ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் கசபா தாதாசாஹேப் ஜாதவ்
ஜனவரி 15, 1926 அன்று சதாராவில் ஒரு மகாராஷ்டிரா மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் பிறந்தார் கசபா தாதாசாஹேப் ஜாதவ். அவரது தந்தை தாதாசாகேப், ஒரு மல்யுத்த வீரர், ஜாதவை ஐந்து வயதிலேயே விளையாட்டிற்குத் தயார்ப்படுத்தினார். ஆரம்பக் கல்விக்காகத் தனது கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராட்டில் உள்ள திலக் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
1948-ஆம் ஆண்டில், கோலாப்பூரின் ராஜா ராம் கல்லூரியில் ஜாதவ் படிக்கும் போது, விளையாட்டு ஆசிரியர் தனது உடலமைப்பைப் பார்த்து நிராகரித்ததை அடுத்து, வருடாந்திர விளையாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி கல்லூரி முதல்வரை அணுகினார். இறுதியாக அனுமதிக்கப்பட்டபோது, அவர் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை வீழ்த்தித் திகைப்பில் ஆழ்த்தினார்.
தனது ஆரம்பப் பயிற்சி ஆண்டுகளில், 1948 மற்றும் 1952 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்பு, ஜாதவ் மல்யுத்த வீரர்களான பாபுராவ் பாலாவ்டே மற்றும் பெலாபுரி குருஜி ஆகியோரால் பயிற்சி பெற்றார்.
ஆனால், 1952 ஒலிம்பிக்கிற்கு முன்பு, ஜாதவ் நிதி சிக்கலை எதிர்கொண்டார்.
அவரது மகன் ரஞ்சித் ஜாதவ் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார், “பாபா (1952) ஹெல்சின்கி ஒலிம்பிக்கிற்கான தனது பயணத்திற்கு, அங்குத் தங்குவதற்குச் சில நிதி உதவிகளை விரும்பியபோது, பாட்டியாலா மகாராஜா, (அப்போதைய பம்பாய் முதலமைச்சர்) மொரார்ஜி தேசாய், கல்லூரியின் முதல்வர், மற்றவர்களும் பங்களித்தனர் மற்றும் பிற தேவைகளைக் கவனித்தனர். அவர் தனது சொந்த வீட்டை அடமானம் வைத்தும் கொஞ்சம் பணம் சேர்த்தார்.
1952-ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் மெக்சிகோ, கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வீரர்களைச் சில நிமிடங்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் மற்றும் இந்த மேடையில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இன்று போலல்லாமல், வீரர்களை நிறைய ஊடக கவனத்துடன் வரவேற்கும்போது, ஜாதவை குறிப்பிடத்தக்க சாதனையின் பின்னர்த் தனது சக கிராமவாசிகள் மட்டுமே வரவேற்றனர்!
அதன் பிறகு மகாராஷ்டிரா முதல்வர் பாராட்டியது, போலீஸ் வேலை வழங்கியது என நடந்தது.
2001-ஆம் ஆண்டில் ஜாதவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. புனேவைச் சேர்ந்த எழுத்தாளர் சஞ்சய் துதானே, அதே ஆண்டு ஒலிம்பிக் வீரர் கசபா ஜாதவ் என்ற தலைப்பில் ஒரு சுயசரிதை வெளியிட்டார்.
2010-ஆம் ஆண்டில், தலைநகர் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் உள்ள மல்யுத்த மைதானம் கே டி ஜாதவ் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டது.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
தமிழில் : காளிகபாலி
Very good article good information well done
ReplyDelete