Wonderful Shopping@Amazon

Tuesday 28 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-122

 சித்தி (1966)

ஞாயிறு அன்று - தொலைக்காட்சி சேனல்களை துழாவிய போது, ஒரு சேனலில் நிறுத்தினேன். "திரைக்கதை, இயக்கம்: கே எஸ் கோபாலகிருஷ்ணன்" என்றது. அந்த படம் நடிகவேள் எம் ஆர் ராதா கதை நாயகனாக நடித்த "சித்தி" திரைப்படம். படத்தைப் பார்த்து முடித்தேன். ஏற்கனவே பல முறை பார்த்தது தான்.  நடிகவேள் அவர்களுக்காகவே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். தனது அனாயாசமாக நடிப்பால் ராதா அவர்கள் படம் முழுதும் மிரட்டியிருப்பார்.  

இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை மெலோட்ராமா என்பார்கள். புராண / சமூக கதைகளில் ஆரம்பித்த தமிழ் சினிமா மெலோட்ராமாக்களில் தொடர்ந்து இயக்குநர் வீ சேகர் வரை பயணித்து இன்று வேறு திசையில் செல்கிறது. குடும்ப படமென்றாலே தொலைக்காட்சி தொடர் போலிருக்கிறது என்ற இன்றைய ரசிகர்களின் எண்ணம். சமீபத்தில் வந்த 'அண்ணாத்தே' படம் கூட இந்த விமர்சனத்துக்குத் தப்பவில்லை. மெலோட்ராமா இல்லாமல் சினிமா இல்லை என்று இன்றைய ரசிகர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

காலஞ்சென்ற இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய அத்தனை படங்களும் மெலோட்ராமா வகையறா தான். இன்றும் விசு படங்களை சேனல் மாற்றாமல் பார்ப்பதுண்டு.

சரி நாம் விஷயத்துக்கு வருவோம் .....

எழுத்தாளர் வை மு. கோதைநாயகி எழுதிய 'தயாநிதி' நாடகத்தைத் தழுவி, பத்மினி மற்றும் ஜெமினி கணேசன் நடித்து,  இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'சித்தி' திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் மற்றும் உடுமலை நாராயண கவி எழுதியுள்ள பாடல்களை அத்தனையும் இனிமை. "சந்திப்போமா இன்று" எனக்குப் பிடித்த பாடல்.  இப்படம் இந்தியில் 'ஔரத்' (1967),[1] மலையாளத்தில் 'அச்சந்தே பர்யா' என்றும், தெலுங்கில் 'பின்னி' என்றும், கன்னடத்தில் 'சிக்கம்மா' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்கள் எனக்குப் பிடிக்கும். பெரும்பாலும் குடும்ப படங்களாகவே எடுத்துத் தள்ளியவர். இன்றும் இவருடைய படங்களை விரும்பி பார்ப்பேன். என்னுடைய All time Favorite: "குறத்தி மகன்". கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம். சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதை இப்படம் பெற்றது. 

கொசுறு: ஒரு திரைப்படம் சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். "குறத்தி மகன்" படத்தின் விளைவாகத் தமிழகத்தின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைக்காரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காகத் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972ல்) ட்ரஸ்ட் உறைவிட பள்ளி அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை என்ற சிறப்புச் சட்ட உத்தரவைத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறப்பித்தார். கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டிடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே. நரிக்குறவர்,காணிக்காரர்,குறும்பர் ஆகிய இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்கப் பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான். அதை மத்திய அரசும் சமீபத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



No comments:

Post a Comment