Wonderful Shopping@Amazon

Monday, 1 October 2018

ஏஜிஎஸ் சினிமாவும் - தேவதாசும்

என்னதான் திரைப்படங்களை கைபேசியில் / தொலைக்காட்சியில்  பார்த்தாலும்,  திரையரங்கில் பார்க்கும் சுகமே வேறு தான்.  இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதும். பாகுபலி மற்றும் சில ஆங்கில படங்களை அகன்ற திரையில் பார்த்தால் தான் அதன் முழுமையான வீச்சை அனுபவிக்க முடியும். உச்சகட்ட திரையனுபவத்தை அனுபவிக்க ஒருமுறை ஐமாக்ஸ் திரையரங்கில் படம் பாருங்கள்.

சமரசம் உலாவும் இடம்.  திரையரங்கம் பல தலைவர்களை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறது / தந்து கொண்டிருக்கிறது. நம் மக்கள் தலைவர்களை திரையரங்கில் தான் தேடுகிறார்கள். புதிய தலைவர்களை தமிழ்நாட்டுக்கு தந்ததில் திரையரங்க உரிமையாளர்களின் பங்கும் உண்டு.  இப்பொது தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்கு காரணம் பல திரையரங்கங்கள் மூடப்பட்டதால் தான். (சும்மா தமாஷ்).

ஒற்றை திரையரங்கங்கள் எல்லாம் நான்கு - ஐந்து திரை கொண்ட  திரை பூங்காவாக  பெருகிவருகிறது.  இது ஒரு நல்ல மாற்றம்.  நிறைய படங்கள் ஒரே இடத்தில. நமக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். ஆனால் என்ன, நுழைவு கட்டணம், வண்டி பார்க்கிங் கட்டணம், திரையரங்கனில் உள்ளே விற்கப்படும் தின்பண்டங்கள் விலை என நமது பர்ஸை பதம் பார்க்கும்.

சென்னை மதுரவாயிலில் புதிதாக திறக்கபப்ட்ட ஏஜிஎஸ் திரையரங்கில் தேவதாசு படம் பார்க்க நேற்று சென்றிருந்தேன். உள்ளே நல்ல சூழல், ஒரே வரிசையில் ஐந்து அகன்ற திரைகள்,  பாப்கார்ன் மசாலா வாசனை என பார்க்கவே ரம்மியமாக இருந்தது. ஏஜிஎஸ் திரையரங்கில் பட்ஜெட் டிக்கெட்டும் தாராளமாக கிடைக்கிறது.  மற்ற  திரையரங்கம் போல அல்லாமல் ஏஜிஎஸ் திரையரங்கில், பட்ஜெட் டிக்கெட் வரிசை, திரைக்கும் முதல் வரிசைக்கும் போதுமான இடைவேளை உள்ளது.

சரி தேவதாசு படம்.............

தெலுங்கு சினிமாக்காரர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.  நட்பை வேறு ஒரு கோணத்தில் அழகாக சொன்ன இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

தேவா என்ற தாதாவுக்கும், தாஸ் என்ற இளம் வாலிபனுக்கு ஏற்படும் நட்பு.  மருத்துவனான இளம் வாலிபன் தாஸ், குண்டடிபட்டு அடைக்கலமாகும் தேவாவுக்கு  துப்பாக்கி குண்டை நீக்கி சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறான். கூடவே  அன்பை  விதைத்து தாதாவை திருத்தி தேசிய நீரோட்டத்தில் இணைக்கிறான்.

தாதாவாக நாகார்ஜுனா. அப்போது முதல் இப்பொது வரை மனுஷன் அப்படியே இளமையாக இருக்கிறார்.  இயல்பான நடிப்பு, ஸ்டைலிஷான நடை மற்றும் உடை என  தாதாவுக்கேற்ற உடல்மொழியில் அசத்துகிறார்.

நானி - நம்மவூர் விஜய சேதுபதி போல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பலே பலே மகாதேவா, எவடே சுப்பிரமணியம், மஜ்னு, ஜென்டில்மேன், கிருஷ்ணகாடி வீர பிரேமா கதா, நின்னுக்கோரி,  நேனுலோக்கல், மிடில் கிளாஸ் அப்பாய், கிருஷ்ணார்ஜுன யுத்தம் என தொடர்ந்து அண்ணனுக்கு ஏறுமுகம் தான்.  விஜய சேதுபதி நடித்து வெளிவர இருக்கும்  96 படம் தெலுங்கு ரீமேக்கில் நானி நடிப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது.

அகன்ஷா, ரஷ்மிகா, ராவ் ரமேஷ், வென்னலா கிஷோர்  என அவரவர் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  நம்மவூர் மனோபாலா அவர்கள் சிரிப்பு போலீசாக வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

மொத்தத்தில் ஒரு அருமையான பீல் குட் திரைப்படம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

No comments:

Post a Comment