Wonderful Shopping@Amazon

Wednesday 4 March 2020

எள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்

எள்ளு அடை

தட்டை, ஓட்டவடை, ராகி அடை, முருங்கை கீரை அடை, என எத்தனையோ அடை வகைகளை நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். மொறுமொறு எள் அடை சாப்பிட்டிருக்கிறீர்களா?

வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க வளாகம் வெளியே உள்ள தேநீர்க் கடையில் விற்கப்படும் பெரிய அளவு வெங்காய சமோசா (இப்போது கோஸ் stuffing) பிரபலம், ஒரு சமோசா ஐந்து ரூபாயிலிருந்து ஏழு ரூபாய்-ஆகி, பின்பு இப்போது  பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் எனக்கு அங்கு விற்கப்படும் எள் அடை நிரம்பப் பிடிக்கும். ஒரு எள் அடை ரூபாய் 10/- நல்ல மொறு மொறுவென்று, ஒரு வடிவமே இல்லாமல், வாயில் வைத்து ஒரு கடி கடித்தால் அளவான இனிப்பு, காரம் நம் நாக்கை பதம் பார்க்கும். இன்னொரு எள் அடை வாங்கத் தோன்றும். இப்படியே.. மூன்று எள் அடை நமக்கே தெரியாமல் சாப்பிட்டிருப்போம், ஒரு டீயை உள்ளே விட்டு, எள் அடையை வீட்டுக்கு பார்சல் வாங்கியவுடன், அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.

ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில்

ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில்
இக்கோயிலை எனக்கு ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார். சென்னையில் எத்தனையோ விநாயகர் கோயில்கள் இருக்கையில், வில்லிவாக்கம் அருகே உள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோயில் சாந்நித்யம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாதம் தோறும் வரும் தேய்பிறை சங்கட சதுர்த்தி அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  சென்னையின் பல பாகங்களிருந்தும் மக்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சிறப்பு என்னவென்றால் நமது கோரிக்கையை வைத்து, கோவிலில் விற்கப்படும் மட்டை தேங்காயைக் கட்ட வேண்டும், ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று நம்மிடம் உள்ள டோக்கனை காண்பித்து, கட்டிய தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்யவேண்டும்.  பின்பு மீண்டும் புதிதாக மட்டை தேங்காய் வாங்கி கட்ட வேண்டும், நமது கோரிக்கை நிறைவேறும் வரை. கோயில் முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டை தேங்காய் கட்டிவைத்திருக்கிறார்கள்.

நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குச் சென்று, வரும் போது வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்க வளாக வெளியில் உள்ள தேநீர் கடையில் விற்கும் எள் அடையைச் சுவைத்துவிட்டு வாருங்கள்.


நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     








1 comment:

  1. Yes The tea shop opens @ 3:30 with hot Medhu and Masal vadai.
    Hot Paradise of Night shift employees

    ReplyDelete