Wonderful Shopping@Amazon

Wednesday 29 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-123

கலையரசி (1963)

தமிழில் அறிவியல் புனைவு கதையம்சம் உள்ள திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏன் அறிவியல் புனைவு கதைகள் கொண்ட திரைப்படங்கள் அதிகமாகத் தமிழில் வருவதில்லை என்று தெரியவில்லை. சமூக/ புராண /குடும்ப திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இத்தகைய படங்களுக்கு கிடைக்காததே காரணமாக இருக்கலாம்.

சமீபகாலமாக அறிவியல் புனைவு கதையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்துள்ளது. மிக சமீபத்திய உதாரணம்: 'டிக் டிக் டிக்', 'நேற்று-இன்று-நாளை', 'டிக்கிலோனா', 'மாநாடு', 'ஜாங்கோ' இன்னும் சில. எண்ணிக்கை அதிகமாகும் வரை ஆங்கில படங்களைப் பார்த்து நம்மூர் ரசிகர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை பற்றிய 'ஸ்டார் ட்ரெக்' நிகழ்ச்சி பெரிய சென்சேஷன்.  பள்ளியில் எனது நண்பர்கள் முந்தைய நாள் தொடரைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் எனக்கு அதன் கதையும் சரி, காட்சிகளும் சரி,  ஒரு மண்ணும் புரியவில்லை.  அதனால் 'ஸ்டார் ட்ரெக்' தொடர் என்னை கவரவில்லை என்றே சொல்வேன். பிறகு 'ஸ்பேஸ் சிட்டி சிக்மா' என்ற தொடர் வந்தது. இவ்வளவு தான் அறிவியல் புனைவு திரைப்படங்களை எனது புரிதல்.

தமிழில் வந்த முதல் அறிவியல் புனைவு அல்லது வேற்று கிரகவாசிகள்/ பறக்கும் தட்டு கதையம்சம் கொண்ட படத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

நல்ல / வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெளிநாட்டுப் படங்கள் மேல் எம்ஜிஆர் அவர்களுக்கு நாட்டம் உண்டு. 'It Happened One Night' மற்றும் 'Roman Holiday' படத்தின் பாதிப்பில் அவர் நடித்து வெளிவந்த படம் 'சந்திரோதயம்'. வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில படங்கள் நிறைய 60களில் வர, அதில் கவரப்பட்டு அவர் நடித்த படம் 'கலையரசி'.

சரி, வாங்க 'கலையரசி' கதை என்னவென்று பார்ப்போம்: 
 
கிராமத்தில் தனது தாயார் மற்றும் தங்கையுடன் விவசாயம் செய்து பிழைக்கும் எம்ஜிஆர் ஊர் பெரிய மனிதரின் மகள் பானுமதியை நேசிக்கிறார். பானுமதியை மணந்து கொண்டு சொத்துக்களுக்கு வாரிசாக பி எஸ் வீரப்பா ஆசைப்படுகிறார். வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகை தரும் நம்பியார் தன்னுடன் வந்த நபரை பூமியில் இருக்கும் படி செய்துவிட்டு பானுமதியை கடத்தி செல்கிறார். பானுமதி காணாததால் எம்ஜிஆர் மீது சந்தேகப்படும் போலீஸார் அவரை சிறையில் அடைக்கின்றனர். பானுமதியை தேடி அலையும் பி எஸ் வீரப்பா அவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணை பிடித்து வருகிறார். இதனால் சிறையிலிருந்து எம்ஜிஆர் விடுவிக்கப்படுகிறார். பூமியில் விட்டுச் சென்ற ஆளை அழைத்து செல்ல பறக்கும் தட்டில் வரும் நம்பியாரை ஏமாற்றி எம்ஜிஆர் அவருடன் வேற்று கிரகத்திற்குப் பறக்கிறார். அங்குத் தன்னை போலவே தோற்றம் கொண்ட "கோமாளி" எம்ஜிஆர்-ஐ பார்க்கிறார். எரி நட்சத்திரம் தாக்கி கோமாளி மாண்டுவிடவே அவரை போல வேடமிட்டு பானுமதியை சந்திக்கிறார். வேற்று கிரக இளவரசியான ராஜஸ்ரீயும் எம்ஜிஆர்-ஐ நேசிக்கிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி பானுமதியுடன் எம்ஜிஆர் எப்படி பூலோகம் திரும்புகிறார் என்பதே மீதிக்கதை.

திரு டி ஈ. ஞானமூர்த்தி எழுதிய கதையில் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் பானுமதி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ராஜஸ்ரீ மற்றும் குமாரி சரஸ்வதி ஆகியோர் நடித்து, இயக்குநர் ஏ. காசிலிங்கம் இயக்கி, இசை மேதை கே. வி. மகாதேவன் இசையில்19 ஏப்ரல் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த 'கலையரசி' - இந்தியாவில் (தமிழில்) வந்த முதல் அறிவியல் புனைவுகதைத் திரைப்படமாகும்.  

அப்போது இருந்த தொழினுட்பத்தை வைத்துப் படத்தை எடுத்திருப்பார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் புதிது. ஏனோ எம்ஜிஆர் ராசிகளுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. படமும் வெற்றி பெறவில்லை.  'கலையரசி' படத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை எனலாம். நடிகர் திலகம் "நமக்குச் சரிப்பட்டு வராது" என்று சற்று தள்ளியே இருந்தார்.

கமல் நடித்து  ராக்கெட் தொழினுட்ப திருட்டைப் பற்றிய கதையம்சம் கொண்ட 'விக்ரம்' படம் 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. படத்திற்கு கிடைத்த 'வரவேற்பை' கண்ட கமல், அதன் பிறகு அந்த பக்கமே செல்லவில்லை. அதனால் தான் என்னவோ 'எந்திரன்' பட வாய்ப்பை கூட நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.


- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday 28 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-122

 சித்தி (1966)

ஞாயிறு அன்று - தொலைக்காட்சி சேனல்களை துழாவிய போது, ஒரு சேனலில் நிறுத்தினேன். "திரைக்கதை, இயக்கம்: கே எஸ் கோபாலகிருஷ்ணன்" என்றது. அந்த படம் நடிகவேள் எம் ஆர் ராதா கதை நாயகனாக நடித்த "சித்தி" திரைப்படம். படத்தைப் பார்த்து முடித்தேன். ஏற்கனவே பல முறை பார்த்தது தான்.  நடிகவேள் அவர்களுக்காகவே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். தனது அனாயாசமாக நடிப்பால் ராதா அவர்கள் படம் முழுதும் மிரட்டியிருப்பார்.  

இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை மெலோட்ராமா என்பார்கள். புராண / சமூக கதைகளில் ஆரம்பித்த தமிழ் சினிமா மெலோட்ராமாக்களில் தொடர்ந்து இயக்குநர் வீ சேகர் வரை பயணித்து இன்று வேறு திசையில் செல்கிறது. குடும்ப படமென்றாலே தொலைக்காட்சி தொடர் போலிருக்கிறது என்ற இன்றைய ரசிகர்களின் எண்ணம். சமீபத்தில் வந்த 'அண்ணாத்தே' படம் கூட இந்த விமர்சனத்துக்குத் தப்பவில்லை. மெலோட்ராமா இல்லாமல் சினிமா இல்லை என்று இன்றைய ரசிகர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

காலஞ்சென்ற இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய அத்தனை படங்களும் மெலோட்ராமா வகையறா தான். இன்றும் விசு படங்களை சேனல் மாற்றாமல் பார்ப்பதுண்டு.

சரி நாம் விஷயத்துக்கு வருவோம் .....

எழுத்தாளர் வை மு. கோதைநாயகி எழுதிய 'தயாநிதி' நாடகத்தைத் தழுவி, பத்மினி மற்றும் ஜெமினி கணேசன் நடித்து,  இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'சித்தி' திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் மற்றும் உடுமலை நாராயண கவி எழுதியுள்ள பாடல்களை அத்தனையும் இனிமை. "சந்திப்போமா இன்று" எனக்குப் பிடித்த பாடல்.  இப்படம் இந்தியில் 'ஔரத்' (1967),[1] மலையாளத்தில் 'அச்சந்தே பர்யா' என்றும், தெலுங்கில் 'பின்னி' என்றும், கன்னடத்தில் 'சிக்கம்மா' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்கள் எனக்குப் பிடிக்கும். பெரும்பாலும் குடும்ப படங்களாகவே எடுத்துத் தள்ளியவர். இன்றும் இவருடைய படங்களை விரும்பி பார்ப்பேன். என்னுடைய All time Favorite: "குறத்தி மகன்". கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம். சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதை இப்படம் பெற்றது. 

கொசுறு: ஒரு திரைப்படம் சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். "குறத்தி மகன்" படத்தின் விளைவாகத் தமிழகத்தின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைக்காரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காகத் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972ல்) ட்ரஸ்ட் உறைவிட பள்ளி அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை என்ற சிறப்புச் சட்ட உத்தரவைத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறப்பித்தார். கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டிடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே. நரிக்குறவர்,காணிக்காரர்,குறும்பர் ஆகிய இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்கப் பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான். அதை மத்திய அரசும் சமீபத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



Friday 24 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-121

'தி சைனீஸ் வால்' கோஸ்தா பால்

ந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான  கோஸ்தா பாலின் 125வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறோம். 

கோஸ்தா பால், 1962-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் கால்பந்து வீரர் மற்றும் மத்திய அரசு அவர் பெயரில் தபால்தலை வெளியிட்டு கௌரவித்தது. அவரது அற்புதமான கதை இதோ:

ரசிகர்களால் 'தி சைனீஸ் வால்' என்று அழைக்கப்பட்ட கோஸ்தா பால், 1896 இல் பங்களாதேஷில் பிறந்தார். 1907 இல் தனது பதினோராவது வயதில் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார்.

1911-இல், ஒரு மழை நாளில் கல்கத்தாவின் குமார்துலி பூங்காவில் அவர் பங்கேற்ற ஒரு பயிற்சி கால்பந்து விளையாட்டு போட்டி திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்திய கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இருந்த உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்கவரான காளிச்சரன் மித்ரா, பாலின் தனித்துவமான தடுப்பு நுட்பங்களை அந்த போட்டியில் முதல் முதலில் அடையாளம் கண்டார்.

காளிசரண் மித்ரா மற்றும் மேஜர் சைலன் போஸ் - இவர்களின் உதவியுடன், பால் 1913-இல் மோகன் பகான் கிளப்பில் சேர்ந்தார்.

சுவாரஸ்யமாக, 1913 இல் டல்ஹௌசி எஃப்சி வீரர்களுக்கு எதிரான பாலின் முதல் ஆட்டம் பார்வையாளர்களை கவரவில்லை. கிளப்பின் ரசிகர்கள் புதிய வீரரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் பால் 1912 மற்றும் 1913 இல் கல்கத்தா கால்பந்து லீக்கின் அப்போதைய சாம்பியனான டீம் பிளாக் வாட்ச்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் தனது அற்புதமான ஆட்டத்திறமையின் மூலம் பதிலடி தந்தார்.

அந்த ஆண்டு மோகன் பகான் கிளப்பால் பல கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்றாலும், பாலின் ஆட்டத்திறமை மிகவும் பிரபலமடைந்தன. காலில் காலணி இல்லாமல் ஒரு தடுப்பாளராக அவரது திறமைகள், அவரது பரந்த உடல் தோற்றம் மற்றும் துணிச்சலுடன் அணியுடன் ஒருங்கிணைந்து விளையாடினார்.  அந்த நேரத்தில் ரசிகர்களால் 'சீன சுவர்' (அல்லது 'சீனாவின் சுவர்') என செல்லமாக அழைக்கப்பட்டார்.

1915-இல், கல்கத்தா கால்பந்து கிளப்பிற்கு எதிரான கிளப்பின் முதல் பிரிவு போட்டியில் பால் விளையாடினார். அணி இறுதியாக கல்கத்தா கால்பந்து லீக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடமே இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

1921-இல், கோஸ்தா பால் கிளப்பின் கேப்டனாக இருந்தார். இந்திய கால்பந்து சங்க ஷீல்ட் டிராபியின் இறுதிப் போட்டிக்கு அணியை வழிநடத்தி, கல்கத்தா எஃப்சிக்கு எதிராக இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

1923-ஆம் ஆண்டில், மும்பையில் நடைபெற்ற மதிப்புமிக்க ரோவர்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய அணியாக மோகன் பகான் ஆனது - இது அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், மோகன் பகான் முழு வெள்ளை நிற டர்ஹாம் லைட் இன்பேன்ட்ரியால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் 1937 வரை எந்த இந்திய அணியும் கோப்பையை வெல்லாது, அல்லது மோகன் பகான் அணியை நெருங்க முடியாத நிலை இருந்தது என்பது பால் மற்றும் மோகன் பாகனின் வீரர்களின் திறமைக்கு சான்றாகும்.

அவர் 1926 ஆம் ஆண்டு வரை கிளப் அணிக்கான கேப்டனாகத் தொடர்ந்தார் மற்றும் 1935-இல் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் இந்திய கால்பந்து வரலாற்றில் டுராண்ட் கோப்பை போட்டியில் விளையாட அழைக்கப்பட்ட முதல் கிளப் மோகன் பகான் என்ற பெருமையை பெற்றது. அந்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

தற்போது நாக்பூரில் வசிக்கும் கோஸ்தா பாலின் இளைய மகன் சுகுமார் பாலிடம் (75) பேசினோம், அவர் தனது தந்தையைப் பற்றிய சில இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கோஸ்தா பால் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மோகன் பகான் அணி, இங்கிலாந்து அணியான கல்கத்தா எஃப்சிக்கு எதிரான போட்டியில் கலந்துகொண்டது. இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக சாதகமான முடிவுகளை நடுவர் எடுத்திருந்தார். கோஸ்தா பால் தனது முழு அணியையும் மைதானத்தில் படுக்க வைத்து, எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவம் இந்திய கால்பந்தில் ஒரு மறக்க முடியாத தருணம் - என அவரது மகன் சுகுமார் பால் விளக்குகிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் உள்ள கோஸ்தா பால் சிலை.

“எங்கள் வீட்டில் ஏழு பேரில் நான் இளையவன் என்பதால் அவர் விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் என் தந்தையை ஒரு அமைதியான நபராகவே நினைவில் கொள்கிறேன். அவர் எங்களை ஒருபோதும் கண்டித்ததில்லை, ஆனால் நாங்கள் அனைவரும் நன்றாக வளர்க்கப்பட்டோம், எப்போதும் சரியானவற்றுக்காக நிற்கிறோம், ”என்று சுகுமார் பால் மேலும் கூறுகிறார்.

அது 1936 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பால் ஏப்ரல் 9, 1976-இல் மறைந்தார்.

அவரது மறைவுக்கு பின் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் எதிரில் அவரது சிலையை நிறுவி கௌரவித்தது கொல்கத்தா கால்பந்து சங்கம். கொல்கத்தாவில் அவர் பெயரில் ஒரு தெருவும் உள்ளது.1998 இல் இந்திய அரசு இவர் பெயரில் தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. மேலும் 2004 இல் மறைவுக்குப்பின் மோகன் பகான் ரத்னா விருதைப் பெறும் நான்காவது வீரர் கோஸ்தா பால் - இது கிளப்பின் ஜாம்பவான்களுக்கு வழங்கப்படும் விருது.

“இன்றும் கூட, நான் கொல்கத்தாவில் பொது இடங்களில் அல்லது கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதோ, நான் கோஸ்தா பாலின் மகன் என்பதை அறிந்து மக்கள் தரும் மரியாதையும் பாராட்டும் என்னை வியக்கவைக்கிறது. அவரது பெயரில் எந்த போட்டிகளும் இல்லை என்றாலும், அவர் இன்னும் கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவானாக கருதப்படுகிறார்" - என்கிறார் அவரது மகன் சுகுமார் பால்.

நன்றி: https://www.thebetterindia.comand Google

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Thursday 23 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-120

'83' உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ‘முதுகெலும்பு’ பிஆர் மான் சிங் ஒரு அங்கமாக இருந்தார். 

1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் உள்ளே உள்ள  'டெவில்'-ஐ  உத்வேகப்படுத்தி  இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்ற பெருமை அணி மேலாளர் திரு பிஆர் மான் சிங்கை சேரும். இந்திய அணிக்கு இதுவரை கிடைத்த மேலாளர்களில் சிறந்த 'மேலாளர்' என அழைக்கப்பட்டார். அந்த ஹீரோவின் கதை இங்கே:

 Reel                                    Real 

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளரான பிஆர் மான் சிங் உடன் 14 வீரர்கள் கொண்ட அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது. 

'மான் சாப்' மற்றும் 'மிஸ்டர் கிரிக்கெட்' என்று பிரபலமாக அறியப்பட்ட அவர் ஒரு மேலாளர் மட்டுமல்ல, ஒரு வீரராகவும் இருந்தார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் பிரேக் பந்துவீச்சாளர், மான் சிங் 1965 மற்றும் 1969க்கு இடையில் ஐந்து முதல்-தரப் போட்டிகளில் விளையாடினார், ரஞ்சி டிராபியில் ஹைதராபாத் மற்றும் மொயின்-உத்-டவுலா தங்கக் கோப்பை போட்டியில் ஹைதராபாத் ப்ளூஸை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் ஒரு வீரராக இல்லாமல் அணியின் நிர்வாகியாகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

1978 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய அணியின் உதவிக் குழு மேலாளராகத் தனது பணியைத் தொடங்கினார் பிஆர் மான் சிங். 

20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978 ஆம் ஆண்டு இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. கிட்டத்தட்ட  இது ஒரு அரசியல் சுற்றுப்பயணமாக இருந்தது.  அந்த இந்திய அணியின் மேலாளர் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, பரோடா மகாராஜாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  அதை ஏற்றுக்கொண்ட அவர், "நான் இந்த சுற்றுப்பயணத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், மான் சிங் எனது உதவியாளராக இருக்க வேண்டும்" என்றார். 

ஆறு பேர் கொண்ட தேர்வுக் குழுவின் உறுப்பினராக மான் சிங் இருந்தார். கபில்தேவை உலகக் கோப்பை போட்டிக்கு அணித்தலைவராக நியமித்தது, இது பின்னர் கபில்தேவின் அற்புதமான செயல்திறன் சாம்பியன்ஷிப்பிற்கு வழி வகுத்தது.

1983 உலகக் கோப்பை, மான் சிங்கின் பணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை, இருப்பினும் அணியைச் சிறப்பாக நிர்வகித்தார் . வாரிய விதிகளைப் புறந்தள்ளி வீரர்களுக்கு ஆதரவாக இருந்தார். வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் ஹோட்டலில் தங்கவும், லண்டனுக்கு வெளியே உள்ள இடங்களுக்குக் குழுப் பேருந்தில் செல்லவும் அனுமதித்தார்.  அப்போது இது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.  

1987 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி வரை எட்டிய இந்திய அணியின் மேலாளராக மான் சிங் இருந்தார்.  

"உண்மையில், உலக அளவில் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்ட மான் சிங் போன்ற நபரைப் பார்க்க முடியாது. மேலும் அவரது வீட்டில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகம் அவரது  கிரிக்கெட் மீதான காதலுக்கு போதுமான சான்றாகும்.” என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் பிஷன் சிங் பேடி மான் சிங்கின் ‘அகோனி அண்ட் எக்ஸ்டஸி’ புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார்.

அவரது புத்தகம் ஒரு விதிவிலக்கான படைப்பாகும், இதில் விளையாட்டுகளின் போது அற்புதமான காலங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் அதுவரை கேள்விப்படாத மற்றும் அறியப்படாத, அணிக்குள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி  விவரிக்கிறார்.

76 வயதாகும் மான் சிங், விஸ்டன் இந்தியாவிடம் கூறுகையில், "என் தந்தை என்னைச் சிறுவயதில் கிரிக்கெட் பார்க்க அழைத்துச் சென்றார், ஆனால் நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து தீவிரமாக விளையாட ஆரம்பித்தேன்.

முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கான டீம் இந்தியாவின் பயணத்தைக் காண்பிக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ’83’ டிரெய்லரில் நடிகர் பங்கஜ் திரிபாதி பிஆர் மான் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

'83' படத்துக்காக மான் சிங் கதாபாத்திரத்திற்குத் தயாராகும் போது, பங்கஜ் கூறினார், “நான் பந்துவீச்சு, பேட்டிங்  மற்றும் பீல்டிங்கில் நன்றாக என்னை தயார்ப்படுத்திக்கொண்டேன். நான் மான் சிங் ஜியையும் சந்தித்து அவரது அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன், படப்பிடிப்பின்போது எனக்கு அது பேருதவியாக இருந்தது.

 

நன்றி: https://www.thebetterindia.comand Google

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-119

ஆறிலிருந்து அறுபது வரை (1979)

ஜினி தனது ஆரம்பக்காலத்தில் வருகிற வாய்ப்பையெல்லாம் தவற விடாமல், கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் 'அவர்கள்', 'கவிக்குயில்', 'மூன்று  முடிச்சு', 'புவனா ஒரு கேள்விக்குறி','16 வயதினிலே', 'காயத்ரி', 'ஆறிலிருந்து அறுபது வரை' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

இப்போது நாம் 'ஆறிலிருந்து அறுபது வரை'  படம் பற்றிப் பேசுவோம். என் அக்காவுக்கு இந்த படம் மற்றும் படத்தின் வரும் தொடக்கப் பாடல் நிரம்பப் பிடிக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சளைக்காமல் இன்று வரை அந்த படத்தை யுடியூப்-இல் பார்த்துவிடுவார். அதுமட்டுமல்ல அவளுக்குப் பழைய ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும். ஒவ்வொரு படத்தைப்  பற்றியும் என்னிடம் விவரிப்பார். பள்ளி பருவத்தில் "மை நேம் இஸ் பில்லா" என்ற பாடல் தூர்தர்சன் "ஒளியும் ஒளியும்" நிகழ்ச்சியில் கேட்கும்போது செம உற்சாகமாக இருக்கும்.
 
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆறிலிருந்து அறுபது வரை"

ரஜினிகாந்தின் முந்தைய படமான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சு அருணாசலம் எழுதிய கதையில், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,  மென்சோகம், தியாகம் நிறைந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை வைத்து "ஆறிலிருந்து அறுவது வரை" படத்தை இயக்க தொடங்கினார். ஆனால் ரஜினிக்குச் சிறிது தயக்கம், இப்படிப்பட்ட மெலோடிராமாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ?அவரை சமாதானப்படுத்திய இயக்குநர் அதுவரை எடுத்த 5000 அடி திருத்தப்பட்ட பதிப்பைக் காட்டினார், அதைப் பார்த்து உற்சாகமடைந்த ரஜினி முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். படமும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றியை அடைந்தது.
 
சென்னை மிட்லாண்ட் திரையரங்கில் இப்படம் 25 வாரங்கள் ஓடியது. தெலுங்கில் சோபன் பாபு நடிப்பில் "மகாராஜு (1985)" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் அம்பரீஷ் நடித்து  "பூர்ண சந்திரா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


Wednesday 22 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-118

சூர்யகாந்தி (1973)
 
ஜெயலலிதா அவர்கள் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அரசியல் பிரவேத்துக்கு முன் அவர் நடித்த படங்களில் என் அம்மாவுக்கு பிடித்த படம் முக்தா சீனிவாசன் இயக்கி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த "சூர்யகாந்தி". கணவன்-மனைவி அவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் தான் கதை. படம் முழுக்க அமைதியாக தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜெ.அவர்கள். மேலும் முத்துராமன், சாவித்திரி, மேஜர் சுந்தர்ராஜன். சோ. ராமசாமி, மௌலி, சிஐடி சகுந்தலா மற்றும் மனோரமா ஆகியோர் படத்தின் கதையோட்டத்துக்கு வலுசேர்த்திருப்பார்கள்.

மனோரமா அவர்கள் பாடிய "தெரியாதோ நோக்கு" பாடல் எனக்கு பிடிக்கும். மேலும் "ஓ மேரி தில்ரூபா" கண்ணதாசன் திரையில் தோன்றி பாடிய "பரமசிவன் கழுத்தில்" பாடல் யாருக்கு தான் பிடிக்காது. பாடும் நிலா பாலு தனது இளங்குரலில் ஜெ.-உடன் பாடிய "நான் என்றல் அது அவளும்" என மெல்லிசை மன்னர் இசையமைத்த அத்தனை பாடல்களும் இனிமையோ, இனிமை. இந்தப் படத்தில் கமல்ஹாசன் தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளராகப் பணிபுரிந்தார். சரியாக 14 வருடங்கள் கழித்து முக்தா சீனிவாசன் தயாரிப்பில் கதாநாயகனாக நடித்த "நாயகன்" படம் வெளிவந்து பெரும் வெற்றிபெற்று கல்ட் கிளாசிக் அந்தஸ்தை அடைந்தது.

"சூர்யகாந்தி" படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 16 செப்டம்பர் 2016 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் மலையாளத்தில் "ப்ரியம்வதா" என்றும், தெலுங்கில் "மொகுடா பெல்லமா" என்றும், கன்னடத்தில் "ஹென்னு சம்சாரதா கண்ணு" என்றும் ரீமேக் செய்யப்பட்டது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday 21 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-117

அந்த ஒரு நிமிடம் (1985)

தீவிர ராஜா ரசிகரான நண்பர் அலைபேசினார். விஷயம் இது தான் : இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம், கடந்து வந்திருக்கிறோம். ஆனால் இப்போது தரமான தலையணியில் கேட்கும்போது வியப்பாக இருக்கிறது. இனி எதிர்காலத்தில் வரப்போகின்ற தொழிற்நுப்பத்திற்கேட்ப பாடல்(கள்) இருக்கவேண்டும் என  ராஜா நினைத்தாரோ என்னவோ! எந்த சாதனத்தில் பாடல்களை கேட்டாலும் இப்பொது தான் இசையமைத்தது போன்றுள்ளது.

ஏராளமான படங்கள் இசையமைத்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் ராஜா எப்படி  இந்த பாடல், இப்படி இருக்கவேண்டும் என யோசித்தார்? முதல் சரணம்: சுஃபி இசை (லைலா-மஜ்னு தீம்), இரண்டாவது சரணம்: கர்நாடக இசை (அம்பிகாபதி-அமராவதி தீம்) மற்றும் மூன்றாவது சரணம்: மேற்கத்திய இசை (ரோமியோ-ஜூலியட் தீம்) என விருந்து படைத்திருப்பார்.

1985-ஆம் ஆண்டு கமல் நடித்து இந்தி, தமிழ் என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்ற ஆண்டாக அமைந்தது. பொங்கலன்று வெளியான "ஒரு கைதியின் டைரி" வெற்றிக்கணக்கை தொடங்கி வைத்தது. அதே ஆண்டு கோடை விடுமுறைக்கு நடிகர் மேஜர் சுந்தரராஜன் இயக்கி, கமல்-ஊர்வசி நடித்த "அந்த ஒரு நிமிடம்" படத்தில் இடம்பெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய
"சிறிய பறவை" பாடலில் தான் மேற்சொன்ன இசை ஜாலம் நிகழ்த்தியிருப்பார் ராஜா.

இயக்குனர் மேஜர் சுந்தராஜன் இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருப்பார். தனது மோதிரத்தில் உள்ள விஷ ஊசியால் தனது எதிரிகளை கொள்வார். மற்றபடி படம் சுமார் தான்.

நாங்கள் மைசூரார் காம்பௌண்டில் குடியிருந்தபோது ஒரு மாலை வேளையில் விசிஆர்-இல் பார்த்த படம். படம் சுமார் தான். கிளைமாக்ஸில் வரும் பாடலை தான் நான் சிறுவயதில் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்.  "சிறிய பறவை" பாடலை கேட்டு மகிழுங்கள்:



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-116

பொற்காலம் (1997)

1997-ஆண்டு நவம்பர் மாதம் மழை மிகுந்த முதல் வாரம். திருவெற்றியூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு கடைசி தாள் தேர்வை எழுதி விட்டு எம்எஸ்எம் திரையரங்கை நோக்கி கால்கள் விரைந்தன. "பாரதி கண்ணம்மா" படத்தின் மிகப்பெரிய வெற்றியால் "பொற்காலம்" படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. நானும் படத்தைப் பார்க்க ஆவல் கொண்டேன்.
 
பகல் காட்சி பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், படம் எனக்குப் பிடித்திருந்தது. அண்ணன்-தங்கை பாசத்தை வேறொரு கோணத்தில் காட்டியது படம். குறைவான கதாபாத்திரங்கள். தேனிசை தென்றல் தேவாவின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்து.  அதிலும் இறுதிக்காட்சி சோகமாக வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.

இயக்குநர் சேரன் நடிக்காமலிருந்து இன்னும் சிறந்த படைப்புக்களை /படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்வித்திருக்கலாம். ஹூம் ...ஆசை யாரை விட்டது. சரி....நடிக்கத்தான் வந்தோம்..........நாம் அவருடைய நடிப்பைப் பற்றி பேசவேண்டாம்..நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

கவிஞர் வைரமுத்து வரியில் தேனிசை தென்றல் தேவா பாடிய"ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ" பாடல் எங்கும் ஒலித்தது. திரையில் நாட்டார் நடன பின்னணியில் வடிவேலு பாடியிருப்பார்.

அப்போது மைலாப்பூரில் எனது அலுவலகம். தினமும் காலை மின்சார ரயிலில் பயணம். எது எப்படி இருந்தாலும். காலை 8.05 ரயிலைத் தவற விடமாட்டேன். காரணம் இந்த ரயிலில் அரக்கோணத்திலிருந்து சென்னை வரும் ஒரு குழு திரைப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருவார்கள். தினமும் இசை மழை தான். புகழ் பெற்ற பழைய /அப்போது பிரபலமாயிருந்த புதிய பாடல்கள் எனக் கலந்துகட்டி பாடுவார்கள். கையில் தப்பட்டம் போன்ற இசைக்கருவி, "ஜெல்", "ஜெல்" என்ற சத்தம் பாடலினூடே பயணித்து, பாடலுக்கு மெருகேற்றும். காலை வேளையில் கேட்க மனதுக்கு உற்சாகமாக இருக்கும். குழுவில் வயதான பெரியவர் கிட்டத்தட்டத் தேவாவின் குரல் சாயலில் பாடிய "ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ" பாடல் பயணிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. சென்ட்ரல் ரயில் நிலையம் நெருங்கும் வேளையில் அப்பாடலை மீண்டும் ஒரு முறை பாடி நிறைவு செய்வார்.

இந்த பாடலை எப்போது கேட்டாலும் தேவாவின் குரல் மறைந்து அந்த பெரியவரின் குரல் தான் ஞாபகம் வந்து போகிறது. இதோ அந்த பாடலை கேளுங்கள்.




 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Monday 20 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-115

கபில்தேவின் கதை: 1983 இல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இந்தியாவின் ஆல்-ரவுண்டர்

ந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கபில்தேவ், 24 வயதில் உலகக் கோப்பையை வென்ற இளைய கிரிக்கெட் அணித்தலைவர் என்ற சாதனையை இன்னும் வைத்திருக்கிறார். அவர்  தனது பந்துவீச்சு திறமையால் கிரிக்கெட் ரசிகர்களை வசீகரித்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒப்பற்ற அணித்தலைவராக இருந்து, ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் கபில்தேவ் தனது சிறப்பான பேட்டிங்கால் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்தது, இந்திய அணி உலகக் கோப்பை பட்டத்திற்கான பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. அவர் அதை ‘வாழ்க்கையின் மறக்கமுடியாத இன்னிங்ஸ்’ என்று விவரிக்கிறார்.

சண்டிகரில் பிறந்த கபிலின் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தவர் அவரது தாயார். அவர் கபிலின் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் திறமையைக் கண்டறிந்து தனது அன்பு மகன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவான் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். மேலும், கபிலின் வெற்றிக்கு எல்லாமுமாக இருந்தார். 

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்ததன் மூலம், 24 வயதான கபில் லட்சக்கணக்கான இந்தியர்களின் பேரன்பைப் பெற்று மனதில் இடம்பிடித்தார்.

இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றிய அணித்தலைவர் கபிலின் கதை இதோ: 


 

நன்றி: https://www.thebetterindia.com

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.