Wonderful Shopping@Amazon

Saturday 21 December 2019

சிறந்த யுடியூப் சேனல் 2019

இந்த வருடத்தில் என்னை கவர்ந்த சில சேனல்களை பற்றி இப்போது  பேசுவோம்.

ஃபில்மி கிராஃப்ட்

சினிமாவை உள்ளேயிருந்து நேசிப்பவர்களை விட, வெளியே இருந்து நேசிப்பவர்கள் அதிகம். மேலே படியுங்கள்....

யுடியூப்-இல் எத்தனையோ சினிமா விமர்சன சேனல்கள் இருந்தாலும், திரு அருண் அளவுக்குச் சிறப்பாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அருண் ஒரு சிறந்த கதைசொல்லி. Filmi Craft-சினிமா ரசிகர்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கும் அவருடைய presentation. உங்களுக்கு எந்த ஜானரில், எந்த மொழி படம் வேண்டும்? கொரியா, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குறும்படம், புதிய படம், இதுவரை கேட்டிராத உலகப் புகழ்பெற்ற பழைய படங்கள் - இவை அத்தனையும் Filmi Craft-இல் காணலாம்.

சும்மா அடித்துவிட்டுப் போகிற ஆசாமி இல்லை இவர், கேமரா கோணங்கள், பின்னணி இசைத் துணுக்குகள் பற்றி, ஷாட் பை ஷாட், ஏன் அந்த ஷாட் அந்தக்காட்சியில் வைத்தார்கள், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், இயக்குநர் / நடிகரின் / நடிகையரின் முந்தைய சிறந்த படங்களின் சுவையான தகவல்கள், கதாபாத்திரங்கள் பேசும் ஆங்கில வசன வரிகள், அந்தக் கதாபாத்திரங்கள் தன்மை என்ன, என்பன போன்ற பல விசயங்களை ரசிகனுக்குப் புரியவைப்பார். எப்படித் தான் இவரால் இவ்வளவு விஷயங்களைத் திரட்ட முடிகிறதோ தெரியவில்லை. ஒவ்வொரு காணொளியிலும் அவருடைய Home Work & Hard Work தெரிகிறது. அதே சமயத்தில், படம் குடும்பத்துடன் காணக்கூடியதா, யாருக்கெல்லாம் இந்தப் படம் பிடிக்கும், அந்தப் படம் எந்தத் தளத்தில் உள்ளது என்ற விஷயங்களையும் சொல்லிவிடுவார்.

இவர் பரிந்துரை செய்யும் பெரும்பாலான சிறந்த உலகத் திரைப்படங்கள் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கவில்லை. அனைத்தும் Amazon Prime, Netflix, Hotstar மற்றும் பல OTT கட்டண தளங்களுக்கு மாறிவிட்டது.

சரி உங்களுக்கு இந்தச் சினிமா பிடிக்கவில்லையா, பரவாயில்லை போகட்டும், ஒரு கதையை / சம்பவங்களை மற்றும் கதாபாத்திரத்தை / சூழலைப் பற்றி எப்படிச் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்பதை இந்த Filmi Craft யுடியூப் சேனலை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிசினஸ் தமிழா:
இளைய தலைமுறையினர் அனைவரும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் விக்னேஷ் அவர்கள், தமிழகத்தில் உள்ள விவசாயம், நெசவு, புதிய தொழில்(நுட்ப) வாய்ப்புகள், சந்தை வியாபார வாய்ப்புகள், ஜவுளி கண்காட்சி என இப்படி எல்லாவற்றிலும் புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களைச் சந்தித்து, பேட்டி கண்டு தனது பயனர்களுக்குத் தெரிவிக்கிறார். சமீபத்திய சாதனை, குஜராத் மாநிலம் சூரத் சென்று அங்குள்ள ஜவுளி தொழில் உற்பத்தியாளர்கள் பேட்டி, சூரத் எப்படிச் செல்வது, நம்பகமான ஜவுளி நிறுவனத்தை எப்படி அணுகுவது எனப் பல விஷயங்கள் உள்ள காணொளி கண்டு வியந்தேன்.

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிப்பதும், அதைத் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல், திறம்பட நடத்துவதும் சாதாரண விஷயம் இல்லை. நல்ல கருத்துகளையும், நாராசமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.

இன்னும் வரும்...........

பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 


1 comment: