Wonderful Shopping@Amazon

Monday 9 September 2019

தி கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் (2008)

   
மூன்று நாள் தொடர் விடுமுறை. என்ன படம் பார்க்கலாம் என்று யோசித்தபோது. Filmi Craft ல் வித்தியாசமான பெயர் கொண்ட ஆங்கிலப் படத்தைத் தேர்வு செய்தேன். படமும் அப்படித் தான் இருக்கும் என்று தெரியாமல்..! பெயர் : தி  கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் (2008).
Complete Life Journey படங்களான Rocky (1976), Forrest Gump (1994), Pursuit of Happiness (1994), A Beautiful Mind (2001) ஹலிவுட்டில் நிறைய இருக்கிறது. அந்த ஜானரில்  தி  கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் (2008) என்ற படத்தை பற்றி பேசுவோம். 

அமெரிக்க எழுத்தாளர் பிரான்சிஸ் ஸ்காட் கி பிட்ஸ்ஜெரால்டு எழுதிய சிறுகதையைத் தழுவி, இயக்குநர் டேவிட் பின்சர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று தி கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்.
பதிமூன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த ஒப்பனை, சிறந்த விசுவல் எபக்ட்ஸ், சிறந்த கலை இயக்கம் என மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற படம்.
 
சரி கதைக்கு வருவோம், இரவு வேளை, ஊரெங்கும் ஆரவாரச் சத்தம், போர் வெற்றியைக் கொண்டாடும் மக்கள், தொழிலதிபர் தாமஸ் பட்டன் மனைவிக்குக் கிழ உருவத்துடன் குழந்தை பிறக்கிறது, அதிர்ச்சி அடைந்த தாமஸ் குழந்தையை, குயிநீ என்ற பெண்மணி நடத்தும் அநாதை விடுதி வாசலில் போட்டுவிட, குழந்தையைக் கண்டெடுக்கும் குயிநீ பெஞ்சமின் என்று பெயர் வைத்து தன் மகன் போல் வளர்க்கிறார். இங்கிருந்து

சக்கரம் நாற்காலியில் ஆரம்பிக்கிறது பெஞ்சமினின் பயணம். மெல்லத் தனியாக நடக்க, ஆரம்பிக்கிறான், பியானோ கற்றுக்கொள்கிறான், காதல் வயப்படுகிறான், கலவி இன்பம் காண்கிறான், இரண்டாவது உலகப் போரில் கலந்து கொள்கிறான், பழைய காதிலி டெய்சியைத் தேடி தன் காதலை மீட்கிறான், தன் அப்பாவை அவருடைய இறுதிக் காலத்தில் சந்திக்கிறான், தன் மீது எழுதி வைத்த சொத்துக்களை விற்று, பணத்தைக் காதலி பெயரில் வங்கியில் போடுகிறான், இதற்கிடையில் தான் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களும் மரிக்க (வளர்த்த அன்னை உட்பட), கடைசியில் தன் காதலியின் மடியில் குழந்தையாய் மாறி உயிர் விடுகிறான் பெஞ்சமின்.

மேலே சொன்ன கதையைப் படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறதா, ஆமாம் படமும் அப்படித் தான். கதை பெஞ்சமினின் காதலி டெய்சி ஃபுல்லர் தன்னுடைய மரணத்தருவாயில் மகளுக்குச் சொல்கிறாள்.

இரண்டே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை. காட்சிக்குக் காட்சி சுவாரசியம். அங்கங்கே சில குறியீடுகள். நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. இங்கே நமது கதாநாயகன் வயது முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பி குழந்தையாய் மாறி இறப்பான்.

இது போன்ற படங்கள் எடுப்பதற்கென்றே ஹாலிவுட்டில் சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். எல்லா ஹாலிவுட் நடிகர்களும் இதுபோன்ற படங்களில் நடிக்கவே செய்கிறார்கள். பெஞ்சமின் என்ற முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்த நடிகர் பிராட் பிட், ஒவ்வொரு காட்சியிலும் மாறும் உருவ அமைப்பு, அதற்கேற்றாற்போல் உடல் மொழி என மனுஷன் பின்னியிருப்பார்.

பெஞ்சமின் வளர்ப்புத் தாயாகக் 'குயிநீ' என்ற கதாபாத்திரத்தில் நடித்த திருமதி
தராஜி  பி ஹென்சன் நடிப்பு அபாரம். பெற்ற குழந்தையை விட, பெஞ்சமின் மீது என்ன அன்பு, வாஞ்சை. வயோதிக காலம் வரை பெஞ்சமின் மீது அன்பைப் பொழிவாள். நம்மூர் மனோரமா ஆச்சி தான் ஞாபகம் வருகிறது. அதே போல், படத்தில் வரும் எல்லாச் சின்னச் சின்னத் துணைக் கதாபாத்திரங்களும் உங்கள் மனதைக் கொள்ளைகொள்வது நிச்சயம்.

யூடியுப் செயலியில் இப்படம் காணக் கிடைக்கிறது.



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

No comments:

Post a Comment