அரவிந்த் திரிவேதி (1966-2021)
A Tribute to Late "Ravan"Arvind Trivedi
ராமானந்த சாகர் இயக்கி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "இராமாயண" காப்பிய தொடரை இளம்பிராயத்தில் தவறவிடாமல் பார்ப்பதுண்டு. அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வாங்கவில்லை. என் வயது பிள்ளைகளுடன் பக்கத்துக்கு வீட்டில் பார்ப்போம் . மறுநாள் பள்ளி வகுப்பில் இராமாயண தொடரில் இடம்பெற்ற மாயாஜால-மந்திர-தந்திர காட்சிகளைப் பற்றி நண்பர்கள் நாங்கள் பேசிக்கொள்வோம்.
அதுவரை பெரியவர்கள் சொல்லக் கேட்டு, புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொண்ட எங்கள் தலைமுறையினருக்கு இராமாயண காப்பியம் நெடுந்தொடராக விசுவலாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் கற்பனைக்கு அது மேலும் வலுசேர்த்து.
தேர்ந்த நடிகர்கள், கிடைத்த தொழிற்நுப்பட்டதை வைத்து மாயாஜால-மந்திர-தந்திர காட்சிகள் எடுக்கப்பட்டது. மொழி /நேட்டிவிட்டி பிரச்சனை இல்லாமல் எல்லோருக்கும் எளிதில் புரிந்தது.
இராமனாக அருண் கோவல், சீதையாக தீபிகா மற்றும் லட்சுமணனாக சுனில் லஹரி ஆகியோர் நடித்திருந்தாலும் இந்தியத் தொலைக்காட்சியில் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றான ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி அவர்களை மறக்க முடியாது. என்ன ஒரு கம்பீரம், தோற்றப்பொலிவு. இராவணன் கதாபாத்திரத்துக்குக்காகவே பிறந்தவர் எனலாம்.
திரிவேதி குஜராத்தி நாடகத் துறை மற்றும் குஜராத்தி திரைத்துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கோலோச்சியவர். 'தேஷ் ரே ஜோயா தாதா பரதேஷ் ஜோயா' என்ற
இவர் நடித்த குஜராத்தி திரைப்படம் அதிக வசூல் செய்த சாதனைப் படமாக இன்று
வரை திகழ்கிறது. இராமாயண தொடர் மட்டுமல்ல "விக்ரம் வேதாளம்" தொடரும்
அவருக்கு பெரும் புகழ் ஈட்டித்தந்தது.
அரவிந்த் திரிவேதி 1991 முதல் 1996 வரை சபர்கதா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
பிரபல நடிகர் விஜய் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திரைப்பட சான்றிதழ் தணிக்கை வாரியத்தின் (CBFC) செயல் தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது இராமாயண தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. அதிக இந்தியப் பார்வையாளர்களால் விரும்பப்பட்டு TRP தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
இராமாயணத் தொடரில் ராவணனாக நடித்திருந்தாலும் அரவிந்த் திரிவேதி தீவிர ராமபக்தர்.
- காளிகபாலி