50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'தி காட் ஃபாதர்' (1972)
விகடன் இதழில் வேல்ஸ் எழுதிய 'வாவ் 2000' தொடரில் தான் எனக்கு இயக்குநர் பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய 'தி காட் ஃபாதர்' ஹாலிவுட் திரைப்படம் அறிமுகமானது. இப்படத்தைப் பார்க்கவேண்டி பர்மா பஜாரில் நகல் டிவிடி-யை வாங்கினேன். ஆனால் படம் ரியாக பதிவு செய்யப்படாததால் பார்க்க முடியாமல் போனது. அதோடு 'தி காட் ஃபாதர்' படத்தை நானும் மறந்து போனேன்.
நான் முன்பே சில பதிவுகளில், பழைய கிளாசிக் வகை படங்களைத் திரையரங்கில் காண வேண்டி என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருப்பேன். சமீபத்தில் பிரபல நடிகர் நடித்த புதிய படத்தைத் திரையரங்கில் பார்க்கப் போகலாம் என்றிருந்தபோது, மார்லன் பிராண்டோ, அல் பசினோ, ஜேம்ஸ் கான், ரிச்சர்ட் காஸ்டெல்லானோ, ராபர்ட் டுவால், ஸ்டெர்லிங் ஹேடன், ஜான் மார்லி,
ரிச்சர்ட் காண்டே மற்றும் டயான் கீட்டன் ஆகியோர் நடித்து, பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா இயக்கிய ஹாலிவுட் கிளாசிக் திரைப்படம் 'தி காட்ஃபாதர்' முதல் பாகம், அதன் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில் குறிப்பாகச் சென்னையில் மீண்டும் வெளியான செய்தியைப் படித்தேன், அதனால் என்னுடைய முதல் தேர்வு 'தி காட் ஃபாதர்' படம் பார்க்க முடிவானது. அண்ணா நகர் வீஆர் மாலில் உள்ள பிவீஆர் திரையரங்கிற்கு அலுவலகம் முடிந்ததும் கிளம்பினேன்.
இப்போது படத்தைப் பற்றி ......
1972 இல் வெளியிடப்பட்ட, 'தி காட்பாதர்' - முதல் பாகம் அமெரிக்காவில் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் மற்றும் நீண்ட காலமாக அதன் வசூலை நெருங்க முடியாத அமெரிக்கத் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது. இயக்குநர் கொப்போலா மற்றும் நடிகர் பசினோ ஆகியோருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும், அடுத்தடுத்து தொழில் வீழ்ச்சியைக் கண்ட பிராண்டோ மீண்டு வர இப்படம் உதவியது. அந்த ஆண்டு சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான அகாடமி விருதை வென்றது, மேலும் ஏழு பரிந்துரைகளைப் பெற்றது. அதோடு எல்லா காலத்திலும் மிகவும் புகழ்பெற்ற கேங்க்ஸ்டர் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் இப்படத்தை உலகின் சிறந்த இரண்டாவது (அமெரிக்க) திரைப்படமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
1972- பிறகு வந்த அனைத்து இந்திய கேங்ஸ்டர் படங்களும் இப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். கேங்ஸ்டர் படங்களுக்கு இந்த படம் ஒரு ரெபெரென்ஸ்.
படத்தின் கதை......வெண்திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து படம் தொடங்குகிறது, அதனூடே 'காட் ஃபாதர்' கதாபாத்திரத்துக்கான அறிமுகப்படலமும் நடக்கிறது. பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு படம் வேகமெடுக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பது போலவே தெரியவில்லை, அவ்வளவு இயல்பாக தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கதாநாயகன் மார்லன் பிராண்டோ கதாபாத்திரத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த இன்னொரு கதாபாத்திரம் பட ஆரம்பத்தில் "அப்பாவின் தொழிலில் எனக்கு விருப்ப இல்லை, எனக்குப் பெரிய ஆர்வமும் இல்லை" என தன் காதலியிடம் அப்பாவியாக வினவும் காட் ஃபாதரின் இளைய மகனாக வரும் 'மைக்கேல்' - ஆக பசினோ ஏற்றிருந்த வேடம். மெல்ல மெல்ல அப்பாவின் தொழிலுக்குள் தள்ளப்பட்டு அவர் காட்டும் சாகசம், மாஸ் அனாயாசம்.
துப்பாக்கி சத்தம், பழைய காலத்து கார் சத்தம், நடை சத்தம், சிறப்பு ஒளி-ஒலி சேர்ப்பு இப்போது சேர்க்கப்பட்டதா தெரியவில்லை, அத்தனையும் 'ரா'-வாக பதிவு செய்திருக்கிறார்கள், உலகத்தரம்.
இந்தியாவில் 'தி காட்ஃபாதர்' போன்ற கேங்ஸ்டர், சூப்பர் ஹீரோ கதைக்களம் சார்ந்த அமெரிக்க கிளாசிக் திரைப்படங்களுக்குத் திரையரங்குகளில் பார்ப்பதற்காகத் திரளும் இளைய தலைமுறை பார்வையாளர்களிடையே மிகப் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற ஆரம்பித்திருக்கிறது.
நன்றி: https://www.youtube.com and 'The Mint'
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
No comments:
Post a Comment