'முள்ளும் மலரும்' (1978)
ரஜினிகாந்த், சரத்பாபு, ஜெயலட்சுமி, ஷோபா ஆகியோர் நடித்து, எழுத்தாளர் உமா சந்திரன் நாவலை தழுவி, இயக்குனர் மகேந்திரன் எழுதி இயக்கிய முதல் படம் 'முள்ளும் மலரும்', 1978 ஆம் ஆண்டு வெளியானது.
உங்களுக்குக் கால எந்திரம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? கமெண்டில் தெரிவிக்கவும்.
எனக்குக் கால எந்திரம் கிடைத்தால் 1978 ஆண்டுக்குப் பின்னோக்கி பயணித்து 'முள்ளும் மலரும்' படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் பார்க்கவேண்டும் என்று ஆசை.
நான் முன்பே சொன்னதுபோல நிறைய பரிட்சாத்த முயற்சிகளை இசையில் செய்துபார்க்க ஆசைப்பட்ட ராஜா அதற்கான களம் அமைந்த போது வெளிப்பட்ட இசை / பாடல் தான் இது.
'ட்ரைபல்' (Tribal) வகை இசையை முதல் முதலாக "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" பாடலில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் ராஜா. என்ன ஒரு காத்திரமான இசை. 42 வருடங்கள் ஆகியும் இன்னும் புதிது போலவே, சும்மா கிழி கிழித்துத் தொங்கவிட்டிருப்பார். அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று படம் பார்க்கும் ரசிகனுக்குத் தனது இசையால் உணர்த்தியிருப்பார் ராஜா.
இயக்குநர் என்ன நினைத்தாரோ, அதை அப்படியே இசையில் கொண்டுவந்திருப்பார் ராஜா. நடன இயக்குநரை மறக்கலாமா? இயக்குநர்+இசையமைப்பாளர் என்ன நினைத்தார்களோ அதை அப்படியே நடன இயக்குநர் ரஜினியை வைத்து Execute செய்திருப்பார். இயக்குநர் மகேந்திரன் படங்களுக்கு ஒளிப்பதிவாளர் அசோக்குமார். ஆனால் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு Camera கவிஞர் பாலுமகேந்திரா அவர்கள். இந்த பாடலை பாத்தீர்களானால் தெரியும், மிதமான லைட்டிங், டாப் ஆங்கிள் ஷாட் எனப் பாடலை கவிதையாய் படைத்திருப்பார்.
இவர்கள் ஐவரும் சேர்ந்து உருவாக்கிய மாயாஜாலம் தான் இந்த பாடல். இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80களின்பாடல்களில் இதுவும் ஒன்று.
பெண்கள் குலவைச் சத்தத்திடையே அந்த ஒரு நொடி நிசப்தம் பாடலுக்கு வலு சேர்க்கும். எனக்கெல்லாம் இந்த படத்தை (அகன்ற) திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என வருத்தப்படுகிறேன்.
'முள்ளும் மலரும்' படத்தைப் பார்க்கும்போது இன்னொரு விஷயம் எனக்குத் தோன்றுகிறது, ரஜினிகாந்த் தன்னை முழுதாக இயக்குநரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார் என்று தோன்றுகிறது. என்ன ஒரு Steller Performance. அதனால் என்னவோ, ரஜினிக்குப் பிடித்த இயக்குநராக மகேந்திரன் இருந்தார். இதை எந்த மேடையிலும் அவர் சொல்லத் தயங்கியதில்லை.
ரஜினிகாந்த் அவர்களால் திரும்ப இதுபோன்ற படங்களில் நடிக்கமுடியுமா?
- காளிகபாலி
நன்றி: https://www.youtube.com/
No comments:
Post a Comment