Wonderful Shopping@Amazon

Thursday, 3 October 2019

திருப்பதி திருக்குடை ஊர்வலம்


திருப்பதி திருக்குடை ஊர்வலம்
திருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் மட்டுமே நடக்கும் பிரத்தியேக நிகழ்வு. மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா போல். வடசென்னை மக்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மற்ற மாவட்டங்களில் இது போல ஒரு விழா உண்டா என்று தெரியவில்லை. செப்டம்பர் மாதம் பதினைந்து தேதிக்கு மேல் "திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது..." என்ற சுவரொட்டி விளம்பரம் சென்னை முழுதும் காணலாம். அந்தந்த ஊரில் திருப்பதி திருக்குடை எப்போது வரும் என்ற தேதியையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஊர்வலம் திருவிழா பற்றிய சிறு குறிப்பு : தங்கசாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில் உள்ள ஒரு குடும்பம் அழகிய வேலைப்பாடுகளுடைய குடைகளைச் செய்து பரம்பரை பரம்பரையாக ஏழுமலையான் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்குகிறார்கள். திருப்பள்ளி தெருவில் தொடங்கி, யானை கவுனி , ஓட்டேரி, புரசைவாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர்,  திருமுல்லைவாயில், ஆவடி, திருவள்ளூர் வழியாகத் திருப்பதி சென்றடையும்.

எனக்குத் தெரிந்து ரொம்பக் காலமாக இது நடந்து வருகிறது. திருப்பதி குடை வருவதற்கு முந்திய மூன்று நாட்களுக்கு ஆவடியில் சாலையோரம் தாற்காலிக கடைகள் போடுவார்கள். விளையாட்டுப் பொம்மைகள் கடை, வளையல் கடை, ராட்டினம், நொறுக்குத்தீனி கடை என ஏராளமான கடைகள் இருக்கும். பல குடும்பங்களில் திருப்பதி திருக்குடை வைபவத்தன்று பொருட்கள் வாங்குவதற்காகவே காத்திருப்பார்கள். "கொட வருதுல்ல, அப்ப வாங்கித்தாரேன்" என்ற பேச்சு வழக்கு எங்கும் கேட்கலாம். பள்ளி முடிந்து விட்டி வீட்டுக்கு வரும்போது எல்லாக் கடைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவது எனக்குப் பிடிக்கும். நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். மாநகரப் பேருந்து நெரிசலில் ஊர்ந்து செல்லும்.

திருப்பதி குடை விழாவில் பேரப்பிள்ளைகளுக்குப் பொம்மைகள், வளையல், ரிப்பன், சாந்து, பொட்டு, ஹேர்கிளிப் போன்று பொருட்கள் வாங்கித் தருவது எல்லாத் தாத்தாக்களும் கௌரவமான விஷயமாகப் பார்ப்பார்கள். எங்கள் தாத்தாவும் எங்களைக் கூட்டிப்போய் விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தருவார். அடுத்தப் பத்து நாளைக்கு எங்களுக்கு அது தான் Sensation.

ஆவடி சின்னம்மன் கோயில் அருகே ஒரு வீட்டில் வருடா, வருடம், திருப்பதி திருக்குடை நிகழ்வின் போது திருப்பதி பெருமாளை அழகாக வரைந்து, கீழே திருப்பதி மலைப் பாதை போன்று களிமண் கொண்டு அமைத்து அதில் கார், பஸ் மற்றும் பக்தர்கள் நடைபாதை எனத் தத்ரூபமாக வடிவமைத்து, அழகிய வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரித்துக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும்.  நான் மணிக் கணக்காக நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆவடிக்குக் குடை வருவதற்கு முதல் மூன்று நாட்களுக்கு முன்பு, ஊரெங்கும் அன்னதானம் வழங்குவார்கள். நாங்களும் ஒரு வருடம் பொங்கல், ஒரு வருடம் வெண்பொங்கல் என வழங்கியிருக்கிறோம்.

ஆவடியில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் குடைகள் நிறுத்திவைக்கப்படும். அப்போது அப்பா அம்மா எங்களைத் தரிசனத்துக்கு அழைத்துப் போவார்கள்.

மேலே சொன்னது எல்லாம் பழைய கதை, இப்போது நிலைமை மாறிவிட்டது காலப்போக்கில், திருப்பதி திருக்குடை கைங்கரிய குழு இரண்டு குழுக்களாக ஆகிவிட்டது. எது அசல் எது நகல் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்தக் குழு முதலில் வருகிறது என்று தெரிவதில்லை. முன்பு போல இருந்த அந்த ஆரவாரமெல்லாம் போய் வருடங்கள் ஆகிறது. சாலையோர கடைகளைக் காணோம்.  மக்களின் ஆர்வமும் குறைந்துவிட்டது.


 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

2 comments:

  1. Ummai
    You brought back my old childhood memories of Thirupathi kudai thiruvizha, thanks for making me to recollect those golden moments

    I even remember of rushing in the crowd to touch the Kudai.

    All sweet memories.

    Our elders have done some great job in name of this festival, but sorry we couldn't tranfer that same moments to next generations

    Hope all gets good

    Thanks for those recollected moments

    ReplyDelete