Wonderful Shopping@Amazon

Friday 4 November 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-136

 வைதேகி காத்திருந்தாள் (1984)

#PetromaxLight

விஜயகாந்த்-  இயக்குநர் ஆர் சுந்தராஜன் இணைந்து நிகழ்த்திய மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று. அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜயகாந்த் இந்த படத்தில் அமைதியாக நடித்திருப்பார். உங்களுக்குத் தெரியுமா? இசைஞானி அவர்கள் டியூன் போட்டு வேண்டாமென்று ஒதுக்கிய ஆறு டியூன்களிலிருந்து உருவான படம் தான் "வைதேகி காத்திருந்தாள் ..." இந்த படத்தில் எனக்குப் பிடித்த பாடல் "மேகம் கருக்காயிலே என்ற துள்ளலான பாடல். நான் முன்பே சொன்னது போல... பாடல் கூடவே வரும் அந்த கோரஸ் தான் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. 

சரி விஷயத்துக்கு வருவோம்! நீங்கள் revolution-ன்னு சொன்னாலும் சரி இல்ல evolution-ன்னு சொன்னாலும் சரி, அந்த இரண்டுக்கும் இடம் கொடுக்காமல் இந்த படத்தில் இடம்பெற்ற 'பெட்ரோமாக்ஸ் லைட்' நகைச்சுவை பகுதி  இன்னும் காலம் கடந்தும் பேசப்படும். என்னுடைய முகநூல் நண்பர் திரு.கீதப்ரியன் அவர்கள் எழுதிய இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்கப் பதிவுக்குள் செல்வோம்.....

பெட்ரொமேக்ஸ் காமெடி வெளியாகி 38 வருடங்களாகிறது, மதுரை சென்ட்ரல் சினிமாவில் இந்த படம் பார்த்து கவுண்டமணி செந்தில் காட்சிகளுக்கு சிறுவனாக அத்தனை சிரித்திருக்கிறேன், இந்த பல வருடங்களில் பல வயதுகளில் இந்த படத்தின் நகைச்சுவை ட்ராக்கை மட்டும் தனியே பார்த்துள்ளேன், இன்றும் இந்த நகைச்சுவை அத்தனை தரமாக உள்ளது.

அழகு ராஜன் உள்ளூரில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போன்றவர்,சைக்கிள் கடை வைத்துள்ளார் உடன் பெட்ரோமேக்ஸ் வாடகைக்கு விடுகிறார், உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு உண்டு என நம்பும் மனிதர், அழகிய மனைவி தன் ஆசைக்கு ஒத்திசைந்து இவர் வாங்கித் தரும் காலே கால் கிலோ அல்வா , ஒரு முழம் மல்லிப்பூவிற்க்கு மகிழ்ந்து இவருடன் ஆற்றங்கரைக்கு மணல்வெளிக்கு அழைத்த போதெல்லாம் வருகிறார், இப்படி ஒரு ஒத்தாசையான மனைவி இருந்தாலும் அழகுராஜன் , ஊருக்குள் வாய் பேச முடியாத ஒரு ஐம்பது வயது பெண்ணை செட் அப் செய்து வைத்திருப்பதை அவர் கோமூட்டி தலையனுடன் பேசும் வசனங்களூடே நாம் அறிகிறோம்.,

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியாக இருக்கனும், ஆலையில் நுழையும் கரும்பில் அடிக்கரும்பென்ன ? நுனிக்கரும்பென்ன என்று தன் EMA செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறார் அழகுராஜன்.

அழகுராஜன் நல்ல குணம் படைத்தவர் என்பதை ஊருக்குள் வேலை வேலை என கேட்டு வந்து பசியால் வாடிய இளைஞனை கோமூட்டி தலையன் தான் பண்ணையார் மகன் என பொய் சொல்லி தரையில் நீச்சல் அடிக்க கேட்டு சுற்றலில் விடுகையில் , அவனை சைக்கிளை மோதி துரத்தி விட்டு கிராம நிர்வாகியிடம் சிபாரிசு செய்து ரேஷன் கடையில் அளந்து போடும் ஊழியர் வேலைக்கு சேர்த்து விடுகையில் நாம் அறிவோம்.

இந்த பெட்ரோமேக்ஸ் காமெடி அத்தனை தரமானது, எத்தனை அவல நகைச்சுவைப் படங்களை நான் உலக சினிமாவில் பார்த்திருந்தாலும் இந்த நகைச்சுவையின் மாற்று குறையவேயில்லை.

மச்சான பாரடி மச்சமுள்ள ஆளடி என சன்னமாக பாடிய படி பெட்ரோமேக்ஸ் லைட்டை துடைத்து சுத்தம் செய்கிறார் அழகுராஜன்.

"அண்ணே..."

"டேய் ரொம்பநாள் கழிச்சு இந்த பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு போகப்போகுது ,பத்து ருபா கிடைக்கும்,அதான் நான் தொடச்சிட்டிருக்கேன்...."

"என் சந்தேகத்த தீத்துவைய்யுங்கண்ணே...."

"என்னடா.."

"இந்த பெட்ரொமேக்ஸ் லைட் எப்படின்ணே எரியுது...?"

"ஆங் அப்படி வா, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைன்ட்றது.
அடேய் கோமுட்டித்தலையா, இதுக்கு பேரு தான் கப்பு,இதுக்கு மேல கோழி முட்ட மாதிரி இருக்குது பாரு இதுக்கு பேரு மேண்டில்,இதுல தான் பளீர்னு வெளிச்சம் வர்ரது...."

"இதுல எப்படிண்ணே வெளிச்சம் வரும்? (துருதுருவென அமுக்கி உடைத்து விடுகிறார்) என்னண்ணே உடைச்சுபுட்டீங்க?

ஆழ்ந்த மௌனம் நிலவுகிறது, அழகுராஜன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டி தலை குனிந்து கொள்கிறார்,கோமுட்டி தலையன் தப்ப தருணம் பார்க்கிறார்.

கூடை வைத்த பெண்மணி: இங்க அழகு ராஜா கட எதுங்க?

கோமூட்டி தலையன் : இது தான் 

 அழகுராஜன் : டேய் இருடி , அது நாந்தாங்க, 

கூடை வைத்த பெண்மணி: சாயந்தரம் என் பொண்ணுக்கு சீர் செய்யனும், அதுக்கு ஒரு பெட்ரோமேக்ஸ் லைட் வேணும்.

இசைஞானி: டிடுக் டிடுக் என பொருத்தமாக பின்னணி சேர்த்திருப்பார்.இசை முடிவதற்குள் கோமூட்டி தலையன் அங்கே ஓட்டம் எடுத்திருப்பார்.

அழகுராஜன்: ஏங்க , பெட்ரமேக்ஸ் லைட்டே வேணுமா? 

ஆமாங்க

இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்க கூடாதுங்க?

பந்தமா? அஹ்,அதல்லாம் ஒண்ணும் வேணாம்க.

அப்ப பெட்ரமேக்‌ஸ் லைட்டு குடுக்கறதில்ல.

ஊம்!!!

கூடை வெச்சிருக்கறவங்களுக்கெல்லாம் பெட்ரமேக்ஸ் லைட் குடுக்கறதில்ல,

ஆங்!!!

அடப்போம்மா.

அந்த பெண்மணி அங்கலாய்த்து அகன்றதும் அது வரை கையில் வைத்து பிடித்த மேண்டில் பொடிந்த கப்பை தூக்கி கீழே எறிகையில் அந்த நீண்ட காட்சி நிறையும்.

அது லைசன்ஸ்ராஜ் யுகம், எந்த உதிரி பாகத்துக்குமே தட்டுப்பாடு இருந்த காலம்,இந்த மேண்டில் ரேயான் என்ற செயற்கை இழையால் தயாரானது, அது உலோக உப்புகளான சீரியம் ,தோரியம் உப்பில் தோய்த்து ஏறக்குறைய ஆணுறை போன்று சுருட்டி வைத்து உதிரி பாகமாக கிடைக்கும், அதை கப்பில் துருத்திய ஹோல்டரில் கவனமாக சுருக்கு போட்டு மெல்லிய கம்பியால் இறுக்கி கட்ட வேண்டும்.பம்ப் ஸ்டவ் டெக்னிக் தான், பம்ப் அடித்த அழுத்தம் மூலம் மிகச்சிறிய துளை வழியே எண்ணெய் வெளியேறி பர்னருக்கு வரும் , நெருப்பு பற்றவைத்த மேண்டில் வலை நரம்புகளில் எண்ணெய் ஊடுருவிப் பாய்ந்து பளீரென பல மணி நேரம் மேண்டில் எரியும், காற்று அழுத்தம் குறைகையில் பத்துமுறை என கணக்கு வைத்து பம்ப் அடிக்க அத்தனை பளீரென வெளிச்சம் மாறும்,இன்றும் கேம்பிங்கிற்கு உற்ற துணைவன் பெட்ரோ மேக்ஸ். இன்று ஒரு மேண்டில்  விலை 110 ₹ என்றால் அப்போது அதன் விலையைப் பாருங்கள், ஒரு முறை மேண்டில் மாற்றினால் அது தின உபயோகத்தில் இரண்டு வருடம் கூட உழைக்கும், நாட்பட்ட உபயோகத்தில் இந்த மேண்டில் தொட்டாலே மண் போல பொடிந்து கொட்டிவிடும், கோமூட்டி தலையன் அதைத்தான் அன்று செய்துவிட்டு ஓட்டமெடுத்தார்.

அழகுராஜன் அன்று பெறும் 10₹ வாடகையை அது கோரும், அந்த வயிற்றுப்பாட்டை அற்புதமாக அங்கே வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் கவுண்டமணி, இந்த மேண்டில் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் என்பது உபதகவல், நம் இந்தியாவில் பிரபாத் என்ற நிறுவனம் பெட்ரோமேக்ஸ் தயாரிப்பில் கோலோச்சி இருக்கின்றனர்,

பெட்ரோமாக்ஸ் விளக்கு 1910 இல் ஜெர்மனியில் மேக்ஸ் கிரீட்ஸ் என்பவரால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது, எனவே பாராஃபின் எண்ணைக்கு பெட்ரோ என்றும் கண்டுபிடிப்பாளருக்கு மேக்ஸ் என்றும் இணைத்து இன்றும் வழங்கப்படுகிறது.

இப்படத்தில் கவுண்டமணி செந்தில் ஜோடியின் நகைச்சுவை அத்தனை அபாரமாக இயல்பாக வெளிப்பட்டிருக்கும், immortal வகையறா, வசனகர்த்தா வீரப்பன் வசனங்களை கவுண்டமணி improve செய்து அத்தனை பிரமாதப்படுத்திவிட்டார் என்றால் மிகையில்லை,இசைஞானி பாடல்களுக்காகவும் அசத்தலான தனி நகைச்சுவைக்காகவும் 'வைதேகி காத்திருந்தாள்' படமெடுத்த இயக்குனர் ஆர் சுந்தராஜன் அவர்களுக்கு நன்றி!




நன்றி : கீதப்ரியன்

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.