Wonderful Shopping@Amazon

Wednesday 17 April 2019

வெள்ளித்திரை - இன்றே கடைசி


சென்னை புரசைவாக்கம் கெல்லிஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் அடிப்ரதிக்ஷணம் செய்தன. பிறகு காரணம் புரிந்தது ரஜினிகாந்த் நடித்த ஒரு படம் 50வது நாளை முன்னிட்டு அபிராமி திரை வளாகத்தில் ஏற்பட்ட நெரிசல். இதெல்லாம் இருபது வருடங்களுக்கு முந்தைய கதை. பிறகு அபிராமி திரையரங்கம், அபிராமி மெகா மாலாகி இப்போது அதுவும் இல்லை.
இன்றைய தலைமுறை ரசிகர்கள் திரைப்படங்களைத் தங்கள் அலைபேசியில் கண்டுகளிக்கிறார்கள், திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் அந்த சுகானுபவத்தை இழக்கிறார்கள்.
சென்னை மட்டைப்பந்து மற்றும் திரைத்துறையால் ஆனது. ஒவ்வொரு சென்னை வாசிக்கும் தேவி, சத்யம் மற்றும் சங்கம் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது பெருமைக்குரிய விஷயம். சங்கம் திரையரங்க வாயில் படிகள் கல்லூரி மாணவ குழுக்களின் புகலிடமென்றால், காதலர்களுக்குப் பொழுதைக் கழிக்கச் சங்கம் திரையரங்கம் ஏற்றது.

ஆயிரம் இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் திரையரங்க பெரிய வெண்திரையைப் பார்த்தவுடன் ஒரு கணம் மிரண்டு தான் போவீர்கள். ஆரவாரத்துடன் மக்களுடன் மக்களாக திரைப்படம் பார்க்க ஏற்றது. பெயருக்கேற்றாற்போல் உருண்டையான வளைவான சருக்குப் பாதையில் நீங்கள் சொர்க்கத்தில் நடந்து செல்வது போல நடந்து சென்று திரையரங்கை அடையலாம். ஆச்சரியம் என்னவென்றால், 49 வருடப் பாரம்பரிய கொண்ட திரை வளாகம், இன்றும் பெருநிறுவன சங்கிலித் தொடர் திரையரங்குகளுக்கு ஈடுகொடுத்து விளங்கிவருகிறது. நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படங்களுடைய கோப்பைகளைக் இங்குக் காணலாம்.

இஃது இப்படி என்றால் சத்யம் திரையரங்க பின்புறத்தில் உள்ள சின்ன அறையில் வைத்து முதல் இரண்டு வரிசைக்கு, பத்து ரூபாய் டிக்கெட் கொடுப்பார்கள், ஒருவருக்கு ஒரு டிக்கெட், அதை வாங்கக் கூட்டம் முண்டியடிக்கும். டைட்டானிக் கப்பலில் நுழையும் ஜாக் போல ஒரு பெருமித உணர்வு டிக்கெட் கிடைத்தவுடன் ஏற்படும். அப்பவே புதிய தொழிற்நுட்பங்களைச் சத்யம் திரையரங்கம் தான் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

பெரிய நட்சத்திரங்களுக்கென்றே சில திரையரங்கங்கள் உண்டு. ஆல்பர்ட் மற்றும் காசி. முதல் நாள் முதல் காட்சி தீபாவளி கொண்டாட்டம் போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். விசேஷ நாட்களில் பதினைந்து திரைப்படங்கள் வெளியாகும், பெரும்பாலான படங்கள் வெற்றிப் படமாக அமையும். மொழிவாரியாக வெளியாகும் படங்களுக்கென்றே சில திரையரங்குகள் உண்டு. மோட்சம் மற்றும் பைலட் (ஆங்கிலம்), கேசினோ (ஆங்கிலம் & தெலுங்கு), ஈகா மற்றும் மெலடி (ஹிந்தி) சஃபையர் (ஆங்கிலம் & மலையாளம்). கெயிட்டி (பருவ வயதை எட்டியவர்களுக்கு, மொழியா முக்கியம்?).

கடந்த பத்து வருடங்களாக ஒற்றைத் திரையரங்கங்கள் மெல்ல மறைந்து, பெருநிறுவன திரைப் பூங்காவாகப் பெருகி வருகிறது பெருகி வருகிறது.  இது ஒரு நல்ல மாற்றம்பல மொழி படங்கள் ஒரே இடத்தில். நமக்குப் பிடித்த படங்களை தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஆனால் நுழைவு கட்டணம், திரையரங்கினில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை, வாகன நிறுத்துமிடத்தில் கட்டண போன்ற காரணங்களுக்காகப் படம் வெளியான அன்றே, சுமாரான பதிப்பாக இருந்தாலும் சரி மக்கள் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால் கணிசமான மக்கள் திரையரங்கம் பக்கம் வருவதே இல்லை. பிறகு பார்க்கலாம் என்று நினைக்கையில், சில நல்ல படங்கள் திரையரங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. படம் வந்த சில மாதங்களிலோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும்போதோ புத்தம் புதிய பிரதி பிரபல இனணயத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திரைப்படங்களை திரையரங்கில் தான் காண வேண்டும் என்ற கட்டாயம் இப்போது இல்லை, நெட்ஃபிக்ஸ், அமேசான் வூட், ஆல்ட் பாலாஜி, ஹாட்ஸ்டார் என ஏகப்பட்ட இணையத் தொலைக்காட்சிகள் இப்போது சந்தையில். முதல் 36 நாள் சந்தா இல்லாமல் இலவசமாக அனைத்து திரைப்படங்களையும் / தொடர்களையும் பார்க்கலாம். அப்போது ஓரளவுக்கு அடிமையாகியிருப்பீர்கள், இலவச நாட்கள் முடிந்தவுடன் சந்தா கட்டி பார்க்கும் அளவுக்கு மாறியிருப்பீர்கள்.



எதிர்காலத்தில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த புதிய திரைப்படங்களை நேரடியாக இத்தகைய தளங்களில் வெளியாகும், சிறிய தொகை செலுத்தினால் போதும் குடும்பத்தோடு பார்க்கலாம். நெரிசல், கூச்சல், குழப்பம், பாலபிஷேகம், கட்டவுட், வாகன நிறுத்துமிடம் பல தொல்லைகள் இல்லை. சில நடிகர்கள் நடித்த படம் மட்டும் திரையரங்கில் வெளியாகும், அவர்களே பணம் கட்டி திரையரங்கில் வெளியிடும் நிலைமை கூட வரலாம், அதற்குப் பெருநிறுவன திரையரங்க உரிமையாளர் ஒரு தொகை நிர்ணயிப்பார். அதற்கேற்றாற்போல், நடிகர்களின் ஊதியமும் நிர்ணயிக்கப்படும். இப்போது இல்லையென்றாலும், சில வருடங்கள் கழித்து நடக்கலாம்.

அதனால் நிலைமை மாறுவதற்குள் அருகில் உள்ள வெள்ளித்திரையில் திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி தளத்திற்காக இராம.லோகேஷ் 🙏


No comments:

Post a Comment