Wonderful Shopping@Amazon

Wednesday 29 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-123

கலையரசி (1963)

தமிழில் அறிவியல் புனைவு கதையம்சம் உள்ள திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏன் அறிவியல் புனைவு கதைகள் கொண்ட திரைப்படங்கள் அதிகமாகத் தமிழில் வருவதில்லை என்று தெரியவில்லை. சமூக/ புராண /குடும்ப திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இத்தகைய படங்களுக்கு கிடைக்காததே காரணமாக இருக்கலாம்.

சமீபகாலமாக அறிவியல் புனைவு கதையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்துள்ளது. மிக சமீபத்திய உதாரணம்: 'டிக் டிக் டிக்', 'நேற்று-இன்று-நாளை', 'டிக்கிலோனா', 'மாநாடு', 'ஜாங்கோ' இன்னும் சில. எண்ணிக்கை அதிகமாகும் வரை ஆங்கில படங்களைப் பார்த்து நம்மூர் ரசிகர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை பற்றிய 'ஸ்டார் ட்ரெக்' நிகழ்ச்சி பெரிய சென்சேஷன்.  பள்ளியில் எனது நண்பர்கள் முந்தைய நாள் தொடரைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் எனக்கு அதன் கதையும் சரி, காட்சிகளும் சரி,  ஒரு மண்ணும் புரியவில்லை.  அதனால் 'ஸ்டார் ட்ரெக்' தொடர் என்னை கவரவில்லை என்றே சொல்வேன். பிறகு 'ஸ்பேஸ் சிட்டி சிக்மா' என்ற தொடர் வந்தது. இவ்வளவு தான் அறிவியல் புனைவு திரைப்படங்களை எனது புரிதல்.

தமிழில் வந்த முதல் அறிவியல் புனைவு அல்லது வேற்று கிரகவாசிகள்/ பறக்கும் தட்டு கதையம்சம் கொண்ட படத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

நல்ல / வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெளிநாட்டுப் படங்கள் மேல் எம்ஜிஆர் அவர்களுக்கு நாட்டம் உண்டு. 'It Happened One Night' மற்றும் 'Roman Holiday' படத்தின் பாதிப்பில் அவர் நடித்து வெளிவந்த படம் 'சந்திரோதயம்'. வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில படங்கள் நிறைய 60களில் வர, அதில் கவரப்பட்டு அவர் நடித்த படம் 'கலையரசி'.

சரி, வாங்க 'கலையரசி' கதை என்னவென்று பார்ப்போம்: 
 
கிராமத்தில் தனது தாயார் மற்றும் தங்கையுடன் விவசாயம் செய்து பிழைக்கும் எம்ஜிஆர் ஊர் பெரிய மனிதரின் மகள் பானுமதியை நேசிக்கிறார். பானுமதியை மணந்து கொண்டு சொத்துக்களுக்கு வாரிசாக பி எஸ் வீரப்பா ஆசைப்படுகிறார். வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகை தரும் நம்பியார் தன்னுடன் வந்த நபரை பூமியில் இருக்கும் படி செய்துவிட்டு பானுமதியை கடத்தி செல்கிறார். பானுமதி காணாததால் எம்ஜிஆர் மீது சந்தேகப்படும் போலீஸார் அவரை சிறையில் அடைக்கின்றனர். பானுமதியை தேடி அலையும் பி எஸ் வீரப்பா அவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணை பிடித்து வருகிறார். இதனால் சிறையிலிருந்து எம்ஜிஆர் விடுவிக்கப்படுகிறார். பூமியில் விட்டுச் சென்ற ஆளை அழைத்து செல்ல பறக்கும் தட்டில் வரும் நம்பியாரை ஏமாற்றி எம்ஜிஆர் அவருடன் வேற்று கிரகத்திற்குப் பறக்கிறார். அங்குத் தன்னை போலவே தோற்றம் கொண்ட "கோமாளி" எம்ஜிஆர்-ஐ பார்க்கிறார். எரி நட்சத்திரம் தாக்கி கோமாளி மாண்டுவிடவே அவரை போல வேடமிட்டு பானுமதியை சந்திக்கிறார். வேற்று கிரக இளவரசியான ராஜஸ்ரீயும் எம்ஜிஆர்-ஐ நேசிக்கிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி பானுமதியுடன் எம்ஜிஆர் எப்படி பூலோகம் திரும்புகிறார் என்பதே மீதிக்கதை.

திரு டி ஈ. ஞானமூர்த்தி எழுதிய கதையில் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் பானுமதி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ராஜஸ்ரீ மற்றும் குமாரி சரஸ்வதி ஆகியோர் நடித்து, இயக்குநர் ஏ. காசிலிங்கம் இயக்கி, இசை மேதை கே. வி. மகாதேவன் இசையில்19 ஏப்ரல் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த 'கலையரசி' - இந்தியாவில் (தமிழில்) வந்த முதல் அறிவியல் புனைவுகதைத் திரைப்படமாகும்.  

அப்போது இருந்த தொழினுட்பத்தை வைத்துப் படத்தை எடுத்திருப்பார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் புதிது. ஏனோ எம்ஜிஆர் ராசிகளுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. படமும் வெற்றி பெறவில்லை.  'கலையரசி' படத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை எனலாம். நடிகர் திலகம் "நமக்குச் சரிப்பட்டு வராது" என்று சற்று தள்ளியே இருந்தார்.

கமல் நடித்து  ராக்கெட் தொழினுட்ப திருட்டைப் பற்றிய கதையம்சம் கொண்ட 'விக்ரம்' படம் 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. படத்திற்கு கிடைத்த 'வரவேற்பை' கண்ட கமல், அதன் பிறகு அந்த பக்கமே செல்லவில்லை. அதனால் தான் என்னவோ 'எந்திரன்' பட வாய்ப்பை கூட நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.


- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

No comments:

Post a Comment