Wonderful Shopping@Amazon

Wednesday, 29 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-71


சரஸ்வதி சபதம்(1966)

புராணங்கள் சமூகத்தின் பொக்கிஷங்கள். கலாச்சார அடையாளம். அதைத் திரைப்பட வடிவில் காணும் பாக்கியம் பெற்றவர்கள் நாம். அதைக் கலை நயத்துடன் சிறப்பாக இயக்கி நமக்குத் தந்த இயக்குநர்களையும்  அதில் நடித்த / பணிபுரிந்த  கலைஞர்களைப் பற்றி என்னவென்று சொல்வது. இன்றும் காலத்தை வென்ற காவியங்களாக இத்திரைப்படங்கள் திகழ்கிறது. எல்லாம் ஒரு 'டீம் ஒர்க்' என்று கடந்து விட முடியாது. அதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கும் நேரமிது. இன்றைய தலைமுறைக்கும் அப்படைப்புகளைக் கொண்டுசெல்ல வேண்டும். கடந்த கால புராண படங்களின் ஒரு காட்சியைக் கூட இப்போது Recreate செய்ய முடியாது. அது ஒரு முறை மட்டுமே நிகழும் மாயாஜாலம்.

இயக்குநர் ஏ பி என் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் இணைந்து நிகழ்த்திய மற்றொரு மாயாஜாலம் 'சரஸ்வதி சபதம்'.

எங்கள் தாத்தாவுக்குப் பிடித்த படம்.  கடைசிக் காலத்தில் அவர் பார்க்க விரும்பிய படம். அவருக்காக நாங்களும் திரும்பத் திரும்ப வி சி ஆர் -இல் பார்த்தோம்.  படத்தில் வரும் அந்த முதல் காட்சியை நான் இன்று வரை நினைவுகூர்கிறேன், காரணம், அதில் உள்ள Life Lesson. ஒரு திரைப்படம் என்ன பெரிய வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம், அப்படி இல்லை, இந்த காட்சியை நீங்கள் பார்த்தீர்களானால் தெரியும். ''எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அந்த ஈஸ்வரன், என்னய மட்டும் எப்படி விட்டுவிடுவான்?" என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதை எனக்கு அழுத்தமாகப் புரியவைத்த காட்சி இது.

புராண படங்களுக்கு இசையமைப்பு, மற்றும் பாடல்கள் பெரும்பலம் இசையரசர் கே வி மகாதேவன் சிறப்பாக இசையமைத்திருப்பார். நாகேஷ், மனோரமா நகைச்சுவை காட்சி சிறப்பாக இருக்கும். இந்த படத்தையெல்லாம் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தோன்றுகிறது. இதோ அந்த காட்சி கண்டு ரசியுங்கள்.



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-70

திருவிளையாடல்(1965)
ங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் 'விநாயகர் சதுர்த்தி விழா' ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடுவர். விநாயகர் சதுர்த்தி தொடங்க நான்கு நாட்களுக்கு முன்னரே பந்தல், சீரியல் செட் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் பாட்டு போட்டு தெருவை அலறவிடுவார்கள்.  முதல் நாள் 'திருவிளையாடல்' பட 'ஒலிச்சித்திரம்' தவறாமல் இடம்பெறும். வீட்டிலிருந்தபடியே மக்கள் ஆர்வமாகக் கேட்பார்கள். படம் பார்த்தவர்கள் மனதில் காட்சிகளாய் விரியும்.

விழா கடைசி நாளில் வெண்திரை கட்டி படம் காட்டுவார்கள் அதில் 'திருவிளையாடல்', 'பெரிய இடத்துப் பெண்' மற்றும் 'எங்கள் வீடு பிள்ளை' படங்களைப் போடுவார்கள். இப்படி தான் 'திருவிளையாடல்' திரைப்படம் என் வாழ்க்கையில் அறிமுகமானது.  பிறகு சென்னை தொலைக்காட்சியிலும் ஒரு ஞாயிறன்று ஒளிபரப்பினார்கள்.  இ
ப் பொதுமுடக்கத்தின் போது கூட இப்படத்தை ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

இயக்குநர் திரு ஏ பி நாகராஜன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இணைந்து தமிழ் மக்களுக்கு வழங்கிய புராண படங்களில் 'திருவிளையாடல்' படத்துக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. 

'திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற தொடர்களில் உங்களுக்கு எது பிடிக்குமென்று கேட்டால், சொல்ல முடியாது, குழம்பித் தான் போவீர்கள் காரணம் எல்லா பாகமும் அட்டகாசமாக நன்றாக இருக்கும். இருந்தாலும் எனக்கு 'ஹேமநாத பாகவதர்' எபிசொட் பிடிக்கும் காரணம் நம்மைச் சுற்றியும் பல  'ஹேமநாத பாகவதர்கள்' இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் சாதாரண ஆட்களிடம் அடி வாங்குவதைப் பார்க்கமுடிகிறது.

ஆந்த்தாலஜி என்ற சொற்றொடர் இப்போது தமிழ் சினிமா அதிகம் உச்சரிக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு அது ஒன்றும் புதிய சங்கதி இல்லை. திரு இயக்குநர் ஏ பி நாகராஜன் இயக்கிய 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்', 'திருமால் பெருமை', 'திருவருட்செல்வர்' போன்ற புராண படங்கள் அனைத்தும் ஆந்தாலஜி வகையே. என்ன இப்போது பல இயக்குநர்கள் சேர்ந்து ஒவ்வொரு பாகத்தை இயக்குகிறார்கள், அப்போது ஒருவரே இயக்கினார், அவ்வளவு தான் வித்தியாசம்.

சமீபத்தில் சினிமா விமர்சகர் மற்றும் ஆர்வலர் திரு கீதப்ரியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் 'திருவிளையாடல்' பற்றி படித்ததில் பிடித்தது உங்களுடன்.....

'நான் பெற்ற செல்வம் (1956)' திரைப்படத்தின் கதை, வசனம்  ஏ.பி.நாகராஜன் அவர்கள், இயக்கம் K.சோமு, இது புராணப் படம் அல்ல, இப்படத்தில் 'திருவிளையாடல்' திரைப்படத்தின் தருமி காட்சிக்கு ஒரு ஒத்திகை பார்த்தார் கதாசிரியரும் இயக்குநரும், இப்படத்தில் வரும் மேடை நாடகக் காட்சியில் பாண்டிய சபைக் காட்சி வருகிறது, இப்படத்தில் தான் முதலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா? என் சிவனின் திருவிளையாடல் சித்து விளையாட்டைத் திரைப்படத்தில்  படமாக்கினார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். இதில் நக்கீரராகவும் ,சிவனாகவும் நடிகர் திலகமே நடித்தார், நடிகர் நாகேஷ் நடித்த தருமி கதாபாத்திரத்தில் நடித்தவர்  நடிகர் கே வி சீனிவாசன். தமிழ்ப் படங்களில் என் டி ராமாராவ் அவர்கள்  தோன்றுகையில் இவர்தான் குரல் கொடுத்தார். பாண்டிய மன்னன் கதாபாத்திரத்தில் நடித்தவர் கே.நடராஜன். கே.நடராஜ ஐயர் மற்றும் ”ஜெயக்கொடி’ நடராஜன் என்றும் இவரை அழைப்பதுண்டு. 'ஜெயக்கொடி' (1940) படத்தில் கதாநாயகனாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் "கர்னல் மாக்ஸ்வெல்" ஆக நடித்திருப்பவரும் இவரே. மருத்துவர், நீதிபதி, வழக்கறிஞர், காவல் துறை ஆய்வாளர், ஆசிரியர், தந்தை போன்ற கதாபாத்திரங்களில் தான் இவர் அதிகமாக நடித்துள்ளார்.

எனக்கென்னவோ பரஞ்சோதி முனிவர் இயற்றிய மீதி 'திருவிளையாடல்' கதையையும் சேர்த்து இரண்டாம் பாகம் எடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சரி 'நான் பெற்ற செல்வம்' படத்தில் இடம்பெற்ற தருமி எபிசோட்.




நன்றி: Youtube மற்றும் சினிமா விமர்சகர் மற்றும் ஆர்வலர் திரு கீதப்ரியன் அவர்கள்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி     

Wednesday, 8 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-69


'இதயம்' (1991)

'இதயம்' படத்தில் வரும் தாசேட்டன் பாடிய "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..." என்னுடைய இரவு நேரப் பாடல் தொகுப்பில் உள்ள பாடல். 'இதயம்' படம் வெளிவந்து 29 வருடங்கள் ஓடிவிட்டது. ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த ராஜாவின் பாடல்கள் இன்றும் மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டுபவை. பாடல்கள் மட்டுமே அதன் பின்னணி இசைத் தொகுப்பும் யுடியூப் தளத்தில் காணக் கேட்கக் கிடைக்கிறது கேட்டுப் பாருங்கள். மெய்மறந்து போவீர்கள்.

இயக்குநர் கதிரின் மற்றும் நடிகை ஹீராவின் முதல் படம். கடைசி வரை தன் காதலைச் சொல்லாமல் ரசிகர்களைச் சோதித்தார் நாயகன் முரளி. படத்தின் இரண்டாவது நாயகன் ராஜா சார். அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. சின்னி ஜெயந்த் மற்றும் ஜனகராஜின் நகைச்சுவை படத்தை அலுப்பில்லாமல் கொண்டு போகும்.

என்னுடைய பள்ளி இறுதி ஆண்டில் இதயம் படம் வெளியானது. வகுப்பு நண்பர்கள் படம் பார்த்து விட்டுச் சிலாகித்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் சென்று திரையரங்கில் படம் பார்த்தோம். சமீபத்தில் பள்ளி நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் இப்படத்தைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்தது. எல்லோரும் அவரவர் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம்.

சரி, நீங்களும் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..." காணொளி பாடலை கேளுங்கள்:





நன்றி: Youtube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     









ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-68


'நாடோடி தென்றல்'(1992)

ப்போதுமே பாடல் வரிகள் தான் முத்தி செல்லும், பின்பு தான் இசை வரும். இதிலும் ஒர் அற்புத வரி உண்டு "கண்ணிமைகளை வருத்தி.., கனவுகளைத் துரத்தி.." பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமது.

ராஜா சார் பாடலை துவக்கிவைக்க, பாடல் ஆரம்பத்தில் ஷெனாய் (ஷெனாய் இசை கருவியை தனது பாடல்களில் அதிகம் பயன்படுத்தியவர் ராஜா), அதைத் தொடர்ந்து 'சல', 'சல'-வென வயலின், பின்பு புல்லாங்குழல் இசைக்கருவிகள் நம்மை வரவேற்கும், மனோ பாட, பின்பு ஜானகி அம்மா உள்ளே வருவார். பாடல் சீரான வேகத்தில் பயணிக்கும்.

'நாடோடி தென்றல்' எங்கள் ஊர் திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்த படம். பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற ஏமாற்றமே மிஞ்சியது. ''யாரும் விளையாடும் தோட்டம்'', ''மணியே மணிக்குயிலே'', ''சந்தன மார்பிலே'' போன்ற பாடல்கள் அனைத்தும் அப்போது பிரபலமடைந்தது. ஆடியோ கேசட் கூட மஞ்சள் நிற தடிமனான காகிதத்தில் படப் பெயர் அச்சிட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. இந்தப் படத்தில் பாடகி மால்குடி சுபா பாடிய "All The Time" என்ற ஆங்கிலப் பாடலும் உண்டு.

இரவு கேட்கக்கூடிய ராஜாவின் பாடல் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெறும். அந்தப் பாடலை நீங்களும் கேளுங்களேன் :







நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     

 



Tuesday, 7 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-67

'டாம் அண்ட் ஜெர்ரி'

னித மூளையின் உச்சக்கட்ட கண்டுபிடிப்பு 'கார்ட்டூன்' என்பேன். உங்களை மகிழ்வி(க்கும்)த்த கார்ட்டூன் தொடர் அல்லது திரைப்படங்களைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

சிங்கம் தலையை நீட்டிக் கர்ஜித்துக்கொண்டு வெளிவர 'எம்ஜிஎம் கார்ட்டூன்' என்று தொடங்கும் 'டாம் அண்ட் ஜெர்ரி' எனக்குப் பிடித்த கார்ட்டூன் தொடர். கார்ட்டூன் நெட்ஒர்க் தொலைக்காட்சியில் பிரதானமாக ஒளிபரப்பாகும் 'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன் தொடர் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நானும் என் குழந்தைகளோடு பார்க்க ஆரம்பித்து இப்போது வரை தொடருகிறது. 'டாம் அண்ட் ஜெர்ரி' நிகழ்ச்சி, பார்க்க உட்கார்ந்தால் இருக்கின்ற வேலை எல்லாம் அப்படியே நின்று விடும். 'டாம் அண்ட் ஜெர்ரி' மூவியை விட குறுந்தொடர்கள் எனக்குப் பிடிக்கும்.

1940-ஆம் ஆண்டு வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பெரா, இவர்கள் இருவரும் சேர்ந்து 114   'டாம் அண்ட் ஜெர்ரி' குறும்படங்களை உருவாக்கினார்கள். பிறகு இவர்கள் வழி வந்தவர்கள் 'டாம்', 'ஜெர்ரி' என்ற இரண்டு கதாபாத்திரங்களைக் கொண்டு ஸ்பைக், ஸ்டைக், நிப்பல்ஸ், புட்ச், டூடலஸ் போன்ற புதிய கதாபாத்திரங்களைப் புகுத்தி ஏராளமான குறும்பட சித்திரங்களை உருவாக்கினார்கள்.  காலங்கள் மாறினாலும், பல கடும் விமர்சனங்களை சந்தித்தாலும்  பார்வையாளர்களை மகிழ்விக்கத் தவறியதில்லை.  

'டாம் அண்ட் ஜெர்ரி' தொடருக்கு முக்கிய பலமே ஸ்காட் ப்ராட்லீ-யின் இசை. வசனகங்லற்ற காட்சியை பாப், ஜாஸ், மற்றும் கிளாசிக் வகை இசையைக்கொண்டு சிறப்பாக நிரப்பியிருப்பார். 'டாம் அண்ட் ஜெர்ரி' வகை வகையாக அடித்துக்கொண்டாலும், ரத்தம் தெறிக்கும் விதமாக இருக்காது. கடைசியில் ஒன்று சேருவது போலத் தான் தொடர் முடியும்,

'டாம் அண்ட் ஜெர்ரி' தொடரில் எனக்குப் பிடித்த இன்னொரு கதாபாத்திரம் 'ஸ்பைக்' என்ற வலிமையான அப்பாவி நாய் கதாபாத்திரம். சமயத்தில் டாமிடம் அடிவாங்கவும் செய்யும்.

1949-லேயே மேற்கத்தியப் பார்வையாளர்களுக்குச் சுவர்க்கம், நரகம் என்ற விஷயத்தை சொன்ன  'டாம் கோயிங் டு ஹெவன்லி பஸ்'  என்ற தொடர் எனக்குப் பிடித்த டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களில் ஒன்று.

நாமும் சில சமயங்களில் டாமாகவும், ஜெர்ரியாகவும் இருந்திருக்கிறோம், அதனால் தான் என்னவோ பெரியவர்களும் அதை ரசிக்கிறார்கள்.

சரி வாழ்க்கையில் நீங்கள் யார் டாமா?, ஜெர்ரியா ? அல்லது ஸ்பைக்கா ?





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66


    சரோஜ் கான் (1948-2020)

குருஜி என்று போற்றப்படும் நடன இயக்குநர் காலஞ்சென்ற திருமதி சரோஜ் கான் ஹிந்தி திரைத்துறையில் நாற்பது வருடங்களுக்கு மேல் கோலோச்சியவர்.

வைஜயந்தி மாலா, ஹெலன், சர்மிளா தாகூர், மாலா சின்ஹா, வாஹிதா ரஹ்மான், ஜீனத் அமண், ரேகா, ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித், கரிஷ்மா / கரீனா கபூர் ஊர்மிளா, ஐஸ்வர்யா ராய், சோனாக்ஷி சின்ஹா வரை இவர் ஆட்டுவிக்காத திரை ஆளுமையே இல்லை எனலாம். இளம் தலைமுறை நடிகர்களுக்கும் இவர் நடனம் அமைத்துள்ளார்.

1987-ஆம் ஆண்டு வெளிவந்த 'மிஸ்டர் இந்தியா' படத்தில் இடம்பெற்று ஸ்ரீதேவி நடனமாடிய "ஹவா ஹவாயி...." பாடல் இவரைப் புகழ் உச்சியில் அமர்த்தியது.

'சால் பாஸ்', 'தேஜப்', 'பேட்டா', 'குரு', 'லகான்', 'ஹம் தில் சுகே சனம்'. 'கல்நாயக்', 'தேவதாஸ்', 'ஜப் வி மெட்' எனப் படப் பட்டியல் தொடர்கிறது.

சில பாடல்களான "டோலாரே, டோலாரே.. ", "சோலி கே", "ஏக் தொ தீன்", போன்ற பிரமாண்ட பாடல் காணொளிகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. என்ன ஒரு நடனம், எப்படி நடனம் அமைத்திருப்பார், எவ்வளவு நாள் ஆனதோ? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. Excellent Output. நிச்சயம், நடனம், நடனம் என முழு மூச்சாக வாழ்ந்திருப்பார் போலும்.

இவர் நடனத்தில் ஆடும் கதாநாயகிகள், முகத்தில், கண்களில் காட்டும் பாவங்கள் அபாரமாக இருக்கும். இது பாடலுக்குக் கூடுதல் சிறப்புச் சேர்க்கிறது.

தமிழில் இவர் சில படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில் 'தாய் வீடு' படத்தில் இடம்பெற்ற 'ஐயம் ரெடி ....ஐயம் ரெடி' என்ற பாஸ்ட் பீட் பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். படம் சொதப்பினாலும். இந்தப் பாடலை தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

சரி, 'தேவதாஸ்' படத்தில் இடம்பெற்ற "டோலாரே, டோலாரே..." என்ற பாடலை பார்க்கலாம் வாங்க :




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     



 





Monday, 6 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-65

'மிஸ்டர் இந்தியா' (1987)

'கனவுக்கன்னி 'ஸ்ரீதேவி ஹிந்தி திரையுலகம் சென்ற பிறகு, அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 1986-ஆம் ஆண்டு வெளிவந்த 'நான் அடிமை இல்லை' என்ற மிகச் சுமாரான படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.

ஆனால் 1987-ஆம் ஆண்டுக் கதாசிரியர்கள் சலீம்-ஜாவேத் கதை, திரைக்கதையில், இயக்குநர் சேகர் கபூர் இயக்கத்தில் ஸ்ரீதேவி, அனில்கபூர், அம்பரீஷ் பூரி நடித்து வெளிவந்த குழந்தைகள்பொழுபோக்கு சூப்பர் ஹீரோ படமான 'மிஸ்டர் இந்தியா' வசூலில் இந்தியாவையே மிரட்டியது.

தமிழ் ரசிகர்களுக்கும் 'மிஸ்டர் இந்தியா' படம் மூலம் ஸ்ரீதேவி தரிசனம் தந்தார். இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையமைத்த அத்தனை பாடல்களும் பிரபலமானது. குறிப்பாக மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான் நடனம் அமைத்து ஸ்ரீதேவி ஆடிய "ஹவா ஹவாயி" என்ற பாடல் இன்று வரை அதிகம் கேட்கப்படும் ஸ்ரீதேவி பாடல்களில் ஒன்று. பாடல் தொடக்கம் முதல் முடியும் வரை ஸ்ரீதேவியின் முகபாவங்கள், நடனத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனாசயமாக ஆடியிருப்பார்.

இப்படத்தில் ஸ்ரீதேவிக்குப் பிறகு அதிகம் பேசப்பட்டவர் நடிகர் அம்பரீஷ் பூரி அவர் ஏற்றிருந்த 'மோஹம்போ' என்ற மிரட்டலான வில்லன் வேடம்
இன்று வரை நினைவு கூறப்படுகிறது.

சென்னை தொலைக்காட்சியில் டெல்லி ஒளிபரப்பில் விசேஷ நாட்களில் 'மிஸ்டர் இந்தியா' படத்தைப் பல முறை பார்த்திருக்கிறேன். தமிழில் இயக்குநர் கே பாக்கியராஜ் இயக்கத்தில் 'என் ரத்தத்தின் ரத்தமே' என்ற பெயரில் வெளிவந்து சொதப்பியது. "ஹவா ஹவாயி" பாடல் காணொளி கீழே:








நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


 


Friday, 3 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64


'மிஸ்ஸியம்மா' (1955):
மிழில் எத்தனையோ நிலா பாடல்கள் இருந்தாலும் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன்-சாவித்திரி நடித்து, திரு எல் வி பிரசாத் இயக்கி 'மிஸ்ஸியம்மா' படத்தில் இடம்பெற்ற, திரு ராஜேஸ்வர ராவ் இசையில், அமரக்கவி திரு தஞ்சை ராமயதாஸ் பாடல் வரிகளை திரு ஏ எம் ராஜா, பி லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' தமிழின் முன்னோடி நிலா பாடல். இந்தப் பாட்டைப் பிடிக்காதவர்கள் யாரவது உண்டா?. திருமதி பி லீலா பாடிய "என்னை ஆளும் மேரி மாதா" என்ற இன்னொரு பாடல் காலை வேளையில் 'பக்தி பாடல்கள்' வரிசையில் சென்னை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். திரு ஏ எம் ராஜா, பி சுசீலா பாடிய "பிருந்தவனமும் நந்தகுமாரனும்"என்ற இன்னொரு இனிய பாடலும் உண்டு. தேனினும் இனிய அபூர்வ குரல் திரு ஏ எம் ராஜாவினுடையது.  தமிழ் சினிமாவின் முன்னோடி பாடகர்.

நிற்க. வங்காள எழுத்தாளர் திரு ரபீந்திரநாத் மைத்ர எழுதிய பெங்காலி சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதையைத் தழுவி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இனியும் வரும்.

பள்ளி படிக்கையில் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் படம் எனக்கு நிரம்பப் பிடிக்கும் காரணம் 'காதல் மன்னன்' ஜெமினி - சாவித்ரி மட்டுமல்ல, எஸ் வி ரங்காராவின் இயல்பான நடிப்பும் தான். படம் முழுதும் நாயகனின் நண்பனாக வரும் கே ஏ தங்கவேலுவின் நகைச்சுவை நம்மைச் சிரிக்கவைக்கும். அப்போதெல்லாம் 7.00 மணிக்கோ அல்லது 7.30 மணிக்கோ செய்தி இடைவேளை தவிர விளம்பர இடைவேளை போன்று எதுவும் இல்லை. அதனால் சென்னை தொலைக்காட்சியில் படம் பார்ப்பது அலுக்காத விஷயம்.  இந்த படமும் அதுபோல ஒரு ஞாயிற்று கிழமைகளில் பார்த்த ஞாபகம் உண்டு.

இதோ நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


Thursday, 2 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63


'புதுப் புது அர்த்தங்கள்' (1989)

பெரிய ஸ்டார் காஸ்ட் (நடிகர்கள்) இல்லாமல், கதையையே நம்பி படம் எடுக்கும் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர். அவருடைய பழைய படங்களைப் பார்த்தோமானால் தெரியும், கதை தான் பிரதானமாக விளங்கும் மற்றும் அவருடைய டச். 'தாமரை நெஞ்சம்' என்ற அவருடைய பழைய படத்தில் 'திக்', 'திக்' கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார், ஒரு காதல கதையில் 'திக்', 'திக்' கிளைமாக்ஸ் என்ற புதுமையைப் புகுத்தியவர் கே பாலசந்தர். அதே போல 'நூற்றுக்கு நூறு', 'புன்னகை',' இருகோடுகள்','பாமா விஜயம்' மற்றும் 'அனுபவி ராஜா அனுபவி', 'எதிரொலி', (கே பி இயக்கத்தில் சிவாஜி நடித்தே ஒரே படம்) 'தண்ணீர் தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை' , 'வறுமையின் நிறம் சிகப்பு' போன்ற படங்களை இப்போதும் நீங்கள் பார்க்கலாம். காட்சிக்குக் காட்சி சுவாரஸ்யம் அதான் இயக்குநர் சிகரம் கே பி.

1989-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று பெரிய நடிகர் படத்தோடு 'புது புது அர்த்தங்கள்', நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரகுமான் கதாநாயகனாக மற்றும் கீதா, சித்தாரா, விவேக் நடித்து வெளியானது. அப்படியே சத்தமில்லாமல் ஓடி வெள்ளிவிழா கண்டது. இதில் பூர்ணம் விஸ்வநாதன்-சௌகார் ஜானகி வரும் அந்தக் குட்டி எபிசோட் எனக்குப் பிடிக்கும்.இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் - இளையராஜா இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். பின்னணி இசை கூட அவர் இசைக்கவில்லை என்று கேள்வி.

எல்லாப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் அமைந்தது. குறிப்பாகக் 'கல்யாண மாலை' இன்று வரை எல்லா இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     





Wednesday, 1 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62


அண்ணா - ‘மாபெரும் தமிழ்க் கனவு


ந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய பன்முக ஆற்றல் கொண்ட தலைவர்களில் ஒருவர் பேரறிஞர் அண்ணா. இலக்கியம், நாடகம், திரைப்படம், உரைநடை எழுத்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அவர் கால்பதித்த தடமெல்லாம் வெற்றியே. இவர் போல் புதிய சிந்தனையுடைய தலைவர் இனி ஒருவர் பிறக்கப்போவதும்மில்லை.

ஏற்கனவே திரு என் சொக்கன் எழுதிய 'அண்ணாந்து பார்' என்ற புத்தகத்தை படித்துள்ளேன். சமீபத்தில் தி ஹிந்து தமிழ் திசை பதிப்பக வெளியீடான அண்ணா - 'மாபெரும் தமிழ் கனவு' என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.

நிலச்சுவான்தார்கள் மற்றும் மேட்டுக்குடி மக்களுக்குத் தான் அரசியல் என்றிருந்த நிலையை மா(ற்)றி சாமானியர்களுக்கும் அரசியலில் இடமுண்டு என்று வழிகாட்டியவர் அண்ணா. அவர் காலத்தில் நிறையப் படிப்பகம் உருவானது. மிதிவண்டி பழுது நீக்கும் நிலையம், தேநீர்க் கடை என அங்கெல்லாம் திராவிடச் சிற்றிதழ்கள் வாசிக்கக் கிடைத்தது. திராவிடக் கொள்கைகளை இளைஞர்கள் படித்து, தெளிந்து, தெரிந்துகொள்ள ஏதுவாகவிருந்தது.

மக்களின் பசிப்பிணியைப் போக்கிய வள்ளலார் அடியொற்றி ''ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்'' என்ற அவருடைய அறிவிப்பு, அவர் வழி வந்த இன்றைய அரசுகளும் இந்தக் கொரோனா நோய்த் தொற்றிலும் விலையில்லா அரிசியாகத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அண்ணாவின் மக்கள் மன்ற / நாடாளுமன்ற / சட்டமன்ற உரைகள், கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், நாடகம், சிறுகதைகள், பேட்டிகள் என இன்றைய தலைமுறையினர் படித்து, தெரிந்து, தெளிந்து,பாதுகாக்க வேண்டிய அறியப் பொக்கிஷம் இப்புத்தகம்.

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

திரு சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடிய பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கையை பாடலை கேட்டுமகிழுங்கள்:



 


நன்றி: The Hindu Tamil & Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி