Wonderful Shopping@Amazon

Monday, 31 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-99

இந்தியாவின் முதல் நீச்சல் வீராங்கனை

செப்டம்பர் 24, 1940-இல், கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) ஒரு நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்த ஆரத்தி சஹா, சிறு வயதிலிருந்தே நீச்சலுக்கான இயல்பான திறமையைக் காட்டினார்.

100 மீட்டர் Breaststroke ஓட்டத்தில் அகில இந்தியச் சாதனையைப் படைத்த அவர், ஹெல்சின்கி ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.

1959-ஆம் ஆண்டில், தனது 19 வது பிறந்தநாளைக் கடந்த ஐந்து நாட்களில், ஆரத்தி சஹா 16 மணி 20 நிமிடங்களில் ஆங்கில சேனலில் வெற்றிகரமாக நீந்திய முதல் மற்றும் வேகமான ஆசியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார், அவரது இடைவிடாத உறுதியையும், ஜெபிக்கவேண்டும் என்ற மனவுறுதியும், சிறந்த தைரியத்தையும் அரசு அங்கீகரித்தது. நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்; ஆரத்தி சஹா விஷயத்தில் நீச்சல் போட்டியின் பங்கேற்கும் பெண்களுக்கு அவர்களின் ஆர்வத்தைத் தொடர சுதந்திரம் கிடைக்காத காலம் இது.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-98

இந்தியக் கால்பந்து அணியின் முதல் கேப்டன்

Talimeren Ao - Wikipedia

நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த, டே ஓ என்று அன்பாக அழைக்கப்படும் டாக்டர் தாலிமரன் ஓவோ இந்தியக் கால்பந்து அணியின் முதல் கேப்டனாக இருந்தார்.  இந்தியாவின் கால்பந்து வரலாற்றில் டாக்டர் டே ஓ அவர்களுக்கு ஓர் சிறப்பிடம் உண்டு.

1918-ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் நாகா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள  கிராமமான சாங்கியில் பிறந்தார். டாக்டர் ஓவின் தந்தை திரு சுபோங்வதி நிங்டாங்ரி நாகா மலைகளில் முதல் பழங்குடி இன தலைவர் ஆவார். 

தந்தை இறந்த பின், 1933-ஆம் ஆண்டில், டே ஓ, ஜோர்ஹாட் மிஷன் பள்ளிக்கு அனுப்பப்பட்டார், அங்கு தான் அவருக்கு கால்பந்து விளையாட்டின் மீது நாட்டம் ஏற்பட்டது.  அவரது திறமைகள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டன.

ஜோர்ஹாட்டிலிருந்து, டே ஓ 1937-இல் காட்டன் கல்லூரியில் சேர குவஹாத்திக்குச் சென்றார். இங்கு அவரது விளையாட்டு மேம்பட்டது. இந்த நேரத்தில், அசாமின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பான மஹாராணா கிளப்பைச் சேர்ந்த வீரர்கள், காட்டன் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு மைதானத்தில் பயிற்சி பெற்றபோது அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்புறமென்ன தலைவருக்கு ஏறுமுகம் தான்.

மஹாராணாவில் இருந்த காலத்தில், டே ஓ அற்புதமான கால்பந்து திறன்களையும் பாராட்டத்தக்க விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினார். அவர் தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டே இருந்தார், ஆனால் அவரது தந்தையின் கடைசி விருப்பம் (மருத்துவம் படிக்கவேண்டும்) அவரது மனதில் உறுதியாக இருந்தன. அவர் 1942-ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்ட படிப்பில் சேர்ந்தார்.

கொல்கத்தாவில், மஹாரானா கிளப்பைச் சேர்ந்த டே ஓவின் பழைய நண்பர், அப்போது மோகன் பகானுக்காக விளையாடிக் கொண்டிருந்த சரத் தாஸ், அவரை கிளப்பின் அணிக்கு அழைத்து வந்து தடுப்பாளராக சேர்க்கப்பட்டார்.  1943 முதல் 1952 வரை மோகன் பகானில் ஒன்பது சீசன்களில் மிட்பீல்டர் மற்றும் தடுப்பாளராக ஆதிக்கம் செலுத்தியபடி இருந்தார். 

அவருடைய அற்புதமான விளையாட்டு திறன் மற்றும் அணியை வழிநடத்திச் செல்லலும் பாங்கு மோகன் பகான் அணியின் கேப்டன் பதவிக்கு அழைத்துச் சென்றது. அதைத் தொடர்ந்து, இந்தியத் தேசிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில், அவர் 1948 லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியை வழிநடத்தினார், இது இரண்டாம் உலகப் போர் காரணமாக 14 வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்றது.

1948 லண்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஒலிம்பிக் அணியின் கொடியை ஏந்தியவர்.  

லண்டன் ஒலிம்பிக்கில் டே ஓ தலைமையிலான அணி  பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னேறியது. அவருடன் சைலன் மன்னா மற்றும் தாஜ் முகமது போன்ற போன்றோர்களும் விளையாடினர்.

ஒலிம்பிக்கைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கால்பந்து கிளப் 'அர்செனல்' அவரை ஒப்பந்தம் செய்ய முன்வந்தது, ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாட முடிவு செய்தார்.

அவர் பட்டம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விளையாட்டை விட்டு வெளியேறி, அசாமின் திப்ருகார் மருத்துவக் கல்லூரியில் ENT துறையில் சேர்ந்தார். அவர் 1953-இல் நாகாலாந்துக்குத் திரும்பினார், பின்பு படிப்படியாக உயர்ந்து 1978-இல் நாகாலாந்தில் சுகாதார சேவைகள் இயக்குநராக ஓய்வு பெற்றார்.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    


Sunday, 30 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-97

'சத்யா'(1988) -'61 Years of Kamalism' 

இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் அவர்களின் சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய முதல் படம். எனக்கென்னவோ 'Angry Young Man' வேடம் ரஜினியைவிடக் கமலுக்கு சாலப்பொருந்துகிறது என்று நினைக்கிறேன் .'வறுமையின் நிறம் சிகப்பு' படத்திலிருந்து கமலுக்குள் 'Angry Young Man' இருந்த அவ்வப்போது எட்டிப் பார்ப்பான். 'சத்யா' படத்திலும் அப்படிப்பட்ட வேடம் தான். 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் அதுவே வேறுவிதமாகச் செய்திருப்பார். 'ஹே ராம்' படத்தில் உச்சம் தொட்டிருப்பார்.

சென்னை அபிராமி திரையரங்கில் நானும், நண்பனும் சேர்ந்து பார்த்த படம். அவனுக்குப் படம் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது சிலாகிக்கிறான்.

இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் கொஞ்சம் Realistic-ஆக இருக்கும். அதன் பின் வந்த எல்லா படைகளிலும்  இதுபோன்ற சண்டைக் காட்சிகள் இடம்பெற்றது.

இந்தியாவின் இசைக்குயில் லதாஜி தமிழில் பாடிய தமிழ்ப் பாடல்களைத் தேடியபோது 'வானரதம்' என்ற ஹிந்தியிலிருந்து தமிழ் டப்பிங் (1956-லேயே ஹிந்தி படம் தமிழில் டப் செய்யப்பட்டது ஆச்சரியம் தான்) படத்தில் லதாஜி பாடிய தமிழ்ப் பாடலை கேட்க முடிந்தது. 

அதன் பிறகு முப்பது வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழில் பாடிய தமிழ்ப் பாடல்களில்  'ஆனந்த' (1987) படத்தில் 'ஆராரோ ஆராரோ " பாடல், 'என் ஜீவன் பாடுது'(1988) படத்தில்"எங்கிருந்தோ அழைக்கும்" பாடல், மற்றும் 'சத்யா'(1988) படத்தில் 'வலையோசை .." பாடல். "இங்கேயும் .." என்ற இனிமையான பாடல் 'சத்யா' படத்தில் இடம்பெறவில்லை.

மேலே சொன்ன மூன்று பாடல்களில் உங்களுக்கு எது பிடிக்கும்? என்பதைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

கவிஞர் வாலி எழுதி, சிந்துபைரவி ராகத்தில் அமைந்த "வலையோசை .." பாடல் புல்லாங்குழலில் தொடங்கிப் பாடல் முழுதும் சிறு சிறு இசைத் துணுக்குகளை இறைத்து அருமையான இசைக்கோர்வை போல உருவாக்கியிருப்பார் ராஜா சார். இப்பாடலில் கமல்-அமலாவின் கெமிஸ்ட்ரி அபாரமாக இருக்கும். 




நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



காளிகபாலி 
 


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-96

உதயகீதம் (1985)

வெள்ளி விழா நாயகன் மோகன் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன ? என்ற விவாதம் சமீபத்தில் இணையதளத்தில் நடந்தது. ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஒரே மாதிரியான வேடத்தைத் தொடர்ந்து செய்ததால் ரசிகர்களுக்கு போரடித்துவிட்டது என்னவோ என்று நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் ஏராளமான வெற்றிப் படங்கள் தந்த மோகன் அவர்களுக்குத் தமிழ் திரைத்துறை வரலாற்றில் எப்போதும் ஒரு இடம் உண்டு.

என்னுடைய உறவினரின் மகள் திருமணம் வந்தவாசியில் நடந்தது. அப்போது குடும்பத்தோடு சென்றிருந்தோம். அப்போது இரவுக் காட்சிக்குத் திருமண மண்டபம் அருகில் உள்ள திரையரங்கில் இந்த படத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. படத்தில் தொடக்கப் பாடலாக வரும் "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்.." என்னுடைய விருப்ப பாடல்.

கதாசிரியர் ஆர் செல்வராஜின் கதைக்கு, இயக்குநர் கே ரங்கராஜ் திரைக்கதை அமைத்து, இயக்கி 1985-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டிற்கு முந்தைய தினம் வெளியான 'உதயகீதம்' படத்திற்கு வயது 35 ஆண்டுகள்.

இளையராஜா சார் இசையமைத்த, படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் மிகப் பிரபலமானது. ''பாடும் நிலா பாலு'' எஸ்பிபியின் குரல் பாடலுக்குப் பொருந்தியதும், திரு எஸ் என் சுரேந்தர் அவர்களின் குரல் பின்னணிக்குப் பொருந்தியதும் மோகனின் திரை வெற்றிக்கு மகுடம் சேர்த்தது.

செந்தில்-கவுண்டமணிஇணை நகைச்சுவை படத்திற்குப் பெரும்பலம். நகைச்சுவை பகுதியை எழுதியவர் திரு ஏ வீரப்பன். 

இயக்குநர் கே ரங்கராஜ்-'வெள்ளிவிழா நாயகன்' மோகன் - இளையராஜா மூன்று பேர் நிகழ்த்திய மாயாஜாலம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.





நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 
 




Saturday, 29 August 2020

லாக்கடவுன் சித்திரங்கள் -2

'செயல்வீரர்' சோனு சூட்

டிகர் சோனு சூட் 'அத்தடு' படத்தில் தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் மகேஷுபாபுவுக்கு இணையான வில்லன் வேடம், அருமையாகச் செய்திருப்பார். தமிழ், ஹிந்தி என ஏகப்பட்ட படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பர்.

இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியா அதிகம் உச்சரித்த பெயர் 'சோனு சூட்'. அவருடைய டிவிட்டர் பக்கம் கோரிக்கைகள், வாழ்த்துக்கள், நன்றிகள் மற்றும் நல்ல உள்ளங்கள் கைகோர்த்து உதவ முன்வருவோர் என நிரம்பி வழிகிறது.

நடித்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது புதிதல்ல. அவருடைய அம்மா ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியை, மாலை வேளையில் ஏழை பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலம் பயிற்றுவிப்பார் மற்றும் துணி வியாபாரியான தந்தை 'லங்கர்' எனப்படும் இலவச உணவு சேவையைச் செய்வார். அதனால் இயல்பாகவே பிறருக்கு உதவும் எண்ணம் இந்த வில்லன் நடிகருக்கு வந்திருக்கலாம்.

கிர்கிஸ்தானில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களைத் தாயகம் கொண்டு வந்தது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலம் செல்ல உதவியது, ஏழை விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கிக் கொடுத்தது என அவரது உதவிக் கரங்கள் நீளுகிறது, அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான நடிகர் சோனு சூட், உதவுவதற்குப் பதவியும், படோடாபமும் தேவையில்லை, நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் போதும் என நிரூபித்திருக்கிறார்.

மேலே சொன்னவற்றைவிடச் சிறப்பான விஷயம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை தேட 'பிரவாசி ரோஜ்கரை' என்ற இலவச செயலி / இணையதளத்தை அவருடைய நண்பர்கள் குழு உருவாகியுள்ளது. இதனால் பலர் பயன்பெற ஆரம்பித்துள்ளனர்.

நம்மூரிலும் பலர் விளம்பரமின்றி, சத்தமில்லாமல் பல உதவிகளை இந்தக் கொரோனா காலத்தில் உதவுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் நீங்கள் செய்த உதவிகளைப் பற்றிப் பின்னூட்டத்தில் பதிவிடவும்.

 
 
நன்றி:Google

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    




ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-95

இந்தியா கால்பந்து அணி பங்கேற்ற பிஃபா உலகக்கோப்பை  

பிஃபா உலகக் கோப்பையில் தங்களுக்குப் பிடித்த அணியை ஆதரிப்பதற்காக பெர்லின் முதல் சென்னை வரை உள்ள கால்பந்து ரசிகர்கள், அணி வண்ணங்களின் ஜெர்சிகளை அணிந்துகொள்வது கொள்வது வழக்கம். இந்தியாவிலும் கணிசமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.

சிலர் பிரேசிலை ஆதரிக்கிறார்கள், சிலரோ ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ, லியோ மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை ஆராதிக்கிறார்கள், மற்றவர்கள் இந்த அழகான விளையாட்டை ரசிக்கிறார்கள்.

இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவு - இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில்
பங்கு பெறவேண்டுமென்பதே.

உங்களுக்குத் தெரியுமா ?

1950-ல் அந்தக் கனவு கிட்டத்தட்ட நிறைவேறியது. அந்த ஆண்டில், பிரேசிலில் நடக்கவிருந்த நான்காவது ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றது. 

பிறகு, என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்....

இந்தியக் கால்பந்து அணி தரவரிசை 1957-இல் ஃபிஃபா உலகத் தரவரிசையில் 9வது இடத்திலிருந்தது.

ஆனால் இந்திய அணி தரையில் கால் வைக்கவில்லை, ஏன் என்பதற்குப் பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகிறது . அதில் ஒன்று, அணி வெறுங்காலுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டி.
பல நாடுகள் உலகப் போரால் பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக ஸ்காட்லாந்து, பிரான்ஸ் மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகிய அணிகள் விலகின. இதன் மூலம் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கையை வெறும் 13 ஆகக் குறைத்தது.

இந்தப் போட்டியில் ஆசியாவிலிருந்து எந்த அணியும் பங்கேற்கவில்லை. ஆதலால் பிரேசிலின் கால்பந்து கூட்டமைப்பு, அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க தங்கள் அணியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. உலகக் கோப்பையின் போது இந்தியாவின் செலவுகளை கவனித்துக்கொள்ளப் பிரேசில் அதிகாரிகள் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா உறுதிப்படுத்தவுமில்லை அல்லது பின்வாங்கவுமில்லை, ஆனால், நிகழ்வு தொடங்கியபோது, இந்தியாவின் அணி அங்கு இல்லை.

என்ன நடந்தது? அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை ?

இந்தியா அணியின் சிறந்த தடுப்பாளர் என்று கருதப்பட்ட சைலன் மன்னாவின் கூற்றுப்படி, உண்மையான காரணம் என்னவென்றால், பயணச் செலவுகள், போதிய பயிற்சி நேரம் இல்லாதது, அந்நிய செலாவணி இருப்புப் பிரச்சினை மற்றும் பிரேசிலுக்கு நீண்டதூர அச்சுறுத்தும் கப்பல் பயணம் போன்றவை, பிரேசிலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று முடிவை மறைக்க, வெறுங்காலுடன் விளையாட அனுமதி இல்லை என்று சாக்குப்போக்கு AIFF-ஆல் பயன்படுத்தப்படுதப்பட்டது என்று கூறினார். மேலும், ஃபிஃபா உலகக் கோப்பையை ஒலிம்பிக்கைப் போல இந்தியக் கால்பந்து சம்மேளனம் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம் என்னவாக இருந்தாலும், அது 70 ஆண்டுகள் ஆகிவிட்டன, மற்றொரு உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறும் நாள் வெகு தொலைவிலில்லை. சமீப காலங்களில், இந்தியாவில் கால்பந்து மோகம் அதிகரித்து வருகிறது. ஐஎஸ்எல் லீக் போட்டிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

நிச்சயமாக ரசிகர்களின் ஆதரவு, உள்கட்டமைப்பு வசதி, மற்றும் அரசின் ஆசியுடன், இந்தியா ஒரு நாள், உலகக் கோப்பையில் பங்கேற்கும். அதுவரை இந்தியர்கள் தங்கள் கால்பந்து தாகத்தைத் தணிக்க, ஜெர்மன், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஜெர்சிகளை அணிவதில் திருப்தியடைய வேண்டும்.

கொசுறு :

1948-இல் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா அணியின் தொடக்கம் ரசிகர்களைக் கவர்ந்தது.  இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், பெரும்பாலான வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடியது தான், சிலர் சாக்ஸ் அணிந்தனர். வளர்ந்து வரும் நாடான நம்மை பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த இந்த முதல் சர்வதேச போட்டி ஒரு பெரிய விஷயமாகும்!

நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி   


Wednesday, 26 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-94

நினைத்தாலே இனிக்கும்(1979)

சென்னை கச்சேரி மேடைகளில் மூன்றாவது அல்லது நான்காவது பாடலாக வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலை பற்றிப் பேசுவோம். கீழே உள்ள காணொளியில் ஜெயப்பிரதா பாடலை ரசிப்பாரே, அது போல ரசிகர்கள் ரசிப்பார்கள். பாடகரும் தன்னுடைய திறமையை முழுதும் காண்பித்து அப்பாடலை ரசித்துப் பாடிமுடிப்பார். (அப்போது காரோக்கி இசை வசதி இல்லை) இருக்கின்ற இசைக்கருவியை வைத்து அழகாக வாசிப்பார்கள்.

மியூசிக்கல் ஹிட், மியூசிக்கல் ஹிட் என்ற சொற்றொடர் வழக்கொழிந்து வெகு நாட்களாகிறது. இப்போதெல்லாம் ஒரு பாடலை பிரபலப்படுத்த உன்னைப் பிடி, என்னைப் பிடி என்றாகிறது. மக்களின் ரசனை மாறிவிட்டது என்று சொல்வதை விட மக்களின் ரசனைக்கேற்ப பாடலை உருவாக்குபவர்கள் இல்லையோ என்று தோன்றுகிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் இயக்கிய, கமல், ரஜினி நடித்த, 1979-ஆம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டன்று வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' என்ற சுமாரான படம், பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டன. கவிஞர் கண்ணதாசன் எழுதி, விச்சு டார்லிங் இசையமைத்த பதினான்கு பாடல்களும் பிரபலமடைந்தது. அதில் ஒரு பாடல் பல்லவி மட்டுமே இடம்பெற்றது.

இப்போது பதினான்கு பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெற்றால் என்னாகும் ? ரசிகர்கள் புகைபிடிக்க வெளியே சென்றுவிடுவார்கள். அதனால் தான் என்னவோ படத்தினூடே வரும் மான்டேஜ் பாடல்கள் தற்போதைய படங்களில் அதிகம் வருகிறது.

சரி போகட்டும், 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும், எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடிய "இனிமை நிறைந்த உலகம்", மற்றும் விச்சு டார்லிங் பாடிய "சம்போ சிவ சம்போ...". இதோ காணொளியில் அந்தப் பாடலை கண்டு ரசியுங்கள்.




நன்றி:Youtube 

 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 
 


Sunday, 23 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-93

'அன்னமய்யா'(1997)

வ்வொரு நடிகருக்கும் ஒரு வாழ்நாள் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவுக்குத் தெலுங்கு கவிஞர் தாளப்பாக்க அன்னமாச்சார்யா கதாபாத்திரம் ஏற்று நடிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. விஷ்ணுவின் வாள் (நந்தகம்) தான் அன்னமாச்சார்யா அவதாரம்.

தெலுங்கும் சினிமாவின் முன்னோடி இயக்குநர் *கே ராகவேந்திரா ராவ் இயக்கிய "அன்னமய்யா", 1997-ஆம் ஆண்டுக் கோடை விடுமுறைக்கு வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. மக்கள் குடும்பத்தோடு திரையரங்கை நோக்கிப் படையெடுத்தார்கள். அன்னமாச்சார்யாவின் வாழ்க்கை சரிதத்தை மிக எளிதில் தனிக்கே உரித்தான திரைக்கதையில் உருவாக்கி மக்களிடம் சேர்த்தார் இயக்குநர். ஒவ்வொரு துணை பாத்திரங்களும் தங்கள் பங்கினை சிறப்பாக வழங்கினார்கள். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டி-தொட்டியெங்கும் ஒலித்தது.

இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அல்லது மரகதமணி பெரும்பாலும் அன்னமாச்சார்யா கீர்தனைகளையே பாடல்களாக உருவாக்கினார். இருபது பாடல்கள் அடங்கிய ஆடியோ காஸ்ட் அதிகளவில் விற்றுத்தீர்ந்து முதல் இடத்தைப் பிடித்தது. இப்படத்தில் பாடல்கள் இன்று வரை தெலுங்கு மக்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆறுமாத பணி பயிற்சிக்கு வேறு மாநிலத்திலிருந்தபோது, என்னுடன் அறையில் தங்கியிருந்த தெலுங்கு நண்பர் 'அன்னமய்யா' படத்தில் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தி, மேற்சொன்ன விஷயங்களையும் சொன்னார்.

ஒருமுறை குடும்பத்துடன் திருப்பதி திருமலை சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் கடைத்தெருவில் பொருட்கள் வாங்கும்போது 'அன்னமய்யா' படத்தின் பாடல்கள் அடங்கிய காஸ்ட் வாங்கத் தோன்றவே ,வாங்கினோம். அதன்பிறகு, தினமும் காலையில் 'அன்னமய்யா' கேட்டோம்.

பாடும் நிலா பாலு என்றழைக்கப்படும் எஸ்பிபி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பல பக்தி பாடல்களும் அதில் சேரும். 'அன்னமய்யா' படத்தில் அவர் பாடிய பாடல்கள் ஆகச்சிறந்த 'பெஸ்ட்' என்பேன்.  இதோ கீழே உள்ள காணொளியில்  'அன்னமய்யா' படத்தில் இடம்பெற்ற பாடலை கேட்டு மகிழுங்கள் :




நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 
 

*('பாகுபலி' படங்கள் தந்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் குரு)

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-92

'சிகப்பு மலர்கள்' (1986)

யக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய அரசியல் படங்கள் எண்பதுகளில் பிரபலம். விஜயகாந்த்தை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர். எனக்கு இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படம் பிடிக்கும்.

1983-ஆம் ஆண்டுச் சுரேஷ், காயத்ரி, சந்திரசேகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'சிகப்பு மலர்கள்' என்ற சுமாரான படத்தில் விச்சு டார்லிங் இசையில் தாசேட்டன் பாடிய ''ஒரு பொம்மலாட்டம் நடக்குது ,," என்ற இனிமையான பாடல் உள்ளது.

வகுப்பு தோழன் முத்து வகுப்பில் பாடச் சொன்னால் இந்தப் பாட்டை வரி பிறழாமல் பாடுவான். அப்போது சென்னை தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் இந்தப் பாடலை அடிக்கடி ஒளிபரப்புவார்கள். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்கள்:
 
 
 
நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

 
 

Saturday, 22 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-91

'கரும்பு வில்'

'கரும்பு வில்' - இணையத்தில் தேடியபோது இந்தப் படத்தைப் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பெரியவர்களிடம் கேட்டபோது பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது, படத்தின் கதை மறந்துவிட்டதென்றார்கள். அப்போது சுதாகர் நடித்த ஏகப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருந்ததால், மறந்திருக்கலாம். பிறகு ஏன் தெலுங்கு பட உலகுக்குச் சென்றார் என்று தெரியவில்லை.

எங்கள் மாமா ஆசையாக டேப்பை ரெகார்டரில் 'பொண்ணு ஊருக்கு புதுசு' படத்தில் வரும் "ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது" பாடலை திரும்பக் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்.

'கிழக்கே போகும் ரயில்' படம் முதல்முதலாகச் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஊரே தொலைக்காட்சி பெட்டி முன் உட்கார்ந்து படம் பார்த்தது ஞாபகம் இருக்கிறது.

"மீன்கொடி தேரில் மன்மதராஜன்...." - இரவு சென்னை வானொலியில் விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் பாடகி திருமதி ஜெனிசி அல்லது தாசேட்டன் பாடிய இந்தப் பாடல் சன்னமான ஒளியில் காதில் பாய, அம்மா உணவு பரிமாறுவாள். இது போல எத்தனையோ பாடல்கள், மறக்கமுடியாத நாட்கள் அவை. இந்தப் பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை.

என்ன ஒரு Grand Orchestra, கோரஸ்  பாருங்கள், கோரஸ். என்ன ஒரு தரம், பாடல் வரிகள் தனியாக, இசை தனியாகப் பயணிக்கிறது. உங்களுக்குத் தாசேட்டன் பாடிய பாடல் பிடிக்குமா, ஜெனஸி பாடிய என்று கேட்டல் உங்களால் பதில் சொல்ல முடியாது, காரணம் இரண்டுமே இப்போதும் புத்தம் புதிய பாடல் போல
ஜொலிக்கிறது.

நண்பர் சொன்னது: "இரவு கண்ணை மூடி இந்தப் பாடலை கேட்டு ரசி. குதிரைகள் பூட்டிய தேரில் உன்னை ராஜா அழைத்துச் செல்வதை உணர்வாய். அது மட்டுமா, ராஜாவைத்தான் குதிரைகள் பூட்டிய தேரில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் இங்கே ராஜாவே உன்னை அழைத்துச் செல்கிறார். Enjoy.

நீங்களும் பயணத்துக்குத் தயாரா ?

 

 
 
நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-90

வட்டத்துக்குள் சதுரம்(1978)

பாட்டைக் கேட்டுக் கலங்குபவர்கள் உண்டா ?

எங்கள் வீட்டில் அப்படி ஒரு நபர் உண்டு. அவள் என் அக்கா.

என்னுடைய மூத்த சகோதரி ரொம்ப எமோஷனல் சுபாவம். அவருக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தார். எங்கள் பெரியப்பா வீட்டுக் காம்பௌண்டில், பக்கத்து வீட்டுக்குக் கோடை விடுமுறையில் அவர் வருவார். அவள் வரவு அக்காவுக்கு மிகுந்த உற்சாகம் தரும். சாப்பிடுவது, தூங்குவது தவிர, அக்காவும் அவரும் ஒன்றாக விளையாடுவது, குளத்தங்கரைக்குத் துணி துவைக்கப் போவது, கோவிலுக்குப் போவது என ஒரு மாதம் ஒன்றாக இருப்பார்கள். எப்போதும் தொண, தொணவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாது. அடிக்கடி சிரித்துக்கொள்வார்கள். அவள் விடுமுறை முடிந்து ஊருக்குச் சென்ற அடுத்த மூன்று நாளுக்கு அக்கா 'உம்மென்று' இருப்பாள். சகஜ நிலைக்குத் திரும்பச் சில நாட்கள் ஆகும்.

பிறகு ஒரு நாள், பக்கத்துக்கு வீட்டுக் குடும்பமும் காலி செய்துகொண்டு போய்விட, பிறகு தொடர்பு விட்டுப் போனது. எப்போதாவது அவளுடைய தோழியைப் பற்றிக் கேட்டால், சோகமாகிவிடுவார்.

நான் இரண்டு பாடலுக்கு எமோஷனல்-ஆவதுண்டு 

ஒன்று :

"அங்கஜூனி கண்ண ம  யன்ன  யது  ரா ரா 
பங்காரு  கிண்னெலோ  பாலு போசேரா  |

எம்எஸ் அம்மா பாடிய 'அன்னமாச்சார்யா' கீர்த்தனையான "ஜோ அச்சுயுதாந்தா..." பாடலில் வரும் மேற்சொன்ன வரிகள் கேட்கும்போது காரணம் தெரியாமல் நானும் கலங்குவதுண்டு. 

இரண்டு :

எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடிய  "கருணை உன்னால் கொண்டவளே கருமாரியம்மா .." என்ற பாடலை கேட்கும்போதும் அப்படி தான்.

தெய்வீக குரல் என்று சொல்வார்களே அது தானோ என்னவோ......

சரி விசயத்துக்கு வருவோம்.... சமீபத்தில் அக்காவிடமிருந்து எனக்குத் தொலைப்பேசி அழைப்பு, அக்காவின் அந்தத் தோழி தொலைப்பேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசியதாக உற்சாகமாகச் சொன்னாள். இந்தத் தொழினுட்ப யுகத்தில் யாரையும், உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கண்டுபிடிக்கலாம் என்பது அக்காவுக்குத் தெரியாது போல..

நீண்ட கால நட்பைப் பெண்கள் தொடருவது அரிதான ஒன்று. என்னுடன் ஒரே பள்ளியில் பத்து வருடம் எல் கே ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த என்னுடைய வகுப்பு நண்பர்-நண்பிகளையும் பல சிரமங்களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்து வாட்ஸாப்ப் குழுவில் இணைத்துள்ளேன். தோழிகள் ஒருவரை ஒருவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் எனக்கு நன்றி சொல்லும்போதே தெரிகிறது. வகுப்பில் ஒன்றாக இருப்பது போல ஒரு பீல் கிடைக்கிறது. சென்ற வருடம் செப்டம்பரில் சந்திப்பு விழா நடைபெற்றது மறக்கமுடியாத அனுபவமாயிற்று. கொரோனா காலத்தில் இந்த வருடம் சந்திப்பு விழா நடத்தமுடியும் என்று தெரியவில்லை. இன்னும் கூடப் பல நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அக்காவைக்  கலங்கவைத்த  அந்தப் பாடல், இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்கள் இயக்கிய 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தில் திரு பஞ்சு அருணாச்சலம் எழுதி, ராஜா சார் இசையமைத்த ஜானகி, சசிரேகா மற்றும் உமாதேவி ஆகியோர் பாடிய பாடலான "இதோ இதோ என் நெஞ்சிலே ".
 


நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

Wednesday, 19 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-89

'சட்டம்' (1983)

தாசிரியர் / இயக்குநர் / பாடலாசிரியர் / இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட திருக் கங்கை அமரன் அவர்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களை இசையமைத்திருக்கிறார். 'மௌன கீதங்கள்', 'வாழ்வே மாயம்', 'சுவரில்லாத சித்திரங்கள்' போன்ற படங்களின் இடம்பெற்ற படப்பாடல்கள் இன்றும் கேட்கலாம்.

கமல் போலீஸ் வேடம் ஏற்று நடித்த முதல் படம் 'சட்டம்' என்று நினைக்கிறேன்?. திருக் கே பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் கே விஜயன் இயக்கி, கமல், மாதவி நடித்து 1983-வெளிவந்த படம். நல்ல கதையம்சமுள்ள படம் எந்த மொழியில் ஓடினாலும், அந்தக் கதையை வாங்கி, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றி, படத்தை எடுத்து வெளியிடுவது கே பாலாஜியின் வழக்கம். இதுவும் ஹிந்தியில் வெற்றி பெற்ற 'தோஸ்தானா' படத்தின் ரீமேக் தான். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் கதை. கங்கை அமரன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிரபலம் அடைந்தது. சென்னை தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் திருமதி வாணி ஜெயராம் மற்றும் திரு எஸ்பிபி பாடிய இனிய பாடலான 'வா வா என்ன வீணையே என்ற பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. வாருங்கள் அந்தப் பாடலை கேட்போம் :



நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி  


 

Tuesday, 18 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-88

புது நெல்லு புது நாத்து(1991)

கேள்வி-பதில் பாடல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இருவர் பாடுவது. ஒருவர் கேள்வியைத் தொடுப்பது மற்றொருவர் பதிலளிப்பது எனப் பேச்சு வழக்கிலோ அல்லது கவிதை நடையிலோ இருக்கும். எனக்குத் தெரிந்த கேள்வி-பதில் பட்டியல் கீழே, வேறு எதாவது பாடல் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் :

"சீர்மேவும் குருபதம்.." (சக்ரவர்த்தி திருமகள்)
"என் கேள்விக்கென்ன பதில்.." (உயர்ந்த மனிதன்)
கேள்வியையே பாடலாக "கொடியசைந்ததும் காற்று வந்ததா?" 
                                                            (பார்த்தால் பசி தீரும்)
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் .."  (இரு கோடுகள்)
"இதோ இதோ என் நெஞ்சினிலே.. " (வட்டத்துக்குள் சதுரம்)
"என்னம்மா கண்ணு" (மிஸ்டர் பரத்)
"எடுத்து நான் விடவா" (புது புது அர்த்தங்கள்)

சரி விசயத்துக்குப் வருவோம், 'புது நெல்லு புது நாத்து' - என்ன ஒரு அழகான தலைப்பு, இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய இப்படத்தில் ராஜாவின் இசையில் வந்த எல்லாப் பாடல்களும் பிரபலமானவை தான். ஆனால் இரண்டு பெண்கள் தங்கள் ரகசியங்களை / ஏக்கங்களைக் கேள்வி-பதில் மூலம் பகிர்ந்துகொள்ளும், கவிஞர் முத்துலிங்கம் இயற்றிய இப்பாடலை, எம் எஸ் சித்ரா மற்றும் உமா ரமணன் அவர்கள் பாடிய "ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி .." என்ற பாடல் எனக்குப் பிடிக்கும். காரணம் எதுவும் இல்லை அல்லது சொல்லத் தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். சென்னை மற்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

"புது நெல்லு புது நாத்து பொங்கலுக்கு காத்திருக்கு .. 
புது பொண்ணு இது ரெண்டும் மாமன் சொல்லுக்கு காத்திருக்கு"..

- என்ற மனதை வருடும் வரிகள் மற்றும் இனிய இசை உயிரையே உருக்குகிறது. நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :




நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி  



மரபு கட்டுமான வீடு - பகுதி - 3

மரபு கட்டுமான இல்லத்தில் வசிக்கும் படேல் குடும்பம் 8 ஆண்டுகளில் குடிநீர் மற்றும் மின்சார கட்டணங்களைச் செலுத்தவில்லை. எப்படி?

மேற்கொண்டு படியுங்கள் ......

இந்த சூப்பர் கூல் #SustainableHome #Carbon Omission குறைந்த, சுற்றுசூழலுக்கு உகந்த உயர்தரமான மரபு கட்டுமான தொழிற்நுட்பத்தால் கட்டப்பட்டது.  கழிவுநீர் தொட்டி தேவையில்லை, மேலும் இயற்கை ஏர் கண்டிஷனிங் தனித்துவமான அமைப்பையே கொண்டுள்ளது!

உங்கள் சரணாலயம் என்று அழைக்கக்கூடிய இல்லம்.  அன்றாட வாழ்க்கையின் சலசலப்பிலிருந்து ஒதுங்கி  ஓர் இடத்தில் வாழ்வதைக் கற்பனை செய்து பாருங்கள். சினேகல் படேல் எப்போதும் இயற்கையின் மடியில் ஒரு வீட்டை கற்பனை செய்து வைத்திருந்தார். நினைத்தது போலவே, கடந்த எட்டு ஆண்டுகளாக, சூரத்தை தளமாகக் கொண்ட இந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் இந்த மரபு வீட்டில் வசித்து வருகிறார்.

அவரது வீடு முற்றிலும் ஆஃப்-கிரிட் மற்றும் நீர் வடிகால் இல்லை. அதற்கு பதிலாக, இது காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களால் இயக்கப்படுகிறது, மேலும் மழைநீர் சேகரிப்பால் அவரது நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. கூடுதலாக, வீட்டிலிருந்து வெளியேறும் நீரும் சுத்திகரிக்கப்பட்டு  கழிப்பறைகளில் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் கறுப்பு நீர் வடிகட்டப்பட்டு, காய்கறி தோட்டத்திற்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

நம் சக்திவாய்ந்த, பூமிக்கு உகந்த நச்சுத்தன்மையற்ற பொருட்களைத் தேர்வு
செய்து ஒரு  ‘சிறந்த வீட்டை' உருவாக்கி, உணர்வுடன் கட்டமைக்கப்பட்டு இயற்கையில் வேரூன்றியுள்ளது. வீட்டில் வசிக்கும் இளம் வயதினர், முதியோர், குழந்தைகள், செல்லப்பிராணிகள் பாதுகாப்பானவை.

இயற்கையுடனான சினேகலின் ஆழமான தொடர்பு அவரது குழந்தைப் பருவத்தோடு தொடர்புடையது. அவர் கூறுகிறார் :

“என் தந்தை எங்கள் குடும்ப பயணங்களுக்காகக் குஜராத்தில் உள்ள டாங்ஸ் வனப்பகுதிக்கு எங்களை அழைத்துச் செல்வார், நான் தொடர்ந்து அங்கு செல்வேன். நான் 1983 இல் மணிப்பாலில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தபோது, நகரம் அதன் பசுமையை இழந்து வருவதைக் கண்டேன். மணிப்பால் உண்மையில் பச்சை நிறமாக இருந்தது, சூரத்துக்கும் அது தேவை என விரும்பினேன், ”

சிறிய விலங்கினங்களைப் பாதுகாக்கும் தீர்மானத்துடன், அவர் 1984 இல் சூரத்தில் நேச்சர் கிளப்பை நிறுவினார். குழுவில் சுமார் 2,000 உறுப்பினர்கள் உள்ளனர், இப்போது பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாக உள்ளது.

"நான் 1996 இல் 4 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். மரங்களை நடவு செய்ய ஆரம்பித்தேன், ஒரு நாள் இங்கு வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆகவே, வீட்டை வடிவமைப்பதற்கும் திட்டமிடுவதற்கும் வந்தபோது, நான் பல ஆண்டுகளாக நினைத்ததை நடைமுறைக்குக் கொண்டுவந்தேன், ”என்கிறார் 60 வயதான சிநேஹல்.

வீட்டின் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்யும் கூரையில் சூரிய மற்றும் காற்று சக்தி அமைப்பு.

பசுமையான கட்டிடங்களை நிர்மாணித்து வந்த கட்டிடக் கலைஞர் ஃபால்குனி
தேசாயிடம் தனது அனைத்து தேவைகளையும் பட்டியலிட்டார்.  தேசாய் அவரது கனவுக்கு  உயிரூட்டினார்.

"எனக்கு பசுமை வீட்டின் மீது ஆர்வமுள்ள ஒரு வாடிக்கையாளர் கிடைத்தார், அவர் விரும்பியதைச் சரியாக அறிந்திருந்தார். சினேகல் படேல் தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்களுடன் ஒரு விரிவான சுருக்கத்தை எனக்கு
கொடுத்தார். மிக முக்கியமாக, அவர் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பதை அவரது எண்ணங்கள் நிரூபித்தன, ”என்கிறார் 55 வயதான சூரத்தை தளமாகக் கொண்ட கட்டிடக் கலைஞர், ஏட்டர்ரெய்ன் நிறுவனத்தை நடத்தி வரும் திரு தேசாய்.

இரண்டு மாடி வீட்டின் (தரை தளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கிய 12,000 சதுர அடி பரப்பளவு) கட்டுமானம் முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. இது 5,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. இப்போது, 70 வகையான சுமார் 700மரங்கள், நிலத்தடி நீர் பெருக்கத்திற்கு வசதியாக ஒரு குளத்துடன் உள்ளன.

சினேகலும் அவரது குடும்பத்தினரும் எட்டு ஆண்டுகளாக இந்த மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகின்றனர். பயன்படுத்தப்பட்ட அனைத்து மரங்களும் தனித்துவமான தொழினுட்பங்களைப் பயன்படுத்தி உயர்த்தப்பட்டுள்ளன, எனவே வீடு குளிர்ச்சியாக இருக்கிறது. பெரிய ஜன்னல்கள் வீட்டைச் சுற்றி இயற்கை ஒளி மற்றும் போதுமான காற்றோட்டத்தை அனுமதிக்கின்றன

சினேகலும் ஃபால்குனியும் வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக
எடுத்துச் செய்தார்கள்.

திறமையான மற்றும் வள சேமிப்பு

கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க, சினேகல் படேல் ஆஃப்-கிரிட் செல்ல முடிவு செய்தார். சுற்றுச்சூழல் இல்லத்தில், வீட்டின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய 7.5 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

“இங்கே, சோலார் பேனல்கள் ஒரு கோணத்தில் நிறுவப்பட்டு, நேரடியாகக் கூரையில் வைக்கப்படுகின்றன, எனவே அவை அதிகபட்ச சூரிய சக்தியை உறிஞ்சுகின்றன. மழைக்காலங்களில், சூரிய உற்பத்தி குறைவாக இருக்கலாம், எனவே, ஒரு காற்றாலை ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளது, ”என்கிறார் சினேகல்.

கூடுதலாக, வீட்டிலுள்ள நீர் மேலாண்மை அமைப்பு தனித்துவமானது. இது நீர்
விநியோகத்திலிருந்து சுயாதீனமாக இருப்பது மட்டுமல்லாமல், கழிவுநீரை  திறம்பட மறுபயன்படுத்துவதும் தண்ணீரை மிச்சப்படுத்துகிறது. கூரையில் உள்ள ஒரு நீர் தொட்டி ஒரு துணி வடிகட்டியுடன் வடிகட்டப்பட்ட மழைநீரை சேமிக்கிறது, இது சமையலறைகளிலும் குளியலறைகளிலும் குழாய்களில்
பயன்படுத்தப்படுகிறது.

கூரை நீர் தொட்டி நிரம்பியதும், நீர் ஒரு சேனல் வழியாக கீழே பாய்ந்து தரை தளத்தில் உள்ள மற்றொரு தொட்டியுடன் இணைகிறது, இது இரண்டு லட்சம் லிட்டர் நீரை சேமிக்க முடியும். நீர் சேமிப்பு தொட்டியை அடைவதற்கு முன்பு, சரளை, மணல், கரி மற்றும் ஒரு சல்லடை ஆகியவற்றின் மூலம் வடிகட்டப்படுகிறது.

இந்த தொட்டி நிரப்பப்பட்ட பிறகு, நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதல் தண்ணீரை வெளியேற்ற ஒரு தொட்டி உள்ளது. இயற்கையான செயல்முறையையே பிரதிபலிக்கும் வகையில் இங்குள்ள தொட்டியில் தரை செங்கல், சரளை மற்றும் மண்ணால் நிரப்பபட்டுள்ளது.

"சலவை இயந்திரங்களிலிருந்து சாம்பல் நீர் இயந்திரத்தின் கீழே ஒரு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சம்ப் பம்ப் மற்றும் பைப்லைன் உதவியுடன், இந்த நீர் வீட்டைச் சுற்றியுள்ள கழிப்பறைப் பாய்ச்சல்களில் பயன்படுத்தப்படுகிறது, ”என்று படேல் தெரிவிக்கிறார்.

தாவரங்களைப் பயன்படுத்தி நீர் சுத்திகரிக்கப்படும் வீட்டில் குளம்

இந்திய நகர்ப்புற வீடுகளில் உள்ள கழிவுநீரில் 80 சதவீதம் நரைநீர் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதன் பொருள் இந்த நீரை மறுசுழற்சி செய்வது நம் வீடுகளில் ஒட்டுமொத்த நீர் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஒவ்வொரு நாளும் நாட்டில் சுமார் 38,000 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது என்று மதிப்பிடுகிறது, ஆனால் ஒரு நாளைக்கு 12,000 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் திறன் மட்டுமே நம்மிடம் உள்ளது.

தி இந்து பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஒரு நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு சராசரி இந்தியர் ஒவ்வொரு நாளும் சுமார் 180 லிட்டர் நீரை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது பற்றி நிபுணர்கள் பேசினர், இதில் 45-50 லிட்டர் கழிப்பறை சுத்தப்படுத்துவதற்கு மட்டும் செலவிடப்படுகிறது. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி முறைகளை இணைக்க அவர்கள் பரிந்துரைக்கின்றனர், அவை மதிப்புமிக்க வளங்களைத் திறம்பட பயன்படுத்த உதவுவதோடு நிலத்தடி நீர் மாசுபடுவதையோ அல்லது நீர்நிலைகளை மாசுபடுத்துவதையோ தடுக்கின்றன.

வீட்டிற்குள் எந்த கழிவுநீர் இணைப்பும் இல்லை மற்றும் குளியலறையிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது (வாஷ்பேசின்கள் மற்றும் குளிக்கும் பகுதி). மணல் மற்றும் ஹைசின்த்ஸ், டக்வீட் மற்றும் நீர் கீரை போன்ற தாவரங்களைப் பயன்படுத்தி ஒரு பயனுள்ள ரூட் மண்டல வடிகட்டுதல் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தாவரங்கள் தண்ணீரைச் சுத்தம் செய்ய உதவுகின்றன.

இந்த தாவரங்கள் ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்யப்பட்டு வீட்டு தோட்டத்தில் உரமாகச் சேர்க்கப்படுகின்றன, அதே நேரத்தில் தண்ணீர் மற்றொரு தொட்டியில் நுழைகிறது, அங்கு நீர் குடை மற்றும் நீர் லில்லி தாவரங்களை பயன்படுத்தி ஆக்ஸிஜன் சேர்க்கப்படுகிறது.  உட்புறங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் வீட்டின் உள்ளே மற்றொரு குளம். குளத்தில் உள்ள சிறிய குப்பி மீன்கள் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்கின்றன.

கழிப்பறைகளிலிருந்து வரும் கறுப்பு நீர் தொட்டியில் சேர்த்து வைக்கப்படுகிறது. திடப்பொருள்கள் குடியேறியதும், தண்ணீர் வடிகட்டப்பட்டு தோட்டத்தில் நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திடப்பொருள் உரம் ஆக மாற்றப்படுகிறது.

வீட்டைச் சுற்றி தனித்துவமான அமைப்பு

மின்சாரத்தைத் திறம்படப் பயன்படுத்த, பெரிய ஜன்னல்கள் பகலில் போதுமான வெளிச்சத்தை ஏற்படுத்தி வீட்டைக் காற்றோட்டமாக்குகின்றன. மேலும், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உள்ளூரில் தருவித்தவை.

கூரையில் உள்ள தாவரங்கள் உட்புறங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன.

வெட்டுதல் மற்றும் மெருகூட்டும்போது குறைந்த ஆற்றலை உட்கொள்வதால் மாடிகள் கோட்டா கற்களால் (விட்ரிஃபைட் ஓடுகளுக்கு மாறாக) பயன்படுத்தப்பட்டது.

இடிக்கும் தளங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட தரமான மரம் அனைத்தும் வணிகர்களிடமிருந்து வாங்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள ஆலங் ஷிப் பிரேக்கிங் யார்டில் இருந்து சில மரங்களும் எடுக்கப்பட்டுள்ளன. கப்பல்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரம் மிகவும் நல்ல தரம் வாய்ந்தது, அதனால்தான் அதைப் பயன்படுத்த முடிவு செய்தோம்” என்று சினேகால் தெரிவிக்கிறார்.

சுவர்கள், மறுபுறம், பிளாஸ்டெர் செய்யப்படாதவை மற்றும் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தவில்லை. "எலி-பொறி பிணைப்பு சுவர் கட்டுமான முறையை நாங்கள் பயன்படுத்தினோம், இது குறைவான செங்கற்களைப் பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாப்பானவை " என்று ஃபால்குனி தேசாய் கூறுகிறார்.

இந்த நுட்பத்தில், செங்கற்கள் கிடைமட்டமாக இல்லாமல் செங்குத்தாக வைக்கப்படுகின்றன, சுவர் கட்டமைப்பிற்குள் ஒரு வெற்று இடத்தை விட்டு விடுகின்றன.

வீட்டிற்குள் மீன் மற்றும் நீர் வாழ் தாவரங்களைக் கொண்ட ஒரு சிறிய குளம் குளிர்ச்சியாக இருக்கும். "படுக்கையறைகளைக் குளிர்விப்பதற்காக, நாங்கள் தரை தளத்தில் உள்ள மழைநீர் சேமிப்பு தொட்டிகள் வழியாகக் குழாய்களைக் கடந்து சென்றோம். இந்த குழாய்கள் அறைக்குள் திறந்து இறுதியில் 30 வாட் மின்விசிறியுடன் இணைகின்றன. விசிறிகள் இயக்கப்படும் போது, குழாயில் உள்ள குளிர்ந்த காற்று (அதைச் சுற்றியுள்ள நீர் காரணமாக) இயற்கையான ஏர்-கண்டிஷனிங் வழங்குகிறது, ”என்று சினேகல் விளக்குகிறார்.

மேலும், ஒவ்வொரு அறையிலும் சாய்வான கூரைகளும் சூடான காற்றை வெளியேற்ற விசிறிகளும் உதவுகின்றன. உட்புறங்களைக் கிட்டத்தட்ட 3-4 டிகிரி குளிராக வைத்திருக்கும் மற்றும் கூரையிலிருந்து சூரிய ஒளியை பிரதிபலிக்கும் சிறப்புப்  பீங்கான் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி கூரைகள் வரையப்பட்டுள்ளன. கட்டிடத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் மரங்களை நட்டு கூரையின் சில பகுதிகளில் சூரிய ஒளியைத் தடுக்கின்றன மற்றும் உட்புறங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன.

வீட்டின் மற்றொரு அம்சம், கட்டிடக் கலைஞருக்கு மிகவும் பிடித்தது, பறவைகள் தங்கள் கூடுகளை உருவாக்க வெளிப்புற சுவர்களில் (2.5-4 அங்குல
விட்டம் கொண்ட பி.வி.சி குழாய்களைப் பயன்படுத்தி) உருவாக்கப்பட்ட இடங்கள். துளைகளுடன் கூடிய மரத் துண்டுகள் உள்ளன, குளவிகளுக்கு வெளியே தொங்கவிடப்படுகின்றன, மேலும் சிறிய பூச்சிகள் கூடு கட்டப்படுகின்றன. பறவைகளுக்கான சுவரில் கூடு கட்டும் இடங்கள்

உட்புறங்களைப் பொறுத்தவரையில், அனைத்து தளபாடங்களும் தேக்கு மற்றும் மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளூர் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன, இது மர தளபாடங்களை விட நீடித்தது. RO வடிப்பான்கள் எதுவும் இல்லை மற்றும் ஐந்து செப்புப் பானைகளைப் பயன்படுத்தி இயற்கை வடிகட்டி தயாரிக்கப்படுகிறது. தேங்காய் கரி, பளிங்கு சில்லுகள், வெள்ளை மணல் மற்றும் வெள்ளி நாணயங்களின் அடுக்குகள் வழியாக நீர் கடத்தப்படுகிறது.

"வெள்ளி மற்றும் தாமிரம் நீரிலிருந்து பாக்டீரியாக்களை அகற்ற அறியப்படுகின்றன. இந்த வடிப்பானுக்கு மின்சாரம் தேவையில்லை அல்லது RO வடிப்பான்களைப் போலல்லாமல் தண்ணீரை

வீணாக்காது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை வடிகட்டுதலுக்கான கூறுகளை மாற்றினால் போதும் ”என்று அவர் கூறுகிறார்.

சவால்களைப் பற்றி நீங்கள் ஃபால்குனியிடம் கேட்டால், "அப்படி எதுவும் இல்லை" என்று அவர் கூறுகிறார். ஏனென்றால், வாடிக்கையாளர் தான் விரும்பியதைப் பற்றி மிகவும் தெளிவாக இருந்தார், மேலும் அவர் ஏற்கனவே ஒரு குழுவைக் கொண்டிருந்தார், அது நிலையான கட்டுமான நுட்பங்களை நன்கு அறிந்திருந்தது.

"உண்மையில், ஒரு சூழல் உணர்வுள்ள வீட்டைக் கட்டியெழுப்புவதில், வாடிக்கையாளரின் அக்கறையே ஒரு சரியான மாதிரியாகும்," என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், சினேகல் கூறுகையில், வீடு கட்ட மூன்று வருடங்கள் ஆனது,

“நாம் வாழும் வீடு இயற்கையிலிருந்து நம்மைத் துண்டிக்கக் கட்டப்படக்கூடாது. இயற்கையுடன் இயைந்த வாழ்வே கட்டவேண்டும்" என்கிறார் அவர்.

மரபு கட்டுமான வீடு பற்றிய அடிப்படை புரிதலுக்கு கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்:

மரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை

மரபு கட்டுமான வீடு கட்ட தேவையான தகவல்களை பெற கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் :


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி   

Monday, 17 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-87

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் கசபா தாதாசாஹேப் ஜாதவ்

னவரி 15, 1926 அன்று சதாராவில் ஒரு மகாராஷ்டிரா மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் பிறந்தார் கசபா தாதாசாஹேப் ஜாதவ். அவரது தந்தை தாதாசாகேப், ஒரு மல்யுத்த வீரர், ஜாதவை ஐந்து வயதிலேயே விளையாட்டிற்குத் தயார்ப்படுத்தினார். ஆரம்பக் கல்விக்காகத் தனது கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராட்டில் உள்ள திலக் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

1948-ஆம் ஆண்டில், கோலாப்பூரின் ராஜா ராம் கல்லூரியில் ஜாதவ் படிக்கும் போது, விளையாட்டு ஆசிரியர் தனது உடலமைப்பைப் பார்த்து நிராகரித்ததை அடுத்து, வருடாந்திர விளையாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி கல்லூரி முதல்வரை அணுகினார். இறுதியாக அனுமதிக்கப்பட்டபோது, அவர் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை வீழ்த்தித் திகைப்பில் ஆழ்த்தினார்.

தனது ஆரம்பப் பயிற்சி ஆண்டுகளில், 1948 மற்றும் 1952 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்பு, ஜாதவ் மல்யுத்த வீரர்களான பாபுராவ் பாலாவ்டே மற்றும் பெலாபுரி குருஜி ஆகியோரால் பயிற்சி பெற்றார்.

ஆனால், 1952 ஒலிம்பிக்கிற்கு முன்பு, ஜாதவ் நிதி சிக்கலை எதிர்கொண்டார்.

அவரது மகன் ரஞ்சித் ஜாதவ் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார், “பாபா (1952) ஹெல்சின்கி ஒலிம்பிக்கிற்கான தனது பயணத்திற்கு, அங்குத் தங்குவதற்குச் சில நிதி உதவிகளை விரும்பியபோது, பாட்டியாலா மகாராஜா, (அப்போதைய பம்பாய் முதலமைச்சர்) மொரார்ஜி தேசாய், கல்லூரியின் முதல்வர், மற்றவர்களும் பங்களித்தனர் மற்றும் பிற தேவைகளைக் கவனித்தனர். அவர் தனது சொந்த வீட்டை அடமானம் வைத்தும் கொஞ்சம் பணம் சேர்த்தார்.

1952-ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் மெக்சிகோ, கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வீரர்களைச் சில நிமிடங்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் மற்றும் இந்த மேடையில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இன்று போலல்லாமல், வீரர்களை நிறைய ஊடக கவனத்துடன் வரவேற்கும்போது, ஜாதவை குறிப்பிடத்தக்க சாதனையின் பின்னர்த் தனது சக கிராமவாசிகள் மட்டுமே வரவேற்றனர்!

அதன் பிறகு மகாராஷ்டிரா முதல்வர் பாராட்டியது, போலீஸ் வேலை வழங்கியது என நடந்தது.

2001-ஆம் ஆண்டில் ஜாதவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. புனேவைச் சேர்ந்த எழுத்தாளர் சஞ்சய் துதானே, அதே ஆண்டு ஒலிம்பிக் வீரர் கசபா ஜாதவ் என்ற தலைப்பில் ஒரு சுயசரிதை வெளியிட்டார்.

2010-ஆம் ஆண்டில், தலைநகர் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் உள்ள மல்யுத்த மைதானம் கே டி ஜாதவ் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டது.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    


Sunday, 16 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-86


டிஸ்கோ இசை / டிஸ்கோ ராஜா (2020)

மீபத்தில் வந்த சிறந்த இசை தொகுப்பு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையில், 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் பொங்கலன்று வெளியான 'டிஸ்கோ ராஜா' படப் பாடல்கள். எஸ்பிபி பாடிய "நுவ்வு நாத்தொ எமன்னாவோ" என்ற இனிமையான பாடல் ராஜா சார் இசையை நினைவூட்டியது. இடைவேளைக்குப் பிறகு ரவி தேஜா டிஸ்கோ ராஜாவாகப் பட்டையைக் கிளம்புவார். குறிப்பாக எண்பதுகளின் இசையை ஞாபகப்படுத்தும் "Freak Out..." டிஸ்கோ பாடல் என்னை எண்பதுகளுக்குக் கொண்டு சென்றது. 

இந்தியாவை அதிரவைத்த டிஸ்கோ இசையைப் பற்றி தேடுகையில் ஒரு சின்னப் பிளாஷ்பேக் கிடைத்தது, வாருங்கள் பயணிக்கலாம்....

ஹாலிவுட் நடிகர், பாடகர் மற்றும் நடனமாடுபவர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஜான் டிராவோல்டா அமெரிக்காவை டிஸ்கோ நடனத்திற்கு அழைத்துச் சென்றார். எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒரு புதிய வகையான, செழிப்பான டிஸ்கோ இசை புகழ் திடீரென அதிகரித்தது. பீ-கீஸ் இசைக்குழு தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. மெல்ல அதன் தாக்கம் எண்பதுகளில் பாலிவுட்டை வந்தடைந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் இசை தயாரிப்பாளர் பித்து தயாரித்த "ஆப் ஜெய்சா கோய்..." பாடலை 15 வயதான பாகிஸ்தான் பாடகி நாசியா ஹுசைன் பாடினார். அவர் இந்தியாவில் முதல் டிஸ்கோ அலைக்குக் குரல் கொடுத்தார். கிளாசிக் "டிஸ்கோ திவானே" - விற்கும் ஹுசன் தனது குரலைக் கொடுத்தார். இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.  

கரண் ஜோஹரின் "ஸ்டுடென்ட் ஆப் தி இயர்" படத்தில் இடம்பெற்ற ரீமேக் பாடலான ‘தி டிஸ்கோ’ பல மாதங்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, பாலிவுட் டிஸ்கோ இசை மற்றும் அதன் பெருமைக்கு நாசியா ஹுசைனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். உண்மையில், அவரது பாடல்கள் 80களின் டிஸ்கோ சகாப்தத்திற்கு வித்திட்டது. இந்தி-பாப்புடனான பாலிவுட்டின் உறவை உறுதிப்படுத்தின. "ஆப் ஜெய்சா கோய்.." சூப்பர்-ஹிட் பாடலாகவும், 'குர்பானி' சூப்பர் ஹிட் திரைப்படமாகவும் மாறியது. இது பாலிவுட்டின் இசையில் புதிய போக்கை உருவாக்கியது.

பாலிவுட்டின் வழக்கமான இசையுடன் டிஸ்கோ கலந்தது: ஒளிரும் விளக்குகள், வண்ணமயமான நடன தளங்கள், பளபளப்பான ஆடை, எரியும் பெல் பாட்டம்ஸ், பளபளப்பான ஹெட் பேண்ட்ஸ் மற்றும் கனமான குரல்கள். டிஸ்கோ டான்சர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி இந்தியாவின் ஜான் டிராவோல்டாவாக மாறினார். நிறையப் பாலிவுட் டிஸ்கோ படத்தில் அவர் இடம்பெற்றார்.

"ஆப் ஜெய்சா கோயி.."- யில், அழகான ஜீனத் அமன், ‘டிஸ்கோ ஸ்டேஷன்’ பாடலில் ஒரு பளபளப்பான புடவையில் நடனம் ஆடிய அழகிய ரீனா ராய், "பியார் கர்னே வாலி.." பாடலில் பர்வீன் பாபி, "ஜூம் ஜூம் ஜூம் பாபா..." பாடலுக்கு நடனமாடிய சல்மா ஆகா, பாடிய ஆஷா போன்ஸாலே, இசையமைத்த பப்பி லகரி என டிஸ்கோ இசைக்கு வலு சேர்த்தார்கள்.

'நமக் ஹலால்' மற்றும் 'ஹிம்மத்வாலா' போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்குத் தனது இசையை வழங்கிய பாப்பி லகரி, ‘80 கள் மற்றும் ‘90 களின் இசை ஆளுமை. பப்பி லகரியைக் குறிப்பிடாமல் டிஸ்கோ இசையைப் பற்றி எழுத முடியாது. பாலிவுட்டில் டிஸ்கோ ஒருபோதும் ‘80களில் கிடைத்த வெற்றியைக் கண்டதில்லை.

2000-களின் ரீமேக்குகள் மற்றும் ரீமிக்ஸ் ஆகியவை டிஸ்கோவை மீண்டும் கொண்டு வந்தன, ஆனால் ‘80 களின் இசையிலிருந்த ஜீவன் இல்லை. நாசியா ஹுசைனின் மயக்கும் குரல் அல்லது மிதுனின் உன்னதமான நடன அசைவுகளாக இருந்தாலும், ‘80 களின் டிஸ்கோ இசை எப்போதும் பாலிவுட்டில் மறக்க முடியாத சகாப்தமாக இருக்கும்.

கொசுறு:

தமிழ் சினிமாவில் 80களில் மெலடி இடியுடன் கூடிய இசை மழை பொழிந்ததால் டிஸ்கோ இசை பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தபோதிலும் ரஜினி நடித்த 'தாய்வீடு'(1983) படத்தில் இடம்பெற்ற "உன்னை அழைத்தது" என்ற பாடல், இந்தி 'டிஸ்கோ டான்ஸர்' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட 'பாடும் வானம்பாடி'(1985) படத்தில் இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரி மற்றும்சங்கர் கணேஷ் இசையில் இடம்பெற்ற பாடல்கள், படமும் பிரபலமடைந்தது. 1984ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியான 'எனக்குள் ஒருவன்' கமலின் 125வது படத்தில் டிஸ்கோ டான்சராக நடித்திருப்பார். அதில் வரும் மழை டிஸ்கோ பாடல் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். புதிய புத்தாண்டு பிறக்கும் இரவு எல்லாத் தொலைக்காட்சிகளில் ஒ(ளி)லிக்கும் கமல் நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தில் வரும் "இளமை இதோ இதோ ..." பாடல் கூட டிஸ்கோ இசை பாடல் தான்.

பாடகி நாசியா ஹுசைன் பாடிய  "ஆப் ஜெய்சா கோய்...." பாடல் நாற்பது வருடம் கடந்தும் இன்றும் கேட்பதற்கு புதிதுபோல் உள்ளது. வாருங்கள் பாடலை கேட்போம் :


நன்றி: Youtube and homegrown.co.in

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி