Wonderful Shopping@Amazon

Saturday 21 December 2019

ஒரு கதை சொல்கிறேன் -1

இல்லை.....  இல்லை......

நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் ....நண்பர் ஒருவர் சொன்ன நிஜக் கதையை அப்படியே என்னுடைய பாணியில்.  

நண்பரின் உறவினர் பலசரக்கு கடை வியாபாரி. சின்ன கடைதான். அவரது கடையில் அநேகம் எல்லா பொருட்களும் கிடைக்கும். அதனால் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம் கூட்டம் அள்ளும். அந்த கடைக்குப் பழைய வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் உண்டு. 

எல்லோரிடமும் இருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இவருக்கும் (வியாபாரி) இருந்தது, வேறு ஒன்றுமில்லை.. சோம்பேறித்தனம், அதனால் விளைந்த "இல்லை" என்ற  வார்த்தை பிரயோகம். வழக்கமான வாடிக்கையாளர் எதாவது பொருள் வேண்டி கடையில் கேட்டால்....இவரிடமிருந்து வரும் வார்த்தை "இல்லை... அடுத்தாப்ல நாலு கட தள்ளி இருக்கிற கடைல கேளுங்க..."  (அல்லது) "டர்னிங்ல ஒரு கட இருக்கு...அங்க கேளுங்க.."

இதில் வேடிக்கை என்னவென்றால், வாடிக்கையாளர் கேட்கும் பொருள்.. கடையில் இருக்கும் அல்லது பாரீஸிலிருந்து அந்த பொருள் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும். அதை எடுத்த தர/ வாங்கி வரச் சோம்பேறித்தனம். வாடிக்கையாளர் கொடுக்கும் பட்டியலில் அந்த பொருள் இருந்தால் தான் தேடி எடுத்து கொடுப்பாராம். தனியாகக் கேட்டால் மேலே சொன்ன பதில் தான் வரும்.  

என்னுடைய நண்பர் விடுமுறை நாட்களில் அவருக்கு ஒத்தாசையாக இருக்கக் கடையில் வேலை செய்வதுண்டு. அவரை மீறி அந்த பொருளை எடுத்த தரப் பயம், சமயங்களில் கோபப்படுவார். நமக்கெதற்கு வம்பென்று சும்மா இருந்து விடுவார். அப்படியே, நண்பர், கடைக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார்.

வருடங்கள் ஓடியது, வேலை நிமித்தமாக நமது நண்பர், உறவினர் கடை வழியே செல்லுகையில், அந்த இடமே முற்றிலும் மாறியிருந்தது. அவரது உறவினர் கடை அந்த இடத்தில் இல்லை. சரி கடையை விரிவுபடுத்தியிருப்பார் போல என்று நினைத்தார்.

சில மாதங்கள் கழித்து, குடும்ப சுப நிகழ்வில் அந்த வியாபார உறவினர் குடும்பத்தைச் சேர்ந்தவரைச் சந்தித்துக் கேட்டறிந்தார். அதாவது விஷயம் இதுதான்: முன்பு கடை இருந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட இடமாகும்.  புதிதாகப்  பதவியேற்ற அதிகாரியின் உத்தரவின் பேரில் சாலை விரிவுபடுத்தவேண்டும் என்ற காரணத்துக்காகக் கடைகள் இடிக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் பொருட்கள் வீணானது, கொஞ்ச நாள் தள்ளுவண்டியில் கடை நடத்தவேண்டிய சூழல் வந்தது. வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்தது. இதற்கிடையே, கவலையால் உடல் நலம் குன்றியது.  பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதே பகுதியில் ஒரு சிறிய கடையை  வாடகை எடுத்து இப்போது வியாபாரம் செய்கிறார்.

கடையில் பொருட்கள் இருந்தும் "இல்லை" என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் ஒரு நாள் கடையே இல்லாமல் போனது.

"இல்லை", "இல்லை", "இல்லை" என்று சொன்னால் ஒரு நாள் இல்லாமலே போய்விடும்/போய்விடுவோம். "முடியாது", "முடியாது" "முடியாது" என்று சொன்னால் ஒரு நாள் முடியாமலே போய்விடுவோம்.

எதிர்மறை சொற்களையே பயன்படுத்தக்கூடாதா என்றால்...எதிர்மறைச் சொற்களை எங்கு, எதற்கு சொல்லவேண்டுமோ அங்குச் சொல்லவேண்டும், "இல்லை", "முடியாது" என்ற வார்த்தைகளை எங்குப் பயன்படுத்தவேண்டுமோ அங்குப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து நாளுக்கு 108 முறை அதையே சொல்லிக்கொண்டிருந்தால், அதனுடைய வேலையைக் காட்டத் தான் செய்யும். அதைத் தான் நமது பெரியவர்கள் வார்த்தை "அளந்து" பேசவேண்டும் என்று சொன்னார்கள்.

எதிர்மறைச் சொற்கள் நமது வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய உதாரணம்.


பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 

No comments:

Post a Comment