Wonderful Shopping@Amazon

Showing posts with label #மூன்று நரசிம்மர் #பரிக்கல் நரசிம்மர் # பூவரசன்குப்பம் நரசிம்மர். Show all posts
Showing posts with label #மூன்று நரசிம்மர் #பரிக்கல் நரசிம்மர் # பூவரசன்குப்பம் நரசிம்மர். Show all posts

Tuesday, 23 October 2018

ஒரே நாளில் மூன்று நரசிம்மர் கோயில்கள்

மூன்று வருடங்களாக போக வேண்டும், போக வேண்டும் நினைப்பதுண்டு. ஆனால் சில சூழ்நிலைகளால் போகமுடியவில்லை.  சரி இந்த முறை தனியாக போக முடிவு செய்தபோது. மின்சாரமும் (சம்சாரம்) பிள்ளைகளும் வர விருப்பம் தெரிவிக்க... போக முடிவானது.

காலை 6.30  மணிக்கு,  சென்னை எழுப்பூரிலிருந்து புறப்படும் பாண்டிச்சேரி பாசேன்ஜ்ர் பயணம் செய்து விழுப்புரம் இறங்கி அங்கிருந்து மூன்று கோயில்களையும் தரிசிக்க எண்ணியிருந்தேன்.

அதற்குள்ளாக மேலும் இரண்டு குடும்பங்களும் எங்களுடன் இணைய....சரி தனியாக ஒரு டெம்போ ட்ராவலர் வேன் முன்பதிவு செய்து. சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு வீட்டிலுருந்து புறப்பட்டோம்.

காலை சிற்றுந்துண்டிக்கு இட்லி, சாம்பார், கார சட்னி, மின்சாரம் தயார் செய்து கொண்டுவந்தாள் மற்றும் எங்களுடன் பயணிக்கும் வாண்டுகளுக்கு நொறுக்கு தீனி.

பெருங்களத்தூரில் காப்பி பிரேக் மற்றும் மாமண்டூரில் டிபன் பிரேக்.  விழுப்புரம் தேசிய நெடுஞசாலையிலுருந்து பிரிந்து பரிக்கல் இருப்பு பாதையை கடந்து கோயிலை சரியாக 10.15 மணிக்கு அடைந்தோம். கோயிலில் மிதமான கூட்டம் ஆண்கள் சட்டை கழட்டிவிட்டு தான் சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.  வரிசையில் நின்று சுவாமி சுவாமி தரிசனம் செய்து விட்டு 11.00 மணிக்கு பரிகளிலுருந்து புறப்பட்டோம்.

விழுப்புரம் தேசிய நெடுஞசாலையிலுருந்து பண்ருட்டி நகரம் வழியாக பல கிராமங்களை கடந்து  பூவரசன்குப்பத்தை சரியாக  12.30 ,மணிக்கு அடைந்தோம்.  அதற்குள் கோயில் நடை அடைக்கப்பட்டது.  அங்கிருந்து அருகே உள்ள சிறுவதந்தாடு கிராமத்தில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் மதிய உணவை முடித்தோம்.  பட்டு வஸ்திரங்களுக்கு பெயர் பெற்ற இடம் சிறுவதந்தாடு. மறுபடியும் கோயிலுக்கு வந்து ஸ்வாதி மண்டபத்தில் இளைப்பாறினோம்.

சரியாக மாலை 4.15 மணிக்கு கோயில் திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தோம்.  அங்கிருந்து சிங்கிரிக்குடியை நோக்கி புறப்பட்டோம்.  மாலை 6.00 மணிக்கு கோயிலை அடைந்து சுவாமி தரிசனம் செய்தோம்.

அடுத்து ஆதி திருவரங்கம் செல்வதாய் திட்டம். ஆனால் அங்கேயே 7.00 மணி ஆகிவிட்டது.  மேலும், சென்னை சென்று சேர தாமதமாகும் என்பதால் திட்டம் ரத்தானது.

அங்கிருந்து புறப்பட்டு வந்து திண்டிவனத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேர  இரவு 12.00  மணி ஆகியிருந்தது.

வரைபடம் ஒரே நேர்கோட்டில் மூன்று நரசிம்மர் கோயில்கள் இருப்பதாக காட்டினாலும்.  மூன்றும் வெவேறு மாவட்டங்களில் இருக்கிறது.  போகும் பாதையும் நீண்ட தூரமாக இருக்கிறது. பூவரசன்குப்பத்தை அடைய பண்ருட்டி நகரை கடந்து தான் போக வேண்டும்.  சிங்கிரிக்குடியை அடைய புதுச்சேரி - வில்லியனுர் வழியாக செல்லவேண்டியிருந்தது.

விழுப்புரம் to பரிக்கல் 25 கி மீ
பரிக்கல் to பூவரசன்குப்பம் : 36  கி மீ
பூவரசன்குப்பம் to சிங்கிரிக்குடி : 26 கி மீ
சிங்கிரிக்குடி to சென்னை : 177 கி மீ

பரிக்கல் மற்றும் பூவரசன்குப்பத்தில் நரசிம்மர் இலட்சிமியுடன் இருக்க, சிங்கிரிக்குடியில் நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

ஒரு நபருக்கு ரூபாய் 700/- கொண்டு போய் - கொண்டுவந்து விட ஓட்டுநர் படிப் பணம் மற்றும் உணவு தனி.  ஓட்டுநர் புதிதென்பதால் கூகிள் வரைபடம் கைகொடுத்தது.

நேராக விழுப்புரம் சென்று அங்கிருந்து பரிக்கல் பஸ்ஸில் சென்று, பிறகு பரிக்களிலுருந்து இன்னொரு பேருந்து பிடித்து பூவரசன்குப்பம் சென்று அங்கிருந்து சிங்கிரிக்குடிக்கு பேருந்து ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் அது சாத்தியமே இல்லை. பேருந்து வசதி அரிது. மூன்று கோயில்களும் தொலை கிராமங்களில் அமைந்துள்ளது. தனி வாகனம் தான் சிறந்தது. 

எதிரிகள் தொல்லை நீங்க, கடன் தொல்லை தீர, மன அமைதி பெற, மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாக மூன்று நரசிம்மர் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் நல்லது.

எதிரியும் நல்லாயிருக்கட்டும், அவனை எதிர்கொள்ள மனோதைரியத்தை மட்டும் கொடுப்பா ஜெய் நரசிம்மா !!!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி