Wonderful Shopping@Amazon

Wednesday, 27 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-37

உதிரிப்பூக்கள் (1979)
ராணியன் மற்றும் வேற்றுமொழி திரைப்படங்களைப் பார்த்துவிட்டு நம்மவர்கள் கதைக்கும்போது, செம கடுப்பாகும். காரணம் தமிழிலேயே உலகத் தரம் வாய்ந்த (சிறந்த கதையம்சம், நினைவில் கொள்க) திரைப்படங்கள் நம்மவர்கள் தந்திருக்கிறார்கள். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். இயக்குநரின் அனுபவங்கள், வாசிப்பதினால் ஏற்பட்ட தாக்கம் தங்கள் படைப்பிலும் பிரதிபலிக்கிறது என்றே சொல்வேன்.

சரி விசயத்துக்கு வருவோம், "முள்ளும் மலரும்" வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. மகேந்திரனின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.  ரசிகர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை. இந்த முறை புதுமுகங்களுடன் களம் கண்டார் இயக்குநர் மகேந்திரன். 

"உதிரிப்பூக்கள்" - புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" என்ற சிறுகதையைத் தழுவி இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படம். ராஜா சார், ஒளிப்பதிவாளர் அசோக்குமார், மற்றும் படத்தொகுப்பாளர் பி லெனின் என இதிலும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் இதுவும் உலகத் திரைப்படம் தான். தமிழ் சினிமாவின் முக்கியமான படம் /படைப்பு. சிறந்த நூறு இந்தியத் திரைப்பட வரிசையில் "உதிரிப்பூக்கள்" படமும் உண்டு.

தூர்தர்சனில் ஞாயிறு தோறும் மதியம், மாநில மொழி திரைப்பட வரிசையில் "உதிரிப்பூக்கள்" படம் ஒளிபரப்பினார்கள். அஸ்வினி, சாருஹாசன் மற்றும்  விஜயனின் நடிப்பு, பாடல்கள், பின்னணி இசை, கடைசிக் காட்சி இதெல்லாம் மனதை விட்டகலக் கொஞ்ச நாட்கள் பிடித்தது. எதோ ஒரு கிராமத்துக்குப் போய் வந்த உணர்வு.

"ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தாராம்.. இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம்..." - ராஜாவின் ரசிகர் சொன்னது. அது போல இயக்குநர் மகேந்திரனின் இயக்கம் ஒருபுறம் மிரட்டலாக இருக்க, பின்னணி இசையை ராஜா சார் காட்சிக்கு, காட்சி உயிரூட்டியிருப்பார். மொத்தத்தில் இவர்கள் இருவர் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம், காலத்தை வென்ற படைப்பு.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Thursday, 21 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-36

தளபதி (1991)

1991-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியானது. முதல் நாளே தளபதி படம் பார்க்கவேண்டி அம்பத்தூர் முருகன் திரையரங்க வாசலில் நானும் நண்பர்கள் குழாம் கூட்டத்தில் முண்டியடித்தும் பயனில்லை, டிக்கெட் கிடைக்காமல் வீடு திரும்பினோம். அதுவுமில்லாமல், தளபதி பாடல்கள் படம் வருவதற்கு முன்பே வெளியாகி பல லட்சம் கேசட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. "ராக்கம்மா கையத்தட்டு" பாடல், கல்யாணம், காதுகுத்து, திருவிழாக்கள் எனப் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.  மேலும், தினசரி மற்றும் வார இதழில் படத்தைப் பற்றி வந்த துணுக்குச் செய்திகள், எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இப்போது புரிந்திருக்கும் நாங்கள் ஏன் முதல் நாள், முதல் காட்சி பார்க்கச் சென்றோமென்று. பிறகு, இருதினங்கள் கழித்து அதே அம்பத்தூர் முருகன் திரையரங்கில் தளபதி படம் பார்த்தோம்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் நம்ம ராஜா சார். வாலி எழுதி, SPB,   ஸ்வர்ணலதா பாடிய "ராக்கம்மா கையத்தட்டு" பாடலில் தொடக்கத்தில் வரும் அந்த ஆர்ப்பரிக்கும் வயலின், பாடலின் டெம்போவை கூட்டும். "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்" என்ற நாவுக்கரசர் வரிகளைப் பாடலில் புகுத்தி புதுமை செய்திருப்பார் வாலி. அதுமட்டுமல்ல படம் முழுதும் பின்னணி இசையில் ராஜாவின் ராஜ தர்பார் தான். ராஜாவின் மேதைமையைச் சொல்லும் இன்னொரு பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி". படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும். மணிரத்னம்-இளையராஜா இணைந்து கடைசியாக நிகழ்த்திய மாயாஜாலம்.

பிபிசியின், உலகின் தலைசிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது "ராக்கம்மா கையத்தட்டு" பாடல்.  பாடலின் காணொளி இதோ, பாடலை முழுதும் கேளுங்கள்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Monday, 18 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-35

கபில்தேவ் 175


ஜூன் 8 1983 சனிக்கிழமை....!

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் "ஹரியானா சூறாவளி" கபில்தேவ் நிகழ்த்திய மாயாஜாலம். கபில்தேவ் விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்றே சொல்லலாம். கிரிக்கெட் விளையாட்டுக்கே தன்னை அர்ப்பணித்தவர், முழுக்க முழுக்க நாட்டுக்காகவே விளையாடியவர். எனக்கு மிகவும் பிடித்த அசல் கிரிக்கெட் வீரர்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை League போட்டி, இந்தியாவும்-கற்றுக்குட்டி ஜிம்பாபேவும், டன்பிரிட்ஜ் வெல்ஸ் என்ற இடத்தில் விளையாடியது. டாஸ் வென்று, இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது, டன்பிரிட்ஜ் வெல்ஸ் பிட்ச் ஜிம்பாபே வீரர்களுக்குச் சாதகமாக இருந்ததால், பீட்டர் ரவ்சன் மற்றும் கெவின் குரன் பௌலிங்கில், விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தது, பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி. குளியலறையில் கபில்தேவ், செய்தி தெரிவிக்கப்படுகிறது, குறிப்பாக நட்சத்திர வீரர்களான சுனில் கவாஸ்கர், கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், ரவி சாஸ்திரி,ரோஜர் பின்னி, மதன் லால் மற்றும் யஷ்பால் சர்மா அனைவரும் வெளியேறிய நிலை. அப்போது களத்தில் சயீத் கிர்மானி.

அறுபது ஓவர்களையும் முழுமையாக ஆடவேண்டும் என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்குகிறார் கபில்தேவ். கவனமாக ஆடி, 138 பந்துகளில் ஆட்டமிழக்காமல் கபில்தேவ் எடுத்த ஓட்டங்கள் 175 அதில் பதினாறு நான்கு ஓட்டங்கள், ஆறு ஆறு ஓட்டங்கள். மொத்தத்தில் இந்தியா எட்டு விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பிறகு ஆடிய ஜிம்பாபே அணியை 235 ஓட்டங்களுக்குச் சுருக்கி, இந்திய அணி வெற்றிப் பெற்றது. உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தப் போட்டி வழிகோலியது. இந்த ஒரு நாள் League ஆட்டம் இந்திய அணியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றது.

இவ்வளவு நிகழ்வையும் படம் பிடிக்கப்படவில்லை என்பது தான் வரலாற்றுப் பிழை. அன்றைக்கு வெஸ்டிண்டிஸ், ஆஸ்திரேலியா விளையாட்டுப் போட்டியைப் பதிவு செய்ய எல்லா வீடியோ பதிவு சாதனங்களும் எடுத்துச்செல்லப்பட்டது மற்றும் துரதிர்ஷ்டவசமாகப் பிபிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, இந்த விளையாட்டு போட்டியைப் பதிவு செய்யமுடியவில்லை. அன்றைய ரசிகர்களின் கையில் டிஜிட்டல் கேமரா அல்லது வேறு படக் கருவி இல்லாததால் அருமையான நிகழ்வைப் பதிவு செய்யமுடியவில்லை. எண்ணற்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. போட்டியை நேரில் பார்த்தவர்கள் தான் சாட்சி.


நன்றி:Guardian and Sportstar



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-34

பாபி (1973)

நான் முன்பே சொன்னது போல எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும், சில படங்கள் மட்டுமே காலம் கடந்து நிற்கிறது. அதில் "பாபி" படமும் ஒன்று. திரு குவாஜா அஹ்மத் அப்பாஸ் கதையில் ராஜ்கபூர் நடித்து, தயாரித்து, தனது மகன் ரிஷிகபூரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இயக்கிய படம் "பாபி". 1973-ஆம் ஆண்டு இந்திய மற்றும் சோவியத் ஒன்றியத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்திய படம்.  இந்தப் படத்தின் பாதிப்பு இல்லாத / கதையைத் தழுவி வராத இந்தியக் காதல் திரைப்படங்களே இல்லை எனலாம்.

ரிஷி கபூர் வேடத்தில் முதலில் காதல் இளவரசன் ராஜேஷ் கண்ணா நடிக்கவிருந்தார், கடைசி நேரத்தில் ரிஷி உள்ளே வந்தார் என்று சொல்வதுண்டு.

"பாபி" எங்கள் தாத்தாவுக்குப் பிடித்த படம். 1988-ஆம் ஆண்டு ராஜ்கபூர் மறைந்த போது டெல்லி தூர்தர்ஷனில் ராஜ்கபூர் நடித்த, தயாரித்த சிறந்த படங்களை இரவு 11.௦௦ மணிக்கு ஒளிபரப்பினார்கள். சில படங்களைப் பார்த்ததாக ஞாபகம், ஆனால் "பாபி" படம் என மனத்தில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. நானும், தாத்தாவும் முழுப்படமும் பார்த்து முடித்தோம். பட ஆரம்பத்தில் பாடகர் சைலேந்தர் சிங் பாடிய "மெயின் சாயர் தோ நஹின்" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சைலேந்தர் சிங் மற்றும் லதாஜி பாடிய "ஹம் தும்" என்ற இனிமையான பாடலும் உண்டு.

இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவர்களுடைய இசை எப்பொழுதுமே Grand Scale-இல் இருக்கும். இந்தப் பாடலையும் ரகளையாக இசையமைத்திருப்பார்கள்.  இதோ அந்த பாடலை முழுதும் கேளுங்கள் :



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Saturday, 16 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-33


அவள் ஒரு தொடர்கதை (1974)

"அவள் ஒரு தொடர்கதை" - இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று. நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் படும் பாட்டைச் சொல்லிய படம். அதிகபட்சம் எல்லா மொழிகளிலும் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. சுஜாதாவின் முதல் படம். முதல் படத்திலேயே வலுவான முக்கியபத்திரமேற்றுப் பிரமாதமாக நடித்திருப்பார் சுஜாதா. "அவள் ஒரு தொடர்கதை" படம் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் சினிமா பயணத்தை வேறு திசையில் பயணிக்க வைத்தது.


இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் தொடாத ஜெனரே இல்லை எனலாம். அவர் இயக்கிய "அக்னி சாக்ஷி (1982)" என்ற சைகலாஜிக்கல் திரில்லர் வகைப் படம் பரவலான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் சரிதா மிரட்டலாக நடித்திருப்பார். அருமையான மேக்கிங். படத்தின் சில காட்சிகளைப் பார்த்து நான் பயந்ததுண்டு. குறிப்பாக "காணக் காணும்" பாடல் வரும் போது எழுந்து ஓடிவிடுவேன். நேரம் கிடைத்தால் அந்தப் படத்தை Youtube Channel-இல் பாருங்கள் புரியும்.

கே பியின் திரைப்பயணம் "தெய்வத்தாய்" படத்தில் வசனகர்த்தாவாகத் தொடங்கி இயக்குநராகப் பயணித்து "உத்தம வில்லன்" படத்தில் நடிகராக நிறைவுற்றது. ஐந்து மொழியில் கோலோச்சியவர். மூன்று தலைமுறை நடிகர்களை வைத்துப் படம் இயக்கிய ஒரே இயக்குநர். சின்னதிரையில் கால்பதித்து அதிலும் சாதித்தார்

சரி விசயத்துக்கு வருகிறேன், அவள் ஒரு தொடர்கதை படத்தில் "கடவுள் அமைத்து வைத்த மேடை" Fast Beat பாடலை பிடிக்காதவர்கள் உண்டா? விச்சு டார்லிங் பலவித சிறப்புச் சப்தங்கள் சேர்த்த இசையில் SPB பாடிய பாடலுக்குக் கமல் நடித்து மேலும் மெருகேற்றியிருப்பார். நான்கு பேர் நிகழ்த்திய மாயாஜாலம், நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்தப் பாடலை நீங்களும்
கேளுங்களேன்:

                                 




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Friday, 15 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-32

பொம்மலாட்டம் (1968)

புரியாத வார்த்தைகளைப் போட்டு ஒரு பாடலை உருவாக்கினால், அது தான் இன்றைய தமிழ் சினிமாவின் Trend (கானா) பாடல்கள்,

அடுத்த பாடல் வரும் வரை கொஞ்ச நாள் அதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு, ரசிக்கிறார்கள். அந்த நேரத்துக்கு அது ஒரு சென்சேஷன் அவ்வளவு தான்.

ஆனால் தமிழ் சினிமாவில், முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை வார்த்தை எல்லாம் போட்டு ஒரு பாட்டு வந்து, அது சூப்பர் ஹிட்டும் ஆகி, இன்று வரை ரசிக்கப்படுகிறது. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கி, வி குமார் இசையமைப்பில் "பொம்மலாட்டம்" திரைப்படத்தில், மேற்சொன்ன "வா வாத்யாரே" பாடல் வரும். கவிஞர் வாலி இப்பாடலை எழுதச் சிரமப்பட, மெட்ராஸ் பாஷை தெரிந்தவரிடம் கேட்டு எழுதினார்.

ஆச்சி மனோரமா தமிழ் திரைத்துறையின் மிகசிறந்த ஆளுமை, சிறந்த பாடகியும் கூட, இன்றைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை. எத்தனையோ அருமையான பாடல்களை (High Pitch Voice) பாடியிருக்கிறார். இந்தப் பாடலையும் அசால்டாகப் பாடி, சோ ராமசாமியுடன் ஆடி,  ஈடுகொடுத்து நடித்திருப்பார். சென்னை தூர்தர்ஷனில் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி இந்தப் பாடலை போடுவார்கள், மறுநாள் இந்தப் பாடலை முணுமுணுப்போம்.

                                        

 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-31

சாந்தி நிலையம் (1969)

சாந்தி நிலையம் படம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இயக்குநர் திரு ஜி எஸ் மணி இயக்கி, ஜெமினி எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரிப்பில்,  ஜெமினி கணேசன்-காஞ்சனா நடித்த சாந்தி நிலையம் - அப்போது 2-3 முறை தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. பேமிலி திரில்லர் வகை படம். பேமிலி சப்ஜெக்ட்டில் எப்படி திரில்லர் விஷயங்களைச் சேர்க்கமுடியும். படம் பாருங்கள் புரியும். ஜெமினி கணேசன் மென்சோகமுடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  விச்சு டார்லிங் இசையமைத்த "இயற்கை என்னும் " (SBP. பாடிய பாடல்), "கடவுள் ஒருநாள்", "பூமியில் இருப்பதும் வானத்தில்", "இறைவன்  வருவான்" போன்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.  இப்போது கேட்டாலும் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன், டிஎம்எஸ் அவர்கள் ஒவ்வொரு திரை ஆளுமைக்கும் (எம் ஜி ஆர், சிவாஜி, etc.) ஏற்றாற்போல் பாடுவதில் வல்லவர். இந்த படத்திலும் நாகேஷ் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பார். கிட்டதட்ட
நாகேஷ் பாடுவது போலவே இருக்கும்.  அந்தளவுக்குக் குரலை Synch செய்து பாடியிருப்பார்.  இன்னொன்று, ஸ்டூடியோவில் சில ஷாட்கள், சில வெளிப்புற ஷாட்கள், இரண்டையும் இணைத்து ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பாடுவது போலப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.  நீங்கள் பார்த்தீர்களானால், அப்பவே இது போன்ற முயற்சி வெகுவாக ரசிக்கப்பட்டது.

குறிப்பு : மிகப்பெரிய வெற்றிபெற்ற, ஆஸ்கார் மற்றும் பல விருதுகளைக் குவித்த, இன்றளவும் உலகின் சிறந்த பட வரிசையில் இடம்பெற்ற Sound Of Music என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும் சொல்வதுண்டு.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Thursday, 14 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-30

சின்னதாயி (1992)

விக்னேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் எஸ்.கணேசராஜ் இயக்கிய படம். கிராமத்துக் கதை என்றால் சொல்லவா வேண்டும், ராஜாவுக்கு Cake Walk போல, பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அப்போது வானொலியில் இரவு ஒளிபரப்பான  விவித-பாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் திரும்பத் திரும்ப இப்படத்தின் பாடல்கள் போடுவார்கள். இப்படத்தின் பாடல்களை இப்போதும் கேட்கலாம்.

வினுசக்கரவர்த்தி-தமிழ் திரையுலகின் கம்பீரமான ஆகச்சிறந்த ஆளுமை. வில்லனாக, அரசியல்வாதியாக, அப்பாவாக எனப் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரின் குரல் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு மேலும் வலுசேர்க்கும். இந்தப் படத்தில் சாமியாடியாக நடித்திருப்பார். படம் ஆரம்பமாகும் முதல் காட்சி சாமியாடி வினுசக்கரவர்த்தி வேட்டைக்குப் போகும் அந்தக் காட்சியில் அசலாக, மிரட்டலாக நடித்திருப்பார். அந்த இடத்தில் தொடங்கும் ராஜாவின் ராஜாங்கம் இறுதி காட்சி வரை தொடரும்.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


கைதி (2019)


ஆக்ஷன் படமென்றால் எனக்குப் பிடிக்கும். தெலுங்கு ஆக்ஷன் படங்கள் விரும்பி பார்ப்பேன். (பாலகிருஷ்ணா படங்கள் தவிர்த்து). கைதி - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீள ஆக்ஷன் மற்றும் துரத்தல் பாடம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது பட வாய்ப்பை திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

படம் வருவதற்கு முன்பே கணித்திருந்தேன், பட முன்னோட்ட காட்சி எதிர்பார்ப்பை அதிகரித்தது. இயக்குநர் லோகேஷ் இதிலும் ஏதாவது மாஜிக் செய்வார் என்று. காரணம் மாநகரம் படம் நன்றாக இருந்தது.

கதாநாயகி இல்லாத, பாட்டு இல்லாத படம் என்ற புதுமை எதுவும் இல்லை. ஏற்கனவே முன்னோடிகள் முயற்சி செய்தது தான். ஒரே இரவில் நடக்கும் கதை. இரண்டு மணி முப்பது நிமிடங்கள் உட்காரவைத்ததுதான் இயக்குநரின் மெனக்கெடல் மற்றும் சவால். கதாநாயகனுக்குப் பிளாஷ்பேக், அழகாக ஒரு குத்து பாடலை இடைச்செருகலாக வைத்திருக்கலாம், ஆனால் இயக்குநர் அதைச் செய்யவில்லை. ஆக்ஷன் படங்களில் வில்லன் கதாபாத்திரம் வலிமையாக இருக்கவேண்டும், இதிலும் கொடூரமான வில்லன்கள், அதற்கு ஈடுகொடுப்பது போலக் கதாநாயகன் கார்த்தி.

காவல்துறையால் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கைப்பற்ற ஒரு கும்பல் முயல்கிறது. போலீசாரை போட்டுத்தள்ள இன்னொரு கும்பல் துரத்துகிறது, சிறையிலிருந்து விடுதலையாகி மகளைக் காணப் புறப்பட்டுப் போகும் கதாநாயகன் இந்தக் கும்பலிடம் சிக்கி என்னாகிறான், அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பது மீதி கதை. கார்த்திப் பிரியாணி சாப்பிடும் காட்சியிலிருந்து அவருடைய ஆட்டம் தொடங்குகிறது. கார்த்தியுடன் படம் முழுதும் பயணிக்கும் நரேன் கதாபாத்திரம் அருமை. கார்த்திக் கதாபாத்திரம் நன்றாக வடிவைக்கப்பட்டிருக்கிறது. குறைவான வசனம். நிறைவான நடிப்பு.

படத்தில் வரும் அந்த முதல் ஆக்ஷன் பிளாக் "இடி" ரகம். அன்பரிவ் குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஆக்ஷன் ப்ளாகிலும் தெரிகிறது.

லாரியும் ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுதும் வருகிறது. சின்னச் சின்னத் துணை கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். காவல்துறை அலுவலகத்தில் நடக்கும் அந்தக் களேபரத்தில் சிக்கும் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரம் மற்றும் ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகள் செம.

சாம் சி எஸ் - பின்னணி இசை இன்னும் கூடக் கொஞ்சம் டெம்போ ஏற்றியிருக்கலாம். ராஜாவின் இசையைத் தொடாமல் யாரும் படமெடுக்கமுடியாது போல.

இறுதிகட்ட காட்சியில் அவ்வளவு பெரிய துப்பாக்கியை எடுத்துச் சுடுவதெல்லாம் சற்று too much ரகம் தான்.

மொத்தத்தில் ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து - "கைதி".


 நன்றி: Google Image



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Monday, 11 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-29

மாயாபஜார் (1957)

இந்திய சினிமா எளிதில் கடந்துவந்துவிட முடியாத படம். சினிமாவை நேசிப்பவர்களால் தான் காலம் கடந்த ஒரு சிறந்த படைப்பைத் தர முடியும். அப்படி ஒரு படம் தான் "மாயாபஜார்". அவ்வப்போது முரசு தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பாகும் போது நானும் பார்ப்பேன். "பழைய படத்தை யாரு உட்கார்ந்து பார்ப்பது?" என்று சொல்லவே முடியாத படம். காட்சிக்குக் காட்சி சுவாரசியம். அன்றைய காலகட்டத்தில் மிகுந்த பொருட்ச்செலவில் தயாரான படம். இன்றைய "பாகுபலி" படங்களுக்கெல்லாம் முன்னோடி "மாயாபஜார்".

எங்கள் தாத்தா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் "மாயாபஜார்" படம் பார்க்க ஆசைப்பட்டார். மாமா அதன் வீடியோ கேசட்டை தேடி, அலைந்து கண்டுபிடித்து, வாங்கிக் கொண்டுவந்து விசிஆர் -இல் போட்டு விட்டார். தாத்தா அதைப் பார்த்துவிட்டுத் தான் கிளம்பினார்!

சரி, இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லமுடியுமா? கடோத்கஜனாக ரங்காராவ் ? கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ் ?, நடிகையர் திலகம் சாவித்திரி ? அல்லது ஜெமினி கணேசன்? எம் என் நம்பியார் ? நிச்சயமாக உங்களால் சொல்ல முடியாது. அவரவர் கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருப்பார்கள். சின்னச் சின்னத் துணைக் கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருப்பார்கள். அதிலும் ரங்காராவ், சாவித்திரி உடலில் புக, அப்போது சாவித்திரி ஆண் போல ஆடி, பாடி மிரட்டலாக நடித்திருப்பார். (நடிகர் பெண் வேடத்தில் நடிக்கலாம், நடிகை ஆண் வேடத்தில் நடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை).

சென்னை தூர்தர்சனில் இந்தப் படத்தைப் பார்த்ததாக ஞாபகம். மந்திர-தந்திர மாயாஜால படம். சொல்லவா வேண்டும், மிகுந்த உற்சாகத்தோடு கண்டுகளித்தோம். திரு கண்டசாலா இசையில், திருச்சி லோகநாதன் பாடிய "கல்யாண சமையல் சாதம்...." பாடல் வரும் போது. வாய் பிளந்து பார்ப்போம். VFX, Graphics போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி இந்தப் பாடலை எடுத்தார்களோ தெரியவில்லை.

"மாயாபஜார்" நிகழ்த்திய மாயாஜாலம் என்றென்றும் நிலைத்திருக்கும்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-28

தனியிசை பக்தி பாடல்கள்
திரைப்படப் பாடல்களின் வீச்சைத் தாண்டி சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன் ஐயா, பெங்களூர் ரமணியம்மாள் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அம்மா போன்றவர்கள், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் மீது பாடிய பக்தி தனியிசை பக்தி பாடல்கள் 1980 களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பாடல்களைக் கேட்கும் போது, ஏதோ பக்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் போலும் என்று நினைப்பதுண்டு. பிறகு தான் தெரிந்தது அது தனியிசை பாடல்கள் என்று. எங்கள் பாட்டி வீட்டில், மாமா அடிக்கடி இவர்கள் பாடல்களைக் காலை வேளையில் ஒலிக்கவிடுவார். கேட்க, கேட்க, அப்படியே பாடல்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். அதிலும் பெங்களூர் ரமணியம்மாள் அவர்களின் குரல் அபூர்வமானது. அவர் பாடிய "பொம்ம...பொம்ம..தா", "வெற்றிவேல் முருகனையும் அரோகரா" "குன்றத்திலே முருகனுக்கு" போன்ற Fast Beat பாடல்களைக் கேட்கும்போது உற்சாகமாக இருக்கும்.

எங்கள் வீட்டு அருகில் உள்ள கோயிலில் தினமும் காலையில் மேற்சொன்ன பாடல்களைப் போடுவார்கள். அப்பா புதிதாக டேப் ரெக்கார்டர் வாங்கியபோது, டிஎம்எஸ் பாடிய முருகன் பக்தி பாடல்கள் கேசட்டை வாங்கி, தினமும் கேட்பார். அதற்குப் பிறகு இப்போது வரை எத்தனையோ பேர் பக்தி பாடல்களைப் பாடியிருந்தாலும். இவர்கள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவர்களின் பாடல்கள் தமிழகக் கோவில்கள், கடைவீதி எனத் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் கணீரென்று ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பெங்களூர் ரமணியம்மாள் முருகன் மீது பாடிய பக்தி பாடல் இதோ உங்களுக்காக:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          




ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-27

ராஜபார்ட் ரங்கதுரை (1973)
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்றோ, இரு தினங்கள் முன்னே பின்னே இருக்கையில், சென்னை தூர்தர்ஷனில் வெள்ளியன்று ஒளிபரப்பான "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில், நடிகர் திலகம் நடித்த படத்திலிருந்து இந்தப் பாட்டை முதலில் போடுவார்கள். கடைசியாக "பாரத விலாஸ்" படத்தில் வரும் "இந்திய நாடு என் வீடு... " என்ற இந்தப் பாட்டை போட்டு முடிப்பார்கள். எங்கள் பள்ளி நாட்களில் குடியரசு தினம் அல்லது மற்றும் சுதந்திர தின விழாவில் "இந்திய நாடு என் வீடு... " பாட்டுக்கு எங்கள் வகுப்பு நண்பர்கள் நடனம் ஆடியிருக்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன்...

இயக்குநர் பி மாதவன் இயக்கி, நடிகர் திலகம் நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை" படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே, சூப்பர் ஹிட். "அம்மம்மா தம்பி", "மதன மாளிகையில்" பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற எழுச்சிமிக்கப் பாடல் என் விருப்ப பாடல். விச்சு டார்லிங் இசை Vibrant-ஆக இருக்கும். பாடல் கேட்கும்போதே சிலிர்க்கும். இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரன் பகத் சிங் வாழ்க்கையின் கடைசி நொடிகளைக் சொல்லும் சின்ன Episode இந்தப் பாடல். இதோ நீங்களும் அந்த பாடலை கேட்டுப்பாருங்கள்:



நன்றி: Youtube




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி