Wonderful Shopping@Amazon

Thursday, 14 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-111

நெடுமுடி வேணு (1948-2021):

A Tribute to Legendary Actor Late Mr Nedumudi Venu


லையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் நெடுமுடி வேணுவும் ஒருவர். அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர், நெடுமுடி வேணு, சிறு வயதிலிருந்தே இசை மற்றும் நாடகத்தின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நாடகங்களில் பங்கெடுத்து நடித்தார். பின்பு, மறைந்த மலையாள நாடக ஆசான் 'கவலம்' நாராயண பணிக்கரின் பயிற்சியின் கீழ் நடிப்பு, பாடுதல், நடனம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தல் ஆகிய பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்டார்.


பழம்பெரும் இயக்குநர் அரவிந்தன் இயக்கிய நாடகமான 'அவனவன் கடம்பா', வேணுவுக்கு மலையாள திரைத்துறையின் கதவைத் திறந்து வைத்தது.

1978-இல் அரவிந்தன் இயக்கிய 'தம்பு' படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அண்ணனுக்கு ஏறுமுகம் தான. 
கதாநாயகன் முதல் வில்லன் வரை, நெடுமுடி வேணு நான்கு தசாப்தங்களுக்கு மேலாகத் தனது திரை வாழ்க்கையில் வித விதமான கதாபாத்திரங்களில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இரண்டு தேசிய விருதுகளையும் மற்றும் அரை டஜன் மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

நெடுமுடி வேணு . இயக்குநர்கள் ஜி அரவிந்தன், பரதன், பி பத்மராஜன், ஃபாசில், பிரியதர்ஷன், ப்ளெஸ்ஸி மற்றும் லால் ஜோஸ் போன்றோருடன் பணியாற்றியுள்ளார்.  ‘பூச்சக்கொரு மூக்குத்தி’, ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, ‘மார்கம்’, ‘சாமரம்’, ‘ஒரு மின்னாமினுங்கிண்டே நூருங்குவட்டம்’, ‘தென்மவின் கொம்பத்’ மற்றும் ‘பாரதம்’ ஆகியவை அவரது பிரபலமான படங்களில் சில. 'தகரா'வில் அவரது செல்லப்பனசாரி வேடம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  நெடுமுடி வேணு 'சௌரஹேன்' என்ற ஆங்கிலப் படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். "பூரம்" (1989) என்ற ஒரே படத்தை இயக்கியிருக்கிறார்.

சகா கால நடிகர்களான பரத் கோபி மற்றும் திலகன் போன்ற நடிப்பு ராட்சஷன்கள் உடன் நடித்து வேணு தன்னை ஒரு தேர்ந்த நடிகராக மெருகூட்டிக் கொண்டார். "மறுமுனையில் உள்ள நடிகர் அவர்களின் திறமைகளைப் பெரிதாக்க முனையும் போது, உங்களை உயர்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் ஒருமுறை பேட்டியில் கூறினார்.

இலக்கியத்தின் தீவிர வாசகரான வேணு அதை திரைத்துறையில் அல்லது நாடகத்தில் தனது கதாபாத்திரங்கள் மூலம் கச்சிதமாகப் பயன்படுத்தினார். எப்போதும் சர்ச்சைகளிலிருந்து விலகி இருக்கவே விரும்புவார். அவர், ஒரு ஜென்டில்மேன் நடிகர் என்ற பிம்பத்தை பராமரித்தார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் இளைய தலைமுறை இயக்குநர்கள் மத்தியில் தொழிலில் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

கடைசியாக நெடுமுடி வேணு  ‘ஆணும் பெண்ணும்’. மற்றும்  கதாசிரியர் உன்னி ஆர் எழுதி, ஆஷிக் அபு இயக்கிய ‘ராணி’ எனும் ஆந்தாலஜி  படத்தில் கவியூர் பொன்னம்மா ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் சிபி மலையில் இயக்கத்தில் 'தசரதம்' இரண்டாம் பாகத்தின் நடிக்க எண்ணியிருந்தார். அதற்குள் காலன் தனது கணக்கை முடித்துக்கொண்டது.

எனக்கு வேணு, இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் "மோகமுள்" படத்தில் அவர் ஏற்று நடித்த "இசை குரு" கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். தாள, லய பாவனைகளைத் தனது நடிப்பில் பிரதிபலித்திருப்பார். "கமலம் பாதம் கமலம்.." பாடல் இரண்டாவது சரணத்தில், கதாநாயகன் பாடுகையில், இவர் ஒரு பார்வை பார்ப்பார். அடுத்த காட்சியில் கதாநாயகனைத் தனது சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்வார். இதோ அந்த பாடலை முழுமையாக கேளுங்கள்.


நன்றி: Google, YouTube and Times of India

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 


1 comment:

  1. The author has paid rich tributes to malayalam actor nedumudi venu. His contribution to cine industry is immense and will be remembered by all irrespective of language viewers. The author rich knowledge about cine field is amazing. Thankyou for timely contribution. With regards from kumar venkataraman, Chennai

    ReplyDelete