Wonderful Shopping@Amazon

Friday, 27 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-15

சத்ரியன்(1990)

த்ரியன் - வித்தியாசமான விஜயகாந்த்தை இதில் பார்க்கலாம். விஜயகாந்த்துக்கு மொத்தமே ஒரு பக்கத்துக்குத் தான் வசனமே. வழக்கமான பழிவாங்கல் கதை தான் அதை மணிரத்தினம் சிஷ்யர் கே சுபாஷ் தனது திரைக்கதையால் மெருகேற்றியிருப்பார். படம் கொஞ்சம் Violent-ஆக இருக்கும். கதாநாயகனுக்கு (பன்னீர்செல்வம்) இணையான கதாபாத்திரம் வில்லன் (அருமைநாயகம்). மலையாள நடிகர் திலகன் இதில் பின்னியிருப்பார். அவர் பேசும் "பழைய பன்னீர்செல்வமா வரனும் " என்ற வசனம் மெர்சலாக இருக்கும்.

இதில், சரியாகச் சொன்னீர்கள்....... அந்தப் பாட்டு தான். என்ன சொல்வது இந்தப் பாடலை பற்றி... சுவர்ணலதாவின் சொக்க வைக்கும் குரலைப் பற்றிச் சொல்வதா, அல்லது பானுப்ரியாவின் நளினத்தைப் பற்றிச் சொல்வதா, அல்லது படமாக்கிய இயக்குநரைப் பற்றிச் சொல்வதா, பாடலை எழுதிய கவிஞர் வாலியின் வரிகளைச் சொல்வதா அல்லது ராஜா சாரின் இசை அமைப்பு பற்றிச் சொல்வதா தெரியவில்லை. மொத்தத்தில் ஐவர் நிகழ்த்திய மாயாஜாலம்.

பாடகிகள் ஜென்சி, எஸ் பி சைலஜா, உமா ரமணன் போன்று சுவர்ணலதாவின் குரலும் தனித்துவமானது. "அட டா நானும் மீனைப் போலக் கடலில் பாயக்கூடுமோ......" அந்த இடத்தில் கவனம் வைத்துக் கேளுங்கள், அந்தக் குரலின் விஸ்தீரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.
இதோ அந்த பாடல் : 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Thursday, 26 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-14

மகாநதி(1994)

1994-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்தது. காணும் பொங்கல் அன்று அனந்த திரையரங்கில் பார்த்தேன்.  பெரிய திரை, விசாலமான அரங்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த படம். சாதாரண வணிகப் படம் போல் அல்லாமல் ஒரு மாதிரி வித்தியாசமாய் எடுத்திருப்பார் கமல். என்னைப் பாதித்த படங்களில் மகாநதியும் ஒன்று.  என்னுடன் வந்த நண்பர் கடைசி நேரத்தில் லிட்டில் ஆனந்த்தில் வேறு படம் சென்று விட்டார். படத்தைப் பற்றிச் சிலாகித்து  சொன்னவுடன், நல்ல படம் பார்க்கத் தவறவிட்டதை எண்ணி வருந்தினார். அந்தச் சிறை சண்டைக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் படத்தின் Highlight. மகாநதி - சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம்.

சரி விஷயத்துக்கு வருவோம், படத்தின் தொடக்கப் பாடலான "பொங்கலோ, பொங்கல்", இப்போதும் பொங்கலன்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒலிக்கிறது. ஆனால் இப்படத்தில் இன்னொரு அழகான பாடல் உண்டு. "ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்.." எஸ்.பி.பி மற்றும் திருமதி உமா ரமணன் அவர்களின் காந்தக் குரலும் பாடலுக்குப் புதிய வண்ண சேர்க்கும்.
 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி



Tuesday, 24 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 13

மோகமுள் (1995)
 
எழுத்தாளர் தி ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற புதினம் "மோகமுள்".                  தி ஜானகிராமனின் மிக அற்புதமான படைப்பு என இது இன்றளவும் போற்றப்படுகிறது. ஞான ராஜசேகரன் இயக்கி, சின்னத்திரை நடிகர் அபிஷேக் (கதாநாயகன்), விவேக், நெடுமுடிவேணு மற்றும் வெ ஆ மூர்த்தி நடித்து 1995. - ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.  ஒரு மாலை காட்சி தேவிகலா திரையரங்கில் பார்த்தேன். என்னோடு சேர்த்து சுமார் 15. பேர் மட்டுமே திரையரங்கில். அப்பவே நல்ல படத்துக்கு இ(ரு)ந்த மவுசு.  கொஞ்சம் மெதுவாக நகரும் யதார்த்தமான படம்.  கதையினூடே பயணிக்கும்  ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெருந்துணை.

கதைக்குள் செல்லவேண்டாம். மோகமுள் படத்தில் K.J. யேசுதாஸ் அவர்கள் பாடிய "கமலம் பாத கமலம்" என்ற மனதை கவரும் அருமையான பாடல் உள்ளது. இதோ அந்த பாடலை கேட்டு பாருங்கள்





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 12

கேளடி கண்மணி (1990)
 
கேளடி கண்மணி - வி சி ஆர்-வீடியோ கேசட்டில் பார்த்த படம். இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் சிஷ்யர் வசந்த் இயக்கிய முதல் Emotional Drama படம். பார்த்தால் முதல் படம் போலவே தெரியாது, அவ்வளவு நேர்த்தியாக இயக்கியிருப்பார். ஜனகராஜ் ஞாபகமறதி நகைச்சுவை பகுதி, ரமேஷ் அரவிந்த்-அஞ்சு காதல் பகுதி எனப் படம் engaging-ஆக இருக்கும். பெரிய Star Cast இல்லை, ஆனால் படம் வெற்றிகரமாக ஓடியது. புதிய இயக்குநர்களுக்கு எப்போதுமே இளையராஜா Darling. வசந்த்-இளையராஜா மாயாஜாலம் படம் முழுதும் நிரம்பி வழியும் - பின்னணி இசையாக. பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். தொடர்ச்சியாக மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக "கற்பூர பொம்மை ஒன்று " மற்றும் "நீ பாதி நான் பாதி" என்னுடைய  All Time Choice.

சரி விசயத்துக்கு வருவோம், மக்களுடன் எளிதில் Connect-ஆக, பின்னணி இசை இந்தப் படத்துக்குப் பெரும் பக்க பலமாக இருந்தது.  மனதை உருகும் பின்னணி இசையைக் கேட்டுப் பாருங்கள்:







நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி






ஒரு முறை நிகழும் மாயாஜாலம் -11

அரண்மனை கிளி(1993)
ஜானகி அம்மா தனியாகப் பாடிய எத்தனையோ பாடல்கள் உண்டு. அதில் எனக்குப் பிடித்த மெல்லிசை பாடல். "ராசாவே உன்னை விட மாட்டேன், என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்"

இந்தப் பாடலை அத்தனை அழகாக, கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் படமாக்கிய இயக்குநரை என்ன வென்று சொல்வது.  சீரான வேகத்தில் புல்லாங்குழல் இசை முதல் சரணத்தை வழி நடத்திச் செல்லும். பிறகு இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் அந்த நிரவல் அருமை.

எப்போதும் ராஜ்கிரண் என்றால் ராஜாவுக்கு ஸ்பெஷல் போலும், வெளியான முதல் நாளில் பார்த்த படம் "அரண்மனை கிளி". படத்தில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருக்கும். இரவில் கேட்கக்கூடிய பாடல் வரிசை பட்டியலில் இந்தப் பாடல் உண்டு. இதோ அந்த பாடலை கேட்டு ரசியுங்கள்



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

Monday, 23 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் -10

விக்ரம் (1986) 

மீபத்தில் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" படத்தைப் பார்த்தேன். அப்பவே அதிகப் பொருட்செலவில் உருவான "விக்ரம்" - 1986 ஆம் ஆண்டுக் கோடை விடுமுறையில் வந்த Spy திரில்லர் வகைப் படம். சுஜாதா அவர்களின் கதையில் உருவான படம். ஜெய்சங்கர் படங்களுக்குப் பிறகு வந்த Spy திரில்லர் படம் என்று நினைக்கிறன. சத்யராஜின் வித்தியாசமான பெயர், ராக்கெட் தொழினுட்பம், ராஜஸ்தான் பாலைவனம், ஜனகராஜ்-மனோரமா நகைச்சுவை பகுதி, அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா என அப்போது தமிழ் சினிமா ரசிகனுக்குப் புதிய விஷயங்கள் சேர்த்திருப்பார் கமல். எப்போதுமே கமல் தமிழ் சினிமா ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி வந்திருக்கிறார். சிறுவயதில் பார்த்தபோது ஆங்கிலப் படம் பார்த்த feel கிடைத்தது. அப்போது சுமாராக ஓடியிருந்தாலும் இப்போதும் engaging to watch.

சரி விசயத்துக்கு வருவோம், இந்தப் படத்தில் அருமையான பாடல் உண்டு, "மீண்டும் மீண்டும் வா.... மீண்டும் வேண்டும் வா" ஜானகி-SPB யின் இணை பாடிய பாடலை இரவில் கேட்டுப் பாருங்கள். எனக்குப் பிடித்த ராஜாவின் பாடல்களில் இதுவும் ஒன்று.







நன்றி: Youtube




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

 


Friday, 20 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 9

பகல் நிலவு (1985)

ல்லவி ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் வயலின் இசைக் கோர்வை நம்மை வரவேற்கும், புல்லாங்குழல் கிச்சு கிச்சு மூட்டும்.  ஜானகி இளங்குரலில் பாட அதைத் தொடர்ந்து ராஜா உள்ளே வருவார், பிறகு உங்கள் கற்பனை சிறகுகள் பறக்க ஆரம்பிக்கும். பாடல் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு வேகம் இருக்கும் கண்ணனை மூடிக் கொண்டு இந்தப் பாடலை இரவு தலையணியுடன் (Headphone), மெல்லிய இசையுடன் கேளுங்கள். மனது குதூகலமாகும். பாடல் இடையே இடையே வரும் ஜானகி-ராஜா ஹம்மிங் அலாதியாக இருக்கும்.  பாடல் தொடக்க முதல் கடைசிவரை ஒரு சீரான வேகம் இருக்கும். 

எப்போதுமே இஃது என்னுடைய விருப்ப பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதெல்லாம், எனக்குப் புதிய எனர்ஜி கிடைக்கும்.   காலங்கள் கடந்தாலும் இப்போதும் இந்தப் பாடல் புத்தம் புதுசாக இருக்கிறது. 

பாடலை படமாக்கிய விதம் கூட அருமையாக இருக்கும். முரளி-ரேவதி Charm. பாடல் முழுதும் நம்மை வசீகரிக்கும். இது காதலர்களின் தேசிய கீதம் என்று சொல்வேன் நான் .

இயக்குநர் மணிரத்னம் - இளையராஜா தமிழில் இணைந்து நிகழ்த்திய முதல் மாயாஜாலம் - "பகல் நிலவு" படம். இதோ அந்த பாடல்:





நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி



ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 8

விதி (1984)
மிழில் பராசக்தி, திகம்பரசாமியார், எதிரொலி முதல் சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை வரை என எண்ணற்ற Court Drama படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அது போல ஒரு படம் தான்.   Court Drama படங்கள் Docu Drama படமாக மாறும் வாய்ப்புண்டு, சுவாரஸ்யமாக அதைச் சொல்லாத பட்சத்தில்.
 
திரைத்துறையில் வெற்றி தோல்வியைக் கணிக்கவே முடியாது. சிறுவயது முதல் திரைத்துறையில் ஊறிப்போன இவருக்கு ஓரளவுக்கு வெற்றியைக் கணிக்க முடிந்திருக்கிறது. எந்த மொழியில், எந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியாக ஓடுகிறது என்று நேரடியாகவே பார்த்துத் தெரிந்துகொள்வார். அந்தப் படத்தின் உரிமையை வாங்கித் தமிழுக்கேற்றாற்போல் மாற்றி, படம் எடுத்து வெற்றி பெறுவார்.

அப்படித் தான் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த "நியாயம் காவாலி" என்ற படம் நன்றாக ஓடுவதை அறிந்த திரு K பாலாஜி அவர்கள் அதன் உரிமையை வாங்கித் தமிழில் எடுத்த படம் தான் விதி. வில்லன் கதாநாயகனாகலாம், கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த மோகன் எதிர்மறை நாயகனாக நடித்த படம்.

"விதி" 1984-ஆம் ஆண்டு வெளிவந்து சூறாவளி ஓட்டம் ஓடியது. இப்படத்தின் விளம்பரம் தினத்தந்தி தினசரி நாளிதழில் தலைகீழாகப் பிரசுரமானது நினைவிருக்கிறது.

ஊரெங்கும் உள்ள டி கடைகளில் "விதி" படம் ஒலிச்சித்திர வடிவில் கேசட் ரீல் அந்து போகிறவரை மக்கள் கேட்டு, ரசித்து, மகிழ்ந்தார்கள். கூர்மையான அரூர்தாஸின் வசனங்கள் பேசப்பட்டது. தூர்தர்சனில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்கடி "தேவதாசும் நானும்" பாட்டுப் போடுவார்கள். பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை தூர்தர்சனில் ஒளிபரப்பானது.

எல்லாக் காலகட்டத்திலும் பெண்களை ஏய்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டு படமும் ஒரே விஷயத்தைத் தான் பேசியது.

"அதோ அந்த தயாநிதி தான் ......." என்ற வசனம் இன்னும் ஞாபகமிருக்கிறது. 
இதோ அந்த காட்சி உங்களுக்காக:
 
நன்றி : Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

Tuesday, 17 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 7

சக்கரை தேவன்

கிராமத்துக் கதை பின்னணி கொண்ட படங்கள் என்றால் விஜயகாந்த்துக்கு அல்வா சாப்பிடுவது போல (Safe Bet). போட்ட பணத்தையும் எளிதில் எடுக்க முடியும். அடுத்தடுத்த சிறிய நகரங்களில் உள்ள திரையரங்கில் ஒ(ட்)டி வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபம் பார்ப்பார்கள். விஜயகாந்த் படங்கள் அதிகப் பெண் பார்வையாளர்களைத் திரையரங்குக்கு வரவழைத்தது. செந்தில், கவுண்டமணி, மனோரமா அல்லது காந்திமதி, குள்ளமணி, பசிநாராயணன் குழுவினர் கட்டாயம் இடம்பெறுவர்.

இப்போது எப்படி ஒரு சில படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறதோ, அது போலச் சக்கரை தேவன் - 1993-ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை. இருந்தாலும் என்ன ராஜாவின் இசையால் பாடல்கள் பேசப்பட்டது. அதில் ஒன்று..."நல்ல வெள்ளிக்கிழமை....." பாடல். ராஜா பாடியிருப்பார். இதுவும் ஒரு (விஜயகாந்த்) கதாநாயக அறிமுகத் தொடக்கப் பாடல். பல்லவியை ராஜா பாட ஆரம்பிக்க, புல்லாங்குழல் அதைத் தொடர, மெதுவாக ஆரம்பிக்கும் பாடல் அப்படியே உச்சஸ்தாபியில் பயணிக்கும். மீண்டும் ஒரு முறை கேளுங்கள், பாடலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் போதிய இடைவேளை விட்டுப் பாடியிருப்பார் ராஜா சார்.  இது விஜயகாந்த் - இளையராஜா நிகழ்த்திய மாயாஜாலம்.   வாங்கப்  பாடலைக் கேட்போம்:

நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 6

ரோசாப்பூ ரவிக்கைக்காரி


ன்னட படத்தின் மறு ஆக்கம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி. நடிகர் சிவகுமாரின் நூறாவது படம். இயக்குநர் இரட்டையர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிச்சித்திரம். ராஜா சாரின் இசை படத்துக்குப் பெரும் பக்க பலம். எல்லாப் பாடல்களும் பட்டி-தொட்டி எங்கும் ஒலித்தது. திருமண வீடு, கோயில் திருவிழா என எல்லா இடத்திலும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலித்தது நினைவிருக்கிறது.
 
"என்னுள்ளில் எங்கோ......." - இந்தப் பாட்ட இரவு வேளையில் தரமான தலையணி (Headphone) உதவியுடன் ஒருமுறை கேட்டுவிட்டு நிறுத்திவிடுங்கள். இசை அதிர்வலை மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமிக்கும். அதிலிருந்து வெளிவர நீண்ட நேரம் / நாட்கள் பிடிக்கும். மனதை வருடும் பாடல். இதிலும் பாடல் ஆரம்பத்தில் புல்லாங்குழல் நம்மை வரவேற்கும். திருமதி வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரல். இந்தப் பாட்டில் இடையே இடையே வரும் ஆலாபனை. அந்த இடத்தில் கவனம் வைக்கவும், நான் மேலே சொன்னது போல இருக்கும். இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் Interlude. ஹிந்துஸ்தானி இசைக் கோர்வை போல இருக்கும்.
 
சூழலுக்கேற்றாற்போல் பாடல்களைக் கேட்டு வாங்கிப் படமாக்கிய இயக்குநர்களைச் சொல்வதா, பாடல் எழுதிய பாடலாசிரியரைச் சொல்வதா அல்லது இசையமைத்த ராஜா சாரை சொல்வதா............! மொத்தத்தில் நால்வர் நிகழ்த்திய மாயாஜாலம் என்று சொன்னால் மிகையாகாது.

சரி வாங்க பாடலை கேட்போம்:



நன்றி : Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி
 


Tuesday, 10 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 5


சலங்கை ஒலி

து நேரடி தமிழ்ப் படமா அல்லது தெலுங்கு டப்பிங் படமா என்றெல்லாம் பார்க்காமல் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

பட்டி-தொட்டி எங்கும் இதன் பாடல்கள் ஒலித்தது. பள்ளி ஆண்டு விழா நடன நிகழ்ச்சியில் இந்தப் படத்தில் வரும் நடன பாடல் கட்டாயம் இடம்பெறும்.

1983 ஆண்டுத் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கமல் நடித்த எட்டுப் படங்கள் வெளிவந்தது.  இதில் சாகரச் சங்கமம் (சலங்கை ஒலி) மாபெரும் வெற்றிப் படம்.

நன்றாக நினைவிருக்கிறது சிறந்த இசை மற்றும் சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகள் பற்றிய தொலைக்காட்சி செய்தியில் இடையே இடையே "நாத விநோதங்கள்..." பாடலை கட்டினார்கள்  அது மட்டுமல்ல ஃபிலிம்ஃபேர் மற்றும் நந்தி விருதுகளைக் குவித்தது இப்படம்

சரியாக மூன்று வருடத்துக்கு முன்பு தான் தமிழகத்தை ஒரு மாபெரும் இசைப் புயல் படம் (சங்கராபரணம்) தாக்கி சென்றது.

தனது இசை மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகனுக்குக் கடத்துவதில் ராஜா வல்லவர். இதிலும் படம் முழுதும் தனி ராஜாங்கமே நடத்தியிருப்பர்.  ஜெயப்பிரதா, கமல் சந்திக்கும் அந்தக் காட்சி தொடங்கிக் கடைசி வரை ராஜ தர்பார் நீடிக்கும்.

இதோ நீங்களும் கேளுங்களேன்:



 
Thanks: Youtube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி