பொற்காலம் (1997)
1997-ஆண்டு நவம்பர் மாதம் மழை மிகுந்த முதல் வாரம். திருவெற்றியூரில் உள்ள
ஒரு பள்ளியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு கடைசி தாள் தேர்வை எழுதி
விட்டு எம்எஸ்எம் திரையரங்கை நோக்கி கால்கள் விரைந்தன.
"பாரதி கண்ணம்மா" படத்தின் மிகப்பெரிய வெற்றியால் "பொற்காலம்" படத்துக்கு
எதிர்பார்ப்பு அதிகரித்தது. நானும் படத்தைப் பார்க்க ஆவல் கொண்டேன்.
பகல்
காட்சி பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். படம் கொஞ்சம் மெதுவாக
நகர்ந்தாலும், படம் எனக்குப் பிடித்திருந்தது. அண்ணன்-தங்கை பாசத்தை வேறொரு
கோணத்தில் காட்டியது படம். குறைவான கதாபாத்திரங்கள். தேனிசை தென்றல்
தேவாவின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்து. அதிலும் இறுதிக்காட்சி
சோகமாக வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.
இயக்குநர்
சேரன் நடிக்காமலிருந்து இன்னும் சிறந்த படைப்புக்களை /படங்களை இயக்கி
ரசிகர்களை மகிழ்வித்திருக்கலாம். ஹூம் ...ஆசை யாரை விட்டது.
சரி....நடிக்கத்தான் வந்தோம்..........நாம் அவருடைய நடிப்பைப் பற்றி
பேசவேண்டாம்..நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.
கவிஞர்
வைரமுத்து வரியில் தேனிசை தென்றல் தேவா பாடிய"ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம்
யாருங்கோ" பாடல் எங்கும் ஒலித்தது. திரையில் நாட்டார் நடன பின்னணியில்
வடிவேலு பாடியிருப்பார்.
அப்போது
மைலாப்பூரில் எனது அலுவலகம். தினமும் காலை மின்சார ரயிலில் பயணம். எது
எப்படி இருந்தாலும். காலை 8.05 ரயிலைத் தவற விடமாட்டேன். காரணம் இந்த ரயிலில்
அரக்கோணத்திலிருந்து சென்னை வரும் ஒரு குழு திரைப் பாடல்களைப் பாடிக்கொண்டு
வருவார்கள். தினமும் இசை மழை தான். புகழ் பெற்ற பழைய /அப்போது பிரபலமாயிருந்த புதிய பாடல்கள் எனக் கலந்துகட்டி பாடுவார்கள். கையில்
தப்பட்டம் போன்ற இசைக்கருவி, "ஜெல்", "ஜெல்" என்ற சத்தம் பாடலினூடே
பயணித்து, பாடலுக்கு மெருகேற்றும். காலை வேளையில் கேட்க மனதுக்கு உற்சாகமாக
இருக்கும். குழுவில் வயதான பெரியவர் கிட்டத்தட்டத் தேவாவின் குரல் சாயலில்
பாடிய "ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ" பாடல் பயணிகளின் ஏகோபித்த
ஆதரவைப் பெற்றது. சென்ட்ரல் ரயில் நிலையம் நெருங்கும் வேளையில் அப்பாடலை
மீண்டும் ஒரு முறை பாடி நிறைவு செய்வார்.
இந்த பாடலை எப்போது கேட்டாலும் தேவாவின் குரல் மறைந்து அந்த பெரியவரின் குரல் தான் ஞாபகம் வந்து போகிறது. இதோ அந்த பாடலை கேளுங்கள்.
- காளிகபாலி
நன்றி: https://www.youtube.com/
No comments:
Post a Comment