Wonderful Shopping@Amazon

Monday 14 October 2019

வெங்காயம்

''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார் தந்தை பெரியார்!

- என் பெரியப்பா மளிகை நடத்தி வந்தார். வீட்டில் ஆங்காங்கே வெங்காயம் தரையில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டிருக்கும், வீடு முழுதும் வெங்காய வாசனை நெடியாக இருக்கும். அழுகின வெங்காய வாசமும் சேர்ந்தடிக்கும்.

- மகாளயபட்சம் நாட்களில் எனது நண்பர் வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ளமாட்டார். வெங்காயம் இல்லாத உணவை / சமையலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 
 
- பழைய சாதம், தொட்டுக்கொள்ளச் சின்ன வெங்காயம் அருமையான காம்போ தான், சின்ன வெங்காயம் கார சட்னி அதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கலந்து இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ருசி அபாரமாக இருக்கும்.

- இந்த வெள்ள வெங்காயமென்று ஒன்று இருக்கிறதே அது எதுக்குன்னே தெரியவில்லை, கடையில் ஒரு ஓரமா வைத்திருக்கிறான். எதுக்குன்னு யாராச்சும் சொல்லுங்களேன்.

- எனக்குத் தெரிந்து வெங்காயத்தில் 'அந்த' உணர்வைத் தூண்டும் எந்தச் சங்கதியும் இல்லை என்று தோன்றுகிறது. யாரோ விட்ட சரடு!!

- சந்தையில், வெங்காயத்தாள் கட்டுக் கிடைத்தால் வாங்கி வருவேன், கீரை- பருப்பு கடையல் போல வெங்காயத்தாள்-பருப்பு கடையல், சுவை மிகுந்ததாக இருக்கும். கொத்துமல்லிக்குப் பதிலாக வெங்காயத்தாளைப் பொரியலில் மேலே தூவி இறக்கினால், பதார்த்தம் நல்ல மணமாக இருக்கும்.

- பாரிமுனை பர்மா சாப்பாடு கடையில் அவித்த முட்டை 'பேஜோ' யுடன் மொறு மொறுவென்று பொன்னிறமாக வறுத்த வெங்காயத் துகள்கள் நடுவில் வைத்துத் தருவார்கள், முட்டையுடன் சேர்த்துக் கடித்துச் சாப்பிட, சுவை தாறுமாறாக இருக்கும். வெங்காயத்தைப் பொன்னிறமாக எப்படி வறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு சுவையாக இருக்கும்.

- எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு தள்ளு வண்டி கடையில், நிறைய வெங்காயம், கடலை மாவு, நீர் விடாமல் பிசைந்து, அந்த வெங்காய ஈரப்பற்றிலேயே பக்கோடா போடுவார் அண்ணாச்சி,எண்ணெய்யிலிருந்து பகோடாவை எடுக்கும்போது சுருள் சுருளாக மொறு மொறுவென்று வரும். சுவையோ அலாதி.

வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறதென்று யோசித்ததுண்டா?

வெங்காயத்தில் நறுக்கும் போது கண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் ஆலினேஸ் என்ற அமில நொதி திரவ வடிவில் இருக்கும். அது காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது.

சின்ன வெங்காயம் பற்றி ஏகப்பட்ட செய்திகள் இணையத்தில் கிடைத்தாலும். என்னுடைய தனிப்பட்ட அனுபவம். சின்ன வெங்காயம் சாம்பார், கார சட்னி எல்லாம் செய்தாலும், அசைவ சமையலுக்குச் சின்ன வெங்காயம் அபார சுவை கூட்டுகிறது என்பேன்.

அட்டகாசமான சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிட்டிருக்கிறீர்களா?

மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட்ட சின்ன வெங்காய ஊத்தப்பம். அவ்வப்போது வீட்டிலும் செய்வதுண்டு. நீங்களும் செய்து பாருங்கள்.

சின்ன வெங்காயம் வில்லை வில்லையாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்

தோசைக் கடாயில், ஒரு கப் மாவு ஊற்றி, இடைவெளி இல்லாமல் சின்ன வெங்காய வில்லையை அதன் மீது முழுவதுமாக அடுக்கி, கொஞ்சம் நெய் இட்டு, பொன்னிறமாக ஆனதுடன் எடுத்து அதனுடன் சின்ன வெங்காயக் கார சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள்.... அப்புறம் தெரியும் சின்ன வெங்காயத்தின் அபார ருசி.

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி தொக்குச் செய்வோம், அதில் சாதாரண வெங்காயம் உபயோகப்படுத்துவோம், அதற்குப்பதிலாகச் சின்ன வெங்காயம் சேர்த்துத் தக்காளி தொக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்!

சின்ன வெங்காயம் சேர்த்து இறா தொக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள், நாக்கில் உள்ள சுவை அரும்புகளுக்கு இன்னொரு சுவையை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள்.

வெங்காயமும் அதன் அரசியலும் பற்றி எழுதலாம் என்று தோன்றியது, ஆனால் கீழே உள்ள சுட்டி என் வேலையைச் சுலபமாக்கிவிட்டது. நீங்களும்
வியக்க வைக்கும் அந்தச் சுவாரஸ்யமான கதையைப் படித்துப் பாருங்கள்................

மக்கள்ஸ்! சின்ன வெங்காயம் வைத்து புதுசாக நீங்கள் செய்த பதார்த்தத்தைப் பற்றி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்....!


Link Thanks : Dinamani.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

1 comment: