Wonderful Shopping@Amazon

Tuesday, 1 October 2019

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்!

பத்தாப்பு பள்ளி நண்பர்கள் சந்திப்பு

ண்பன் ஜோசப் திருமண விழாவுக்குப் பிறகு இதெல்லாம் நடந்தது.....

கிருஷ்ணா ஆரம்பித்த பத்தாப்பு பள்ளி நண்பர்கள் வாட்ஸப் குழுவில் என்னோடு சேர்த்து பதினைந்து பேர் இணைந்திருந்தோம். பண்டிகை கால வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். மற்றபடி எங்கள் குழு அப்படியே தான் இருந்தது.

ஜோசப் கல்யாணத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குழு நண்பர்கள் எல்லோரும் சந்தித்தோம். அப்போது கிருஷ்ணா வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தான்.

"என்னடா நம்ம கூடப் படிச்சா 160 பேருல வெறும் 15 பேர் தான் குரூப்ல இருக்கோம், இன்னும் நிறையப் பேர சேர்க்கணும்டா" என்று சொல்லிவிட்டு, அவனே தொடர்ந்தான் "நான் சென்னையிலிருந்து கிளம்பரத்துக்குள்ளாற நிறையப் பேர சேர்த்துட்டுப் போகப்போகிறேன்" என்றான்.

"ரெண்டு வரசதுக்கப்புறம் வந்திருக்க, குடும்பத்தோடு நேரம் செலவழி, மற்றத பிறவு பாத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு நாங்கள் கலைந்தோம். நானும் அதை மறந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மூன்று நாள் கழித்து, வாட்சப்பில் (புதிய) உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டி கைப்பேசி எண்களை, கொடுத்திருந்தான் கிருஷ்ணா. நான் சேர்க்க ஆரம்பித்தேன், உறுப்பினர்கள் சேர, சேர எங்கள் வாட்ஸப் குழுக் களைக் கட்ட ஆரம்பித்தது. சுமார் இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம், உலகின் வெவ்வேறு மூளையிலிருந்து வாட்ஸப் மூலம். தங்கம் விலையேற்றம் போல உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற ஆரம்பித்தது. மொத்தத்தில், குழு ஆரம்பித்த கிருஷ்ணா தொடக்கப் புள்ளி.

நீண்ட வருடங்கள் பேசாமல் இருப்பவர்கள் பேசினால் என்ன ஆகும்? வாட்ஸப் அரட்டை விடிய விடிய நீடித்தது. எனக்கும் அது புது அனுபவம் தான். அதற்கு முன்பு வாட்ஸப் அரட்டையில் இப்படி மணிக் கணக்கில் உட்கார்ந்தது இல்லை.

அப்போது தான் அந்த யோசனை உதித்தது. எல்லோரும் சேர்ந்து சந்தித்தால் என்ன ? என்று தோன்றியது. பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு முடிவானது. சந்திக்கும் இடம் முடிவாவதில் சிக்கல் நீடித்தது. ஒருவர் அண்ணா நகர் கோபுரம் என்று சொல்ல, இன்னொருவர் ரிசார்ட், இன்னும் ஒருவர் மெரினா கடற்கரை என்று பரிந்துரைக்க. இன்னொரு நண்பன் ஓமர் தன் வீட்டில் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, நண்பன் கோவிந்த் அவனுடைய அலுவலகத்தில் உள்ள அரங்கை ஏற்பாடு செய்வதாய்ச் சொல்ல. என்ன செய்யலாம் என்று யோசித்த போது...காலை அரங்கத்தில் கூடி மதிய உணவு முடிந்தவுடன், மாலை நண்பன் ஓமர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள முடிவானது. தேதி மற்றும் நுழைவு கட்டணம் முடிவானது.

இன்னும் பல நண்பர்கள் குழுவில் சேர்ந்தனர். குறுகிய காலத்தில் எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்தது.

சந்திப்பு விழாவுக்கு முந்திய நாள் ஒரு பயலுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை, வாட்ஸப் அரட்டை விடிய விடிய நீடித்தது.

அந்த நாளும் வந்தது................

எனது வீட்டிலிருந்து சற்று அருகில் தான் அந்த அரங்கம். காலை 10.30. மணிக்குள்ளாகவே சென்றுவிட்டேன். விழா ஏற்பாடு செய்த நண்பர்கள் கோவிந்த,அறிவு, ராஜேஷ், ராஜேந்திரன் மட்டும் இருந்தனர். யாரும் வர காணோம். மனதில் ஒரு வித பயம், கேள்வி, யாரும் வராமல் போனால் செய்து வைத்த உணவு என்னாவது ? சில நிமிடங்களில் எங்கள் பயம் அகன்றது.

பதினோரு மணிவாக்கில், ஒருத்தர் பின் ஒருவராக வர ஆரம்பித்தனர். பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் நண்பர்களைப் பார்த்ததால் மனது மகிழ்ச்சியில் பொங்கியது. முத்தமிடல், கட்டித்தழுவல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் நண்பர்கள்.

அன்றும், இன்றும் எத்தனையோ, எவ்வளவோ மாறிவிட்டன, சொன்னால் நம்பமாட்டீர்கள் சில நண்பர்களை / தோழிகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை, பெயர் கேட்டுத் தான் தெரிந்துகொள்ள முடிந்தது.

வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் தவிரக் குழுவில் உள்ள 60.சதவீதம் பேர் வந்திருந்தனர். இதுவே எங்களுக்கு வெற்றி. சிலர் ஊரில் இருந்தும் வரவில்லை.

சந்திப்புக்கு வரமுடியாத வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டில் உள்ள நண்பர்களுக்கு Live Updates கொடுத்தனர் விழாவுக்கு வந்த நண்பர்கள்.

சரியாக மதியம் ஒரு மணிக்கு கேக் வெட்டப்பட்டது, கூடவே சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அரங்கத்தில் அவரவர் கூடிப் பேசி களித்தனர். இடையில் சூப் பரிமாறப்பட்டது.நேரம் போவதே தெரியாமல் பேச்சும், அரட்டையும் நீடித்தது.
மாலை மூன்று மணிக்கு எல்லோரையும், உணவறைக்கு (அன்பாகத் தான்!) விரட்டினோம். புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தி, பாயசம், சாதம், ரசம், அப்பளம், ஊறுகாய் மற்றும் ஐஸ்-கிரீம் - இது தான் உணவுப் பட்டியல். குழுவில் உள்ள சமையல் கலை படித்த நண்பன் அறிவு மேற்பார்வையில் இத்தனையும் செய்து பரிமாறப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு அரங்கத்தில் அனைவரும் ஆஜரானோம், எல்லோரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நண்பன் ரஜினிகாந்த் "முகிலே, முகிலே, ஓ முகிலே" என்ற கன்னட பாடலை பாடினான். அதே பாவத்துடன் பாடினது தான் ஆச்சரியம். எங்களை மீண்டும் பழைய காலத்துக்குக் கொண்டு சென்றான். கிண்டல், கேலி, பாட்டு என நேரம் போனதே தெரியவில்லை. பின்னணியில் இளையராஜாவின் 80களில் வெளிவந்த பிரபல பாடல்களை ஒலிக்கவிட்டோம். சூழ்நிலையை மேலும் ரம்மியமாகியது.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில், அனைவரும் சேர்ந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினோம்.

மாலை ஐந்து மணிக்கு.......... வெகு தொலைவிலிருந்து வருகை தந்த நண்பர்களை வழியனுப்பிவிட்டு, நண்பன் ஒமர் வீட்டுக்குச் சென்றோம்.
அங்குத் தேநீர், சிற்றுண்டி, கொஞ்சம் பேச்சு, முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் கலைந்து சென்றோம்.

அன்று இரவு எனக்குப் பசி எடுக்கவில்லை, படுக்கையில் விழுந்தேன். மறுநாள் காலை அலுவலகத்தில் வேலை ஓடவில்லை, மனது முழுதும் முந்தைய நாள் நிகழ்ச்சி ஆக்கிரமித்ததது. சில நண்பர்கள் கைப்பேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

அடுத்துச் சந்திப்பு 2020ல் இதே போலச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன் அவரவர் பெண்டு-பிள்ளைகள் விசேஷத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி




3 comments:

  1. Excellent da HAT off to Kichaa I really miss you all da moreover what a explanation from you HAT off Viji (Mofa) you'r simply superb and great da ithukku mela yennakku solla theriyala da please excuse superb superb superb

    ReplyDelete
  2. Greatly curved words and ever memorable moments powerful writing. Superb vijay. Keep Rocking my friend.

    ReplyDelete