'ராஜபார்வை'(1981) -'61 Years of Kamalism'
நூறாவது படம் நடிகர்களுக்குப் வெற்றிப் படங்களாக அமைந்தது இல்லை. வெகுஜன படங்களிலிருந்து விலகி கமல் புதிய விஷயங்களை பரிசார்த்த முறையில் செய்ய ஆரம்பித்த முதல் படம் 'ராஜபார்வை'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம். படம் சுமாராக இருந்தாலும், ' அபூர்வ சகோதரர்கள்', 'குணா','குருதிப்புனல்', 'ஹே ராம்' போன்ற சிறந்த படங்கள் வர ஆரம்பப் புள்ளியாக இருந்தது 'ராஜபார்வை'. கமலின் சினிமா மொழியில் சொல்வதென்றால் ''எனக்கான உணவை நான் சமைத்துக்கொள்கிறேன் ..".
ஸ்ரீதேவிக்கு பிறகு கமல் - மாதவி ஜோடி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. எண்பதுகளின் கவர்ச்சி கன்னி மாதவி. மாதவி படம் அச்சிட்டு வந்த விமல் கம்பெனி காலண்டர் இன்னும் நினைவிருக்கிறது. மாதவியின் கண்கள் அப்பப்பா...என்ன ஓர் பாவகங்கள். மாதவி என்று பெயருடையவர்கள் எல்லாம் இப்படி தான் இருப்பார்களோ ?
'ராஜபார்வை' என்றாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது 'பாடும் நிலா' மற்றும் ஜானகி அம்மாள் பாடிய, கவிஞர் வைரமுத்து எழுதிய "அந்திமழை பொழிகிறது ..." பாடல்.
ராஜா சாரின் இசையை என்னவென்று சொல்வது ! எப்படி இந்த பாடலை உருவாக்கினார் ? வியப்பு மேலிடுகிறது. பருவ காலங்களுக்கேற்ப மாறி மாறி ஒலிக்கும் இசை, பாடல் இடை இடையே வரும் ராஜா சாரின் குரு திரு டி வி கோபாலகிருஷணன் அவர்களின் ஹம்மிங், வயலின், கோரஸ், முக்கியமாக அந்த மிருதங்க ஆலாபனை எனக் கிட்டத்தட்ட ஒரு பியுசன் ஜுகள்பந்தி இசை இந்த பாடல். நிமிடத்தில் இசை மகாத்மியம் நடத்தியிருப்பார் ராஜா.
எனக்குச் சங்கீதம் ஞானம் இல்லை. இரண்டு ராகங்களை இணைத்து உருவாக்கிய பாடல் என நண்பர் சொன்னார். நிச்சயம் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த இசை பல நாள் உங்கள் இதயத்தை ஆக்கிரமிக்கும்
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்"
மேற்சொன்ன பாடல் வரிகளில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் வரும் குழைவு, பின் வரும் ஆலாபனை 'வாவ்' ராகம்.
எது எப்படி இருந்தாலும் ஒளிப்பதிவாளர் முகர்ஜியின் கேமரா ஜாலங்கள் மற்றும் கமல் மாதவி காதல்ரச காட்சிகள், 'ராஜபார்வை' படத்தை இன்றும் புதுத்தன்மை மாறாமல் காத்து வருகிறது.
- காளிகபாலி