Wonderful Shopping@Amazon

Wednesday, 29 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-123

கலையரசி (1963)

தமிழில் அறிவியல் புனைவு கதையம்சம் உள்ள திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏன் அறிவியல் புனைவு கதைகள் கொண்ட திரைப்படங்கள் அதிகமாகத் தமிழில் வருவதில்லை என்று தெரியவில்லை. சமூக/ புராண /குடும்ப திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இத்தகைய படங்களுக்கு கிடைக்காததே காரணமாக இருக்கலாம்.

சமீபகாலமாக அறிவியல் புனைவு கதையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்துள்ளது. மிக சமீபத்திய உதாரணம்: 'டிக் டிக் டிக்', 'நேற்று-இன்று-நாளை', 'டிக்கிலோனா', 'மாநாடு', 'ஜாங்கோ' இன்னும் சில. எண்ணிக்கை அதிகமாகும் வரை ஆங்கில படங்களைப் பார்த்து நம்மூர் ரசிகர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை பற்றிய 'ஸ்டார் ட்ரெக்' நிகழ்ச்சி பெரிய சென்சேஷன்.  பள்ளியில் எனது நண்பர்கள் முந்தைய நாள் தொடரைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் எனக்கு அதன் கதையும் சரி, காட்சிகளும் சரி,  ஒரு மண்ணும் புரியவில்லை.  அதனால் 'ஸ்டார் ட்ரெக்' தொடர் என்னை கவரவில்லை என்றே சொல்வேன். பிறகு 'ஸ்பேஸ் சிட்டி சிக்மா' என்ற தொடர் வந்தது. இவ்வளவு தான் அறிவியல் புனைவு திரைப்படங்களை எனது புரிதல்.

தமிழில் வந்த முதல் அறிவியல் புனைவு அல்லது வேற்று கிரகவாசிகள்/ பறக்கும் தட்டு கதையம்சம் கொண்ட படத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

நல்ல / வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெளிநாட்டுப் படங்கள் மேல் எம்ஜிஆர் அவர்களுக்கு நாட்டம் உண்டு. 'It Happened One Night' மற்றும் 'Roman Holiday' படத்தின் பாதிப்பில் அவர் நடித்து வெளிவந்த படம் 'சந்திரோதயம்'. வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில படங்கள் நிறைய 60களில் வர, அதில் கவரப்பட்டு அவர் நடித்த படம் 'கலையரசி'.

சரி, வாங்க 'கலையரசி' கதை என்னவென்று பார்ப்போம்: 
 
கிராமத்தில் தனது தாயார் மற்றும் தங்கையுடன் விவசாயம் செய்து பிழைக்கும் எம்ஜிஆர் ஊர் பெரிய மனிதரின் மகள் பானுமதியை நேசிக்கிறார். பானுமதியை மணந்து கொண்டு சொத்துக்களுக்கு வாரிசாக பி எஸ் வீரப்பா ஆசைப்படுகிறார். வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகை தரும் நம்பியார் தன்னுடன் வந்த நபரை பூமியில் இருக்கும் படி செய்துவிட்டு பானுமதியை கடத்தி செல்கிறார். பானுமதி காணாததால் எம்ஜிஆர் மீது சந்தேகப்படும் போலீஸார் அவரை சிறையில் அடைக்கின்றனர். பானுமதியை தேடி அலையும் பி எஸ் வீரப்பா அவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணை பிடித்து வருகிறார். இதனால் சிறையிலிருந்து எம்ஜிஆர் விடுவிக்கப்படுகிறார். பூமியில் விட்டுச் சென்ற ஆளை அழைத்து செல்ல பறக்கும் தட்டில் வரும் நம்பியாரை ஏமாற்றி எம்ஜிஆர் அவருடன் வேற்று கிரகத்திற்குப் பறக்கிறார். அங்குத் தன்னை போலவே தோற்றம் கொண்ட "கோமாளி" எம்ஜிஆர்-ஐ பார்க்கிறார். எரி நட்சத்திரம் தாக்கி கோமாளி மாண்டுவிடவே அவரை போல வேடமிட்டு பானுமதியை சந்திக்கிறார். வேற்று கிரக இளவரசியான ராஜஸ்ரீயும் எம்ஜிஆர்-ஐ நேசிக்கிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி பானுமதியுடன் எம்ஜிஆர் எப்படி பூலோகம் திரும்புகிறார் என்பதே மீதிக்கதை.

திரு டி ஈ. ஞானமூர்த்தி எழுதிய கதையில் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் பானுமதி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ராஜஸ்ரீ மற்றும் குமாரி சரஸ்வதி ஆகியோர் நடித்து, இயக்குநர் ஏ. காசிலிங்கம் இயக்கி, இசை மேதை கே. வி. மகாதேவன் இசையில்19 ஏப்ரல் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த 'கலையரசி' - இந்தியாவில் (தமிழில்) வந்த முதல் அறிவியல் புனைவுகதைத் திரைப்படமாகும்.  

அப்போது இருந்த தொழினுட்பத்தை வைத்துப் படத்தை எடுத்திருப்பார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் புதிது. ஏனோ எம்ஜிஆர் ராசிகளுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. படமும் வெற்றி பெறவில்லை.  'கலையரசி' படத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை எனலாம். நடிகர் திலகம் "நமக்குச் சரிப்பட்டு வராது" என்று சற்று தள்ளியே இருந்தார்.

கமல் நடித்து  ராக்கெட் தொழினுட்ப திருட்டைப் பற்றிய கதையம்சம் கொண்ட 'விக்ரம்' படம் 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. படத்திற்கு கிடைத்த 'வரவேற்பை' கண்ட கமல், அதன் பிறகு அந்த பக்கமே செல்லவில்லை. அதனால் தான் என்னவோ 'எந்திரன்' பட வாய்ப்பை கூட நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.


- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday, 28 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-122

 சித்தி (1966)

ஞாயிறு அன்று - தொலைக்காட்சி சேனல்களை துழாவிய போது, ஒரு சேனலில் நிறுத்தினேன். "திரைக்கதை, இயக்கம்: கே எஸ் கோபாலகிருஷ்ணன்" என்றது. அந்த படம் நடிகவேள் எம் ஆர் ராதா கதை நாயகனாக நடித்த "சித்தி" திரைப்படம். படத்தைப் பார்த்து முடித்தேன். ஏற்கனவே பல முறை பார்த்தது தான்.  நடிகவேள் அவர்களுக்காகவே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். தனது அனாயாசமாக நடிப்பால் ராதா அவர்கள் படம் முழுதும் மிரட்டியிருப்பார்.  

இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை மெலோட்ராமா என்பார்கள். புராண / சமூக கதைகளில் ஆரம்பித்த தமிழ் சினிமா மெலோட்ராமாக்களில் தொடர்ந்து இயக்குநர் வீ சேகர் வரை பயணித்து இன்று வேறு திசையில் செல்கிறது. குடும்ப படமென்றாலே தொலைக்காட்சி தொடர் போலிருக்கிறது என்ற இன்றைய ரசிகர்களின் எண்ணம். சமீபத்தில் வந்த 'அண்ணாத்தே' படம் கூட இந்த விமர்சனத்துக்குத் தப்பவில்லை. மெலோட்ராமா இல்லாமல் சினிமா இல்லை என்று இன்றைய ரசிகர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

காலஞ்சென்ற இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய அத்தனை படங்களும் மெலோட்ராமா வகையறா தான். இன்றும் விசு படங்களை சேனல் மாற்றாமல் பார்ப்பதுண்டு.

சரி நாம் விஷயத்துக்கு வருவோம் .....

எழுத்தாளர் வை மு. கோதைநாயகி எழுதிய 'தயாநிதி' நாடகத்தைத் தழுவி, பத்மினி மற்றும் ஜெமினி கணேசன் நடித்து,  இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'சித்தி' திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் மற்றும் உடுமலை நாராயண கவி எழுதியுள்ள பாடல்களை அத்தனையும் இனிமை. "சந்திப்போமா இன்று" எனக்குப் பிடித்த பாடல்.  இப்படம் இந்தியில் 'ஔரத்' (1967),[1] மலையாளத்தில் 'அச்சந்தே பர்யா' என்றும், தெலுங்கில் 'பின்னி' என்றும், கன்னடத்தில் 'சிக்கம்மா' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்கள் எனக்குப் பிடிக்கும். பெரும்பாலும் குடும்ப படங்களாகவே எடுத்துத் தள்ளியவர். இன்றும் இவருடைய படங்களை விரும்பி பார்ப்பேன். என்னுடைய All time Favorite: "குறத்தி மகன்". கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம். சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதை இப்படம் பெற்றது. 

கொசுறு: ஒரு திரைப்படம் சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். "குறத்தி மகன்" படத்தின் விளைவாகத் தமிழகத்தின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைக்காரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காகத் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972ல்) ட்ரஸ்ட் உறைவிட பள்ளி அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை என்ற சிறப்புச் சட்ட உத்தரவைத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறப்பித்தார். கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டிடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே. நரிக்குறவர்,காணிக்காரர்,குறும்பர் ஆகிய இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்கப் பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான். அதை மத்திய அரசும் சமீபத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



Friday, 24 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-121

'தி சைனீஸ் வால்' கோஸ்தா பால்

ந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான  கோஸ்தா பாலின் 125வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறோம். 

கோஸ்தா பால், 1962-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் கால்பந்து வீரர் மற்றும் மத்திய அரசு அவர் பெயரில் தபால்தலை வெளியிட்டு கௌரவித்தது. அவரது அற்புதமான கதை இதோ:

ரசிகர்களால் 'தி சைனீஸ் வால்' என்று அழைக்கப்பட்ட கோஸ்தா பால், 1896 இல் பங்களாதேஷில் பிறந்தார். 1907 இல் தனது பதினோராவது வயதில் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார்.

1911-இல், ஒரு மழை நாளில் கல்கத்தாவின் குமார்துலி பூங்காவில் அவர் பங்கேற்ற ஒரு பயிற்சி கால்பந்து விளையாட்டு போட்டி திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்திய கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இருந்த உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்கவரான காளிச்சரன் மித்ரா, பாலின் தனித்துவமான தடுப்பு நுட்பங்களை அந்த போட்டியில் முதல் முதலில் அடையாளம் கண்டார்.

காளிசரண் மித்ரா மற்றும் மேஜர் சைலன் போஸ் - இவர்களின் உதவியுடன், பால் 1913-இல் மோகன் பகான் கிளப்பில் சேர்ந்தார்.

சுவாரஸ்யமாக, 1913 இல் டல்ஹௌசி எஃப்சி வீரர்களுக்கு எதிரான பாலின் முதல் ஆட்டம் பார்வையாளர்களை கவரவில்லை. கிளப்பின் ரசிகர்கள் புதிய வீரரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் பால் 1912 மற்றும் 1913 இல் கல்கத்தா கால்பந்து லீக்கின் அப்போதைய சாம்பியனான டீம் பிளாக் வாட்ச்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் தனது அற்புதமான ஆட்டத்திறமையின் மூலம் பதிலடி தந்தார்.

அந்த ஆண்டு மோகன் பகான் கிளப்பால் பல கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்றாலும், பாலின் ஆட்டத்திறமை மிகவும் பிரபலமடைந்தன. காலில் காலணி இல்லாமல் ஒரு தடுப்பாளராக அவரது திறமைகள், அவரது பரந்த உடல் தோற்றம் மற்றும் துணிச்சலுடன் அணியுடன் ஒருங்கிணைந்து விளையாடினார்.  அந்த நேரத்தில் ரசிகர்களால் 'சீன சுவர்' (அல்லது 'சீனாவின் சுவர்') என செல்லமாக அழைக்கப்பட்டார்.

1915-இல், கல்கத்தா கால்பந்து கிளப்பிற்கு எதிரான கிளப்பின் முதல் பிரிவு போட்டியில் பால் விளையாடினார். அணி இறுதியாக கல்கத்தா கால்பந்து லீக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடமே இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

1921-இல், கோஸ்தா பால் கிளப்பின் கேப்டனாக இருந்தார். இந்திய கால்பந்து சங்க ஷீல்ட் டிராபியின் இறுதிப் போட்டிக்கு அணியை வழிநடத்தி, கல்கத்தா எஃப்சிக்கு எதிராக இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

1923-ஆம் ஆண்டில், மும்பையில் நடைபெற்ற மதிப்புமிக்க ரோவர்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய அணியாக மோகன் பகான் ஆனது - இது அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், மோகன் பகான் முழு வெள்ளை நிற டர்ஹாம் லைட் இன்பேன்ட்ரியால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் 1937 வரை எந்த இந்திய அணியும் கோப்பையை வெல்லாது, அல்லது மோகன் பகான் அணியை நெருங்க முடியாத நிலை இருந்தது என்பது பால் மற்றும் மோகன் பாகனின் வீரர்களின் திறமைக்கு சான்றாகும்.

அவர் 1926 ஆம் ஆண்டு வரை கிளப் அணிக்கான கேப்டனாகத் தொடர்ந்தார் மற்றும் 1935-இல் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் இந்திய கால்பந்து வரலாற்றில் டுராண்ட் கோப்பை போட்டியில் விளையாட அழைக்கப்பட்ட முதல் கிளப் மோகன் பகான் என்ற பெருமையை பெற்றது. அந்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

தற்போது நாக்பூரில் வசிக்கும் கோஸ்தா பாலின் இளைய மகன் சுகுமார் பாலிடம் (75) பேசினோம், அவர் தனது தந்தையைப் பற்றிய சில இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கோஸ்தா பால் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மோகன் பகான் அணி, இங்கிலாந்து அணியான கல்கத்தா எஃப்சிக்கு எதிரான போட்டியில் கலந்துகொண்டது. இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக சாதகமான முடிவுகளை நடுவர் எடுத்திருந்தார். கோஸ்தா பால் தனது முழு அணியையும் மைதானத்தில் படுக்க வைத்து, எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவம் இந்திய கால்பந்தில் ஒரு மறக்க முடியாத தருணம் - என அவரது மகன் சுகுமார் பால் விளக்குகிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் உள்ள கோஸ்தா பால் சிலை.

“எங்கள் வீட்டில் ஏழு பேரில் நான் இளையவன் என்பதால் அவர் விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் என் தந்தையை ஒரு அமைதியான நபராகவே நினைவில் கொள்கிறேன். அவர் எங்களை ஒருபோதும் கண்டித்ததில்லை, ஆனால் நாங்கள் அனைவரும் நன்றாக வளர்க்கப்பட்டோம், எப்போதும் சரியானவற்றுக்காக நிற்கிறோம், ”என்று சுகுமார் பால் மேலும் கூறுகிறார்.

அது 1936 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பால் ஏப்ரல் 9, 1976-இல் மறைந்தார்.

அவரது மறைவுக்கு பின் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் எதிரில் அவரது சிலையை நிறுவி கௌரவித்தது கொல்கத்தா கால்பந்து சங்கம். கொல்கத்தாவில் அவர் பெயரில் ஒரு தெருவும் உள்ளது.1998 இல் இந்திய அரசு இவர் பெயரில் தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. மேலும் 2004 இல் மறைவுக்குப்பின் மோகன் பகான் ரத்னா விருதைப் பெறும் நான்காவது வீரர் கோஸ்தா பால் - இது கிளப்பின் ஜாம்பவான்களுக்கு வழங்கப்படும் விருது.

“இன்றும் கூட, நான் கொல்கத்தாவில் பொது இடங்களில் அல்லது கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதோ, நான் கோஸ்தா பாலின் மகன் என்பதை அறிந்து மக்கள் தரும் மரியாதையும் பாராட்டும் என்னை வியக்கவைக்கிறது. அவரது பெயரில் எந்த போட்டிகளும் இல்லை என்றாலும், அவர் இன்னும் கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவானாக கருதப்படுகிறார்" - என்கிறார் அவரது மகன் சுகுமார் பால்.

நன்றி: https://www.thebetterindia.comand Google

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Thursday, 23 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-120

'83' உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ‘முதுகெலும்பு’ பிஆர் மான் சிங் ஒரு அங்கமாக இருந்தார். 

1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் உள்ளே உள்ள  'டெவில்'-ஐ  உத்வேகப்படுத்தி  இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்ற பெருமை அணி மேலாளர் திரு பிஆர் மான் சிங்கை சேரும். இந்திய அணிக்கு இதுவரை கிடைத்த மேலாளர்களில் சிறந்த 'மேலாளர்' என அழைக்கப்பட்டார். அந்த ஹீரோவின் கதை இங்கே:

 Reel                                    Real 

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளரான பிஆர் மான் சிங் உடன் 14 வீரர்கள் கொண்ட அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது. 

'மான் சாப்' மற்றும் 'மிஸ்டர் கிரிக்கெட்' என்று பிரபலமாக அறியப்பட்ட அவர் ஒரு மேலாளர் மட்டுமல்ல, ஒரு வீரராகவும் இருந்தார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் பிரேக் பந்துவீச்சாளர், மான் சிங் 1965 மற்றும் 1969க்கு இடையில் ஐந்து முதல்-தரப் போட்டிகளில் விளையாடினார், ரஞ்சி டிராபியில் ஹைதராபாத் மற்றும் மொயின்-உத்-டவுலா தங்கக் கோப்பை போட்டியில் ஹைதராபாத் ப்ளூஸை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் ஒரு வீரராக இல்லாமல் அணியின் நிர்வாகியாகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

1978 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய அணியின் உதவிக் குழு மேலாளராகத் தனது பணியைத் தொடங்கினார் பிஆர் மான் சிங். 

20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978 ஆம் ஆண்டு இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. கிட்டத்தட்ட  இது ஒரு அரசியல் சுற்றுப்பயணமாக இருந்தது.  அந்த இந்திய அணியின் மேலாளர் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, பரோடா மகாராஜாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  அதை ஏற்றுக்கொண்ட அவர், "நான் இந்த சுற்றுப்பயணத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், மான் சிங் எனது உதவியாளராக இருக்க வேண்டும்" என்றார். 

ஆறு பேர் கொண்ட தேர்வுக் குழுவின் உறுப்பினராக மான் சிங் இருந்தார். கபில்தேவை உலகக் கோப்பை போட்டிக்கு அணித்தலைவராக நியமித்தது, இது பின்னர் கபில்தேவின் அற்புதமான செயல்திறன் சாம்பியன்ஷிப்பிற்கு வழி வகுத்தது.

1983 உலகக் கோப்பை, மான் சிங்கின் பணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை, இருப்பினும் அணியைச் சிறப்பாக நிர்வகித்தார் . வாரிய விதிகளைப் புறந்தள்ளி வீரர்களுக்கு ஆதரவாக இருந்தார். வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் ஹோட்டலில் தங்கவும், லண்டனுக்கு வெளியே உள்ள இடங்களுக்குக் குழுப் பேருந்தில் செல்லவும் அனுமதித்தார்.  அப்போது இது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.  

1987 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி வரை எட்டிய இந்திய அணியின் மேலாளராக மான் சிங் இருந்தார்.  

"உண்மையில், உலக அளவில் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்ட மான் சிங் போன்ற நபரைப் பார்க்க முடியாது. மேலும் அவரது வீட்டில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகம் அவரது  கிரிக்கெட் மீதான காதலுக்கு போதுமான சான்றாகும்.” என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் பிஷன் சிங் பேடி மான் சிங்கின் ‘அகோனி அண்ட் எக்ஸ்டஸி’ புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார்.

அவரது புத்தகம் ஒரு விதிவிலக்கான படைப்பாகும், இதில் விளையாட்டுகளின் போது அற்புதமான காலங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் அதுவரை கேள்விப்படாத மற்றும் அறியப்படாத, அணிக்குள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி  விவரிக்கிறார்.

76 வயதாகும் மான் சிங், விஸ்டன் இந்தியாவிடம் கூறுகையில், "என் தந்தை என்னைச் சிறுவயதில் கிரிக்கெட் பார்க்க அழைத்துச் சென்றார், ஆனால் நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து தீவிரமாக விளையாட ஆரம்பித்தேன்.

முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கான டீம் இந்தியாவின் பயணத்தைக் காண்பிக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ’83’ டிரெய்லரில் நடிகர் பங்கஜ் திரிபாதி பிஆர் மான் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

'83' படத்துக்காக மான் சிங் கதாபாத்திரத்திற்குத் தயாராகும் போது, பங்கஜ் கூறினார், “நான் பந்துவீச்சு, பேட்டிங்  மற்றும் பீல்டிங்கில் நன்றாக என்னை தயார்ப்படுத்திக்கொண்டேன். நான் மான் சிங் ஜியையும் சந்தித்து அவரது அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன், படப்பிடிப்பின்போது எனக்கு அது பேருதவியாக இருந்தது.

 

நன்றி: https://www.thebetterindia.comand Google

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-119

ஆறிலிருந்து அறுபது வரை (1979)

ஜினி தனது ஆரம்பக்காலத்தில் வருகிற வாய்ப்பையெல்லாம் தவற விடாமல், கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் 'அவர்கள்', 'கவிக்குயில்', 'மூன்று  முடிச்சு', 'புவனா ஒரு கேள்விக்குறி','16 வயதினிலே', 'காயத்ரி', 'ஆறிலிருந்து அறுபது வரை' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

இப்போது நாம் 'ஆறிலிருந்து அறுபது வரை'  படம் பற்றிப் பேசுவோம். என் அக்காவுக்கு இந்த படம் மற்றும் படத்தின் வரும் தொடக்கப் பாடல் நிரம்பப் பிடிக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சளைக்காமல் இன்று வரை அந்த படத்தை யுடியூப்-இல் பார்த்துவிடுவார். அதுமட்டுமல்ல அவளுக்குப் பழைய ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும். ஒவ்வொரு படத்தைப்  பற்றியும் என்னிடம் விவரிப்பார். பள்ளி பருவத்தில் "மை நேம் இஸ் பில்லா" என்ற பாடல் தூர்தர்சன் "ஒளியும் ஒளியும்" நிகழ்ச்சியில் கேட்கும்போது செம உற்சாகமாக இருக்கும்.
 
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆறிலிருந்து அறுபது வரை"

ரஜினிகாந்தின் முந்தைய படமான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சு அருணாசலம் எழுதிய கதையில், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,  மென்சோகம், தியாகம் நிறைந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை வைத்து "ஆறிலிருந்து அறுவது வரை" படத்தை இயக்க தொடங்கினார். ஆனால் ரஜினிக்குச் சிறிது தயக்கம், இப்படிப்பட்ட மெலோடிராமாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ?அவரை சமாதானப்படுத்திய இயக்குநர் அதுவரை எடுத்த 5000 அடி திருத்தப்பட்ட பதிப்பைக் காட்டினார், அதைப் பார்த்து உற்சாகமடைந்த ரஜினி முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். படமும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றியை அடைந்தது.
 
சென்னை மிட்லாண்ட் திரையரங்கில் இப்படம் 25 வாரங்கள் ஓடியது. தெலுங்கில் சோபன் பாபு நடிப்பில் "மகாராஜு (1985)" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் அம்பரீஷ் நடித்து  "பூர்ண சந்திரா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


Wednesday, 22 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-118

சூர்யகாந்தி (1973)
 
ஜெயலலிதா அவர்கள் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அரசியல் பிரவேத்துக்கு முன் அவர் நடித்த படங்களில் என் அம்மாவுக்கு பிடித்த படம் முக்தா சீனிவாசன் இயக்கி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த "சூர்யகாந்தி". கணவன்-மனைவி அவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் தான் கதை. படம் முழுக்க அமைதியாக தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜெ.அவர்கள். மேலும் முத்துராமன், சாவித்திரி, மேஜர் சுந்தர்ராஜன். சோ. ராமசாமி, மௌலி, சிஐடி சகுந்தலா மற்றும் மனோரமா ஆகியோர் படத்தின் கதையோட்டத்துக்கு வலுசேர்த்திருப்பார்கள்.

மனோரமா அவர்கள் பாடிய "தெரியாதோ நோக்கு" பாடல் எனக்கு பிடிக்கும். மேலும் "ஓ மேரி தில்ரூபா" கண்ணதாசன் திரையில் தோன்றி பாடிய "பரமசிவன் கழுத்தில்" பாடல் யாருக்கு தான் பிடிக்காது. பாடும் நிலா பாலு தனது இளங்குரலில் ஜெ.-உடன் பாடிய "நான் என்றல் அது அவளும்" என மெல்லிசை மன்னர் இசையமைத்த அத்தனை பாடல்களும் இனிமையோ, இனிமை. இந்தப் படத்தில் கமல்ஹாசன் தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளராகப் பணிபுரிந்தார். சரியாக 14 வருடங்கள் கழித்து முக்தா சீனிவாசன் தயாரிப்பில் கதாநாயகனாக நடித்த "நாயகன்" படம் வெளிவந்து பெரும் வெற்றிபெற்று கல்ட் கிளாசிக் அந்தஸ்தை அடைந்தது.

"சூர்யகாந்தி" படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 16 செப்டம்பர் 2016 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் மலையாளத்தில் "ப்ரியம்வதா" என்றும், தெலுங்கில் "மொகுடா பெல்லமா" என்றும், கன்னடத்தில் "ஹென்னு சம்சாரதா கண்ணு" என்றும் ரீமேக் செய்யப்பட்டது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday, 21 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-117

அந்த ஒரு நிமிடம் (1985)

தீவிர ராஜா ரசிகரான நண்பர் அலைபேசினார். விஷயம் இது தான் : இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம், கடந்து வந்திருக்கிறோம். ஆனால் இப்போது தரமான தலையணியில் கேட்கும்போது வியப்பாக இருக்கிறது. இனி எதிர்காலத்தில் வரப்போகின்ற தொழிற்நுப்பத்திற்கேட்ப பாடல்(கள்) இருக்கவேண்டும் என  ராஜா நினைத்தாரோ என்னவோ! எந்த சாதனத்தில் பாடல்களை கேட்டாலும் இப்பொது தான் இசையமைத்தது போன்றுள்ளது.

ஏராளமான படங்கள் இசையமைத்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் ராஜா எப்படி  இந்த பாடல், இப்படி இருக்கவேண்டும் என யோசித்தார்? முதல் சரணம்: சுஃபி இசை (லைலா-மஜ்னு தீம்), இரண்டாவது சரணம்: கர்நாடக இசை (அம்பிகாபதி-அமராவதி தீம்) மற்றும் மூன்றாவது சரணம்: மேற்கத்திய இசை (ரோமியோ-ஜூலியட் தீம்) என விருந்து படைத்திருப்பார்.

1985-ஆம் ஆண்டு கமல் நடித்து இந்தி, தமிழ் என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்ற ஆண்டாக அமைந்தது. பொங்கலன்று வெளியான "ஒரு கைதியின் டைரி" வெற்றிக்கணக்கை தொடங்கி வைத்தது. அதே ஆண்டு கோடை விடுமுறைக்கு நடிகர் மேஜர் சுந்தரராஜன் இயக்கி, கமல்-ஊர்வசி நடித்த "அந்த ஒரு நிமிடம்" படத்தில் இடம்பெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய
"சிறிய பறவை" பாடலில் தான் மேற்சொன்ன இசை ஜாலம் நிகழ்த்தியிருப்பார் ராஜா.

இயக்குனர் மேஜர் சுந்தராஜன் இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருப்பார். தனது மோதிரத்தில் உள்ள விஷ ஊசியால் தனது எதிரிகளை கொள்வார். மற்றபடி படம் சுமார் தான்.

நாங்கள் மைசூரார் காம்பௌண்டில் குடியிருந்தபோது ஒரு மாலை வேளையில் விசிஆர்-இல் பார்த்த படம். படம் சுமார் தான். கிளைமாக்ஸில் வரும் பாடலை தான் நான் சிறுவயதில் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்.  "சிறிய பறவை" பாடலை கேட்டு மகிழுங்கள்:



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-116

பொற்காலம் (1997)

1997-ஆண்டு நவம்பர் மாதம் மழை மிகுந்த முதல் வாரம். திருவெற்றியூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு கடைசி தாள் தேர்வை எழுதி விட்டு எம்எஸ்எம் திரையரங்கை நோக்கி கால்கள் விரைந்தன. "பாரதி கண்ணம்மா" படத்தின் மிகப்பெரிய வெற்றியால் "பொற்காலம்" படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. நானும் படத்தைப் பார்க்க ஆவல் கொண்டேன்.
 
பகல் காட்சி பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், படம் எனக்குப் பிடித்திருந்தது. அண்ணன்-தங்கை பாசத்தை வேறொரு கோணத்தில் காட்டியது படம். குறைவான கதாபாத்திரங்கள். தேனிசை தென்றல் தேவாவின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்து.  அதிலும் இறுதிக்காட்சி சோகமாக வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.

இயக்குநர் சேரன் நடிக்காமலிருந்து இன்னும் சிறந்த படைப்புக்களை /படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்வித்திருக்கலாம். ஹூம் ...ஆசை யாரை விட்டது. சரி....நடிக்கத்தான் வந்தோம்..........நாம் அவருடைய நடிப்பைப் பற்றி பேசவேண்டாம்..நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

கவிஞர் வைரமுத்து வரியில் தேனிசை தென்றல் தேவா பாடிய"ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ" பாடல் எங்கும் ஒலித்தது. திரையில் நாட்டார் நடன பின்னணியில் வடிவேலு பாடியிருப்பார்.

அப்போது மைலாப்பூரில் எனது அலுவலகம். தினமும் காலை மின்சார ரயிலில் பயணம். எது எப்படி இருந்தாலும். காலை 8.05 ரயிலைத் தவற விடமாட்டேன். காரணம் இந்த ரயிலில் அரக்கோணத்திலிருந்து சென்னை வரும் ஒரு குழு திரைப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருவார்கள். தினமும் இசை மழை தான். புகழ் பெற்ற பழைய /அப்போது பிரபலமாயிருந்த புதிய பாடல்கள் எனக் கலந்துகட்டி பாடுவார்கள். கையில் தப்பட்டம் போன்ற இசைக்கருவி, "ஜெல்", "ஜெல்" என்ற சத்தம் பாடலினூடே பயணித்து, பாடலுக்கு மெருகேற்றும். காலை வேளையில் கேட்க மனதுக்கு உற்சாகமாக இருக்கும். குழுவில் வயதான பெரியவர் கிட்டத்தட்டத் தேவாவின் குரல் சாயலில் பாடிய "ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ" பாடல் பயணிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. சென்ட்ரல் ரயில் நிலையம் நெருங்கும் வேளையில் அப்பாடலை மீண்டும் ஒரு முறை பாடி நிறைவு செய்வார்.

இந்த பாடலை எப்போது கேட்டாலும் தேவாவின் குரல் மறைந்து அந்த பெரியவரின் குரல் தான் ஞாபகம் வந்து போகிறது. இதோ அந்த பாடலை கேளுங்கள்.




 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Monday, 20 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-115

கபில்தேவின் கதை: 1983 இல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இந்தியாவின் ஆல்-ரவுண்டர்

ந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கபில்தேவ், 24 வயதில் உலகக் கோப்பையை வென்ற இளைய கிரிக்கெட் அணித்தலைவர் என்ற சாதனையை இன்னும் வைத்திருக்கிறார். அவர்  தனது பந்துவீச்சு திறமையால் கிரிக்கெட் ரசிகர்களை வசீகரித்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒப்பற்ற அணித்தலைவராக இருந்து, ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் கபில்தேவ் தனது சிறப்பான பேட்டிங்கால் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்தது, இந்திய அணி உலகக் கோப்பை பட்டத்திற்கான பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. அவர் அதை ‘வாழ்க்கையின் மறக்கமுடியாத இன்னிங்ஸ்’ என்று விவரிக்கிறார்.

சண்டிகரில் பிறந்த கபிலின் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தவர் அவரது தாயார். அவர் கபிலின் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் திறமையைக் கண்டறிந்து தனது அன்பு மகன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவான் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். மேலும், கபிலின் வெற்றிக்கு எல்லாமுமாக இருந்தார். 

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்ததன் மூலம், 24 வயதான கபில் லட்சக்கணக்கான இந்தியர்களின் பேரன்பைப் பெற்று மனதில் இடம்பிடித்தார்.

இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றிய அணித்தலைவர் கபிலின் கதை இதோ: 


 

நன்றி: https://www.thebetterindia.com

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

 

 

Tuesday, 26 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-114

உதயகிரி சுவாமி நாயக் -சென்னையில் தடுப்பூசிகளை பிரபலப்படுத்திய மறக்கப்பட்ட கதாநாயகன்.



சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் மற்றும் ஹாரிஸ் (இப்போது ஆதித்தனார் சாலை) சாலைகளின் சந்திப்பில், ஒரு சிறிய பச்சை தூண் உள்ளது. கட்டமைப்பின் நடுவில் ஒரு பதக்கம் 19-ஆம் நூற்றாண்டு தோற்றமுடைய ஒரு மனிதனைக் கொண்டுள்ளது. இது டாக்டர் உதயகிரி சிங்கடிவாக்கம் சாமி நாயக் அல்லது டபிள்யூஎஸ் சுவாமி நாயக்கின் நினைவுச்சின்னம், பிந்தியது அரசாங்க பதிவுகளில் தோன்றும் பெயர்.

1760-களில் கோமலீஸ்வரன்பேட்டை அப்போதைய நாகரீகமான மாவட்டமான கூவம் ஆற்றின் குறுக்கே மெட்ராஸில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த சுவாமி நாயக் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ சேவையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி, நற்பெயரைச் சம்பாதித்தார். 

எட்வர்ட் லார்ட் க்ளைவ் II 1803-இல் சுவாமி நாயக்கை தடுப்பூசி கண்காணிப்பாளராக 25 பகோடா சம்பளத்தில் நியமித்தார். உலகம் முழுவதும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் புதிய நடைமுறை அப்போது உருவாகியிருந்தது. மேலும் உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் சுவாமி நாயக் முனைப்பாக செயல்பட்டார்.  உள்ளூர் மக்களுக்கு அவருடைய முனைப்பு பெரும் சந்தேகத்தை உருவாக்கியது. 

சென்னையில் குடியிருந்த ஆர்மீனியர்களின் குழு ஜார்ஜ் டவுனில் அவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியது,  ஆனாலும் சுவாமி நாயக் அசரவில்லை பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் 1829 இல் தடுப்பூசித் துறையில் தலைமை மருத்துவ பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பின்னர், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தின் திவான் ஆனார். சென்னை நகரத்தில் பாயும் கூவம் நதிக் கரையோரத்தில் இடம் வாங்கி, எண்  25 பக்கோடா தெருவில் (பின்னர் ஹாரிஸ் சாலை) வசித்து வந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர், எண் 26 இல், வசித்த பணக்கார துபாஷ், பச்சையப்பா முதலியார்,  மெட்ராஸ் பிரசிடென்சியில் பல கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவர் ஆவார். சுவாமி நாயக் 1841-இல் மறைந்தார். ஹாரிஸ் சாலையிலிருக்கும் சுவாமி நாயக் தெரு அவரை இன்றும் நினைவுகூர்கிறது.

அவரது பேரன் டபிள்யூஎஸ் வெங்கடராமஞ்சுலு நாயுடு மாநகராட்சி ஆணையராக இருந்தார். அவர் நீதிக்கட்சி மற்றும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் முக்கிய பதவி வகித்தார். வெங்கடரமஞ்சுலு நாயுடுவின் பேரன், டபிள்யூஎஸ் கிருஷ்ணசாமி நாயுடு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்  நீதிபதியாக 1949 முதல் 1956 வரை பணியாற்றினார். கிருஷ்ணசாமி நாயுடு இந்த நகரத்தின் பாரம்பரியத்தைப் போற்றினர். அவர் மெட்ராஸ் வரலாறு, நகரம் பற்றிய உண்மைகள் மற்றும் கடந்து சென்ற வாழ்க்கை முறை குறித்த வானொலி உரைகளை வழங்கினார், இறுதியாக அவற்றைத் தொகுத்து  "என் நினைவுகள்" (1977), என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். 

டபிள்யூஎஸ் வெங்கடராமஞ்சுலு நாயுடு, லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார், இதன் மீது டாக்டர் சுவாமி நாயக் பூங்கா ஒரு நீரூற்றுடன் உருவாக்கி, பல ஆண்டுகளாக குடிசை பகுதிகளுக்கு ஒரே நீராதாரமாக இருந்தது.  1963 ஆம் ஆண்டில், நீதிபதி டபிள்யூஎஸ் கிருஷ்ணசாமி நாயுடு சுவாமி நாயக்கிற்குத் தூண் வைத்தார், இதை அப்போதைய இந்தியாவின் துணை ஜனாதிபதி விவி கிரி திறந்து வைத்தார்.

நாயுடு குடும்பத்தின் எட்டு தலைமுறைகளுக்கு மேல் சுவாமி நாயக் வாங்கிய நிலத்தில் தொடர்ந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. 


நன்றி: https://www.thehindu.com/ 

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-113

இந்தியாவில் தடுப்பூசிகளை பிரபலப்படுத்திய மறக்கப்பட்ட கதாநாயகர்கள்

Haffkine in treating patients in Bengal. Source: Wikipedia (L)History of Medicine Section of Royal Academy of Medicine of Ireland/Facebook (R)
1896-ஆம் ஆண்டில், இந்த சுதந்திர போராளி தடுப்பூசிகளைப் பிரபலப்படுத்துவதற்காகத் தனது குழந்தையின் வாழ்க்கையைப் பணயம் வைத்தார். யார் அவர் ? மேலும் படியுங்கள்.

இந்த பயமுறுத்தும் Covid-19 காலங்களில், தொற்றுநோய்களை வெல்ல முடியும் என்பதை நிரூபித்த இந்த மறக்கப்பட்ட கதாநாயகர்களின் முயற்சிகளை நாம் நினைவில் கொள்வோம்.
 
கோவிட் -19 போன்ற தொற்றுநோய் அரிதாக இருந்தாலும், சரியாக 125 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் (இப்போது மும்பை) "புபோனிக் பிளேக்" நோய் பரவல் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியது.

மருத்துவ சுகாதார பணியாளர்கள் மற்றும் பல நல்ல மனிதர்களின் இடைவிடாத முயற்சிகளினால், "புபோனிக் பிளேக்" நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நாயகர்களின் மகத்தான பங்களிப்பு வரலாற்றின் பெயர்களில் காணாமல் போனாலும், நாட்டு மக்கள் உயிர்வாழ அவர்களின் பணி உதவியது.

இருப்பினும், இந்த "புபோனிக் பிளேக்" நோயை எதிர்த்துப் போராடிய மூன்று முக்கிய நபர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அதில், முதலாவர் சாயாஜிராவ் கெய்க்வாட் III - அப்போதைய பரோடா மகாராஜா, இரண்டாமவர், உக்ரேனிய பாக்டீரியாலஜிஸ்ட் டாக்டர் வால்டெமர் ஹாஃப்கைன் மற்றும் மூன்றாமவர் சுதந்திரப் போராட்ட வீரர் அப்பாஸ் தியாப்ஜி ஆகியோர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1896 -ஆம் ஆண்டு கோடையில், "புபோனிக் பிளேக்" நோய்த் தொற்று கடல் மார்க்கமாக வரும் அயல்நாட்டு வர்த்தக பயணிகளிடமிருந்து, பெரிய மக்கள் தொகை கொண்ட பம்பாய்க்குள் பரவியது.

COVID-19 சூழ்நிலையைப் போலவே, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு மலேரியா காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள், நிணநீர் கணுக்கள், அக்குள் மற்றும் இடுப்பு பகுதி வீக்கம், போன்ற பிற அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். இந்த நோயால், பாதிக்கப்பட்ட நபர் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இறக்க நேரிடும். இறப்பு விகிதம் அப்போது 60%வரை அதிகமாக இருந்தது.

அப்போதைய  காலணி அரசாங்கம் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர் மான்சர்  மற்றும் பாக்டீரியாலஜிஸ்ட் ஈஎன் ஹான்கின் ஆகியோர் கொண்ட பிளேக் ஆராய்ச்சி குழுவை அமைத்தது. இந்த குழு கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு, திரு ஹாஃப்கைன் அவர்களை ஆராய்ச்சிக்கு வரவழைத்து, பரேல் பகுதியில் ஒரு ஆய்வகத்தை நிறுவி, இயக்குநராக நியமித்தது.

நோய் பரவ காரணமான பாதிக்கப்பட்ட எலிகளிலிருந்து பாக்டீரியாவைப் பிரித்தெடுத்த பிறகு, தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட தூய நெய்யின் கீழ் இறைச்சி குழம்பை வெற்றிகரமாக வளர்த்தார். Haffkine stalactites எனப்படும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட பாக்டீரியாக்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு வளர அனுமதிக்கப்பட்டன, இறுதியில் வெப்பத்தால் பலவீனமடைகின்றன.  பலவீனமான பாக்டீரியா தொற்று இல்லாத மனித உடலில் செலுத்தப்பட்டவுடன், ஆன்டிபாடிகள் அவற்றைத் திறம்பட எதிர்த்துப் போராட முடியும்.

ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ந்த அவரது பணி தொடர்ந்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு. இறுதியாக, ஹாஃப்கைன் தான் கண்டுபிடித்த தடுப்பு தடுப்பூசியைத் தன்னார்வலர்களுக்கும் பிறகு பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்தார்.  நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் இந்த தடுப்பூசி உடலில் செலுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது.

அப்போது பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், சோதனை செய்யத் தன்னார்வலர்களைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது.  ஹாஃப்கைன் முதலில் தன்னையும் பிறகு முன்வந்த தன்னார்வலர்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்.

ஒரு வருடத்தில், பம்பாயில் பரவிய பிளேக் நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியது, பரோடாவும் அதில் ஒன்றாகும். 
 
காலரா மற்றும் பிளேக்கிற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்த ஹாஃப்கைன் பற்றிய செய்திகள், மகாராஜா சாயாஜிராவ் III  அவர்களுக்குத் தெரியவந்தது. தடுப்பூசி போடுவதற்கு பரோடாவுக்கு வரும்படி அழைத்தார். 1897 இல் பரோடாவுக்கு பயணமானார் ஹாஃப்கைன்.

அந்த நேரத்தில், சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க, பரோடா மாநிலத்தின் தலைமை நீதிபதியாகவும், மகாராஜா மற்றும் மகாத்மா காந்தியின் நண்பராகவும் இருந்த அப்பாஸ் தியாப்ஜி, அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி போட முன்வந்தார். முதலில் தியாப்ஜியின் மகள் ஷெரீபா, தடுப்பூசி போட்டுக்கொண்டார். 1935-இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரானார்.

இது அடுத்த பெரிய மாற்றத்தின் சிறிய ஆரம்பம், தன்னார்வலர்களின் உதவியைத் தொடர்ந்து, ஹாஃப்கைன், பிளேக் நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட  பரோடாவின் உட்புறப் பகுதிகளுக்குச் சென்றார்.

"1,031 பேர் உள்ள கிராமத்தில், பாதி உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் மற்றும் ஒரு பாதிப் பேர் கட்டுப்பாட்டுக் குழுவாகச் செயல்பட்டனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஹாஃப்கைன் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பி, தடுப்பூசி போட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெளிவாக, தடுப்பூசி கணிசமாக நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்குவதைக் கண்டறிந்தார்.
 
ஹாஃப்கைன் மற்றும் தியாப்ஜி மற்றும் சயாஜிராவ் III போன்றவர்கள் இல்லையென்றால், பிளேக் தொற்றுநோய் இன்னும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கும்.  இறுதியில் வெற்றிகரமாகப் பிளேக்கின் இறப்பு விகிதத்தை 97.4% கட்டுப்படுத்தப்பட்டது. . கோவிட் -19 க்கான தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில். ஒரு நூற்றாண்டுக்கு  முன் பங்களித்தவர்களின் முயற்சிகளை நினைவு கூர்வது காலத்தின் கட்டாயம்.

 

நன்றி: https://www.thebetterindia.com/  (Edited by Gayatri Mishra)

தமிழில்: காளிகபாலி   

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Thursday, 14 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-112

ஸ்ரீகாந்த் (1945-2021)

A Tribute to Legendary Actor Late Mr Srikanth

"எல்லா தரப்பு நண்பர்களையும் கொண்ட ஒரு நல்ல மனிதர்" - சித்ராலயா கோபு.


ஸ்ரீ
காந்த் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார்.
 நாடகத்தின்  மீதுள்ள ஈர்ப்பால் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் மற்றும் கே பாலச்சந்தர் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேடை நாடகங்களில் நடித்தார். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய சூப்பர்ஹிட் படமான "வெண்ணிற ஆடை" (1965) படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயலலிதாவுடன் அறிமுகமானார்.

கோபு இயக்கிய "காசே தான் கடவுலடா",  இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய "பாமா விஜயம்", "பூவா தலையா" மற்றும் "எதிர்நீச்சல்" போன்ற  கிளாசிக் படங்களில் மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்தார்.

அவர் நான்கு தசாப்தங்களாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக சுமார் 50 படங்களில் நடித்தார், பின்னர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். எதிர்மறை வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்தார். எந்த கதாபாத்திரமும், அது வில்லன் அல்லது நகைச்சுவை வேடமாக இருந்தாலும், சரி, அவர் தனது சிறந்ததைக் அளித்தார். ஸ்ரீகாந்தின் நடிப்பு நடிகர் திலகத்தைக் கவர்ந்ததால், தனது திரைப்படங்களில் அவருக்கு முக்கிய வேடத்தை கொடுப்பார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் ஆர் முத்துராமன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுக்கு ஸ்ரீகாந்த் சமகாலத்தவராக இருந்தாலும், அவருடைய தனித்துவமான வசன உச்சரிப்பு, உரையாடல் என தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன், ஆர்.முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்தார். இருப்பினும், அவர் எம்ஜிஆருடன் நடிக்கவில்லை.

கதாநாயகனாக ரஜினிகாந்தின் முதல் படமாகக் கருதப்படும் பைரவியில் அவர் ஒரு முழு நீள வில்லன் வேடத்தில் நடித்தார்.

ஜெயகாந்தனுக்கு ஸ்ரீகாந்த் நெருங்கிய நண்பராக இருந்தார். அவருடைய நாவலான "சில நேரங்களில் சில மனிதர்கள்", 1977-ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் அதே பெயரில் படமாக வெளிவந்தது. ஸ்ரீகாந்த், நடிகை லட்சுமியுடன் இணைந்து நடித்தார். இருவரின் கதாபாத்திரங்களும் பேசப்பட்டன. நடிகை லட்சுமி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
 
ஸ்ரீகாந்த் நடிப்பில் எனக்குப் பிடித்த படம் "அன்னப்பறவை". யூடியுப்-இல் காணக்கிடைக்கிறது. நேரமிருந்தால் ஒருமுறை கண்டுகளியுங்கள்.

நன்றி: Google, YouTube and Times of India

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி  

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-111

நெடுமுடி வேணு (1948-2021):

A Tribute to Legendary Actor Late Mr Nedumudi Venu


லையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் நெடுமுடி வேணுவும் ஒருவர். அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர், நெடுமுடி வேணு, சிறு வயதிலிருந்தே இசை மற்றும் நாடகத்தின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நாடகங்களில் பங்கெடுத்து நடித்தார். பின்பு, மறைந்த மலையாள நாடக ஆசான் 'கவலம்' நாராயண பணிக்கரின் பயிற்சியின் கீழ் நடிப்பு, பாடுதல், நடனம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தல் ஆகிய பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்டார்.


பழம்பெரும் இயக்குநர் அரவிந்தன் இயக்கிய நாடகமான 'அவனவன் கடம்பா', வேணுவுக்கு மலையாள திரைத்துறையின் கதவைத் திறந்து வைத்தது.

1978-இல் அரவிந்தன் இயக்கிய 'தம்பு' படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அண்ணனுக்கு ஏறுமுகம் தான. 
கதாநாயகன் முதல் வில்லன் வரை, நெடுமுடி வேணு நான்கு தசாப்தங்களுக்கு மேலாகத் தனது திரை வாழ்க்கையில் வித விதமான கதாபாத்திரங்களில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இரண்டு தேசிய விருதுகளையும் மற்றும் அரை டஜன் மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

நெடுமுடி வேணு . இயக்குநர்கள் ஜி அரவிந்தன், பரதன், பி பத்மராஜன், ஃபாசில், பிரியதர்ஷன், ப்ளெஸ்ஸி மற்றும் லால் ஜோஸ் போன்றோருடன் பணியாற்றியுள்ளார்.  ‘பூச்சக்கொரு மூக்குத்தி’, ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, ‘மார்கம்’, ‘சாமரம்’, ‘ஒரு மின்னாமினுங்கிண்டே நூருங்குவட்டம்’, ‘தென்மவின் கொம்பத்’ மற்றும் ‘பாரதம்’ ஆகியவை அவரது பிரபலமான படங்களில் சில. 'தகரா'வில் அவரது செல்லப்பனசாரி வேடம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  நெடுமுடி வேணு 'சௌரஹேன்' என்ற ஆங்கிலப் படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். "பூரம்" (1989) என்ற ஒரே படத்தை இயக்கியிருக்கிறார்.

சகா கால நடிகர்களான பரத் கோபி மற்றும் திலகன் போன்ற நடிப்பு ராட்சஷன்கள் உடன் நடித்து வேணு தன்னை ஒரு தேர்ந்த நடிகராக மெருகூட்டிக் கொண்டார். "மறுமுனையில் உள்ள நடிகர் அவர்களின் திறமைகளைப் பெரிதாக்க முனையும் போது, உங்களை உயர்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் ஒருமுறை பேட்டியில் கூறினார்.

இலக்கியத்தின் தீவிர வாசகரான வேணு அதை திரைத்துறையில் அல்லது நாடகத்தில் தனது கதாபாத்திரங்கள் மூலம் கச்சிதமாகப் பயன்படுத்தினார். எப்போதும் சர்ச்சைகளிலிருந்து விலகி இருக்கவே விரும்புவார். அவர், ஒரு ஜென்டில்மேன் நடிகர் என்ற பிம்பத்தை பராமரித்தார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் இளைய தலைமுறை இயக்குநர்கள் மத்தியில் தொழிலில் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

கடைசியாக நெடுமுடி வேணு  ‘ஆணும் பெண்ணும்’. மற்றும்  கதாசிரியர் உன்னி ஆர் எழுதி, ஆஷிக் அபு இயக்கிய ‘ராணி’ எனும் ஆந்தாலஜி  படத்தில் கவியூர் பொன்னம்மா ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் சிபி மலையில் இயக்கத்தில் 'தசரதம்' இரண்டாம் பாகத்தின் நடிக்க எண்ணியிருந்தார். அதற்குள் காலன் தனது கணக்கை முடித்துக்கொண்டது.

எனக்கு வேணு, இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் "மோகமுள்" படத்தில் அவர் ஏற்று நடித்த "இசை குரு" கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். தாள, லய பாவனைகளைத் தனது நடிப்பில் பிரதிபலித்திருப்பார். "கமலம் பாதம் கமலம்.." பாடல் இரண்டாவது சரணத்தில், கதாநாயகன் பாடுகையில், இவர் ஒரு பார்வை பார்ப்பார். அடுத்த காட்சியில் கதாநாயகனைத் தனது சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்வார். இதோ அந்த பாடலை முழுமையாக கேளுங்கள்.


நன்றி: Google, YouTube and Times of India

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 


Tuesday, 12 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-110

பாடகி திருமதி வாணி ஜெயராம்


பாடகி திருமதி வாணி ஜெயராம் அம்மா - இந்தியத் திரையிசையில் மதிப்பு ஆளுமை. ஆனாலும் அப்படி திரையிசை என்று சுறுக்கிவிடவும் முடியாது. எண்ணற்ற பக்தி இசை களஞ்சியங்களைப் பாடி ரசிகர்களைப் பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்தவர். அதிகபட்சம் ஒன்பது இந்திய மொழிகளில் பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடி ஏகப்பட்ட விருதுகளைக் குவித்தவர். வாணி அம்மா பாடிய எத்தனையோ பாடல்கள் என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. இன்று இவர் போலத் தெளிவான மொழி உச்சரிப்பில், உச்சஸ்தாபியில் பாடும் தனித் தன்மை வாய்ந்த குரலுடைய பாடகிகள் உண்டா தெரியவில்லை. இவருடைய சிறப்பே பாடலுக்கு மெருகூட்டும் ஆலாபனை தான் என்பேன். அதற்கு எத்தகைய கர்நாடக சங்கீத பயிற்சியை விடாமல் மேற்கொண்டிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

எண்பதுகளில் கல்யாண வீடுகளில் குழாய் ஒலிபெருக்கி பொருத்தி தெருவையே அலறவிடுவார்கள். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் ராஜா சார் இசையில்  "நீ கேட்டல் நான் மாட்டேன் என்றா  " என்ற வாணி ஜெயராம் ஹை-பிட்சில் பாடத் தொடங்கும் பாடலை கேட்கவே ரம்மியமாக இருக்கும். அப்போது தான் வாணி ஜெயராம் பாடல் எனக்கு அறிமுகமானது.

வாணி அம்மாவின் சில பாடல்களைக் கேட்கும்போது கஸல் பாடலை கேட்பது போல தோன்றும்.பங்கஜ் யூதாஸ், ஹரிஹரன் கஸல் பாடல்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் தமிழில் வாணி ஜெயராம் பாடிய "யாரது சொல்லாமல்" , "மேகமே மேகமே" போன்ற சில பாடல்களைக் கேட்கும்பொழுது கஸல் பாடல்கள் கேட்பது போலவே இருக்கும்.

அவ்வளவு மென்மையாக மனதை வருடும் பாடல்கள் என்னுடைய playlist-இல் உள்ளது.  அதில் முதலிடத்தில் என்னுடைய விருப்ப பாடல்.  கவிஞர் வாலி எழுதி, சங்கர் கணேஷ் இசையில் "நெஞ்சமெல்லாம் நீயே" படத்தில் இடம்பெற்ற "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி" என்ற பாடல். இந்த பாடலை எப்படிக் கேட்கவேண்டும் தெரியுமா? மழைக் காலத்தில், பகல் பொழுதில், சிறந்த தலையணியுடன் கேட்டுப்பாருங்கள் ...அந்த ஆலாபனை தான் என்ன ...ப்பா .என்ன ஒரு பாடல்.

சில பாடல்களைக் கேட்கும்போது பழைய காலத்துக்குப் பின்னோக்கி நேர இயந்திரத்தில்  பயணிப்பது போல் உள்ளது. வாணி ஜெயராம் பாடிய எனக்குப் பிடித்த சில பாடல்கள் "மல்லிகை உன்", "என் கல்யாண ", " நீ கேட்டால் நான் "
"யாரது சொல்லாமல்" , " மேகமே மேகமே ", "ஏழு ஸ்வரங்களில் எதனை", இன்னும், இன்னும் எத்தனையோ பாடல்கள்.

என் அம்மாவுக்கு வாணி ஜெயராமன் அவர்கள் பக்தி பாடல்கள் நிரம்பப் பிடிக்கும். விசேஷ நாட்களில் டேப் ரிக்கார்டரில் வாணி ஜெயராம் பாடிய பக்தி பாடல்கள் கேசட் போட்டு ஒலிக்கவிடுவார்.
 
இதோ இந்த இனிய பாடலை கேட்டு மகிழுங்கள் :
 


நன்றி: Google & YouTube

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 
 

Sunday, 10 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-109

தேசிங்கு ராஜேந்தர்

தேசிங்கு ராஜேந்தர் என்கிற அஷ்டாவதானி டி ராஜேந்தர். தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஆளுமை. மயிலாடுதுறை தந்த மாமணி. விவிதபாரதி வர்த்தக ஒளிபரப்பு வானொலி நிகழ்ச்சியில் அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன். அனேமாக இவர் தான் வானொலியில் பேசிய முதல் நடிகர் என்று நினைக்கிறன். என் மாமா இவருடைய தீவிர ரசிகர், அதாவது, அவர் ஆரம்பித்த கட்சியில் சேருமளவுக்கு. "மைதிலி என்னை காதலி" படம் வந்த புதிதில், அதன் பாடல்கள் அடங்கிய காஸெட் தேயும் வரை கேட்டு ரசித்தவர். "ஒரு தாயின் சபதம்" படம் வெளியான அன்று தொடர்ந்து மூன்று காட்சிகள் பார்த்தவர். டி ராஜேந்தர் நடித்த எல்லா படங்களையும் வரிசையாக மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.

இயக்குனர் விசு படங்களுக்கு பிறகு பெண்களை அதிகளவில் திரையரங்கை நோக்கி படையெடுத்தது டிஆர் படங்களை பார்க்க தான்.

1987-ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியான "ஒரு தாயின் சபதம்" சென்சேஷனல் ஹிட்.  மாமாவுடன் சென்று திரையரங்கில் நான் பார்த்த முதல்
டிஆர் படம். அதிகப் படங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று இன்றுள்ள நடிகர்கள் போலில்லை, வருஷம் ஒன்றிண்டு படம். படம் /பாடல்கள் அமோக வெற்றி அவ்வளவு தான் இது தான்  டிஆர் கொள்கை. 

அவருடைய இயல்பான நடிப்பை மறைந்த இயக்குனர் கே வி அனந்த இயக்கிய "கவண்" படத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனக்கென்னவோ டி ராஜேந்தர் வெளிப்படங்களில் அதிகம் நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மேலும், இசை அவருக்கு வசப்பட்ட விஷயம், ஒரு வேளை அதில் மட்டுமே இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ரசிகர்களுக்கு அதிக பாடல்கள் கிடைத்திருக்கும். அவருக்கு எல்லாத் துறைகளிலும் வல்லவர் என்று பெயரெடுக்க ஆசை போலும்.

அரசியலிலும் ஒரு கை பார்த்தவர் தான் நம்ம டிஆர்.  சென்னை பூங்கா நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று பாரிமுனை பேருந்து நிலையத்தை சீரமைத்து அவருடைய சாதனைகளில் ஒன்று.

அவர் எடுத்த படங்களை பற்றி பேசுவதை காட்டிலும், படத்தில் இடம்பெற்ற பிரமாண்ட அரங்கமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும். "ஒரு தாயின் சபதம்" படத்தில் இடம்பெறும் அந்த கோவில் அரங்கம். என்ன பாட்டென்று தெரியவில்லை இரண்டு வளையல் கைகள் அதன் மீது நாயகன் நாயகி பாடி ஆடுவார்கள்.

டிஆர் தன்னுடன் நடிக்கும் சக குணச்சித்திர நடிகர் /நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பார். இது இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் பாணி.

டிஆர் அவர்கள் எண்பதுகளின் கடைசியில் மிகுந்த பொருட்செலவில், பிரமாண்டமாக "வில்-பவர்" என்ற பெயரில் ஆங்கிலம் அல்லது பான் இந்திய மொழிகளில் படம் எடுக்கப் பூர்வாங்க வேலைகளைத் தொடங்கினார், அதன் பிறகு அதைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று "தினத்தந்தி" செய்தித்தாளில் படித்ததாக ஞாபகம்.

டிஆர் இசையமைத்த  எத்தனையோ சிறந்த பாடல்களில் இரண்டு பாடல்கள் எனக்கு பிடிக்கும் ஒன்று : "சலங்கை இட்டால் ஒரு மாது..."(படம் :மைதிலி என்னை காதலி)..", இரண்டு : "கூடையிலே கருவாடு.." (படம்: ஒரு தலை ராகம்).



நன்றி: Google & YouTube

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி


Saturday, 9 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-108

அரவிந்த் திரிவேதி (1966-2021)

A Tribute to Late "Ravan"Arvind Trivedi



ராமானந்த சாகர் இயக்கி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "இராமாயண" காப்பிய தொடரை இளம்பிராயத்தில் தவறவிடாமல் பார்ப்பதுண்டு. அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வாங்கவில்லை. என் வயது பிள்ளைகளுடன் பக்கத்துக்கு வீட்டில் பார்ப்போம் . மறுநாள் பள்ளி வகுப்பில் இராமாயண தொடரில் இடம்பெற்ற மாயாஜால-மந்திர-தந்திர காட்சிகளைப் பற்றி நண்பர்கள் நாங்கள் பேசிக்கொள்வோம்.

அதுவரை பெரியவர்கள் சொல்லக் கேட்டு, புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொண்ட எங்கள் தலைமுறையினருக்கு இராமாயண காப்பியம் நெடுந்தொடராக விசுவலாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் கற்பனைக்கு அது மேலும் வலுசேர்த்து.

தேர்ந்த நடிகர்கள், கிடைத்த தொழிற்நுப்பட்டதை வைத்து மாயாஜால-மந்திர-தந்திர காட்சிகள் எடுக்கப்பட்டது. மொழி /நேட்டிவிட்டி பிரச்சனை இல்லாமல் எல்லோருக்கும் எளிதில் புரிந்தது.

இராமனாக அருண் கோவல், சீதையாக தீபிகா மற்றும் லட்சுமணனாக சுனில் லஹரி ஆகியோர் நடித்திருந்தாலும் இந்தியத் தொலைக்காட்சியில் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றான ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி அவர்களை மறக்க முடியாது. என்ன ஒரு கம்பீரம், தோற்றப்பொலிவு. இராவணன் கதாபாத்திரத்துக்குக்காகவே பிறந்தவர் எனலாம்.

திரிவேதி குஜராத்தி நாடகத் துறை மற்றும் குஜராத்தி திரைத்துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கோலோச்சியவர். 'தேஷ் ரே ஜோயா தாதா பரதேஷ் ஜோயா' என்ற இவர் நடித்த குஜராத்தி திரைப்படம் அதிக வசூல் செய்த சாதனைப் படமாக இன்று வரை திகழ்கிறது.  இராமாயண தொடர் மட்டுமல்ல "விக்ரம் வேதாளம்" தொடரும் அவருக்கு பெரும் புகழ் ஈட்டித்தந்தது.

அரவிந்த் திரிவேதி 1991 முதல் 1996 வரை சபர்கதா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பிரபல நடிகர் விஜய் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திரைப்பட சான்றிதழ் தணிக்கை வாரியத்தின் (CBFC) செயல் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது இராமாயண தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. அதிக இந்தியப் பார்வையாளர்களால் விரும்பப்பட்டு TRP தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

இராமாயணத் தொடரில் ராவணனாக நடித்திருந்தாலும் அரவிந்த் திரிவேதி தீவிர ராமபக்தர்.

 
 
நன்றி: Google and Times Of India

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 

 

Thursday, 30 September 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-107

"ஸ்ரீ ராகவேந்திரர் (1985)"

பொதுவாக நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. வெகு சிலருக்கே அந்த அதிர்ஷ்டம் வாய்த்தது.  (விஜயகாந்த்: கேப்டன் பிரபாகரன்). Angry Young Man கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினி, தனது நூறாவது படத்தை மாறுபட்ட கோணத்தில் கொடுக்க நினைத்தார். அதுவே தனது குருநாதர் தயாரிப்பில், தனது ஆதர்ச இயக்குநர் திரு எஸ் பி முத்தாரம்மன் இயக்கத்தில் "ஸ்ரீ ராகவேந்திரர்" வாழ்க்கை சரிதையில் நடித்துக் கொடுத்தார். படத்தில் குறையொன்றும் இல்லை. இப்போதும் பார்க்கலாம். அந்த நேரத்தில் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.

இயக்குநர் இமயம் தயாரிப்பில் ராஜா அவர்கள் கர்நாடக இசையில் இசையமைத்த நான்காவது படம். கர்நாடக இசையில் அமைந்த பாடல்கள் பற்றிச் சொல்லவா வேண்டும். தேனினும் இனியப்பாடல்கள் இப்படத்திற்கு அமைந்தது.

மாயாமாளவகௌளை ராகத்தின்மேல் ராஜாவுக்கு அப்படி என்ன தீரா காதலோ தெரியவில்லை, "காதல் கவிதைகள்" (கோபுர வாசலிலே), "குயில புடுச்சி" (சின்ன தம்பி) "மதுர மரிக்கொழுந்து" (எங்க ஊரு பாட்டுக்காரன்) இன்னும் இன்னும் ஏராளமான பாடங்களை இந்த ராகத்தில் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார். இந்த படத்திலும் கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய தாசேட்டன் பாடிய "ராம நாமம் ஒரு வேதமே" என்ற பாடல் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த பாடல். நான் தினமும் காலை வேளையில் பக்தி பாடல்களுடன் சேர்ந்து கேட்கும் பாடல் இது. இராமாயண காவியத்தை ஒரு பத்தியில் இந்த பாடலில் சொல்லியிருப்பார். கவிஞர் வாலி அவர்கள் விகடன் வார இதழில் இராமகாதையைப் புதுக்கவிதையாக "அவதார புருஷன்" என்ற பெயரில் எழுதுவதற்கு இந்த பாடல் தூண்டுதலாக அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறன.

இந்த அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்:



 

நன்றி: Google


 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி