Wonderful Shopping@Amazon

Friday, 6 September 2019

உண்ட (2019) மற்றும் காவலுதாரி (2019)


     உண்ட (2019) - மலையாளம்



த்தனையோ போலீஸ் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். சொல்லப் போனால் போலீஸ் வேடத்தில் நடிக்காத கதாநாயகர்களே இல்லை எனலாம். மம்மூட்டி நடித்த பல போலீஸ் திரைப்படங்கள் வந்திருந்தாலும். அதில் "ஆவநாழி" எப்போதுமே பெஸ்ட்.
 
சரி விசயத்துக்கு வருவோம். உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட"உண்ட" - சமீபத்தில் மம்மூக்க நடித்து வெளிவந்த படம். போலீஸ் வேடத்தில் கோபம் கொப்பளிக்க ஆக்ரோஷமாக வசனம் பேசி நடிக்கும் மம்மூக்க, இதில் அமைதி நடித்து நம்மைக் கவர்கிறார்.

சுமுகமாகத் தேர்தல் நடத்த வேண்டி, கேரளா போலீஸ் குழு வட இந்தியா செல்கிறது, சூழ்நிலையைச் சமாளிக்கத் தற்காப்பு ஆயுதங்கள் அரசிடம் பெறும் முயற்சி தோல்வியில் முடிய, தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு நிலைமை சமாளித்து, தேர்தலை முடித்துக்கொடுத்து ஊர் திரும்புகிறது.

நக்சல் பாதித்த பகுதிகளையும் அங்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், போலீஸ் குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு போலீஸ்காரருக்கும், வேறு வேறு பின்னணி, தொலைதூர பகுதிகளுக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் போலீஸ்காரர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களையும் மிக எதார்த்தமாக, சமரசம் இல்லாமல் இயக்குநர் காலித் ரஹ்மான் சொன்ன விதம் அருமை.

தேர்தல் அன்று உள்ளூர் அரசியல்வாதி ஆட்களுக்கும், கேரளா போலீஸ் குழுவுக்கும் நடக்கும் மோதல் திக் திக் ரகம். அவ்வப்போது பின்னணி இசையாக வரும் நாடோடி பாடல் படத்தின் வீரியத்தை உணர்த்துகிறது.
 

    காவலுதாரி (2019) - கன்னடம்


இதுவும் ஒரு போலீஸ் கதை தான். வழக்கமான கதை போல் இல்லாமல், இன்வெஸ்டிகஷன் திரில்லர் வகைப் படம். ரிஷி - போக்குவரத்து காவலர். மெட்ரோ ரயில் கட்டுமான இடத்தில் மூன்று மண்டையோடுகள் கண்டெடுக்கப்படுகிறது. அதனுடைய பின்னணியை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி முத்தண்ணா மற்றும் பத்திரிக்கையாளர் குமார் உதவியுடன் கண்டறியத் தொடங்கும் ரிஷிக்குப் பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. படம் பார்க்கும் நமக்கும் தான்.

கதையின் நாயகன் ரிஷி போக்குவரத்து காவலர் வேடத்தில் அசலாகப் பொருந்துகிறார்.

முதல் கால் மணி நேரத்திற்குள் ரசிகனைப் படத்திற்குள் இழுத்து உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர். ஒரு சிக்கலான கதையை வைத்துக்கொண்டு தெளிவான, விறுவிறு திரைக்கதையை அமைத்து, எதிர்பாராத திருப்பங்களைத் தந்து நம் BP யை எகிறவைக்கிறார் இயக்குநர் ஹேமந்த ராவ். கதாநாயகன் ரிஷி, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பேடுகளில் தேடும் போது, தேடப்படும் நபர்கள் வந்து போவார்கள், கடைசியில் எஞ்சி இருக்கும் அந்த மூன்று பேர் தான் கொலையுண்ட நபர்கள் எனத் தெரியும் காட்சி அருமை - இயக்குநர் டச்.

மெல்ல நகரும் கதை இடைவேளைக்குப் பிறகு வேகமெடுக்கிறது. பத்திரிக்கையாளர் குமாருக்கும் கொலையில் தொடர்பு இருக்கிறது என்று தெரியவரும் இடம் எதிர்பாராத திருப்பம்.

இது போன்ற படங்களுக்குப் பின்னணி இசை பக்கபலமாக இருக்கவேண்டும். ஏனோ இப்படத்தில் அது மிஸ்ஸிங்.

மொத்தத்தில் இரண்டு படங்களுமே தவிர்க்கக்கூடாத படங்கள்.  கண்டுகளியுங்கள்



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

No comments:

Post a Comment