Wonderful Shopping@Amazon

Tuesday, 3 December 2019

தண்ணீர் தண்ணீர் - 1

ண்ணீர் என்றதும் நினைவுக்கு வருவது நம் வீட்டுக் கிணறும், கோயில் திருக்குளங்கள் தான். திருக்குளங்கள் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று.

ஊரில் உள்ள கிணறுகளெல்லாம் தூர்ந்து கிடக்க, நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதே தெய்வ அருளால் தான் என்று நினைக்கிறேன். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்குள்ள புஷ்கரணி தீர்த்தத்தைக் கொணர்ந்து கிணற்றில் விடுவது வழக்கம்.

பள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் மைதானமே கதியென்றிருப்போம், காயும் வெய்யில் எல்லாம் எங்கள் மீது தான். விளையாட்டு இடைவேளையில் அல்லது தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் தெரு ஓரத்தில் இருக்கும் இந்திய மார்க் கை பம்புத் தண்ணீர் தான் தாகம் தீர்க்கும். தண்ணீர் சில்லென்று இருக்கும். அடிக்க அடிக்கத் தண்ணீர் கொட்டி தீர்க்கும். அந்தத் தண்ணீர் உடம்புக்கு எந்தக் கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.

India Mark Hand Pump
இந்திய அரசு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு இணைந்து 1970களில் கிராமப்புறங்களில் நிறுவிய இந்திய மார்க் கை பம்பு பல கிராமங்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வந்த வரப்பிரசாதி. எந்த ஊர் போனாலும் சரி அங்கே உள்ள இந்தியா மார்க் கை பம்ப் நம் தாகம் தீர்க்கும்.

நாங்கள் வசித்த தெருவில் இந்தியா மார்க் கை பம்ப் இருந்தது. எப்போதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். நாளெல்லாம் "டம்","டம்" என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்றும் முற்றிலும் மறைந்துவிடவில்லை, சில இடங்களில் காணலாம்.

நாங்கள் ஒட்டு வீட்டில் குடியிருந்த போது மழை நீரை அண்டா குண்டா, பக்கெட், அன்னக்கூடை என எல்லாப் பாத்திரங்களையும் வைத்துவிடுவோம்.

இரவெல்லாம் இடி, மின்னல், மழை பெய்யும் சத்தம் கச்சேரி போல இருக்கும். பொழுது விடிந்ததும் பாத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். குளியல், பாத்திரங்கள் விளக்க,.....தண்ணீரைச் சேமித்துப் பல நாட்கள் உபயோகப்படுத்துவோம்.

வருடம் ஞாபகம் இல்லை ஒரு முறை பெரியபாளைய ஆற்றில் தண்ணீர் தரைப்பாலம் மேல் வழிந்தோடிப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று வரை அப்படி ஒரு காட்சியை நான் பார்க்கவில்லை.

அவ்வளவு ஏன் மார்க்கெட்டிலிருந்து பார்த்தால் கடல் போலக் காட்சியளித்த ஆவடி ஏரி. இப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக மாறி இருக்கிறது. ஏரியின் பரப்பளவு சுருங்கி கழிவுநீர் குட்டையாகிவிட்டது.

நண்பரிடம் பேசும் போது சொன்னார் :

"தக்கோலம் - காஞ்சிபுரம் போகும் வழியில் கல்லாறு என்ற ஆறு குறுக்கிடும். எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். எங்கள் பகுதி மக்களுக்குப் பல வருடங்கள் தாகம் தீர்த்தது கல்லாறு தண்ணீர். பள்ளி விடுமுறை நாட்களில் குளித்ததுண்டு. இப்போது அறிவிப்புப் பலகை மட்டுமே உள்ளது, வறண்டு போய்க் காட்சியளிக்கிறது கல்லாறு நதி."

சென்னையிலிருந்து இரயிலில் திருச்சி அல்லது திருப்பதி போகும் வழியில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும் போது தண்ணீர் இல்லாமல் பிரமாண்டமாக, தூர் வாரப்படாமல் காட்சியளிக்கும் ஆறுகளின் தடம் மட்டுமே (மிஞ்சியிருக்கிறது) பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

"காவேரி நதி கரை புரண்டோடுவதைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிறது" - என்று திருச்சியைச் சேர்ந்த நண்பர் சொன்னது. இன்றைக்கு எல்லா ஆறுகளின் நிலையும் இது தான். சமீபத்தில் பெய்த மழையில் ஆற்றில் தண்ணீர் நிரம்ப ஓடுவதைப் பார்க்கும்போது சற்றே நம்பிக்கையளிக்கிறது.

RO மற்றும் ரசாயன குடிநீர் குடிநீரின் (பித்தப்பையில் கல் போன்ற) பாதிப்புகளைச் சமீபகாலமாய்ச் சந்தித்து வருகிறோம்.

எங்கள் தெருவுக்கு நாங்கள் தனிக்குடித்தனம் வந்தது முதல் டிராக்டர் வண்டி தண்ணீர் சமையலுக்கு, குடிக்கக் காய்ச்சி உபயோகப்படுத்தி வருகிறோம். தொடக்கத்தில் ஒரு குடம் மூன்று ரூபாய், இப்போது ரூபாய் ஒன்பது.

கடந்த ஜனவரி மாதம் திருவையாறு சென்றிருந்த போது காவேரியில் குளித்தது மறக்க முடியாத அனுபவம்.

கூவம் கிராமத்தில் தோன்றிய கூவ ஆற்றில் குளித்தவர்கள் உண்டு. இன்றைய கூவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

நதிக்கரையோரம் தோன்றிய நாகரிகம் என்று பீற்றிக் கொள்கிறோம். ஆனால் நதிகளை நாம் பாதுகாத்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். அதன் கரைகளைக் கூட நம்மால் வலுப்படுத்த முடியவில்லை. நம்முடைய தாதாக்கள் குளித்த நதியில், இப்போது நாம் குளிக்க முடியாது. ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும், வற்றிப் போயிருக்கும் அல்லது அசுத்தமாயிருக்கும்.

கல்லணை

தண்ணீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் வகுத்த திட்டங்களால் தான் தமிழ்நாட்டில் கொஞ்சமேனும் ஆற்றில் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. நீங்கள் கரிகாலன் சோழனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கல்லணைக்கு விஜயம் செய்ததுண்டா, வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள். அது போல ஒரு அணையை இனி யாராலும் கட்ட முடியாது. கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நாளா பக்கமும் பாய்ந்து தஞ்சை டெல்டா விவசாய நிலங்களை நனைத்து, பின் பல மாவட்ட மக்கள் தாகம் தீர்த்துக் கடலில் கலக்கிறது.

நதி நீர் இணைப்பு, நதி நீர் இணைப்பு என்று சில ஆண்டுகளாகவே பேசி வருகிறோம். அறிவியல் அறிஞர்கள் கூற்றுப் படி நதியை அதன் போக்கில் விட்டு விடுவது தான் நலம் பயக்கும். அதிலிருந்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் தடுப்பணை கட்டி தேக்கி வைத்து எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அதன் திசையை மாற்றுவதால், ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் அபாயங்களை மனிதன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.



இன்னும் நிறைய பேசுவோம் அடுத்த பகுதியில்.....!




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     

2 comments: