Wonderful Shopping@Amazon

Saturday, 12 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-128

நீங்கள் கேட்டவை (1984)

80-90-களில் கச்சேரி மேடைகளில் நான்காவது-ஐந்தாவதாக இந்த பாடலை பாடுவார்கள், அவர்களும் மேடையில் ஆடிக்கொண்டே பாடுவார்கள், காரணம் பாடலின் ரிதம் அப்படி. பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.  கல்லூரி ஆண்டு விழாக்களில் கூட இந்த பாடல் /நடனம் இடம்பெற்றது.

சில இயக்குநர்களுக்கு தனக்குத் தெரிந்த ஜானரில் படம் இயக்கவே விரும்புவார்கள், தெரியாததை ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணமாகக்  கூட இருக்கலாம். சிலர் எல்லா ஜானரிலும் படம் பண்ண விரும்புவார்கள்.

இப்படி இருக்கையில், "இவருக்கு அழகியல்/ மனித உறவுகளின் சிக்கல்களைத் தாண்டி, இவரால் படம் எடுக்க தெரியாது.." - யாரோ பேசியதை இவரது நண்பர் ஒருவர் இவரிடம் சொல்ல... "அப்படியா.." என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், அடுத்து பக்கா வணிக படத்துக்கான வேலைகளில் இறங்கி /இயக்கி சிக்ஸர் அடித்தார். படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

யார் அந்த இயக்குநர்  என்ன படம் ?

1984 ஆம் ஆண்டு, தியாகராஜன், பானுச்சந்தர், அர்ச்சனா மற்றும் சில்க் ஸ்மிதா, ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து, இளையராஜா இசையமைத்து காலஞ்சென்ற இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய படம் 'நீங்கள் கேட்டவை'.  ஒரு தமிழ் பத்திரிக்கை, "பாலு மகேந்திரா, இதயா நாங்கள் கேட்டோம் .." என்று எழுதியது.  அதன் பிறகுத் தனது பாணிக்குத் திரும்பினார்.

என்னுடைய அண்ணன் பெருமாள் அவர்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடிக்கும், தினமும் ஒரு முறையாவது டேப் ரெகார்டரில் கேட்டுவிடுவார்.

"அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி.." என்ற பாடல் தான் மேடை கச்சேரியை ஆக்கிரமித்தது. இன்றைய தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் தவறாமல் இடம்பெறுகிறது. மழலைகள் குரலில் கேட்கும்போது கூட நன்றாகத் தான் இருக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேன்...முதல் சரணம் கிளாசிக்கல், இரண்டாம் சரணம் வெஸ்டர்ன் கலவையில் இடம்பெற்ற  "ஒ வசந்த ராஜா.. " பாடலை தான் எப்படி மறக்க முடியும்.




- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




Monday, 31 January 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-127

'அன்னக்கிளி'(1976)
 
சென்னை தொலைக்காட்சியில்  ஒரு ஞாயிறு அன்று இளையராஜா முதல்முதலாக இசையமைத்த "அன்னக்கிளி" திரைப்படம்  ஒளிபரப்பானது நானும் முதல் முறையாக அப்போது தான் இந்த படத்தைப் பார்த்தேன். இசை, கதையும், கதைக்களமும் சற்று புதிதாக இருந்தது. அன்று முதல் இன்று வரை 'அன்னக்கிளி' படத்தின் பாடல்களைக் கேட்டுவருகிறேன்.

'அன்னக்கிளி' - படப்பாடல்களை இப்போது கேட்டாலும் அந்த பிரெஸ்னஸ் -ஐ உணரமுடிகிறது. அதுவரை ரசிகர்கள் கேட்காத (கிராமிய) இசை. அன்று ராஜாவின் இசையில் கட்டுண்ட பெருவாரியான ரசிகர்களுக்கு இன்று எல்லாமுமாக இருக்கிறார். இந்தி (பாடல்களின்) ஆதிக்கத்தை ராஜா தனது இசையால் முறியடித்தார்.

சரி... இனி என்னுடைய நண்பர் மற்றும் மிகத் தீவிர ராஜாவின் ரசிகர் திரு நவீன் மொசார்ட் சொன்ன வேறொரு கோணத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்:
 
ஆரம்பம் முதலே இளையராஜா இசையில் தீவிர உணர்வு ஆழங்கள், நிறைய Complex லாயரிங் இருந்தது. அதே சமயம், ஒரு String section ஐ பயன்படுத்தினார் என்றால் எல்லாமே ஒரு சேர ஒலிக்காது. ஒரு Bass இருக்கும் அதன் மேல் ஒரு மெலடி அதற்குக் கவுண்டர் மெல்டி என்று அத்தனையும் ஹார்மணியோடு இணையும். பின்பு வந்த  'பூங்காற்றே இனிபோதும்' என்கிற  பாடலின் ஆழத்தை எல்லாம் தாங்கவே முடியாது அந்த இசையின் நுணுக்கத்தையும் நினைத்துப் பார்க்கவும் கையாளவும் முடியாது.  

இப்படி இளையராஜாவை ரசித்தவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. அதாவது தீவிரத்தன்மைக்கு பழக்கப்பட்டவர்கள். தீவிரத்தன்மைக்கு பழகியவர்கள், மேலோட்டமாக இருக்கமுடியாது,  அந்த ஆழத்திற்குப் பழக்கப்பட்டவர்களுக்குச் சாதாரண உணர்வு ஆழங்களைத் தருகிற இசையை ரசிக்க முடியாது.  அதே சமயம் மற்ற இசையை விரும்புபவர்கள் அந்த தீவிரத்தன்மை தனக்கு ஒவ்வாது என்றெண்ணி மேலோட்டமாக ஒருவித Take it easy ஆக வாழ்வைப் பார்ப்பவர்கள்..

புதிதாக வரும் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசை அமைக்கும் முதல் படத்தின் இசையைக் கேட்கப் புதிதாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அதுவும் ஜீவனில்லா 'டெக்நோ' இசையாகவே ஆகிவிடுகிறது.

திரைத்தொண்டர் காலஞ்சென்ற திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வைர வரிகள் இதோ...

`அன்னக்கிளி-'காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.

'அன்னக்கிளி’யால் நான் நினைத்த இரண்டு விஷயங்கள் நடந்தன. `தமிழ்த் திரையுலகம் இந்தி சினிமாவுக்கு சமமாக வரவேண்டும்' என நினைத்தேன். `அன்னக்கிளி'க்குப் பிறகு இந்திப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தது. இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ் ரசிகர்கள், மீண்டும் தமிழ் சினிமாவை ரசிக்க ஆரம்பித்தனர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து ஒப்புக்கொண்ட அனைத்துப் படப் பாடல்களையும் ஹிட்டாக்கிய பாலிவுட் இசை இரட்டையர்கள் ஷங்கர்-ஜெய்கிஷன் போல ஓர் இசையமைப்பாளர் வரவேண்டும் என்ற என் ஆசையும் நிறைவேறியது. ஆனால், அந்த ஆசை மட்டும்தான் என்றுடையது; மேலே ஏறிவந்த திறமை ராஜாவுடையது.

இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த முதல் பாடல் உங்களுக்காக :



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com and Mr Naveen Mozart

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-126

'பாடாத தேனீக்கள்' (1988)

னக்குத் தெரிந்து ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யமுடியும், ஆனால் ஒருவரால் மட்டும் ஒரே நேரத்தில் பல வேலைகள் தொய்வில்லாமல் செய்யமுடியும், தாமதமாக உறங்கி - நேரமாக எழுந்து - நடைப்பயிற்சி மேற்கொண்டு - முரசொலி பத்திரிக்கை ஆசிரியராக இறுதி பணிகளை முடித்து-  அன்று வெளியான தினசரிகளை படித்துக் குறிப்பெடுத்து - எளிய உணவு உண்டு - அன்றைய பணிகளைத் துவங்கி முடித்து - பொதுக்கூட்டம் - பிரச்சாரம் -  சக தொண்டர்களின்  வீட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்து என, என்ன ஒரு அசுரத்தனமான உழைப்பு, இதற்கிடையே திரைப்பட கதை வசனம் வேறு, ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மேற்சொன்ன இதே பணி தான்.          24 மணிநேரத்தில் எப்படி இவரால் இதையெல்லாம் செய்யமுடிந்தது, எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நேர மேலாண்மை என்னை ஆச்சரியப்படவைக்கிறது. உம்.. என்ன செய்ய .....அவருக்குக் கிடைத்த குருமார்கள் அப்படி.

நேர மேலாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசுகிறோம், எழுதுகிறோம் ஆனால் பின்பற்றுகிறோமா என்றால், இல்லை என்பதே எனது பதில்

சரி விஷயத்துக்கு வருவோம் .....

தலைவர் டாக்டர் கலைஞர் கதை-வசனத்தில், நடிகர் / இயக்குநர்  V. M. C. ஹனீபா இயக்கத்தில் சிவகுமார் மற்றும் ராதிகா நடித்து 1988 ஆம் ஆண்டு தீபாவளி முன்னாளில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'பாடாத தேனீக்கள்'.

இயக்குநர் வி எம் சி ஹனிபா அல்லது நடிகர் கொச்சின் ஹனிபா இருவரும் ஒருவரே. இயக்குநர் நடிகரான கதை.தமிழ், மலையாளத்தில் படங்களை இயக்கி பின்பு வில்லனாக, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக முன்னூருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வாழ்ந்து மறைந்தார். இவர் இயக்கிய  'பாசப் பறவைகள்' எனக்குப் பிடித்த படம். பிறகு வந்த படம்  தான் 'பாடாத தேனீக்கள்'. 'சந்தர்ப்பம்' மலையாள படத்தின் ரீமேக். என்ன ஒரு கவித்துவமான தலைப்பு.

இரண்டு பாடல்கள் ரிப்பீட் மோடில் வரும். ஒன்று கே எஸ் சித்ரா பாடியது, இன்னொன்று தாசேட்டன் பாடியது. இரு பாடல்களுமே அருமை தான்.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Friday, 7 January 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-125

'முள்ளும் மலரும்' (1978)

ஜினிகாந்த், சரத்பாபு, ஜெயலட்சுமி, ஷோபா ஆகியோர் நடித்து, எழுத்தாளர் உமா சந்திரன் நாவலை தழுவி, இயக்குனர் மகேந்திரன் எழுதி இயக்கிய முதல் படம் 'முள்ளும் மலரும்', 1978 ஆம் ஆண்டு வெளியானது. 

உங்களுக்குக் கால எந்திரம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? கமெண்டில் தெரிவிக்கவும்.

எனக்குக் கால எந்திரம் கிடைத்தால் 1978 ஆண்டுக்குப் பின்னோக்கி பயணித்து 'முள்ளும் மலரும்' படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று ஆசை.

நான் முன்பே சொன்னதுபோல நிறைய பரிட்சாத்த முயற்சிகளை இசையில் செய்துபார்க்க ஆசைப்பட்ட ராஜா அதற்கான களம் அமைந்த போது வெளிப்பட்ட இசை / பாடல் தான் இது.

'ட்ரைபல்' (Tribal) வகை இசையை முதல் முதலாக "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" பாடலில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் ராஜா. என்ன ஒரு காத்திரமான இசை. 42 வருடங்கள் ஆகியும் இன்னும் புதிது போலவே, சும்மா கிழி கிழித்துத் தொங்கவிட்டிருப்பார். அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று படம் பார்க்கும் ரசிகனுக்குத் தனது இசையால் உணர்த்தியிருப்பார் ராஜா. 

இயக்குநர் என்ன நினைத்தாரோ, அதை அப்படியே இசையில் கொண்டுவந்திருப்பார் ராஜா. நடன இயக்குநரை மறக்கலாமா? இயக்குநர்+இசையமைப்பாளர் என்ன நினைத்தார்களோ அதை அப்படியே நடன இயக்குநர் ரஜினியை வைத்து Execute செய்திருப்பார்.  இயக்குநர் மகேந்திரன் படங்களுக்கு ஒளிப்பதிவாளர் அசோக்குமார். ஆனால் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு Camera கவிஞர் பாலுமகேந்திரா அவர்கள். இந்த பாடலை பாத்தீர்களானால் தெரியும், மிதமான லைட்டிங், டாப் ஆங்கிள் ஷாட் எனப் பாடலை கவிதையாய் படைத்திருப்பார். 
 
இவர்கள் ஐவரும் சேர்ந்து உருவாக்கிய மாயாஜாலம் தான் இந்த பாடல்.  இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80களின்பாடல்களில் இதுவும் ஒன்று.

பெண்கள் குலவைச் சத்தத்திடையே அந்த ஒரு நொடி நிசப்தம் பாடலுக்கு வலு சேர்க்கும். எனக்கெல்லாம் இந்த படத்தை (அகன்ற) திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என வருத்தப்படுகிறேன். 

'முள்ளும் மலரும்' படத்தைப் பார்க்கும்போது இன்னொரு விஷயம் எனக்குத் தோன்றுகிறது, ரஜினிகாந்த் தன்னை முழுதாக இயக்குநரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார் என்று தோன்றுகிறது. என்ன ஒரு Steller Performance.  அதனால் என்னவோ, ரஜினிக்குப் பிடித்த இயக்குநராக மகேந்திரன் இருந்தார். இதை எந்த மேடையிலும் அவர் சொல்லத் தயங்கியதில்லை.

ரஜினிகாந்த் அவர்களால் திரும்ப இதுபோன்ற படங்களில் நடிக்கமுடியுமா?



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-124

இணைந்த கைகள் (1990)

 
 
ன்று காலை அலுவலகம் வரும் வழியில் "அந்தி நேர தென்றல் காற்று..." என்ற பாடலை ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டு கொண்டே என்னைக் கடந்து போனார் ஒருவர்.  எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே... என்ற நினைவு 1990களில் பயணித்தது. அட ... 'இணைந்த கைகள்' படமாயிற்றே....

முதல் ரீலில் வரும் ஆக்ஷன் பிளாக், நண்பர்கள் இணையும் இடைவெளி  காட்சி அப்போது வரும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை. குள்ளமணி ஆக்ஷன் பிளாக்,  ரயில் நிலைய கிளைமாக்ஸ் என மனதில் ஓடியது படம்.  'இணைந்த கைகள்' படம் வெளிவந்தபோது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு  நண்பர்கள் இணைந்து, பூவிருந்தமல்லி சுந்தர் 70 MM  திரையரங்கில்  முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம். எனக்குப் பிடித்த படம். அதன் பிறகு 2 -3 முறை பார்த்திருப்பேன்.



ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து, நாசர், செந்தில் ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்து "முற்றிலும் இளைஞர்களுக்காக" என்ற கோஷத்துடன் மிகுந்த பொருட்செலவில் வெளிவந்த பிரம்மாண்ட படம்.

சமூக ஊடகங்கள் வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில் படத்துக்காகப் பரவலான  எல்லா தினசரி முன்னணி பத்திரிக்கை, வார இதழ் மற்றும் வானொலியிலும் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஆபாவாணன். சென்னை மவுண்ட் ரோட்டில் பிரமாண்டமான விளம்பர பதாகை இடம்பெற்றது நினைவிருக்கிறது. விளம்பரங்கள் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

- மறைந்த இயக்குநர் என். கே விஸ்வநாதனின் விறுவிறு இயக்கம்.
- மனோஜ் கியானின் இனிமையான பாடல்கள் /பின்னணி இசை. 
சண்டைக் காட்சிகள்.
சென்டிமென்ட் காட்சிகள்.
- அப்போதைய முன்னணி நடிகர்கள் நடித்தது.
- நாசரின் வில்லத்தனம்.
கதாநாயகனுடன் மோதும் சண்டைக்காட்சியில் வித்தியாசமான
   தோற்றத்தில் குள்ளமணி.
கிளைமாக்சுக்கு முந்திய பாடலான "அந்தி நேர தென்றல் காற்று..."
   அப்போது    பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இப்போதும் எனக்குப் புரியாத விஷயம், அத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது தான்.  

கொசுறு செய்தி:

இணையத்தில் எதையோ தேடும் பொது கிடைத்த தகவல்கள் தமிழில் இதோ:

இயக்குநர் சாணக்கிய இயக்கத்தில் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழில் மற்றும் என்.டி ஆர் தெலுங்கில் நடிக்கவிருந்த படம் இணைந்த கைகள்.  மிகுந்த பொருட்செலவில் எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஈரானில் படப்பிடிப்பு மற்றும் ஈரானிய நடிகையை அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. எம்.எஸ் விஸ்வநாதன் பாடல்களும் தயார். படப் பூஜையில் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

'நிலவு ஒரு பெண்ணாகி', 'அவள் ஒரு நவரச நாடகம்' மற்றும் 'கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்' போன்ற இனிய பாடல்கள் பின்னர் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்றது.

Thanks: YouTube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 29 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-123

கலையரசி (1963)

தமிழில் அறிவியல் புனைவு கதையம்சம் உள்ள திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏன் அறிவியல் புனைவு கதைகள் கொண்ட திரைப்படங்கள் அதிகமாகத் தமிழில் வருவதில்லை என்று தெரியவில்லை. சமூக/ புராண /குடும்ப திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இத்தகைய படங்களுக்கு கிடைக்காததே காரணமாக இருக்கலாம்.

சமீபகாலமாக அறிவியல் புனைவு கதையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்துள்ளது. மிக சமீபத்திய உதாரணம்: 'டிக் டிக் டிக்', 'நேற்று-இன்று-நாளை', 'டிக்கிலோனா', 'மாநாடு', 'ஜாங்கோ' இன்னும் சில. எண்ணிக்கை அதிகமாகும் வரை ஆங்கில படங்களைப் பார்த்து நம்மூர் ரசிகர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை பற்றிய 'ஸ்டார் ட்ரெக்' நிகழ்ச்சி பெரிய சென்சேஷன்.  பள்ளியில் எனது நண்பர்கள் முந்தைய நாள் தொடரைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் எனக்கு அதன் கதையும் சரி, காட்சிகளும் சரி,  ஒரு மண்ணும் புரியவில்லை.  அதனால் 'ஸ்டார் ட்ரெக்' தொடர் என்னை கவரவில்லை என்றே சொல்வேன். பிறகு 'ஸ்பேஸ் சிட்டி சிக்மா' என்ற தொடர் வந்தது. இவ்வளவு தான் அறிவியல் புனைவு திரைப்படங்களை எனது புரிதல்.

தமிழில் வந்த முதல் அறிவியல் புனைவு அல்லது வேற்று கிரகவாசிகள்/ பறக்கும் தட்டு கதையம்சம் கொண்ட படத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

நல்ல / வித்தியாசமான கதையம்சம் கொண்ட வெளிநாட்டுப் படங்கள் மேல் எம்ஜிஆர் அவர்களுக்கு நாட்டம் உண்டு. 'It Happened One Night' மற்றும் 'Roman Holiday' படத்தின் பாதிப்பில் அவர் நடித்து வெளிவந்த படம் 'சந்திரோதயம்'. வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவது போன்ற கதையம்சம் கொண்ட ஆங்கில படங்கள் நிறைய 60களில் வர, அதில் கவரப்பட்டு அவர் நடித்த படம் 'கலையரசி'.

சரி, வாங்க 'கலையரசி' கதை என்னவென்று பார்ப்போம்: 
 
கிராமத்தில் தனது தாயார் மற்றும் தங்கையுடன் விவசாயம் செய்து பிழைக்கும் எம்ஜிஆர் ஊர் பெரிய மனிதரின் மகள் பானுமதியை நேசிக்கிறார். பானுமதியை மணந்து கொண்டு சொத்துக்களுக்கு வாரிசாக பி எஸ் வீரப்பா ஆசைப்படுகிறார். வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகை தரும் நம்பியார் தன்னுடன் வந்த நபரை பூமியில் இருக்கும் படி செய்துவிட்டு பானுமதியை கடத்தி செல்கிறார். பானுமதி காணாததால் எம்ஜிஆர் மீது சந்தேகப்படும் போலீஸார் அவரை சிறையில் அடைக்கின்றனர். பானுமதியை தேடி அலையும் பி எஸ் வீரப்பா அவரை போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண்ணை பிடித்து வருகிறார். இதனால் சிறையிலிருந்து எம்ஜிஆர் விடுவிக்கப்படுகிறார். பூமியில் விட்டுச் சென்ற ஆளை அழைத்து செல்ல பறக்கும் தட்டில் வரும் நம்பியாரை ஏமாற்றி எம்ஜிஆர் அவருடன் வேற்று கிரகத்திற்குப் பறக்கிறார். அங்குத் தன்னை போலவே தோற்றம் கொண்ட "கோமாளி" எம்ஜிஆர்-ஐ பார்க்கிறார். எரி நட்சத்திரம் தாக்கி கோமாளி மாண்டுவிடவே அவரை போல வேடமிட்டு பானுமதியை சந்திக்கிறார். வேற்று கிரக இளவரசியான ராஜஸ்ரீயும் எம்ஜிஆர்-ஐ நேசிக்கிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி பானுமதியுடன் எம்ஜிஆர் எப்படி பூலோகம் திரும்புகிறார் என்பதே மீதிக்கதை.

திரு டி ஈ. ஞானமூர்த்தி எழுதிய கதையில் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் பானுமதி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ராஜஸ்ரீ மற்றும் குமாரி சரஸ்வதி ஆகியோர் நடித்து, இயக்குநர் ஏ. காசிலிங்கம் இயக்கி, இசை மேதை கே. வி. மகாதேவன் இசையில்19 ஏப்ரல் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த 'கலையரசி' - இந்தியாவில் (தமிழில்) வந்த முதல் அறிவியல் புனைவுகதைத் திரைப்படமாகும்.  

அப்போது இருந்த தொழினுட்பத்தை வைத்துப் படத்தை எடுத்திருப்பார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் புதிது. ஏனோ எம்ஜிஆர் ராசிகளுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. படமும் வெற்றி பெறவில்லை.  'கலையரசி' படத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை எனலாம். நடிகர் திலகம் "நமக்குச் சரிப்பட்டு வராது" என்று சற்று தள்ளியே இருந்தார்.

கமல் நடித்து  ராக்கெட் தொழினுட்ப திருட்டைப் பற்றிய கதையம்சம் கொண்ட 'விக்ரம்' படம் 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. படத்திற்கு கிடைத்த 'வரவேற்பை' கண்ட கமல், அதன் பிறகு அந்த பக்கமே செல்லவில்லை. அதனால் தான் என்னவோ 'எந்திரன்' பட வாய்ப்பை கூட நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.


- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Tuesday, 28 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-122

 சித்தி (1966)

ஞாயிறு அன்று - தொலைக்காட்சி சேனல்களை துழாவிய போது, ஒரு சேனலில் நிறுத்தினேன். "திரைக்கதை, இயக்கம்: கே எஸ் கோபாலகிருஷ்ணன்" என்றது. அந்த படம் நடிகவேள் எம் ஆர் ராதா கதை நாயகனாக நடித்த "சித்தி" திரைப்படம். படத்தைப் பார்த்து முடித்தேன். ஏற்கனவே பல முறை பார்த்தது தான்.  நடிகவேள் அவர்களுக்காகவே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். தனது அனாயாசமாக நடிப்பால் ராதா அவர்கள் படம் முழுதும் மிரட்டியிருப்பார்.  

இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை மெலோட்ராமா என்பார்கள். புராண / சமூக கதைகளில் ஆரம்பித்த தமிழ் சினிமா மெலோட்ராமாக்களில் தொடர்ந்து இயக்குநர் வீ சேகர் வரை பயணித்து இன்று வேறு திசையில் செல்கிறது. குடும்ப படமென்றாலே தொலைக்காட்சி தொடர் போலிருக்கிறது என்ற இன்றைய ரசிகர்களின் எண்ணம். சமீபத்தில் வந்த 'அண்ணாத்தே' படம் கூட இந்த விமர்சனத்துக்குத் தப்பவில்லை. மெலோட்ராமா இல்லாமல் சினிமா இல்லை என்று இன்றைய ரசிகர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

காலஞ்சென்ற இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய அத்தனை படங்களும் மெலோட்ராமா வகையறா தான். இன்றும் விசு படங்களை சேனல் மாற்றாமல் பார்ப்பதுண்டு.

சரி நாம் விஷயத்துக்கு வருவோம் .....

எழுத்தாளர் வை மு. கோதைநாயகி எழுதிய 'தயாநிதி' நாடகத்தைத் தழுவி, பத்மினி மற்றும் ஜெமினி கணேசன் நடித்து,  இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'சித்தி' திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் மற்றும் உடுமலை நாராயண கவி எழுதியுள்ள பாடல்களை அத்தனையும் இனிமை. "சந்திப்போமா இன்று" எனக்குப் பிடித்த பாடல்.  இப்படம் இந்தியில் 'ஔரத்' (1967),[1] மலையாளத்தில் 'அச்சந்தே பர்யா' என்றும், தெலுங்கில் 'பின்னி' என்றும், கன்னடத்தில் 'சிக்கம்மா' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்கள் எனக்குப் பிடிக்கும். பெரும்பாலும் குடும்ப படங்களாகவே எடுத்துத் தள்ளியவர். இன்றும் இவருடைய படங்களை விரும்பி பார்ப்பேன். என்னுடைய All time Favorite: "குறத்தி மகன்". கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம். சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதை இப்படம் பெற்றது. 

கொசுறு: ஒரு திரைப்படம் சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். "குறத்தி மகன்" படத்தின் விளைவாகத் தமிழகத்தின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைக்காரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காகத் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972ல்) ட்ரஸ்ட் உறைவிட பள்ளி அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை என்ற சிறப்புச் சட்ட உத்தரவைத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறப்பித்தார். கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டிடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே. நரிக்குறவர்,காணிக்காரர்,குறும்பர் ஆகிய இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்கப் பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான். அதை மத்திய அரசும் சமீபத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.