Wonderful Shopping@Amazon

Thursday 17 October 2019

மிதிவண்டி நாட்கள்

ன்னால் என் பையனை மிதிவண்டி பின்புறம் உட்கார வைத்து மிதிக்க முடியவில்லை.. உடலில் சக்தி இல்லையா, வயதாகிவிட்டதா அல்லது சாலை சரியில்லையா என்று தெரியவில்லை. கை, கால், உடம்பு வலி எடுத்துக்கொண்டது.

அப்பா என்னையும் என் தம்பியையும் மிதிவண்டியில் முன் பின் உட்காரவைத்து 3-4 கிலோமீட்டர் ஓட்டிக்கொண்டு பள்ளியில் விட்டு அலுவலகம் செல்வார். சுகமான பயணம், லாவகமாக ஓட்டுவார். கொஞ்சம் வளர்த்தபிறகு பள்ளிக்கு நடந்தே வந்து, போவேன்.

சைக்கிள் என் கனவு. பள்ளியில் படிக்கும் போது வகுப்பு நண்பர்கள் எல்லோரிடமும் சைக்கிள் இருக்கும்.

என்னுடன் படித்த பவன் குமார் என்ற நண்பன் அவனுடைய புதிய மிதிவண்டியைப் பள்ளிக்குக் கொண்டுவந்தான். அவ்வப்போது எனக்கு ஓட்ட தருவான். ஒரு நாள் அவனுடைய மிதிவண்டி திருடு போய் விட்டது. கடைசி வரை அதை யார் எடுத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எப்போதாவது அப்பா அலுவலகம் விடுப்பு எடுத்தால் அப்போது பள்ளிக்குச் மிதிவண்டி கொண்டு வருவேன். எப்போது பள்ளி விடுவார்கள் என்று ஆவலாய் இருப்பேன். பள்ளி விட்டதும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓட்டிச்செல்வது பிடிக்கும்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அம்பத்தூர் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்த எனது மாமா புதுச் சைக்கிள் வாங்கிக்கொடுத்தார் (காசுக்குத்தான்...) ஆரம்பம் முதலே செலவு வைக்க ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நடராஜா சர்வீஸ்.

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டருகே ஒரு தாத்தா மிதிவண்டி வாடகை கடை இருக்கும், ஒரு மணிநேரத்துக்கு ரூ.1/-. பாட்டி அரைமணி நேரத்துக்குத் தான் காசு கொடுக்கும். என்னைப் போலப் பையன்கள் நேரம் முடிந்து மிதிவண்டி கொண்டுவரும் வரை காத்திருக்க வேண்டும். வந்ததும் எனக்கு வண்டி கிடைக்கும். வண்டி எடுத்துக்கொண்டு பூங்கா, அந்த நான்கு தெருவைச் சுற்றி வருவதற்குள் அரைமணி நேரம் முடிந்துவிடும். அப்போது தெருவில் வாகன புழக்கம் குறைவு. தைரியமாக வண்டி ஓட்டலாம்.

வாடகை மிதிவண்டி கடையைச் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். திராவிட இயக்க வரலாற்றைப் பார்த்தோமானால் முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடை தோழர்கள் தான் இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள். முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடைகளில் கிடைக்கும் திராவிட இயக்க பத்திரிக்கைகளைப் படித்து ஏனையோர் சாரை சாரையாக அவ்வியக்கத்தில் சேர்ந்தார்கள். இப்படி வந்தவர்கள் தான் பிற்பாடு தமிழக அரசியலில் கோலோச்சினார்கள் - நன்றி : "அறிஞர் அண்ணா - மாபெரும் தமிழ் கனவு" - தி ஹிந்து பதிப்பகம்.

என் பையனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மிதிவண்டி வாங்கிக் கொடுத்துவிட்டேன். ஆரம்பத்தில் மிதிவண்டி ஓட்டும்போது அவன் பின் பள்ளிவரை செல்வேன்.

இப்போது மிதிவண்டி அடிக்கடி பழுதேற்படுகிறது. மிதிவண்டி பழுதானால் அதைச் சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது காரணம் முன்பெல்லாம் தெருவுக்கு நான்கு மிதிவண்டி பழுது பார்க்கும் கடை இருக்கும், இப்போது ஊரின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. குறைந்த பட்ச பழுது நீக்குக் கட்டணம் ரூ.100/-. விடுமுறையில் அரை நாள் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் மிதிவண்டியை யாரும் சாலையில் ஓட்டுவதில்லை. மிதிவண்டி உடற்பயிற்சி சாதனமாகி நீண்ட நாட்களாகிவிட்டது . வீட்டிலே மிதிவண்டி போல உள்ள சாதனம் வாங்கி உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்கிறார்கள். ஊர் ஊருக்குப் பயிற்சிக்கூடங்களும் பெருகிவிட்டது.

ட்ரயத்லான் என்ற விளையாட்டு, மூன்று செயல்களான நீச்சல் (1500 மீட்டர் ) மிதிவண்டி ஓட்டுதல் (40 கிலோமீட்டர்) மற்றும் ஓட்டப்பந்தயம் (10 கிலோமீட்டர்) அடுத்தடுத்துச் செய்யவேண்டும். இப்போதைய நடப்பு ட்ரயத்லான் உலகச் சாம்பியன் (ஆண்கள்) பிரான்ஸைச் சேர்ந்த திரு வின்சென்ட் லூயிஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி கேட்டி சபிரேஸ் (பெண்கள்). ட்ரயத்லான் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியின் விலை ரூபாய் 1.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை.

சாலையில் மிதிவண்டி ஓட்டுவதே பெரும்பாடாய் இருக்கிறது, இதில் மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் எப்படிச் செய்யமுடிகிறதென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் மிதிவண்டி பல வித வசதிகளோடு கிடைக்கிறது. பல வெளிநாட்டு மிதிவண்டி ரகங்களும் சென்னையில் கிடைக்கிறது. கியர் வண்டியின் ஆரம்பி விலை ரூபாய் 4000/-. சில நகரங்களில் மிதிவண்டி பாதை என்று தனியாக அமைத்திருக்கிறார்கள்.  சென்னையிலும் சில இடங்களில் இருக்கிறது.

"பைசிக்கிள் தீஃவ்ஸ்" (1948.) என்ற இத்தாலியப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? காணாமல் போன மிதிவண்டியைச் சுற்றி நிகழும் கதைக்களம். அதை நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன இயக்குநர் விட்டோரியோ டி சிகா மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய நடிகர்கள், அதனால் தான் என்னவோ உலகின் இரண்டாவது சிறந்த படமாக இருக்கிறது இப்படம்.  வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் இப்படத்தைப் பாருங்கள்.

சரி, நீங்கள் எப்போது கடைசியாக மிதிவண்டி ஓட்டினீர்கள். உங்கள் பழைய மிதிவண்டி இன்னும் உங்களிடம் இருக்கிறதா?


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

1 comment: