Wonderful Shopping@Amazon

Monday, 11 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-29

மாயாபஜார் (1957)

இந்திய சினிமா எளிதில் கடந்துவந்துவிட முடியாத படம். சினிமாவை நேசிப்பவர்களால் தான் காலம் கடந்த ஒரு சிறந்த படைப்பைத் தர முடியும். அப்படி ஒரு படம் தான் "மாயாபஜார்". அவ்வப்போது முரசு தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பாகும் போது நானும் பார்ப்பேன். "பழைய படத்தை யாரு உட்கார்ந்து பார்ப்பது?" என்று சொல்லவே முடியாத படம். காட்சிக்குக் காட்சி சுவாரசியம். அன்றைய காலகட்டத்தில் மிகுந்த பொருட்ச்செலவில் தயாரான படம். இன்றைய "பாகுபலி" படங்களுக்கெல்லாம் முன்னோடி "மாயாபஜார்".

எங்கள் தாத்தா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் "மாயாபஜார்" படம் பார்க்க ஆசைப்பட்டார். மாமா அதன் வீடியோ கேசட்டை தேடி, அலைந்து கண்டுபிடித்து, வாங்கிக் கொண்டுவந்து விசிஆர் -இல் போட்டு விட்டார். தாத்தா அதைப் பார்த்துவிட்டுத் தான் கிளம்பினார்!

சரி, இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லமுடியுமா? கடோத்கஜனாக ரங்காராவ் ? கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ் ?, நடிகையர் திலகம் சாவித்திரி ? அல்லது ஜெமினி கணேசன்? எம் என் நம்பியார் ? நிச்சயமாக உங்களால் சொல்ல முடியாது. அவரவர் கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருப்பார்கள். சின்னச் சின்னத் துணைக் கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருப்பார்கள். அதிலும் ரங்காராவ், சாவித்திரி உடலில் புக, அப்போது சாவித்திரி ஆண் போல ஆடி, பாடி மிரட்டலாக நடித்திருப்பார். (நடிகர் பெண் வேடத்தில் நடிக்கலாம், நடிகை ஆண் வேடத்தில் நடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை).

சென்னை தூர்தர்சனில் இந்தப் படத்தைப் பார்த்ததாக ஞாபகம். மந்திர-தந்திர மாயாஜால படம். சொல்லவா வேண்டும், மிகுந்த உற்சாகத்தோடு கண்டுகளித்தோம். திரு கண்டசாலா இசையில், திருச்சி லோகநாதன் பாடிய "கல்யாண சமையல் சாதம்...." பாடல் வரும் போது. வாய் பிளந்து பார்ப்போம். VFX, Graphics போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி இந்தப் பாடலை எடுத்தார்களோ தெரியவில்லை.

"மாயாபஜார்" நிகழ்த்திய மாயாஜாலம் என்றென்றும் நிலைத்திருக்கும்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



No comments:

Post a Comment