  பிறகு  அதை எங்காவது ஒரு இடத்தில பத்திரமாக வைத்துவிட்டு வழக்கம் போல் உங்கள் வேலையை பாருங்கள்.

பிறகு வருட இறுதியில் அதாவது டிசம்பர் 25 ல் டைரியை எடுத்து எழுதி வைத்த வருட செயல் திட்டத்தை மீண்டும் படியுங்கள். இதில் சில இலக்குகளை நிச்சயம் அடைந்திருப்போம். நிறைவேறிய விஷயங்களை பச்சை நிற  பேனாவை கொண்டு அடித்துவிடவும்.  

நிறைவேறாததை அடுத்த வருட செயல் திட்டத்தில் சேர்க்கவும்.  இந்த வருடமோ அடுத்த வருடமோ உங்கள் கடினமான/ சின்ன சின்ன இலக்குகளை நிச்சயம் அடைவீர்கள்.

இந்த வருட செயல் திட்ட பயிற்ச்சியால் உங்கள் லட்சியம் தெளிவாகும், அது வலுவாகும். இதனுடைய பயன்களை காலப்போக்கில் நீங்களே உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.

- காளிகபாலி

7 comments: