Wonderful Shopping@Amazon

Monday, 25 December 2017

2017 சிறந்த படம் - பாகுபலி- 2

பாகுபலி -1 படம். டிக்கெட் முன்பதிவு செய்து குடும்பத்துடன் அகன்ற திரையில் பார்த்தோம். அற்புதமான திரையனுபவம். அந்த அருவி காட்சி இன்னும் கண் முன் நிற்கிறது. அப்போதே இரண்டாம் பாகத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.

இம்முறையும் குடும்பத்துடன் தெலுங்கு பதிப்பை அகன்ற திரையில் பார்த்தோம்.  முதல் காட்சி முதல் கடைசிவரை கண் அங்கிங்கு நகரவில்லை. ஒரு சாம்ராஜ்யத்தியே இயக்குனர் ராஜாமௌலி சிருஷ்டித்து அதில் கதாபாத்திரங்களை உலவிட்டிருந்தார்.  பாகுபலி-2 பிரம்மிப்பிலுருந்து மீள சில நாட்கள் ஆனது.  அதற்காகவே மா தெலுங்கு மற்றும் ஏசியாநெட் மலையாள  தொலைக்காட்சியில் அடிக்கடி பாகுபலி- 2 ஒளிபரப்பாகும் போது அந்த தொடக்க காட்சிக்காக மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். சினிமாவுக்கு மொழி ஒரு தடை இல்லை.

விக்ரமார்குடு படம்  மூலம் இயக்குமார் ராஜமௌலி எனக்கு அறிமுகமானார்.  அதற்கு பிறகு வந்த எமதொங்கா, மகதீரா, ஈகா, மரியாதை ராமண்ணா  படங்களை விடாமல் பார்த்தேன். இதில் ஜூனியர் என் டி ஆர் நடித்த எமதொங்கா திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். அருமையான மேக்கிங். அந்த எம லோக செட் அற்புதமாக இருக்கும்.

சினிமாவை இயக்குனர் ராஜமௌலி எந்தளவுக்கு நேசிப்பவர் என்பதை அவருடைய படைப்புக்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். அவருடைய தொழில்முறை குழு ஆந்திர திரையுலகில் பிரசித்தம்.

நான் தூர்தர்ஷனில்  ஒளிபரப்பாகும் கருப்பு-வெள்ளை  புராண / இதிகாச படங்களை பார்த்து வளர்ந்தவன். அதனால்  புராண / இதிகாச படங்கள் எனக்கு பிடிக்கும்.  என்னுடைய All Time Favorite மாயாபஜார் மற்றும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.

பாகுபலி-2 பற்றி என்ன சொல்ல:

1 ) அந்த தொடக்கக்காட்சி பற்றி சொல்வதா.
2 ) குந்தல தேசத்தில் நடக்கும் போர்க்கள காட்சிகளை பற்றி சொல்வதா.
3 ) பெண்கள் மீது கை வைப்பவனுக்கு பாகுபலி தரும் உடனடி தண்டனையை
     பற்றி சொல்வதா.
4 ) நாசர் / ராணா / சத்யராஜ் / ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி சொல்வதா.
5 ) அனுஷ்காவின் அறிமுக காட்சி பற்றி சொல்வதா.
6 ) மரகதமணியின் பாடல்கள் / பின்னணி இசை கோர்ப்பை பற்றி சொல்வதா.
7 ) அந்த பட்டாபிஷேக காட்சியை பற்றி சொல்வதா.
8) அதே துணை நடிகர்கள், முதல் காட்சியிலுருந்து கடைசி காட்சி வரை
     இயக்குனர் ராஜமௌலி நேர்த்தியாக பயன்படுத்தியதை பற்றி சொல்வதா.

எல்லாவற்றையும் பற்றி என் முன்னோடிகள் எழுதிவிட்டார்கள்.

பாகுபலி  படைப்பாற்றலின் உச்சக்கட்டம்.  ஒரு படைப்பாளிக்கு முழு சுதந்திரம் தந்தால், அவனால் பாகுபலி போன்ற படைப்புக்களை தரமுடியும்.  ஆனால் இங்கு அந்த வாய்ப்பு வெகு சிலருக்கே அமைவதுதான்  துரதிஷ்டம்.

என்னுடைய வட இந்திய நண்பர் சொன்னது தான் எல்லாவற்றையும்விட விஷேமானது அதாவது:

"வட இந்தியர்களும் வாய் பிளந்து பார்த்ததுதான். வட இந்தியர்கள் அதுவரை பார்த்திராத பிரமாண்ட வண்ணமயமான திரையனுபவத்தை பாகுபலி  கொடுத்தது. பாகுபலி படத்தில் ஒரு ரசிகனுக்கு என்ன தேவையோ அனைத்தும் இருந்தது" என்றார்.

பொன்னியின் செல்வன் கதையையும் யாராவது இதுபோல் நேர்த்தியாக எடுப்பார்களா ? அதை திரையில் காண ஆவலாக இருக்கிறேன்.

- காளிகபாலி

No comments:

Post a Comment