Wonderful Shopping@Amazon

Monday, 29 October 2018

பாரிஸ், பாரிஸ்

பாரிஸ் என்றதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தான் உங்களுக்கு ஞாபகம் வரும்.  நான் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் பற்றி பேசுகிறேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் பாரிஸ் கார்னர்.

பாரிஸ் கார்னர், சௌகார்பேட், மின்ட் தெரு, உயர்நீதிமன்றம், பிராட்வே, இரண்டாவது சந்து கடற்கரை  சாலை, பூக்கடை, யானை கவுனி, ஜார்ஜ் டவுன், வால்டாக்ஸ் சாலை, மற்றும் பல நூற்றுக்கணக்கான தெருவை உள்ளடக்கியது தான் பாரிஸ். அதன் மவுசு இன்றும் குறையவில்லை.

மாமாவின் கைபிடித்து சிறுவயதில் பாரிஸ் / கொத்தவால்சாவடி சேரும் சகதியும் நிறைந்த தெருக்களில் நடந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது,  மாமா தன்னுடைய நட்டு மருந்து கடைக்கு சரக்கு வாங்க போகும்பொழுது என்னையும் அழைத்து செல்வார்.

காலையில் கடைக்கு தேவையான சரக்கை கொள்முதல் செய்துவிட்டு வந்தால்.  அன்று இரவு மாட்டு வண்டியில் வந்து சேரும்.  இப்பொது லாரியில் வந்து இறங்குகிறது.
துணி வகைகள், பூஜை சாமான்கள், பறவைகள் - அழகு மீன்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூக்கள், நாட்டு மருந்து, வாசனை பொருட்கள், இரசாயன பொருட்கள், காகிதம் முதலிய எழுது பொருள்கள், லாகிரி வஸ்துக்கள், மோட்டார் பம்ப் செட், மின் சாதன உபகரணங்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், என ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு தெரு.  மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் என தெரு முழுதும் வியாபாரிகள் - வாடிக்கையாளர் நிரம்பி வழியும்.

என்ன வேண்டும் உங்களுக்கு.. எல்லாம் கிடைக்கும் ஊசி முதல் எந்திரம் வரை
அனுபமுள்ள ஆட்களோடு போனால் குறைந்த / நியாமான விலையில் வீட்டுக்கு தேவையான தரமான பொருட்கள் வாங்கி வரலாம்.

சென்னையை சுற்றி உள்ள எல்லையோர ஆந்திரா நகரங்களுக்கு பாரிசிலுருந்து தான் பொருட்கள் செல்கிறது.

தி நகர், புரசைவாக்கம் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளுக்கு வியாபாரிகள் பாரிசிலுருந்து தான்  கொள்முதல் செய்கிறார்கள்.

குறுகலான சந்து / தெரு / குறுகலான சாலையில் ரிக்க்ஷா, ஆட்டோ, மனிதர்கள் நீ,  நான்  என்று முந்துவார்கள், அவர்கள் மேல் மோதிவிடாமல் கவனமாக நடக்க வேண்டும்,

இரண்டு மாதத்திற்கொருமுறை பாரிஸ் கந்தசாமி கோயில் தெருவில் உள்ள சம்பத்து செட்டி கடைக்கு செல்வது வழக்கம். குளியல் சீக்காய் அரைப்பதற்கு தேவையான மூல பொருட்கள், நொய் அரிசி, சிகப்பரிசி, மூங்கில் அரிசி, சத்து மாவு அரைப்பதற்கு தேவையான மூல பொருட்கள், பனை வெள்ளம், பனஞ்சர்க்கரை, பூஜை பொருட்கள், சாம்பிராணி மற்றும் பல பொருட்கள். (இதையெல்லாம் அதிக விலை  கொடுத்து நம் அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டியிருக்கும்). அப்படியே கந்தசாமி கோவில், பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் தரிசனம் செய்து விட்டு  வீடு வந்து சேர்வதுண்டு.

நீங்கள் பாரிஸ் போனால் கீழ்கண்ட கடைகளில் சாப்பிடலாம்.  சில சுற்றுலா அமைப்புகள் Food Walk என்ற பெயரில் இங்கெல்லாம் கூட்டி போக சிறிய தொகையை வசூலிக்கிறார்கள்.  உணவுக்கு நீங்கள் தான் செலவழிக்க வேண்டும்!  நீங்களே கூட உணவகத்தை தேடி கண்டுபிடித்து உண்டு மகிழலாம்.
  • காக்கடா ராம்பிரசாத் வட இந்திய இனிப்பாகம் மற்றும் நொறுக்குத்தீனியகம்.
  • சீனா பாய் டிபன் கடை நெய் மினி பொடி இட்லி, மினி பொடி தோசை மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.
  • இரண்டாவது கடற்கரை சாலை தெருவில் பர்மா உணவு சாப்பிடலாம்.
  • பழமையான 777 உணவகம்.
  • ஸ்ரீராமகிருஷ்ணா இனிப்பகம் மற்றும் உணவகம்.
  • கமல் நொறுக்குத்தீனி கடை.
  • சோட்டு மோட்டு ஜெயின் நொறுக்குத்தீனி கடை.
  • கிங்’ஸ் வடாபாவ் கடை.
  • அஜ்நாபி மிட்டாய் கடை.
  • மாயா நொறுக்குத்தீனி கடை.
  •  இன்னும்  நிறைய உண்டு.
பாரிசில் கீழ்கண்ட பழமையான கோயில்கள் பல உண்டு அதில் சில....  நேரமிருந்தால் விஜயம் செய்யலாம்.
  • ஸ்ரீ காளிகாம்பாள் கோயில்.
  • ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில்.
  • ஸ்ரீ கச்சாலீஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ கந்தசாமி கோயில்.
  • ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்.
உங்களக்கு சோர்வாக இருக்கிறதா...பாரிசில் உள்ள தெருக்களில் சிறு நடை பயிலுங்கள். ஆயிரக்கணக்கான தொழில்கள், வீடுகளற்ற ஆயிரக்கணக்கான மக்கள், பாரிஸை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், சிறு / நடைபாதை வியாபாரிகள் என எல்லோரும் உங்கள் கண்முன் வந்து போவார்கள். அவர்களை பார்க்கும் போது உங்கள் சோர்வு நீங்கி புதிய உற்சாகம் பிறக்கும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Tuesday, 23 October 2018

ஒரே நாளில் மூன்று நரசிம்மர் கோயில்கள்

மூன்று வருடங்களாக போக வேண்டும், போக வேண்டும் நினைப்பதுண்டு. ஆனால் சில சூழ்நிலைகளால் போகமுடியவில்லை.  சரி இந்த முறை தனியாக போக முடிவு செய்தபோது. மின்சாரமும் (சம்சாரம்) பிள்ளைகளும் வர விருப்பம் தெரிவிக்க... போக முடிவானது.

காலை 6.30  மணிக்கு,  சென்னை எழுப்பூரிலிருந்து புறப்படும் பாண்டிச்சேரி பாசேன்ஜ்ர் பயணம் செய்து விழுப்புரம் இறங்கி அங்கிருந்து மூன்று கோயில்களையும் தரிசிக்க எண்ணியிருந்தேன்.

அதற்குள்ளாக மேலும் இரண்டு குடும்பங்களும் எங்களுடன் இணைய....சரி தனியாக ஒரு டெம்போ ட்ராவலர் வேன் முன்பதிவு செய்து. சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு வீட்டிலுருந்து புறப்பட்டோம்.

காலை சிற்றுந்துண்டிக்கு இட்லி, சாம்பார், கார சட்னி, மின்சாரம் தயார் செய்து கொண்டுவந்தாள் மற்றும் எங்களுடன் பயணிக்கும் வாண்டுகளுக்கு நொறுக்கு தீனி.

பெருங்களத்தூரில் காப்பி பிரேக் மற்றும் மாமண்டூரில் டிபன் பிரேக்.  விழுப்புரம் தேசிய நெடுஞசாலையிலுருந்து பிரிந்து பரிக்கல் இருப்பு பாதையை கடந்து கோயிலை சரியாக 10.15 மணிக்கு அடைந்தோம். கோயிலில் மிதமான கூட்டம் ஆண்கள் சட்டை கழட்டிவிட்டு தான் சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.  வரிசையில் நின்று சுவாமி சுவாமி தரிசனம் செய்து விட்டு 11.00 மணிக்கு பரிகளிலுருந்து புறப்பட்டோம்.

விழுப்புரம் தேசிய நெடுஞசாலையிலுருந்து பண்ருட்டி நகரம் வழியாக பல கிராமங்களை கடந்து  பூவரசன்குப்பத்தை சரியாக  12.30 ,மணிக்கு அடைந்தோம்.  அதற்குள் கோயில் நடை அடைக்கப்பட்டது.  அங்கிருந்து அருகே உள்ள சிறுவதந்தாடு கிராமத்தில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் மதிய உணவை முடித்தோம்.  பட்டு வஸ்திரங்களுக்கு பெயர் பெற்ற இடம் சிறுவதந்தாடு. மறுபடியும் கோயிலுக்கு வந்து ஸ்வாதி மண்டபத்தில் இளைப்பாறினோம்.

சரியாக மாலை 4.15 மணிக்கு கோயில் திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தோம்.  அங்கிருந்து சிங்கிரிக்குடியை நோக்கி புறப்பட்டோம்.  மாலை 6.00 மணிக்கு கோயிலை அடைந்து சுவாமி தரிசனம் செய்தோம்.

அடுத்து ஆதி திருவரங்கம் செல்வதாய் திட்டம். ஆனால் அங்கேயே 7.00 மணி ஆகிவிட்டது.  மேலும், சென்னை சென்று சேர தாமதமாகும் என்பதால் திட்டம் ரத்தானது.

அங்கிருந்து புறப்பட்டு வந்து திண்டிவனத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேர  இரவு 12.00  மணி ஆகியிருந்தது.

வரைபடம் ஒரே நேர்கோட்டில் மூன்று நரசிம்மர் கோயில்கள் இருப்பதாக காட்டினாலும்.  மூன்றும் வெவேறு மாவட்டங்களில் இருக்கிறது.  போகும் பாதையும் நீண்ட தூரமாக இருக்கிறது. பூவரசன்குப்பத்தை அடைய பண்ருட்டி நகரை கடந்து தான் போக வேண்டும்.  சிங்கிரிக்குடியை அடைய புதுச்சேரி - வில்லியனுர் வழியாக செல்லவேண்டியிருந்தது.

விழுப்புரம் to பரிக்கல் 25 கி மீ
பரிக்கல் to பூவரசன்குப்பம் : 36  கி மீ
பூவரசன்குப்பம் to சிங்கிரிக்குடி : 26 கி மீ
சிங்கிரிக்குடி to சென்னை : 177 கி மீ

பரிக்கல் மற்றும் பூவரசன்குப்பத்தில் நரசிம்மர் இலட்சிமியுடன் இருக்க, சிங்கிரிக்குடியில் நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

ஒரு நபருக்கு ரூபாய் 700/- கொண்டு போய் - கொண்டுவந்து விட ஓட்டுநர் படிப் பணம் மற்றும் உணவு தனி.  ஓட்டுநர் புதிதென்பதால் கூகிள் வரைபடம் கைகொடுத்தது.

நேராக விழுப்புரம் சென்று அங்கிருந்து பரிக்கல் பஸ்ஸில் சென்று, பிறகு பரிக்களிலுருந்து இன்னொரு பேருந்து பிடித்து பூவரசன்குப்பம் சென்று அங்கிருந்து சிங்கிரிக்குடிக்கு பேருந்து ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் அது சாத்தியமே இல்லை. பேருந்து வசதி அரிது. மூன்று கோயில்களும் தொலை கிராமங்களில் அமைந்துள்ளது. தனி வாகனம் தான் சிறந்தது. 

எதிரிகள் தொல்லை நீங்க, கடன் தொல்லை தீர, மன அமைதி பெற, மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாக மூன்று நரசிம்மர் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் நல்லது.

எதிரியும் நல்லாயிருக்கட்டும், அவனை எதிர்கொள்ள மனோதைரியத்தை மட்டும் கொடுப்பா ஜெய் நரசிம்மா !!!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday, 19 October 2018

பி வி ஆர் ஐகான் சினிமாஸ்

பத்து திரைகள் கொண்ட திரைப்பூங்காவை பி வி ஆர் குழுமம் சென்னை அண்ணா நகர் வி ஆர் மாலில் திறந்துள்ளதுசரி அலுவலகம்  முடிந்து ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாமே வி ஆர் மாலுக்கு போனேன்.

சமீபகாலமாக திரை அனுபவம் முற்றிலும் மாறியுள்ளதுகுறிப்பிட்ட சில திரைப்படங்களை திரையங்குகளில் பார்ப்பதே சிறந்தது. அப்போதுதான் அதன் முழுமையான வீச்சை அனுபவிக்க முடியும்.

10 -20 வருடங்களுக்கு முன் திரையரங்கம் என்றாலே ஊருக்கு மத்தியிலோ அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ இருக்கும்நீளமான கட்டை இருக்கை - ரெண்டாவது வகுப்பு, முதல் வகுப்பு நல்ல இருக்கை, மின் விசிறி, திரை மெல்ல மேலே எழும்பும், படம் முடிந்ததும் கிழே இறங்கும்ஆறிப்போன சமோசா, சூடான முட்டை பஜ்ஜி, காப்பி, பாப்கார்ன், மோசமான கழிவறைகள், ப்ரொஜெக்ட்டர் ஓடும் சத்தம் தெளிவாக  கேட்கும், ஒளி அமைப்பு பற்றி சொல்லவே வேண்டாம்அப்படியும் நாம் எண்ணற்ற திரைப்படங்களை ரசித்தோம். அது ஒரு இனிய அனுபவம்

பெருநிறுவனங்களின் வருகைக்கு பிறகு ஒற்றை திரை கொண்ட திரையரங்கங்கள் எல்லாம் நான்கு - ஐந்து திரை கொண்ட திரை பூங்காவாக மாறி வருகிறது. இது ஒரு நல்ல மாற்றம்நிறைய படங்கள் ஒரே இடத்தில. நமக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். ஆனால் என்ன, நுழைவு கட்டணம், வண்டி பார்க்கிங் கட்டணம், திரையரங்கனில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை என நமது பர்ஸை பதம் பார்க்கும்.

சரி பி வி ஆர் ஐகான் எப்படி?

கௌண்டரில் போதிய ஆட்கள் இல்லாததால்  நீண்ட நேரம்  காத்திருக்கவேண்டியதாயிற்று. 'FIRST MAN' ஆங்கில படத்துக்கு டிக்கெட் வாங்கினேன். திரை எண்- 6, படத்தில் ஒன்ற கொஞ்ச நேரம் பிடித்தது காரணம் உள் அலங்கார வேலைப்பாடுகள், ஒளி ஒலி அமைப்புகள்பெரிய திரை, என சூழல் அருமையாக இருந்தது. திரைக்கும் பட்ஜெட் டிக்கெட் வரிசைக்கும் விசாலமான இடைவெளி, படம் முடிந்து வெளியேற தனி வழி, நேராக பார்க்கிங் பகுதிக்கு செல்லுமாறு வடிவமைப்பட்டுள்ளது.

எங்கு காணினும் பிரம்மாண்டமான  L C  D திரை, அதில் வெளி வரப்போகும் திரைப்படங்களின்  திரை முன்னோட்டம் ஓடிக்கொண்டிருந்தது.  சொகுசு லாஞ்சு, 10  திரையும் DOLBY ATMOS ஒலி அமைப்பு கொண்டது  3D படங்களை ரசிப்பதற்கென்றே அதிநவீன PXL என்ற திரையும் உண்டு. மொத்தத்தில் உலக தர அனுபவம்.

ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள்......சினிமாவை நேசிக்கும் ஒரு நிறுவனத்தால் மட்டுமே இதைசெய்ய முடியும்அதாவது, உலக புகழ் பெற்ற இயக்குனர்கள் உதிர்த்த வார்த்தைகள், புகழ் பெற்ற உலக திரைப்படங்களின் பழய வின்டேஜ்  சுவரொட்டிகள் சுவரில் மாட்டியிருந்தார்கள், காண்போரை வியக்க வைக்கிறது.

மூன்று சிற்றுண்டி அரங்குகள் உள்ளன வெவ்வேறு சுவைகளில்  பாப்கார்ன்  முதல் பல சிற்றுண்டிவகைகள் கிடைக்கிறது. விலை உங்களுக்கே தெரியும்போன் செய்தால் நம் இருக்கைக்கே வந்து  தருகிறார்கள். சுத்தமான கழிவறைகள். பட்ஜெட் டிக்கெட்டுகள் தாராளமாக கிடைக்கிறதுஒரு நல்ல திரைப்படத்தை ரசிக்க இது போதாதா?

சமீபத்தில்பி வி ஆர் ஐகான் திரையரங்கில் பார்த்த படங்கள்:
வட சென்னை, FIRST MAN (ஆங்கிலம்) மற்றும் அரவிந்த சமேத வீர ராகவா (தெலுங்கு).

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

வட சென்னை - பாகம் ஒன்று

இதற்கு முன்பு வட சென்னையை மையமாக வைத்து புதுப்பேட்டை, பொல்லாதவன், மெட்ராஸ், கோலமாவு கோகிலா என பல படங்கள் வந்தாலும் வட சென்னை படம் முற்றிலும் வேறான கதை கொண்டது.

இடம்பெயர்வு உள் அரசியல், வஞ்சகம், துரோகம், மற்றும் காதல்,  இவை கலந்ததே வட சென்னை.  இயக்குனர் வெற்றிமாறன் சிறந்த கதைசொல்லி, இதில்  நான்-லீனியர் முறையில் கதை சொல்லி இருக்கிறார்

நாயகன் கேரம் விளையாட்டு போட்டியில் தேசிய பட்டம் பெற்று அமைதியான வாழ்க்கை வாழ  ஆசைப்பட,  காதல் விவகாரத்தில் ஒருத்தனை போட்டுத்தள்ள, அதன் மூலமாக குணாவிடம் சேர, குணா நாயகனை வைத்து இன்னொரு கொலை முயற்ச்சியை நிகழ்த்த. குணாவின் சுயரூபம் நாயகனுக்கு தெரிய வர, அப்போது நாயகன் எடுக்கும் முடிவு அடுத்த பாகத்தில்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உண்டு என்பதற்கேற்ப இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  நன்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமே மெர்சல்.  ஐஸ்வர்யா - தனுஷ் காம்போ கலக்கல் மற்றும் குட் கெமிஸ்ட்ரி.

அமீரின் பகுதி படத்திற்கு அடித்தளம்.  ஆண்ட்ரியா படத்தின் முக்கிய திருப்பத்திற்கு உதவுகிறார்.  இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் படங்கள் அவர் மேல் தான்  பயணிக்கும் போல் தோன்றுகிறது.

தனுஷ் நல்ல நடிக்கிறார் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும், ஆனால் துணை கதாபாத்திரங்களும்  நன்றாக நடித்திருப்பது தான் படத்தின் ஹை லைட்.

படத்தில் வரும்  முதல் இருபது நிமிட சிறை  காட்சிகள் டீடைலிங் அருமை.

சாதாரணமாக  இந்த மாதிரி படங்களுக்கு இசையும் ஒரு துணை கதாபாத்திரமாக பயணிக்க வேண்டும். பின்னணி இசை முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவில்லை. மான்டேஜ் பாடல்கள்.  சந்தோஷ் நாராயணன் தன்னுடைய முன்னோடிகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றும் சிலர் பொல்லாதவன்  படத்தின் பின்னணி இசை ரிங்க்டோன் வைத்திருப்பதை கேட்க முடியும்.

இடம்பெயர்வு உள் அரசியலால் பூர்வகுடிகள் சந்திக்கும் பிரச்சனைகள்  மனித நாகரிகம் தோன்றிய முதலே இருந்து வருகிறது. பெரு நிறுவனங்களின் இலாப பசிக்கு இரையாகும் பூர்வகுடிகள், அவர்களின் வாழ்வாதார சிக்கல்களையும், சுரண்டல்களையும் இயக்குனர் சுட்டிகட்ட தவறவில்லை.

படத்தில் ஆங்காங்கே வரும் கெட்டவார்த்தைகள் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இது அப்படியே வர போகும் எல்லா படங்களிலும் வந்தால் என்னாவது?

பெரியவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய படம்

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 17 October 2018

அரவிந்த சமேத வீர ராகவா (2018)



ஜூனியர் NTR , ஸ்டைலிஷ் இயக்குனர் திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணைந்த முதல் படம்.  ஜூனியர் NTR ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காம்போ.

வழக்கமான ஜூனியர் NTR இதில் இல்லை, ரொம்ப சீரியசாக நடித்திருக்கிறார்.
ஆங்காங்கே சிறு புன்னகை. பாடல்களிலும் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டே ஆடுகிறார்.

சீட்டாத்தில் ஐந்து ரூபாய் விவகாரம் கலவரமாக மாறி இரு  கிராமங்களுக்குமிடையே வெட்டு குத்து வன்முறையாக வெடிக்க. நாயகன் தன் குடும்ப உறுப்பினர்களை இழக்கிறான்.  ஊரும் ரெண்டுபட்டு கிடைக்க, நாயகன் சமாதானதிற்க்கான தீர்வை நோக்கி நகர... அகோர பசி கொண்ட பசி ரெட்டியை ஒழித்து. அமைதியை நிலை நாட்டுகிறான்.

முதல் இருபது நிமிடம் இரு குழுக்களிடையே நடைபெறும் வன்முறை வெறியாட்டம் காட்சியை அவ்வளவு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.  இயக்குனர் கயூன்டின் டாரண்டினோ படத்தில் வரும் ரத்தகளரி காட்சி போல் உள்ளது.

ஆக்ஷன் பிளாக் அருமை. சண்டை இயக்குனர் ராம் லக்ஷ்மன் குழுவினரின் உழைப்பு பளிச்.

ஜெகபதி பாபு எல்லா ஹீரோக்களுக்கான வில்லனாக மாறியிருக்கிறார்.  ஒரு காலத்தில் ஹீரோவாக பார்த்தவர்கள், இவர் வில்லனாக நடிப்பார் என்று யாரும் ஊகித்திருக்க முடியாது.  ஆனால் சமீபத்தில் வந்த எல்லா முக்கிய ஹீரோக்களின் படங்களிலும் இவர் தான் வில்லன். நானக்கு பிரேமதோ படத்தில் நகர வில்லனாக, ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து வில்லனாகவும் பார்க்கலாம்.   இதிலும் பசி ரெட்டி என்ற குரூர வில்லனாக கலக்கியிருக்கிறார்.

சுனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திருவிக்ரம் படத்தில்.  நாயகன், நாயகிக்கு துணையாக வரும் கதாபாத்திரம். இதற்கு முன் அத்தடு மற்றும் ஜல்ஸா படங்களில் நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராவ் ரமேஷ் மற்றும் சுபலேக சுதாகர், பூஜா ஹெக்டே, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, நரேஷ், நாகேந்திர பாபு, ரவி பிரகாஷ், தேவயானி, சித்தாரா  ஆகியோர் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துகின்றனர்

பெரியவர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படம்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Monday, 1 October 2018

பிரியாணி - அன்றும் இன்றும்


என்னாயிற்று இந்த ஜனங்களுக்கு.  வீட்டில் சமைப்பதே இல்லையா? அல்லது இளையதலைமுறைக்கு அசைவம் சுவையாக ருசியாக சமைக்க தெரியவில்லையா?

சமீபத்தில் ஆவணி மாதம் கடைசி ஞாயிறு அன்று ஒரு மாற்றத்துக்கு அசைவம் சமைக்காமல் சிக்கன் பிரியாணி (ரூபாய் 170/-) மட்டும் வாங்க  பிரபல பிரியாணி கடைக்கு போனேன்.  கூட்டமோ கூட்டம் அப்படி ஒரு  கூட்டம்.  மக்கள் சாரை சாரையாக வண்ண இருந்தனர்.   மக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றார்கள்.வாங்கி கொண்டு வீட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆனது

பெர்சிய உணவான பிரியாணி முக்கியமான இந்திய உணவாக மாறியது ஆச்சரியம் தான். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பலரகப்பட்ட அரிசியில் வெவ்வேறு சுவைகளில் சமைக்கப்படும் உணவு பிரியாணி.

20 வருடங்களுக்கு முன்பு பிரியாணி வெகு சில உணவகங்ளில் மட்டுமே கிடைக்கும்.  எப்போவாவது அப்பா முனியாண்டி விலாஸ் கடையிலிருந்து வாங்கி வருவார் அல்லது  அப்பாவின் அலுவலகத்தில் யாராவது ஓய்வு பெற்றால் பிரியாணி  பொட்டலம் வீட்டுக்கு வரும்.

இன்று போல் நினைத்தவுடன் பிரியாணி சாப்பிட முடியாது.  நாங்கள் வாடகைக்கு குடியிருந்த காம்பௌண்டில் ஒரு இசுலாமிய குடும்பம் இருந்தார்கள்.  அவர்கள் வீட்டிலிருந்து பிரியாணி எங்கள் வீட்டுக்கு வரும்,  அது ஒரு தனி சுவை, இன்றும் என் நினைவில்.

அசைவ உணவை ஜோராக சமைக்கும் அம்மா ஏனோ பிரியாணி சமைத்தது இல்லை. நன்றாக வராது என்ற எண்ணம் கூட இருக்கலாம்.  நாங்களும் அதை கேட்டது இல்லை. ஒரு வேலை வீட்டில் சமைக்க  முடியாது என்று எண்ணியிருந்தோம்.

சில வீட்டில் பிரியாணி என்ற பெயரில் பிரிஞ்சி சமைத்து வைப்பார்கள். என்ன செய்வது அவர்கள் முகம்கோண கூடாதே என்று சாப்பிட்டு வருவதுண்டு.

சில வருடங்களுக்கு முன்பு புரசைவாக்கம் மோட்சம் திரையரங்கு வாசலில் டாப்கோ சிக்கன் பிரியாணி கடை இருந்தது. விலை ஞாபகம் இல்லை ஆனால் சுவையோ அலாதி. திரையரங்கில் கூட்டம் இருக்குதோ இல்லையோ இந்த கடையில் கூட்டம் எப்போதும் அள்ளும். சாப்பிடாமல் திரும்பி போனவர்கள் அதிகம். சீக்கிரம் தீர்த்துவிடும். இப்பொது மோட்சம் திரையரங்கமும் இல்லை அந்த பிரியாணி கடையும் இல்லை.

இப்பொது ஏகப்பட்ட பிரியாணி செய்முறை இணையத்தில் கிடைக்கிறது.

ஒரு முறை ஹைதெராபாத் சென்ற பொது  அந்த புகழ் பெற்ற பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடமுடியவில்லை. அப்போது சஷ்டிக்கு மாலை போட்டிருந்ததே காரணம்.

இப்பொது குழந்தைகள் பிறந்தநாள் / காதணி / பிரிவு உபசார விழா போன்றவற்றுக்கு பிரியாணி விருந்து வழக்கமாகிவிட்டது. நேரடியாக சமைத்தும் அல்லது உணவகத்தில் ஆர்டர் செய்தும் பரிமாறப்படுகிறது. ஆனால் நன்றாக சமைக்க கூடியவரை தேட வேண்டியிருக்கிறது. தட்டு  கணக்கு / சாப்பிடும் நபர்கள் / கிலோ  கணக்கில் சமைத்து தரப்படுகிறது.  ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை.

சமீபத்தில் பல்லாவரம் ஜங்க்ஷனை கடக்கும் பொது ஒரு பிரியாணி கடையில் கூட்டம் அள்ளுகிறது. அந்த பகுதியில் ஒரு பிரபலமான பிரியாணி கடை போலும்.

சென்னையில்  நல்ல சுவையான பிரியாணியை தேடி பெரியமேடு, ராயப்பேட்டை என சென்றவர்கள் உண்டு.  இப்பொது அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. நகரின் எல்லா பகுதியிலும் பிரபல பிரியாணி கடை கிளை பரப்பியுள்ளது.

அதுமட்டுமல்ல பார்பேக்கு , தந்தூரி வகைகள், ஷவர்மா என முழு அசைவ வகைகளும் இப்பொது கிடைக்கிறது

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

ஏஜிஎஸ் சினிமாவும் - தேவதாசும்

என்னதான் திரைப்படங்களை கைபேசியில் / தொலைக்காட்சியில்  பார்த்தாலும்,  திரையரங்கில் பார்க்கும் சுகமே வேறு தான்.  இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதும். பாகுபலி மற்றும் சில ஆங்கில படங்களை அகன்ற திரையில் பார்த்தால் தான் அதன் முழுமையான வீச்சை அனுபவிக்க முடியும். உச்சகட்ட திரையனுபவத்தை அனுபவிக்க ஒருமுறை ஐமாக்ஸ் திரையரங்கில் படம் பாருங்கள்.

சமரசம் உலாவும் இடம்.  திரையரங்கம் பல தலைவர்களை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறது / தந்து கொண்டிருக்கிறது. நம் மக்கள் தலைவர்களை திரையரங்கில் தான் தேடுகிறார்கள். புதிய தலைவர்களை தமிழ்நாட்டுக்கு தந்ததில் திரையரங்க உரிமையாளர்களின் பங்கும் உண்டு.  இப்பொது தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்கு காரணம் பல திரையரங்கங்கள் மூடப்பட்டதால் தான். (சும்மா தமாஷ்).

ஒற்றை திரையரங்கங்கள் எல்லாம் நான்கு - ஐந்து திரை கொண்ட  திரை பூங்காவாக  பெருகிவருகிறது.  இது ஒரு நல்ல மாற்றம்.  நிறைய படங்கள் ஒரே இடத்தில. நமக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். ஆனால் என்ன, நுழைவு கட்டணம், வண்டி பார்க்கிங் கட்டணம், திரையரங்கனில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை என நமது பர்ஸை பதம் பார்க்கும்.

சென்னை மதுரவாயிலில் புதிதாக திறக்கபப்ட்ட ஏஜிஎஸ் திரையரங்கில் தேவதாசு படம் பார்க்க நேற்று சென்றிருந்தேன். உள்ளே நல்ல சூழல், ஒரே வரிசையில் ஐந்து அகன்ற திரைகள்,  பாப்கார்ன் மசாலா வாசனை என பார்க்கவே ரம்மியமாக இருந்தது. ஏஜிஎஸ் திரையரங்கில் பட்ஜெட் டிக்கெட்டும் தாராளமாக கிடைக்கிறது.  மற்ற  திரையரங்கம் போல அல்லாமல் ஏஜிஎஸ் திரையரங்கில், பட்ஜெட் டிக்கெட் வரிசை, திரைக்கும் முதல் வரிசைக்கும் போதுமான இடைவேளை உள்ளது.

சரி தேவதாசு படம்.............

தெலுங்கு சினிமாக்காரர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.  நட்பை வேறு ஒரு கோணத்தில் அழகாக சொன்ன இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

தேவா என்ற தாதாவுக்கும், தாஸ் என்ற இளம் வாலிபனுக்கு ஏற்படும் நட்பு.  மருத்துவனான இளம் வாலிபன் தாஸ், குண்டடிபட்டு அடைக்கலமாகும் தேவாவுக்கு  துப்பாக்கி குண்டை நீக்கி சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறான். கூடவே  அன்பை  விதைத்து தாதாவை திருத்தி தேசிய நீரோட்டத்தில் இணைக்கிறான்.

தாதாவாக நாகார்ஜுனா. அப்போது முதல் இப்பொது வரை மனுஷன் அப்படியே இளமையாக இருக்கிறார்.  இயல்பான நடிப்பு, ஸ்டைலிஷான நடை மற்றும் உடை என  தாதாவுக்கேற்ற உடல்மொழியில் அசத்துகிறார்.

நானி - நம்மவூர் விஜய சேதுபதி போல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பலே பலே மகாதேவா, எவடே சுப்பிரமணியம், மஜ்னு, ஜென்டில்மேன், கிருஷ்ணகாடி வீர பிரேமா கதா, நின்னுக்கோரி,  நேனுலோக்கல், மிடில் கிளாஸ் அப்பாய், கிருஷ்ணார்ஜுன யுத்தம் என தொடர்ந்து அண்ணனுக்கு ஏறுமுகம் தான்.  விஜய சேதுபதி நடித்து வெளிவர இருக்கும்  96 படம் தெலுங்கு ரீமேக்கில் நானி நடிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது.

அகன்ஷா, ரஷ்மிகா, ராவ் ரமேஷ், வென்னலா கிஷோர்  என அவரவர் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  நம்மவூர் மனோபாலா அவர்கள் சிரிப்பு போலீசாக வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

மொத்தத்தில் ஒரு அருமையான பீல் குட் திரைப்படம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி