Tuesday, 8 October 2019

குப்பையே என்றாலும் ...... பகுதி - ஒன்று


"குப்பையே என்றாலும் அது வெளிநாடு போல் வருமா ...." என்று பாடத் தோன்றுகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தோம். வெகு சீக்கிரமாகத் தொடங்கிய வேலை முடிய மதியம் ஆனது.

இந்த முறை நெகிழி பாத்திரங்களுக்குப் பதில் ஸ்டீல் பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் நிரப்பி வைப்பதில். மனைவி தீவிரமாக இருந்தாள். சில நாட்களுக்கு முன்பு பாரிமுனை ஈவினிங் பஜாரில் அளவு வாரியாக ஸ்டீல் கொள்கலன்களை வாங்கி வந்தோம். முடிவில் ஏராளமான நெகிழி பாத்திரங்களைக் காயலான் கடைக்கு எடைக்குப் போட வைத்திருந்தோம்.

உணவு பொருட்கள் அடைத்து வரும் நெகிழி பாத்திரங்களைத் தூக்கிப் போடா மனது வராமல், அதில் வேறு உணவுப் பொருட்களை நிரப்பி வைக்கப் போய் நிறையச் சேர்ந்துவிட்டது.

எங்கள் வீட்டிலேயே இப்படி என்றால் ... மற்ற வீட்டில் / இடத்தில் எவ்வளவு சேரும்....அது கடைசியில் எங்கே சென்று... என்ன ஆகுமோ.........நினைக்கவே பயமாக இருக்கிறது. இப்போது விஷயம் என்னவென்றால் .....

நாம் குப்பைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்தால் எனக்குப் பயமேற்படுகிறது. குப்பைகளை மலைபோல் குவித்துக் காற்று மாசடைவதைப் பற்றி / சுற்றுப்புறச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் எரிக்க விடுவது.

சமீபத்தில் டிஷ்கவரி சானலில் கழிவு மேலாண்மை பற்றிய குறும்படம் பார்த்தேன், அதைப் பார்த்தவுடன் தான் தெரிந்தது நாம் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து போகும் குப்பைகளுக்குப் பின் உள்ள வியாபார சாம்ராஜ்யம். அதைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு:
மேலை நாடுகள் திடக் கழிவு மேலாண்மை என்ற திட்டத்தைக் கவனமாகவும்/ திறம்படக் கையாளவும் அதற்குரிய சட்டங்களை வரைந்துள்ளது.
அமெரிக்கா பல துறைகளில் வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும், குப்பை உற்பத்தியிலும் அதற்கு முதலிடம். அமெரிக்கா வருடத்துக்கு 250 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. ஒரு நல்ல விஷயம் .... 30% குப்பை மறுசுறழ்ச்சி செய்யப்படுகிறது, மீதி உரமாகத் தயாரிக்கப்படுகிறது

சில நகரங்களில் வீட்டில் உற்பத்தியாகும் கழிவுகளுக்கேற்ப வரி அல்லது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எளிதில் மறுசுழற்சி ஆகும் கழிவுகளுக்குக் குறைந்த கட்டணமும், மறுசுழற்சியாக அதிக நேரம் பிடிக்கும் கழிவுகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நம் ஊரிலும் இது நடைமுறைக்கு வரலாம்.

பெரிய நிறுவனங்கள் வகைத் தொகை இல்லாமல் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறது, இதனால் கடல் உயிரினங்கள் அழிகிறது, மீன் உற்பத்தி பாதித்தப்படுகிறது. சில நாடுகள் கழிவுகளைக் கடலில் கொட்ட நிறுவனங்களை அனுமதிக்கிறது

உலகம் முழுதும் கழிவுகளைக் கையாளும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய கழிவு மேலாண்மை நிறுவனத்தில் உலகப் பணக்காரர் திருப் பில் கேட்ஸ் அவர்கள் பல மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்போதைய $285 பில்லியன் மதிப்புள்ள கழிவு மேலாண்மை சந்தை அப்படியே இரட்டிப்பாக மாறும். அமேசான் நிறுவனம் $10 மில்லியன் டாலர் முதலீட்டைக் கழிவு மேலாண்மை துறையில் செய்துள்ளது.

எந்தந்த நாடுகளில் கழிவு மேலாண்மை செம்மையாக இல்லையோ அங்கு நோய் உற்பத்தி பெருக்கம் அதிகம் காணப்படும்.

சில நாடுகள் கழிவுகளை இறக்குமதி செய்கிறது, அதில் ஸ்வீடனும் ஒன்று. தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்த பிறகு, கழிவு மேலாண்மை நிறுவனங்கள் எப்போதும் பிசியாக இருக்க அவர்கள் இதைச் செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் நாட்டை எந்தளவுக்குச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று யூகித்துக்கொள்ளலாம்.

மேலைநாடுகளில் கழிவுகளிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள், பிரிட்டன் கழிவுகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதற்குப் பதில் மின்சாரமாகப் பெறுகிறது. போலந்து நாடு, மக்களிடமிருந்து கழிவுகளைப் பெற்று, மின்சாரம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்குகிறது.

இயக்கிய அரபு அமீரகம் அதிகப்படியான கழிவுகளை உற்பத்தி செய்து அதைத் திறம்பட மறுசுழற்சி செய்கிறது

உலகின் தலைசிறந்த, கழிவு மேலாண்மைத் துறையில் நாற்பது வருடம் அனுபவம் கொண்ட நிறுவனம் "என்விரோ செர்வ்". கழிவு மேலாண்மைத் துறையில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளை வகுத்து இத்துறையில் புகும் புதிய நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

பல நாடுகள் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று. நாம் இப்போது தான் நெகிழியைத் தடை செய்திருக்கிறோம். இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

விண்வெளியில் குப்பை, இமயமலையில் குப்பை, மின்னணு குப்பை, குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் போன்றவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சரி, உங்கள் மின்னஞ்சலில் உள்ள குவிந்து கிடக்கும் குப்பைகளை எப்போது அகற்றப் போகிறீர்கள்?


நன்றி: Youtube /Alux.comகுறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.- காளிகபாலி

No comments:

Post a comment