Wonderful Shopping@Amazon

Thursday 30 September 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-107

"ஸ்ரீ ராகவேந்திரர் (1985)"

பொதுவாக நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. வெகு சிலருக்கே அந்த அதிர்ஷ்டம் வாய்த்தது.  (விஜயகாந்த்: கேப்டன் பிரபாகரன்). Angry Young Man கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினி, தனது நூறாவது படத்தை மாறுபட்ட கோணத்தில் கொடுக்க நினைத்தார். அதுவே தனது குருநாதர் தயாரிப்பில், தனது ஆதர்ச இயக்குநர் திரு எஸ் பி முத்தாரம்மன் இயக்கத்தில் "ஸ்ரீ ராகவேந்திரர்" வாழ்க்கை சரிதையில் நடித்துக் கொடுத்தார். படத்தில் குறையொன்றும் இல்லை. இப்போதும் பார்க்கலாம். அந்த நேரத்தில் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.

இயக்குநர் இமயம் தயாரிப்பில் ராஜா அவர்கள் கர்நாடக இசையில் இசையமைத்த நான்காவது படம். கர்நாடக இசையில் அமைந்த பாடல்கள் பற்றிச் சொல்லவா வேண்டும். தேனினும் இனியப்பாடல்கள் இப்படத்திற்கு அமைந்தது.

மாயாமாளவகௌளை ராகத்தின்மேல் ராஜாவுக்கு அப்படி என்ன தீரா காதலோ தெரியவில்லை, "காதல் கவிதைகள்" (கோபுர வாசலிலே), "குயில புடுச்சி" (சின்ன தம்பி) "மதுர மரிக்கொழுந்து" (எங்க ஊரு பாட்டுக்காரன்) இன்னும் இன்னும் ஏராளமான பாடங்களை இந்த ராகத்தில் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார். இந்த படத்திலும் கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய தாசேட்டன் பாடிய "ராம நாமம் ஒரு வேதமே" என்ற பாடல் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த பாடல். நான் தினமும் காலை வேளையில் பக்தி பாடல்களுடன் சேர்ந்து கேட்கும் பாடல் இது. இராமாயண காவியத்தை ஒரு பத்தியில் இந்த பாடலில் சொல்லியிருப்பார். கவிஞர் வாலி அவர்கள் விகடன் வார இதழில் இராமகாதையைப் புதுக்கவிதையாக "அவதார புருஷன்" என்ற பெயரில் எழுதுவதற்கு இந்த பாடல் தூண்டுதலாக அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறன.

இந்த அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்:



 

நன்றி: Google


 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 



Wednesday 29 September 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-106

 "ஹம்(1991)"

"ஹம்" - இயக்குநர் முகுல் ஆனந்த் இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கோவிந்தா நடித்து 1991-ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற படம்.

"ஹம்" திரைப்படத்தை என் பள்ளி இறுதியாண்டு நண்பர்களோடு பார்த்தது நினைவிருக்கிறது. நம்மூரிலும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. நடிகர் கோவிந்தா மற்றும் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்குத் தம்பிகளாக நடித்திருப்பார்கள். கொஞ்ச நாள் கழித்து இதே மூலக்கதையை தழுவி ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் "பாட்சா"

கவிஞர் ஆனந்த் பாக்க்ஷி எழுத்தில், இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையில், இந்த படத்தில் இடம் பெற்ற தொடக்கப் பாடலான "சும்மா சும்மா தே தே", இந்தியாவையே அதிரவைத்தது. அமிதாப்-ஜி கண்களை உருட்டி உருட்டி ஆடும் நடனம் தான் என்ன. அடடா....வேற லெவல் எனர்ஜி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

இத்தனை எனர்ஜிக்கு முன் ஒரு துயர சம்பவம் நடந்தது, சரியாக 39 வருடங்களுக்கு முன், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் ................

1982-ஆம் ஆண்டு....!

"கூலி" படத்தின் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்படுகிறது. நடிகர் புனீத் இஸ்ஸர்-உடன் சண்டையிடுகையில் கால் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் சுயநினைவிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செயின்ட் பிலோமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்குப் பின் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தியாவே அவருக்காகப் பிராத்தித்தது என்று தான் சொல்லவேண்டும். ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தீவிர அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பல மாதங்களாக மருத்துவமனையில் இருந்தபின் வீடு திரும்பினார்

பச்சனின் அசல் பிறந்தநாள் அக்டோபர் 11, ஆனால் அவரது ரசிகர்கள் ஆகஸ்ட் 2- இரண்டாவது பிறந்த நாளாக வாழ்த்துக்களுடன் சமூக வலைத்தளங்களை நிரப்புகிறார்கள்.

அவரது ரசிகர்களின் அன்பு, பிரார்த்தனை மற்றும் அக்கறையை நினைவுகூர்ந்து, பிக்பி  தனது வலைப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்பு மற்றும் வாழ்த்துக்களை வெளிப்படுத்தும் அனைவருக்கும், என் நன்றியும், அன்பும் .. கேட்கவும் பார்க்கவும் ஒரு அற்புதமான அனுபவம் மற்றும் என் நல்வாழ்வுக்கான அக்கறையையும் பிரார்த்தனையையும் ....... நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நன்றி."

இங்கே ஒரு ட்விஸ்ட்.

சில வருடங்களுக்கு முன்பு பச்சன் அவர்கள் முழு உடல் பரிசோதனையின்போது, விபத்து-அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம்  பரவிய ஆஸ்திரேலியன் ஆன்டிஜென் ஹெப்படைடீஸ் பி வைரசால் அவருடைய கல்லீரல் 75 சதவீதம் பாதிப்படைந்துள்ளதை மருத்துவர்கள்  கண்டறிந்தார்கள். சிகிச்சைக்குப் பின் இப்போது அவர் 25 சதவீத கல்லீரலுடன் தான் வாழ்ந்து வருகிறார்.

இப்போதும், அமிதாப்பச்சன் "கவுன் பனேகா கோரோபதி"-இன் புதிய சீசனை நடத்துகிறார். ராஷ்மிகா மந்தனாவுடன் இயக்குநர் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில்  "குட்பை" படத்தில் நடிக்கிறார் மற்றும் தீபிகா படுகோனே-பிரபாஸுடன் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.

இது அந்த பாடல்.. கேட்டு மகிழுங்கள்.........


 

 
நன்றி: Google, "Indian Express"

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி