Wonderful Shopping@Amazon

Friday 4 November 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-136

 வைதேகி காத்திருந்தாள் (1984)

#PetromaxLight

விஜயகாந்த்-  இயக்குநர் ஆர் சுந்தராஜன் இணைந்து நிகழ்த்திய மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று. அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜயகாந்த் இந்த படத்தில் அமைதியாக நடித்திருப்பார். உங்களுக்குத் தெரியுமா? இசைஞானி அவர்கள் டியூன் போட்டு வேண்டாமென்று ஒதுக்கிய ஆறு டியூன்களிலிருந்து உருவான படம் தான் "வைதேகி காத்திருந்தாள் ..." இந்த படத்தில் எனக்குப் பிடித்த பாடல் "மேகம் கருக்காயிலே என்ற துள்ளலான பாடல். நான் முன்பே சொன்னது போல... பாடல் கூடவே வரும் அந்த கோரஸ் தான் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. 

சரி விஷயத்துக்கு வருவோம்! நீங்கள் revolution-ன்னு சொன்னாலும் சரி இல்ல evolution-ன்னு சொன்னாலும் சரி, அந்த இரண்டுக்கும் இடம் கொடுக்காமல் இந்த படத்தில் இடம்பெற்ற 'பெட்ரோமாக்ஸ் லைட்' நகைச்சுவை பகுதி  இன்னும் காலம் கடந்தும் பேசப்படும். என்னுடைய முகநூல் நண்பர் திரு.கீதப்ரியன் அவர்கள் எழுதிய இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்கப் பதிவுக்குள் செல்வோம்.....

பெட்ரொமேக்ஸ் காமெடி வெளியாகி 38 வருடங்களாகிறது, மதுரை சென்ட்ரல் சினிமாவில் இந்த படம் பார்த்து கவுண்டமணி செந்தில் காட்சிகளுக்கு சிறுவனாக அத்தனை சிரித்திருக்கிறேன், இந்த பல வருடங்களில் பல வயதுகளில் இந்த படத்தின் நகைச்சுவை ட்ராக்கை மட்டும் தனியே பார்த்துள்ளேன், இன்றும் இந்த நகைச்சுவை அத்தனை தரமாக உள்ளது.

அழகு ராஜன் உள்ளூரில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போன்றவர்,சைக்கிள் கடை வைத்துள்ளார் உடன் பெட்ரோமேக்ஸ் வாடகைக்கு விடுகிறார், உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு உண்டு என நம்பும் மனிதர், அழகிய மனைவி தன் ஆசைக்கு ஒத்திசைந்து இவர் வாங்கித் தரும் காலே கால் கிலோ அல்வா , ஒரு முழம் மல்லிப்பூவிற்க்கு மகிழ்ந்து இவருடன் ஆற்றங்கரைக்கு மணல்வெளிக்கு அழைத்த போதெல்லாம் வருகிறார், இப்படி ஒரு ஒத்தாசையான மனைவி இருந்தாலும் அழகுராஜன் , ஊருக்குள் வாய் பேச முடியாத ஒரு ஐம்பது வயது பெண்ணை செட் அப் செய்து வைத்திருப்பதை அவர் கோமூட்டி தலையனுடன் பேசும் வசனங்களூடே நாம் அறிகிறோம்.,

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியாக இருக்கனும், ஆலையில் நுழையும் கரும்பில் அடிக்கரும்பென்ன ? நுனிக்கரும்பென்ன என்று தன் EMA செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறார் அழகுராஜன்.

அழகுராஜன் நல்ல குணம் படைத்தவர் என்பதை ஊருக்குள் வேலை வேலை என கேட்டு வந்து பசியால் வாடிய இளைஞனை கோமூட்டி தலையன் தான் பண்ணையார் மகன் என பொய் சொல்லி தரையில் நீச்சல் அடிக்க கேட்டு சுற்றலில் விடுகையில் , அவனை சைக்கிளை மோதி துரத்தி விட்டு கிராம நிர்வாகியிடம் சிபாரிசு செய்து ரேஷன் கடையில் அளந்து போடும் ஊழியர் வேலைக்கு சேர்த்து விடுகையில் நாம் அறிவோம்.

இந்த பெட்ரோமேக்ஸ் காமெடி அத்தனை தரமானது, எத்தனை அவல நகைச்சுவைப் படங்களை நான் உலக சினிமாவில் பார்த்திருந்தாலும் இந்த நகைச்சுவையின் மாற்று குறையவேயில்லை.

மச்சான பாரடி மச்சமுள்ள ஆளடி என சன்னமாக பாடிய படி பெட்ரோமேக்ஸ் லைட்டை துடைத்து சுத்தம் செய்கிறார் அழகுராஜன்.

"அண்ணே..."

"டேய் ரொம்பநாள் கழிச்சு இந்த பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு போகப்போகுது ,பத்து ருபா கிடைக்கும்,அதான் நான் தொடச்சிட்டிருக்கேன்...."

"என் சந்தேகத்த தீத்துவைய்யுங்கண்ணே...."

"என்னடா.."

"இந்த பெட்ரொமேக்ஸ் லைட் எப்படின்ணே எரியுது...?"

"ஆங் அப்படி வா, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைன்ட்றது.
அடேய் கோமுட்டித்தலையா, இதுக்கு பேரு தான் கப்பு,இதுக்கு மேல கோழி முட்ட மாதிரி இருக்குது பாரு இதுக்கு பேரு மேண்டில்,இதுல தான் பளீர்னு வெளிச்சம் வர்ரது...."

"இதுல எப்படிண்ணே வெளிச்சம் வரும்? (துருதுருவென அமுக்கி உடைத்து விடுகிறார்) என்னண்ணே உடைச்சுபுட்டீங்க?

ஆழ்ந்த மௌனம் நிலவுகிறது, அழகுராஜன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டி தலை குனிந்து கொள்கிறார்,கோமுட்டி தலையன் தப்ப தருணம் பார்க்கிறார்.

கூடை வைத்த பெண்மணி: இங்க அழகு ராஜா கட எதுங்க?

கோமூட்டி தலையன் : இது தான் 

 அழகுராஜன் : டேய் இருடி , அது நாந்தாங்க, 

கூடை வைத்த பெண்மணி: சாயந்தரம் என் பொண்ணுக்கு சீர் செய்யனும், அதுக்கு ஒரு பெட்ரோமேக்ஸ் லைட் வேணும்.

இசைஞானி: டிடுக் டிடுக் என பொருத்தமாக பின்னணி சேர்த்திருப்பார்.இசை முடிவதற்குள் கோமூட்டி தலையன் அங்கே ஓட்டம் எடுத்திருப்பார்.

அழகுராஜன்: ஏங்க , பெட்ரமேக்ஸ் லைட்டே வேணுமா? 

ஆமாங்க

இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்க கூடாதுங்க?

பந்தமா? அஹ்,அதல்லாம் ஒண்ணும் வேணாம்க.

அப்ப பெட்ரமேக்‌ஸ் லைட்டு குடுக்கறதில்ல.

ஊம்!!!

கூடை வெச்சிருக்கறவங்களுக்கெல்லாம் பெட்ரமேக்ஸ் லைட் குடுக்கறதில்ல,

ஆங்!!!

அடப்போம்மா.

அந்த பெண்மணி அங்கலாய்த்து அகன்றதும் அது வரை கையில் வைத்து பிடித்த மேண்டில் பொடிந்த கப்பை தூக்கி கீழே எறிகையில் அந்த நீண்ட காட்சி நிறையும்.

அது லைசன்ஸ்ராஜ் யுகம், எந்த உதிரி பாகத்துக்குமே தட்டுப்பாடு இருந்த காலம்,இந்த மேண்டில் ரேயான் என்ற செயற்கை இழையால் தயாரானது, அது உலோக உப்புகளான சீரியம் ,தோரியம் உப்பில் தோய்த்து ஏறக்குறைய ஆணுறை போன்று சுருட்டி வைத்து உதிரி பாகமாக கிடைக்கும், அதை கப்பில் துருத்திய ஹோல்டரில் கவனமாக சுருக்கு போட்டு மெல்லிய கம்பியால் இறுக்கி கட்ட வேண்டும்.பம்ப் ஸ்டவ் டெக்னிக் தான், பம்ப் அடித்த அழுத்தம் மூலம் மிகச்சிறிய துளை வழியே எண்ணெய் வெளியேறி பர்னருக்கு வரும் , நெருப்பு பற்றவைத்த மேண்டில் வலை நரம்புகளில் எண்ணெய் ஊடுருவிப் பாய்ந்து பளீரென பல மணி நேரம் மேண்டில் எரியும், காற்று அழுத்தம் குறைகையில் பத்துமுறை என கணக்கு வைத்து பம்ப் அடிக்க அத்தனை பளீரென வெளிச்சம் மாறும்,இன்றும் கேம்பிங்கிற்கு உற்ற துணைவன் பெட்ரோ மேக்ஸ். இன்று ஒரு மேண்டில்  விலை 110 ₹ என்றால் அப்போது அதன் விலையைப் பாருங்கள், ஒரு முறை மேண்டில் மாற்றினால் அது தின உபயோகத்தில் இரண்டு வருடம் கூட உழைக்கும், நாட்பட்ட உபயோகத்தில் இந்த மேண்டில் தொட்டாலே மண் போல பொடிந்து கொட்டிவிடும், கோமூட்டி தலையன் அதைத்தான் அன்று செய்துவிட்டு ஓட்டமெடுத்தார்.

அழகுராஜன் அன்று பெறும் 10₹ வாடகையை அது கோரும், அந்த வயிற்றுப்பாட்டை அற்புதமாக அங்கே வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் கவுண்டமணி, இந்த மேண்டில் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் என்பது உபதகவல், நம் இந்தியாவில் பிரபாத் என்ற நிறுவனம் பெட்ரோமேக்ஸ் தயாரிப்பில் கோலோச்சி இருக்கின்றனர்,

பெட்ரோமாக்ஸ் விளக்கு 1910 இல் ஜெர்மனியில் மேக்ஸ் கிரீட்ஸ் என்பவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது, எனவே பாராஃபின் எண்ணைக்கு பெட்ரோ என்றும் கண்டுபிடிப்பாளருக்கு மேக்ஸ் என்றும் இணைத்து இன்றும் வழங்கப்படுகிறது.

இப்படத்தில் கவுண்டமணி செந்தில் ஜோடியின் நகைச்சுவை அத்தனை அபாரமாக இயல்பாக வெளிப்பட்டிருக்கும், immortal வகையறா, வசனகர்த்தா வீரப்பன் வசனங்களை கவுண்டமணி improve செய்து அத்தனை பிரமாதப்படுத்திவிட்டார் என்றால் மிகையில்லை,இசைஞானி பாடல்களுக்காகவும் அசத்தலான தனி நகைச்சுவைக்காகவும் 'வைதேகி காத்திருந்தாள்' படமெடுத்த இயக்குனர் ஆர் சுந்தராஜன் அவர்களுக்கு நன்றி!




நன்றி : கீதப்ரியன்

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Sunday 6 March 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-135

பீலே - கால்பந்து அரசன்  

#fifaworldcup2022

மீபகாலங்களில் விளையாட்டு தொலைக்காட்சிகளில் இந்தியாவில் இயக்கும் கால்பந்து  கிளப்புகளிடையே நடக்கும் கால்பந்து போட்டிகளைக் காண்கிறேன். இதைப் பார்க்கும்போது  நிச்சயமாக வருங்காலத்தில் FIFAஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா பங்குபெறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனது நண்பர் பீலேவின் தீவிர ரசிகர். அவருடைய சாதனைகளை  அடுக்கிக்கொண்டே போனார், அதிலிருந்து சில துளிகள் இதோ உங்களுக்காக:

பிரேசிலின் சிறந்த முன்னாள் கால்பந்து வீரர் 'பீலே', அவர் பல கால்பந்து சாதனைகளுக்குச் சொந்தக்காரர். பல தசாப்தங்களுக்குப்

பிறகும் அவரது சாதனைகள் இன்னும் முறியடிக்க முடியாமல் நிலைத்து நிற்கின்றன. 91 ஆட்டங்களில் 77 கோல்கள் அடித்து, 98 ஆட்டங்களில் 62 கோல்கள் அடித்த ரொனால்டோவை  விட 15 கோல்கள் அதிகம் அடித்தவர் பீலே.

இன்னும் சில ஆண்டுகளுக்கு அந்த சாதனையை எந்த வீரராலும் முறியடிக்க

முடியாது என்று தோன்றுகிறது, ஆனால் நெய்மர் கோல்களைக் குவிக்கும் வேகத்தைப் பார்க்கும்போது இந்த சாதனையை முறியடிக்க முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவருக்கு வயது வெறும் 30 மற்றும் ஏற்கனவே 70 சர்வதேச கோல்களை அடித்துள்ளார். இருப்பினும், பீலேவின் பல சாதனைகளை முறியடிக்க இன்னும் நிறையப் போட்டிகளில் நெய்மர்  பங்கெடுக்க வேண்டும்.

எனவே பீலேவின்  என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சாதனைகளைப் பற்றிய பதிவு இங்கே:

#1 அதிக FIFA உலகக் கோப்பை தனிநபருக்கான பதக்கம்

16 பிரேசிலியர்கள், 4 இத்தாலியர்கள் மற்றும் ஒரு அர்ஜென்டினா வீரர்களுடன் மொத்தம் 21 வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை FIFA உலகக் கோப்பை தனி நபர் பதக்கத்தை வென்றுள்ளனர். இருப்பினும், எல்லாவற்றிற்கும் மேலாக நிற்கும் ஒரு வீரர் பீலே.

பிரேசில் ஐந்து முறை FIFAபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது மற்றும் பீலே மூன்று முறை அதாவது 1958, 1962 இல் மற்றும் மீண்டும் 1970 இல் தனது மூன்றாவது முறை தனிநபர் பதக்கத்தை வென்ற ஒரே கால்பந்து வீரர் பீலே ஆவார்.


சர்வதேச போட்டிகளில் போட்டி அதிகரித்து வருவதால் இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அதற்கு மேல், குறைந்தபட்சம் பீலேவின் சாதனையைப் சமன் செய்ய விரும்பும் வீரர் மூன்று FIFA உலகக் கோப்பைகளில் விளையாட வேண்டும். இந்த நாட்களில் பெரும்பாலான வீரர்கள் கிளப் போட்டிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளச்  சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுகிறார்கள். எனவே பீலேவின் சாதனை இங்கே நிலைத்து நிற்கிறது என்று சொல்வது நியாயமாக இருக்கும்.

#2 கால்பந்தில் அதிக கோல்கள்

அக்டோபர் 2013 இல் பீலே இரண்டு கின்னஸ் உலக சாதனைகளுடன் கௌரவிக்கப்பட்டார்.  முதலாவது 1363 ஆட்டங்களில் 1283 கோல்களை அடித்ததற்காக பீலேவுக்கு இந்த சாதனை வழங்கப்பட்டது.   இந்த கோல்களில் பிரேசிலியர் நட்பு போட்டிகளில் அடித்த கோல்கள், கிளப்பின் அமெச்சூர் மற்றும் ரிசர்வ் டீம் கேம்கள் மற்றும் ஜூனியர் தேசிய அணிகள் ஆகியவை அடங்கும்.

இரண்டாவது, உலகக் கோப்பை வெற்றியாளர்களின் பதக்கத்தை அதிக முறை பெற்ற வீரர்

தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களுடன்  ஒப்பிட்டால்: ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் முறையே 526 மற்றும் 494 அதிக கோல்களை அடித்துள்ளனர்.  இந்த எண்ணிக்கை அவர்கள் நட்புப் போட்டிகளில் அல்லது ஜூனியர் அணிகளுக்காக அடித்த கோல்களைத் தவிர்த்து, ஓய்வுக்கு முன் அடித்த கோல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், அவர்களில் ஒருவர்  பீலேவின் சாதனையை நெருக்குவதற்கான வாய்ப்புகள்மிகக் குறைவு.

#3 பீலேவின் ஹாட்ரிக் கோல்கள்

பீலே 1958 இல் FIFA உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடிய இளம் வீரர் மற்றும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஆனால் அந்த சாதனை பின்னர் முறியடிக்கப்பட்டது. இருப்பினும், போட்டியில் இளம் வயதில்  ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

தொழில்முறை ஆட்டக்காரராக பீலே 1958 FIFA உலகக் கோப்பையின் அரையிறுதியில் பிரான்சுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்தபோது அவருக்கு வயது 17 மட்டுமே.  அவரது ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் ஹாட்ரிக் இது.

பீலே தனது கேரியரில் 92 ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்துள்ளார். தனது கால்பந்து விளையாட்டு கேரியரில் அடித்த கோல்களில் 21.5% ஆகும். மொத்தமாகக் கோல்களை அடித்த கிட்டத்தட்ட அனைத்து ஸ்ட்ரைக்கர்களும் தங்கள் கால்பந்து விளையாட்டு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்  ஹாட்ரிக் என்ற பெயரைப் பெற்றிருப்பார்கள். எனவே 1283 கோல்களை அடித்த பீலே நிறைய ஹாட்ரிக் கோல்களை அடித்திருப்பார் என்பது நிச்சயம்.  அவர் ஆறு ஐந்து நான்கு கோல்கள் 31 ஆட்டத்தில் அடித்த பெருமைக்குரியவர்.

பீலேவின் சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸியுடன் ஒப்பிட்டால்,  முந்தையவர் 39 கேரியர் ஹாட்ரிக்ஸைப் பெற்றுள்ளார், பிந்தையவர் 38 ஐப் பெற்றுள்ளார்.

1958 பதிப்பின் இறுதிப் போட்டியில், பீலே மேலும் ஒரு சாதனையைப் படைத்தார், அது இன்றும் அப்படியே உள்ளது. போட்டியை நடத்தும் நாடான ஸ்வீடனுக்கு எதிரான இறுதிப் போட்டியில், பீலே ஒரு பிரேஸ் அடித்தார், அதில் முதல் கோல் FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய கோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது அவரை ஜஸ்ட் ஃபோன்டைனுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் வைத்தது.

FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வரக்கூடிய பெரும்பாலான அணிகள், போட்டிக்கு அனுபவம் வாய்ந்த அணியைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். சில இளைய வீரர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினாலும், அவர் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ?



தமிழில் - காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com and 'The Sportskeeda.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


Thursday 3 March 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-134

50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'தி காட் ஃபாதர்' (1972)

விகடன் இதழில் வேல்ஸ் எழுதிய 'வாவ் 2000' தொடரில் தான் எனக்கு இயக்குநர் பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய  'தி காட் ஃபாதர்' ஹாலிவுட் திரைப்படம் அறிமுகமானது. இப்படத்தைப் பார்க்கவேண்டி பர்மா பஜாரில் நகல் டிவிடி-யை வாங்கினேன். ஆனால் படம் ரியாக பதிவு செய்யப்படாததால் பார்க்க முடியாமல் போனது. அதோடு 'தி காட் ஃபாதர்' படத்தை நானும் மறந்து போனேன். 

நான் முன்பே சில பதிவுகளில், பழைய கிளாசிக் வகை படங்களைத் திரையரங்கில் காண வேண்டி என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருப்பேன். சமீபத்தில் பிரபல நடிகர் நடித்த புதிய படத்தைத் திரையரங்கில் பார்க்கப் போகலாம் என்றிருந்தபோது, மார்லன் பிராண்டோ, அல் பசினோ, ஜேம்ஸ் கான், ரிச்சர்ட் காஸ்டெல்லானோ, ராபர்ட் டுவால், ஸ்டெர்லிங் ஹேடன், ஜான் மார்லி, 

ரிச்சர்ட் காண்டே மற்றும் டயான் கீட்டன் ஆகியோர் நடித்து, பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா இயக்கிய ஹாலிவுட் கிளாசிக் திரைப்படம் 'தி காட்ஃபாதர்' முதல் பாகம், அதன் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில் குறிப்பாகச் சென்னையில் மீண்டும் வெளியான செய்தியைப் படித்தேன், அதனால் என்னுடைய முதல் தேர்வு 'தி காட் ஃபாதர்' படம் பார்க்க முடிவானது. அண்ணா நகர் வீஆர் மாலில் உள்ள பிவீஆர் திரையரங்கிற்கு அலுவலகம் முடிந்ததும் கிளம்பினேன்.

இப்போது படத்தைப் பற்றி ......

1972 இல் வெளியிடப்பட்ட, 'தி காட்பாதர்' - முதல் பாகம் அமெரிக்காவில் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் மற்றும் நீண்ட காலமாக அதன் வசூலை நெருங்க முடியாத அமெரிக்கத் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது. இயக்குநர் கொப்போலா மற்றும் நடிகர் பசினோ ஆகியோருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும்,  அடுத்தடுத்து தொழில் வீழ்ச்சியைக் கண்ட பிராண்டோ மீண்டு வர இப்படம் உதவியது. அந்த ஆண்டு சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான அகாடமி விருதை வென்றது, மேலும் ஏழு பரிந்துரைகளைப் பெற்றது. அதோடு எல்லா காலத்திலும் மிகவும் புகழ்பெற்ற கேங்க்ஸ்டர் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் இப்படத்தை உலகின் சிறந்த இரண்டாவது  (அமெரிக்க) திரைப்படமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1972- பிறகு வந்த அனைத்து இந்திய கேங்ஸ்டர் படங்களும் இப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். கேங்ஸ்டர் படங்களுக்கு இந்த படம் ஒரு ரெபெரென்ஸ்.

படத்தின் கதை......வெண்திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து படம் தொடங்குகிறது, அதனூடே 'காட் ஃபாதர்' கதாபாத்திரத்துக்கான அறிமுகப்படலமும் நடக்கிறது. பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு படம் வேகமெடுக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பது போலவே தெரியவில்லை, அவ்வளவு இயல்பாக தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கதாநாயகன் மார்லன் பிராண்டோ கதாபாத்திரத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த இன்னொரு கதாபாத்திரம்  பட ஆரம்பத்தில் "அப்பாவின் தொழிலில் எனக்கு விருப்ப இல்லை, எனக்குப் பெரிய ஆர்வமும் இல்லை" என தன் காதலியிடம் அப்பாவியாக வினவும் காட் ஃபாதரின் இளைய மகனாக வரும் 'மைக்கேல்' - ஆக பசினோ ஏற்றிருந்த வேடம். மெல்ல மெல்ல அப்பாவின் தொழிலுக்குள் தள்ளப்பட்டு அவர் காட்டும் சாகசம், மாஸ்  அனாயாசம்.

துப்பாக்கி சத்தம், பழைய காலத்து கார் சத்தம், நடை சத்தம், சிறப்பு ஒளி-ஒலி சேர்ப்பு இப்போது சேர்க்கப்பட்டதா தெரியவில்லை, அத்தனையும் 'ரா'-வாக பதிவு செய்திருக்கிறார்கள், உலகத்தரம்.

இந்தியாவில் 'தி காட்ஃபாதர்' போன்ற கேங்ஸ்டர், சூப்பர் ஹீரோ கதைக்களம் சார்ந்த அமெரிக்க கிளாசிக்  திரைப்படங்களுக்குத் திரையரங்குகளில் பார்ப்பதற்காகத் திரளும் இளைய தலைமுறை பார்வையாளர்களிடையே மிகப் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற ஆரம்பித்திருக்கிறது.

இனி வரும் நாட்களில் இது போன்ற கிளாசிக் பழைய படங்களை எதிர்பாருங்கள், முக்கியமாகத் திரையரங்கில் கண்டுகளியுங்கள்.

'தி காட்ஃபாதர்' | 50வது ஆண்டு விழா டிரெய்லர் இதோ: 



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com and 'The Mint'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Wednesday 2 March 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-133

'காதல் ஓவியம்'(1982)

'காதல் ஓவியம்'- 1982 ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய இப்படத்தில் புதுமுக கதாநாயகன் கண்ணன், ராதா நடித்து 30 ஏப்ரல் 1982 அன்று வெளியானது.

எனது நண்பர் சதாசிவம் அவர்களுக்கு இந்த படம் நிரம்பப் பிடிக்கும். பாடல்கள், காட்சிகள், ஜனகராஜின் நடிப்பு மற்றும் ராதா அந்த பாத்திரத்துக்குச் செய்த Justification என ஒவ்வொன்றையும் விளக்குவார். "என்னடா இந்த மனுசன், இந்த படத்தை இப்படி புகழறாரே .." என நினைத்து, ஒரு நாள் இந்த படத்தை யுடியூப் தளத்தில் பார்த்து முடித்தேன். நன்றாகத் தான் இருந்தது. சின்ன சின்ன lagging தவிரப் படம் எனக்குப் பிடித்திருந்தது.

இசைஞானி இசையால் தான் இந்த படம் இன்று வரை கல்ட் கிளாசிக்-ஆக இருக்கிறது. இதையும் அந்த நண்பர் தான் சொன்னார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்தை இப்போது பார்க்கும்போது கூட  'சிறீ சிறி முவ்வா' (1976) மற்றும் 'சங்கராபரணம்' (1980) படம் போல இந்த படம் பேசப்பட்டிருக்கவேண்டும், அதாவது புதுமுக கதாநாயகன் நடிக்காமல், பிரபலமான முகம் நடித்திருந்தால்! மேலும், பார்வையில்லாத கதாநாயக வேடம்  கொண்ட படம் ஓடாது என்ற தமிழ் சினிமா செண்டிமெண்ட், அதை நிரூபிப்பது போல இந்த படம்.

எல்லா படத்துக்கும் நடப்பது போல இந்த படத்திற்கும் 'அந்த' மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பது தான் சோகம்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  "சங்கீத ஜாதி முல்லை ..." பாடலை பாடாத வளர்-இளம் பாடகர்களே இல்லை எனலாம்.  அந்தளவுக்கு இந்த பாடல் வளர்ந்து வரும் பாடகர்களுக்கு ஒரு Reference.

இதோ அந்த பாடல்:
 

 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




Wednesday 23 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-132

 'சீப் த்ரில்ஸ்'(2016)

ரு நாள் மோஜ் ஆப் -ஐ துழாவியபோது ஒரு ஆங்கில பாடல் என்னைக் கடந்து போனது. அந்த குரல் என்னை வசீகரித்தது. அந்த பாடலை யுடியூப் தளத்தில் தேடிக் கண்டுபிடித்துக் கேட்டேன், கேட்க, கேட்கக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த ரிதம் பேட்டன் அல்லது ஹார்மோனி தான் திரும்பக் திரும்ப கேட்கத் தூண்டுகிறதோ என்னவோ ? நம்மூரில் தனியிசை பாடல்கள் சமீபகாலமாகப் பிரபலமாகி வருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் தான். ஆனால் இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது, அதாவது, உலகளவில் பெரும் சாதனையை நிகழ்த்த.

சரி விஷயத்துக்கு வருவோம் ......

நான் கேட்ட அந்த பாடல் : "சீப் த்ரில்ஸ்" - This Is Acting (2016)  ஆல்பத்தில் இடம்பெற்ற "Come on, come on, turn the radio on" என்ற பாடல் ஆறு வருடங்கள் கழித்தும் இன்னும் உலக இசை அட்டவணை வரிசையில் இடம்பெறும் பாடல்.


"சீப் த்ரில்ஸ்" - ஆஸ்திரேலிய பாடகி மற்றும் பாடலாசிரியர் சியாவின் ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான 'திஸ் இஸ் ஆக்டிங் (2016) ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு பாடலாகும்.

இது சியா ஃபர்லர் மற்றும் கிரெக் குர்ஸ்டின் ஆகியோரால் எழுதப்பட்டு, குர்ஸ்டினால் தயாரிக்கப்பட்டு முதலில் 17 டிசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது, மேலும் ஜமைக்கா பாடகர் சீன் பால் சொந்த வரிகள் இடம்பெறும் "சீப் த்ரில்ஸ்" இன் அதிகாரப்பூர்வ ரீமிக்ஸ் பதிப்பு 11 பிப்ரவரி 2016 அன்று ஆல்பத்தின் இரண்டாவது தனிப்பாடலாக டிஜிட்டல் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு சிறந்த பாப் இரட்டையர்/குழு நிகழ்ச்சிக்கான கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பாடல் ஒரு "பவுன்சி", "ரெக்கே-டிங்" சின்த்பாப் மற்றும் டான்ஸ்ஹால் எலக்ட்ரோபாப்-பாணி சின்த் லேயர்களை உள்ளடக்கிய பாடலாகும்.

ஐக்கிய அமெரிக்காவில், சியாவின் "சீப் த்ரில்ஸ்" பாடல் US பில்போர்டு ஹாட் 100 இல் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் 2016 இல் தேசிய மெயின்ஸ்ட்ரீம் டாப் 40 இல் முதலிடத்தைப் பிடித்தது.  ஆஸ்திரியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, போர்ச்சுகல், ஸ்பெயின் உட்படப் பல நாடுகளில் முதலிடத்தை எட்டியது; அத்துடன் ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து, சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்தது.

UK -வில் ஒற்றையர் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2018 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளில், "சீப் த்ரில்ஸ்" பாடலாசிரியர்களான சியா மற்றும் குர்ஸ்டின் ஆகியோருக்காக வெளிநாடுகளில் அதிகம் விரும்பி கேட்கப்படும் பாடலுக்கான ஆஸ்திரேலிய படைப்பு விருதை வென்றது. இது 2019 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளிலும் மீண்டும் 2020 ஆம் ஆண்டின் APRA இசை விருதுகளிலும் விருதை வென்றது.

"சீப் த்ரில்ஸ்" மூலம், மடோனா "மியூசிக்" மூலம் ஹாட் 100 இல் முதலிடம் பிடித்த 40 வயதுக்கு மேற்பட்ட முதல் பெண்மணி ஆனார் சியா. இப்பாடல் தொகுப்பு 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1.7 மில்லியன் பிரதிகள் விற்ற சாதனை படைத்தது மற்றும் அந்த ஆண்டு அதிகம் விற்பனையான பத்தாவது பாடலாக மாறியது.

ஜனவரி 2016 இல் ஜிம்மி ஃபாலன் நடித்த 'தி டுநைட் ஷோ' உட்பட, இசை வீடியோவில் உள்ள நடனத்திற்கு மேடி ஜீக்லர் அல்லது ஸ்டெபானி மின்கோன் தலைமையிலான நடனக் கலைஞர்களின் குழுவுடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் "சீப் த்ரில்ஸ்" நிகழ்ச்சியை சியா நிகழ்த்தியுள்ளார். மார்ச்சில் அமெரிக்கன் ஐடல், ஏப்ரலில் கோச்செல்லா, மற்றும் நியூயார்க் நகரில் யூடியூபின் பிரமாண்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்வு மற்றும் மே மாதத்தில் 'தி வாய்ஸின்' சீசன் இறுதிப் போட்டி எனப் பல நிகழ்ச்சிகளில் பாடப்பட்டது/இசைக்கப்பட்டது /இசைத்து-ஆடப்பட்டது இந்த பாடல்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலை, கீழே உள்ள காணொளியை அழுத்தி கேட்கலாம் ........



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday 22 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-131

'ஷோலே'(1975)

மேற்கத்திய கௌபாய் படத்தின் சாயலில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, சஞ்சீவ் குமார் மற்றும் அம்ஜத் கான் ஆகியோர் நடித்து, இயக்குநர் ரமேஷ் சிப்பி இயக்கத்தில்  1975-ஆண்டு வெளியான  'ஷோலே' இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான படம், இதற்கு முன்னும் பின்னும் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்ல மாட்டேன், ஆனால் கமர்சியல் படங்களில் ஒரு மைல்கல் 'ஷோலே'.

என் மாமாவுக்குப் பிடித்த படம். திரையரங்கில் இந்த படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கதை கதையாகச் சொல்வார். அன்றைய காலகட்டத்தில் அவர் வயதுடையவர்களுக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்திய படம்.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவ்வப்போது Performance அலவன்ஸ் கொடுப்பார்கள், அப்படிக் கிடைத்த சொற்ப பணத்தில் நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் இந்த படத்தின் ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பார்த்தேன்.

தொடக்கத்தில் வரும் அந்த ரயில் சண்டைக் காட்சி, அதுவரை இந்திய சினிமா பார்க்காதது, முதல் முறையாகப் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டு தான் போனார்கள். சரியாக ஐந்து வருடம் கழித்து 'முரட்டுக்காளை' படத்தில் கிளைமாக்ஸ் ரயில் சண்டைக் காட்சியை வைத்து இயக்குநர் எஸ் பி முத்துராமன் தமிழ் ரசிகர்களின் ஆசையைத் தீர்த்துவைத்தார்.

'ஷோலே' வெளியாகி 45 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை உங்களுக்காகத் தருகிறோம்...

'ஷோலே' படத்தில் கதாநாயகனாக 'ஜெய்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சத்ருகன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், வளர்ந்துவரும் நடிகரான அமிதாப்பச்சன் தான் அந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று யூகித்து அப்படத்தின் தயாரிப்பாளரான ஜி பி சிப்பி தேர்வு அவரை செய்தார்.

கதைப்படி 'வீரு' கதாபாத்திரத்தில் சஞ்சீவ் குமார் மற்றும்  தாக்கூர் பல்தேவ் சிங் வேடத்தில் தர்மேந்திரா நடிப்பதாக இருந்தது. இரண்டு பேரும் ஹேமாவுடன் காதல் வயப்பட்டதால். காதலை இழக்க விரும்பாத தர்மேந்திரா, ஹேமாவுடன் ஜோடியாக நடிக்கும் 'வீரு' கதாபாத்திரத்தை கேட்டுப்பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 இல், தர்மேந்திரா ஹேமா மாலினியை மணந்தார்.

'எந்திரன்' படத்தில் வில்லனாக நடித்த டேனி தான் 'ஷோலே' படத்தின் வில்லனாக நடிக்கவிருந்தார், ஆனால் ஆப்கானிஸ்தானில் ஃபெரோஸ் கானின் 'தர்மாத்மா' படப்பிடிப்பிலிருந்ததால் டேனியால் நடிக்க முடியாமல் போனது.
பிறகு அம்ஜத் கான் உள்ளே வந்தார், அவரது குரல் பலவீனமாக இருப்பதாகக் கதாசிரியர் ஜாவேத் அக்தர் உணர்ந்தார். பின்பு அதுவே வில்லன் கதாபாத்திரத்துக்கு பிளஸ்-ஆக அமைந்தது வேறு கதை.

'ஷோலே' படத்தின் அசல் க்ளைமாக்ஸில் வில்லன் கப்பர் சிங், தாக்கூரால் கொல்லப்பட வேண்டும். காட்சியும் இப்படித்தான் படமாக்கப்பட்டது, ஆனால் படத்தின் கிளைமாக்ஸை தணிக்கைக் குழு ஏற்கவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும்,தாக்கூரால் கொல்லப்படக்கூடாது என்றும் வாரியம் பரிந்துரைத்தது. அதனால் படத்தின் கிளைமாக்ஸ் பின்னர் மாற்றப்பட்டது.

கதாசிரியர்களில் ஒருவரான சலீம்கானுக்கும்  ஹனி இரானியின் தாயாருக்கும் இடையே நிஜ வாழ்வில் நடந்த உரையாடல்தான் 'ஷோலே' படத்தில் அமிதாப்பச்சன் தனது நண்பரான வீருவின் திருமணத்தைப் பற்றிப் பேச, பசந்தியின் தாயைச் சந்திக்கும் நகைச்சுவை காட்சியாக இடம்பெற்றது

எல்லா வெற்றிப் படங்களுக்கும் நடப்பது தான் 'ஷோலே' படத்திற்கும் நடந்தது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் அவ்வளவாகக் கூட்டம் வரவில்லை, திரையரங்குகளிலிருந்து தூக்கப்படவிருந்தது, ஆனால் ரசிகர்களின் வாய்மொழி விமர்சனம் கூட்டத்தை வரவழைத்தது. பிறகு படம் வெற்றிபெற்று, இந்தியா முழுவதும் சுமார் 100 திரையரங்குகளில் வெள்ளி விழாவைக் கொண்டாடிய முதல் திரைப்படமாகும்.
 
இந்த படம் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com and Times Of India

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Wednesday 16 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-130

'நெஞ்சம் மறப்பதில்லை' (1963)

மீபத்தில் நாணி நடித்த 'ஷியாம் சிங்க ராய்' படம் பார்த்தேன். நாயகனின் நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தை இணைத்துப் படத்தை ரசிக்கும்படி இயக்கியிருந்தார் இயக்குநர் ராகுல் சன்க்ரிட்யன். வங்காளத்தில் கதை நடைபெறும் கடந்த கால பிளஷ்பேக் பகுதியில் கலை இயக்குநரின் பங்களிப்பு படத்துக்குப் பெருந்துணை.

மறுபிறவி / மறுஜென்ம கதைகள் தமிழுக்குப் புதிதில்லை, இந்த ஜானரில் மெனக்கெடல் அவசியம் மற்றும் சுவாரசியமான திரைக்கதை தான் பலம். இந்த ஜானர் பக்கம் யாரும் போவது கிடையாது, கொஞ்சம் ரிஸ்க்கானது. வெகு சில இயக்குநர்களே வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள். (உதாரணம் : 'மகதீரா' இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி). சும்மா ஹிப்னோடிசம், மனோதத்துவம் என ஜால்ல்லியடிக்க முடியாது.  அசல் உலகத்தை ரசிகன் கண் முன்னே நிறுத்த வேண்டும். ரசிகனை சீட்-நுனிக்கு கொண்டுவரவேண்டும்.

உலகநாயகன் கூட இந்த ஜானரில் ஒரு படம் செய்திருக்கிறார். இயக்குநர்      எஸ் பி முத்துராமன் இயக்கி, கமல், ஷோபனா (அறிமுகம்), ஸ்ரீப்ரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்குள் ஒருவன்'. இது ஹிந்தியில் வெளியான 'கர்ஸ்' படத்தின் ரீமேக்.  இசைஞானியின் இனிய பாடல்கள், கமலின் டிஸ்கோ நடனம் எனப் படம் engaging-ஆக இருக்கும்.

நடிகர் நாசர் இயக்கி 1997-ஆம ஆண்டு 'தேவதை' படம் கூட ஒரு மறுபிறவி / மறுஜென்ம கதை தான். படம் வரவேற்பைப் பெறவில்லை.

மறுபிறவி / மறுஜென்ம கதைகள் கொண்ட படங்களுக்கெல்லாம் முன்னோடி அல்லது முதல் படம் இது என்று கூடச் சொல்லலாம். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை'  என்றதும் இனிய பாடல்களும், தேவிகாவின் நடிப்பும் மற்றும் நம்பியாரின் வில்லத்தனமும் தான் ஞாபகம்  வருகிறது.

1935-1939  காலகட்டங்களில் கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருப்பதாக்க கூறும் நபர்களைப் பற்றிய செய்திகளால் கவரப்பட்ட இயக்குநர் ஸ்ரீதர். மறுஜென்மம்/மறுபிறவியை மையமாக வைத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கான திரைக்கதையை உருவாக்கினார்.

1963-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை' கல்யாண் குமார் மற்றும் தேவிகா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், பத்மினி பிரியதர்ஷினி மற்றும் மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்து, ஸ்ரீதர் இயக்கினார். வணிக ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் ஃபார்முலா திரைக்கதையிலிருந்து மாறுபட்ட 'நெஞ்சம் மறப்பதில்லை' தமிழ் சினிமாவில் கல்ட் படங்களில் ஒன்று மற்றும் இயக்குநர் ஸ்ரீதரின் Masterpiece என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீதர் தனது பழைய பாணிக்குத் திரும்பினார்.

வில்லனான நம்பியாரின் ஜமீன்தார் கதாபாத்திரத்திற்கான ஒப்பனை செய்ய மூன்று மணிநேரம் பிடித்தது.

ஜமீன்தார் நாயகனையும், நாயகியையும் குதிரை வண்டியில் துரத்தும் காட்சியினை விறுவிறுப்பு குறையாமல் அற்புதமாகப் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவு மேதை ஏ. வின்சென்ட்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த அனத்த பாடல்களும் வரவேற்பைப் பெற்றன மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலத்தைக் கூட்டின.

இந்த படம் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 
 
 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.