Wonderful Shopping@Amazon

Sunday, 2 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-75

கந்த சஷ்டி கவசம்

அப்பா முதல் முதலாக வாங்கிய டேப் ரெகார்டரில் தினமும் காலையில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கவிடுவார்.

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலுக்குப் பௌர்ணமி அன்று இரவு தங்குதல் நிகழ்வில், கந்த சஷ்டி கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணம் நடைபெறும். இரவு பன்னிரண்டு மணி பூஜையுடன் நிறைவுபெறும்.

தீபாவளி நாளுக்கு மறுநாள் வரும் அமாவாசையன்று சஷ்டி விரத மாலையிட்டு, பச்சை வண்ண உடையுடுத்தி, விரதம் இருந்து, அறுபதிற்கு மேற்பட்டோர் பேருந்தில் ஆறு நாள் ஆன்மிகச் சுற்றுலா கிளம்புவோம், ஏதாவது ஒரு படைவீட்டில் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு பயணத்தைத் தொடர்வோம். தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் ஒரே குழுவுடன் ஆன்மிகச் சுற்றுலா சென்றோம். புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

முந்தைய அலுவலகத்தில் பணிபுரியும்போது, மாதந்தோறும் வரும் 'சஷ்டி' திதியில் காலையில் அலுவலர்கள் எல்லோரும் அலுவலக வாயிலில் வீற்றிருக்கும் விநாயகர் - முருகன் கோவிலில் ஆஜராகவேண்டும், கந்த சஷ்டி கவசம் படிக்கவேண்டு, பிறகு முருகனுக்குச் சிறப்புப் பூஜை நடக்கும், பிரசாதம் விநியோகிக்கப்படும், அது முடிந்ததும் அவரவர் இருக்கைக்குச் செல்ல வேண்டும். நிறுவனர் முருக பக்தர் ஆதலால் முருகனருள் எல்லோர்க்கும் கிடைக்கவேண்டி அலுவலகத்தில் கொணர்ந்த விதி. அங்குப் பணிபுரிந்த அந்த ஒரு வருடம் கந்த சஷ்டி கவசம் மனதில் பதிந்தது.

இப்போதும் காலை வேளையில் கந்த சஷ்டி கவசம் மற்றும் கந்த குரு கவசம், கேட்பது தொடர்கிறது.

தேவராய ஸ்வாமிகள் இயற்றி, சென்னிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றிய கந்த சஷ்டி பாடலை பலர் பாடியிருந்தாலும் 'சூலமங்கலம்' சகோதரிகள் ராஜலக்ஷ்மி மற்றும் ஜெயலட்சுமி அவர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் தான் சிறந்தது என்று என் அனுபவத்தில் சொல்கிறேன். தினமும் காலை அலுவலகம் செல்லுகையில், பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன், சில சமயம் பாடலோடு சேர்ந்து மனதும் பாடும்.

குழந்தைகள் மனப்பாடம் செய்யச் சிறந்த வெண்பா தொகுப்பு 'கந்த சஷ்டி கவசம்'. இழுத்துப் பிடித்து உட்காரவைக்க வேண்டாம். காலையில் 'கந்த சஷ்டி கவச' பாடலை ஒலிக்கவிட்டால் போதும், அவர்களுடைய ஆழ்மனதில் பதிய ஆரம்பிக்கும்.

ர ர ர ர ர ர ர, ரி ரி ரி ரி ரி ரி ரி, ரரரர ரரரர ரரரர ரரர, ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி, டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு, டகுடகு, டிகுடிகு, டங்கு டிங்குகு, சவ்வும், சௌவும் போன்றவை விசேஷ அதிர்வுகள் உடைய வார்த்தைகள்/ சொற்கள்.

கந்த சஷ்டி கவசம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய, அறியப் பொக்கிஷம், தினமும் அதைப் பாராயணம் செய்து உலகம் உய்ய வேண்டும்.





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி

1 comment:

  1. rajikarthik19@gmail.com13 August 2020 at 20:57

    Nanum enkuzhanthai paruvathil virumbi ketta bakthi padal

    ReplyDelete